Saturday, 24 December 2016

பெரியாரும் காந்தியும்!

நேற்று நான் எழுதிய ஒரு பதிவிலும் இன்பாக்சிலும் சிலர் இப்படி கேட்டிருந்தார்கள் : "ஜெயலலிதா இறந்துவிட்டார்.  பாவம் இனி எதற்கு அவர் மீது விமர்சனம் வைக்கவேண்டும்?" . இதை நான் குறை கூறவில்லை.  இறந்தவர்களைப் பற்றி நெகட்டிவாக எதுவும் சொல்லக்கூடாது என்பது இங்கே நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இதே நாட்டில்தான் இறந்து 40,  50 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ச்சியாக இரு தலைவர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டே வருகிறது.  ஒருவர் காந்தியடிகள் இன்னொருவர் பெரியார்.  இந்த இரு தலைவர்கள் மீதுதான் தொடர்ச்சியாக விமர்சனங்களும் அதற்கு மறுப்பு விளக்கங்களும் என இன்னமும் நீண்டுகொண்டே செல்கிறது.  நேரு வை இப்போது சமீபமாகத்தான் இந்த லிஸ்ட்டில் சேர்க்க அவ்வப்பொழுது முயற்சிகள் நடக்கின்றன. 

காந்திக்கும் பெரியாருக்கும் மட்டும் இது நடப்பது ஏன்?  இத்தனைக்கும் அவர்கள் எந்த அரசுப் பதவியிலும் இல்லை.  இருந்திருந்தாலாவது நிர்வாகம் சரியாக நடத்தவில்லை,  ஊழல் வாதி கள் என ஏதாவது குற்றஞ்சாட்டலாம்.  அதுவும் இல்லை.  பிறகு ஏன் இவர்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால் இவர்கள் செய்த அரசியல் சமுதாயப்பணி ஆழமானது. 

காந்தி கடவுளின் எல்லையற்ற கருணை மூலம் இந்த சமுதாயத்தை சீர்படுத்தலாம் என எண்ணினார்.  பெரியாரோ எல்லா சீர்கேட்டுக்கும் கடவுளையே ஜவாப்தாரியாக்கிவிடுவதால் கடவுளே இல்லை என்பதன் மூலம் தனது சமுதாயப்பணியை தொடர்ந்தார்.  தான் இறக்கும் தருவாயில் கூட ராம நாமத்தை ஜெபிக்க மறவாத காந்திக்கும் தனது சிலையில் கூட கடவுள் இல்லை என எழுதச்சொன்ன பெரியாருக்கும் இருந்த பெரிய ஒற்றுமை மனிதாபிமானம். 

காந்தி பெரியார் இருவருமே வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற போதிலும் காந்தி கையாண்ட அளவுக்கு மிதவாத அரசியலை பெரியார் கையாளவில்லை. பெரியார் அப்படி செய்திருக்கவும் முடியாது.  கடவுளிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கு அந்த வசதி இருந்தது.  "தப்பு பண்ணாதப்பா சாமி கண்ண குத்திடும் " என்று சொல்லிவிடுவது ரொம்ப சுலபம்.  அதேசமயம் சாமி கண்ணையும் குத்தாது ஒண்ணும் பண்ணாது ஆனா நீ தப்பு பண்ணாம ஒழுக்கமா இருக்கனும் என்று சொல்லி திருத்துவதென்பது ரொம்ப சிரமம்.  அதனால் தான் காந்தியடிகள் தீண்டாமையை ஒழிக்க நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்,  கடவுள் முன் அனைவரும் சமம் என்றார்.  கடவுள் முன்பாக சமம் என்று சொன்னபிறகு மறுபேச்சு உண்டா?  ஆனால் கடவுள் இல்லை.  மனிதரிலும் உயர்வு தாழ்வு இல்லை.  அனைவரும் சமம் தான் என சொல்லி போராடுவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. 

காந்திக்கும் பெரியாருக்கும் இன்னொரு ஒற்றுமை இருந்தது.  அவர்கள் தாங்கள் வாழும் காலத்தில் தங்களது இமேஜ் குறித்து கவலைப்படவில்லை.  பொதுவாழ்க்கை என்றாலும் அந்தரங்க வாழ்க்கை என்றாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து அச்சப்படவில்லை.  ஒன்றின் மீதான தங்களது கருத்தை காலப்போக்கில் மாற்றுக்கொள்ள இருவருமே தயங்கியதில்லை.  தனது மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டால் தன் இமேஜ் போய்விடுமோ என பெரியாரும் கவலைப்படவில்லை.  தனது பேத்தி வயதுடைய பெண்ணிடம் பிரம்மச்சரிய பரிசோதனை மேற்கொள்வதற்காக காந்தியும் கவலைப்படவில்லை. 

எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிய பெரியாரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதல்ல என் கருத்து.  தாராளமாக கேள்வி கேட்கலாம்.  விமர்சிக்கலாம்.  ஆனால் அவரை வாசித்துவிட்டு கேள்வி கேளுங்கள் என்பது தான் என் வேண்டுகோள்.  அப்படி கேட்கிறவர்கள் பெரியார் எழுதியவற்றில் நடுவிலும் கடைசியிலும் இரண்டு வரிகளை வெட்டி ஒட்டி அதை பெரியாரின் கருத்தாக கொண்டுவந்து நிறுத்தி அதன்மூலம் பெரியாரை குற்றம் சாட்டவேண்டும் என செய்கிறார்களே ஒழிய முழுவதுமாய் அவரை வாசிப்பார்களா என்பது தெரியவில்லை.  பெரியாரை நீங்கள் மொழி இனம் மதம் பண்பாடு கலாச்சாரம் என எந்த கோப்பைக்குள்ளும் அடைக்கமுடியாது.  அவர் எந்த பற்றுமில்லாத மானுடப்பற்று மட்டுமே தனது அடையாளமாக கொண்டவர்.  கடவுள் மறுப்பு தான் பெரியாரின் அடையாளம் என்றால் இன்று தமிழ்நாட்டில் ஒருத்தரும் பெரியாரை நன்றி பாராட்ட மாட்டார்கள்.  எப்படி அவர் குறிப்பிட்ட மொழிக்கோ மதத்துக்கோ இனத்துக்கோ பற்றாளர் இல்லையோ அதேபோல எந்த மொழிக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் எதிரானவர் இல்லை.  காந்தி வெள்ளைக்காரர்களை எதிர்த்தார் என்பதற்காக அவர் பிரிட்டிஷாரின் விரோதி என யாராவது சொல்வார்களா?  தென்னாப்பிரிக்காவில் தனக்கேற்பட்ட நிறவெறி சம்பவம் அவரை இந்திய சுதந்திரத்தில் கொண்டுவந்து தள்ளியது.  சிறுவயது முதலே தான் சந்தித்த சமூக சாதிய ஏற்றத்தாழ்வுகள் பெரியாரை சமூக அரசியல் செய்யவைத்தது. 

ஹிந்துத்வ வலது சாரி அரசியல் மற்றும் அறிவுஜீவிகளின் குரு என்று இன்றளவும் போற்றப்படுகிற ராஜாஜியோடு தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி மகிழ்ந்தவர் தானே பெரியார்!  தான் முற்றிலும் எதிர்க்கிற சித்தாந்தங்களை கூட தனக்கெதிராக பேச அனுமதித்தவர் தான் பெரியார்.  பெரியார் இத்தனையாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறார் என்றால் அவருடைய தேவை இன்றும் இருக்கிறது என்றே பொருள்.  பெரியார் எதையும் புனிதப்படுத்தவில்லை,  பெரியாரை புனிதராக்கவும் நாங்கள் விரும்பவில்லை,  ஏன் அவருமே அதை அனுமதிக்கவில்லை . பெரியாரை கேள்வி கேளுங்கள்,  பெரியாரை விமர்சியுங்கள்.  ஆனால் அதற்கு முன்பாக தயவு செய்து பெரியாரை வாசியுங்கள்..!

No comments:

Post a Comment