Wednesday, 18 January 2017

அரசியலற்ற அரசியல்

கேள்வி : அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் உங்களுக்கு ஈர்ப்பு வர என்ன காரணம்?

பதில் : ஒரே பதிலில் சொல்லவேண்டுமென்றால் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோவொரு அரசியல் செய்கிறார்கள்.  ஆனால் அரசியல்வாதி ஒருத்தர் தான் மிக நேர்மையாக தான் அரசியல் தான் செய்கிறேன் என்பதை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டிக்கொண்டே அரசியல் செய்கிறார்.  இந்த நேர்மை மற்றவர்களிடம் இல்லை. 

இந்த நாடு சுதந்திரத்துக்கு பிறகு இந்தளவுக்காவது முன்னேறியிருக்கிறது என்றால் அதற்கு இந்த நாட்டின் அரசியல்வாதிகள் தான் முக்கிய காரணம் என்பதை மனதார நம்புகிறேன் நான்.  அரசியல்வாதி என்றால் கலைஞர்,  ஜெயலலிதா,  ஸ்டாலின்,  மோடி,  ராகுல்காந்தி இவர்கள் தான் என்றல்ல.  ஒரு குக்கிராமத்தின் ஒரு அரசியல் கட்சியின் வார்டு பிரதிநிதியாக இருக்கின்ற ஒருவரும் கூட அரசியல்வாதி தான்.  நான் கிராமத்தில் பிறந்து சிறிய நகரம் ஒன்றில் வளர்ந்தவன். நாங்கள் ரேஷன் கார்டு தொடங்கி,  வாக்காளர் அடையாள அட்டை,  சாதி சான்றிதழ்,  திருமண உதவித்தொகை,  முதியோர் பென்சன் என எல்லா அரசுத்திட்டங்களுக்கும் அரசியல்வாதிகளிடம் தான் போய் நிற்போம்.  அரசியல்வாதிகள் என்போர் எங்கள் உறவினர்கள் போல எங்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுப்பார்கள்.

ஏன் இதெல்லாம் அரசியல்வாதியின் துணையில்லாமல் ஆன்லைனிலோ நேரடியாகவோ நீங்களே செய்துகொள்ள முடியாதா என்று கூட கேட்கலாம்.  "அதான் Card use பண்ணலாமே,  Cash எதுக்கு? " என்று கேட்பதைப்போலத்தான் இதுவும். இன்றைக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமென்றால் எளிதில் அணுககூடிய ஆட்கள் அரசியல்வாதிகளே.   அனைவரும் உத்தம சிகாமணிகள் என்றும் அரசியல்வாதிகள் தான் இந்த உலகத்தில் அத்தனை குற்றங்களையும் செய்பவர்கள் என்றும் நான் ஒருபோதும் நினைத்ததில்லை.  இன்னும் சொல்லப்போனால் நாம் செய்த பாவக்கணக்குகளை கூட தூக்கி சுமக்கும் சுமைதாங்கிகளாகத்தான் அவர்களை பார்க்கிறேன். 

அரசியல்வாதியானேலே காசு செமத்தியா சம்பாதிக்கலாம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால்,  எல்லோ பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு போகனும் என்று சொல்லித்தான் வளர்ப்பார்கள்.  என்னை கூட ஒரு சிலர் "ஏன் நீங்கள் நேரடி அரசியலுக்கு வரக்கூடாது? " என்று கேட்டுள்ளார்கள் . நான் அவர்களிடம் சொன்ன பதிலையே இப்போதும் சொல்கிறேன் : அரசியலில் இறங்கவேண்டுமென்றால் நான் இப்போது நல்ல சம்பளத்தில் செய்துவரும் வேலையை விடவேண்டும்.  சம்பளம் வராவிட்டால் நானும் என் குடும்பமும் பூவாக்கு எங்கோ போவோம்?  அடுத்தது வாரத்துக்கு ஒரு Week off,  மாசத்துக்கு 3 லீவு,  வருடத்துக்கு ஒரு Long leave என என் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரம் செலவழிக்க முடிகிறது என்னால் இப்போது.  அதுவே நான் அரசியலுக்கு போனால் என் குடும்பத்தை விட்டுவிட்டு அடிக்கடி வெளியே சில பல நாட்கள் அலையவேண்டும்.  இவ்வளவு தியாகங்களை செய்ய எனக்கு விருப்பமில்லை,  அதனால் நான் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை.  அதுமட்டுமின்றி அரசியலில் என்றைக்காவது பெரிய ஆளாகி விடலாம் என்றெண்ணி கைக்காசை எல்லாம் செலவழித்து, குடும்பத்தை நிர்க்கதியாக நிறுத்தி,  வெட்டி கௌரவத்துடன் வீணாய்ப்போன  ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் என் கண் முன்னரே வந்து போகிறார்கள். 

எனவே எனக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பை விட பிரியமே அதிகம் உண்டு.  மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன் : இந்த நாடு இன்று இந்தளவிலாவது நல்ல நிலைமையில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அரசியல்வாதிகளே! 

ஓட்டப்பந்தயத்தில் ஓடவே லாயக்கற்ற ஆட்கள் இரண்டு விதமாக பேசுவார்கள்.  ஒன்று என்னைபோல "ஐயோ என்னால ஓட முடியாது பா " என்று சொல்வார்கள்.  இன்னொன்று "ஓட்டபந்தயமே வேஸ்ட்,  அதில ஓடுறவங்க எல்லாம் Fraud பசங்க " என்று பரப்புரை செய்வார்கள்.  நேரடியாக மக்களிடம் அரசியல் செய்து வெல்ல முடியாத ஆட்கள் தான் "அரசியல்வாதிகளே வேஸ்ட்,  அரசியலே கூடாது,  அரசியல்வாதிகளை ஒழிச்சுக்கட்டனும் " என்பதை வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் முன்னெடுப்பார்கள்.  அரசியலற்ற அரசியல் எங்கு போய் முடியும் என நன்கு தெரிந்த காரணத்தால் "ஆமாம் நாங்கள் அரசியல் செய்பவர்கள் தான் " என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வேலை செய்யும்  அரசியல்வாதிகளை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது..!

No comments:

Post a Comment