சோ ராமசாமி மறைவு!
சோ ராமசாமியின் கீர்த்தியும் பெருமையும் பற்றி இன்று அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு திராவிட அரசியல் கட்சி பிரமுகர்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டு ஊடகங்கள் வரை நிறையபேரால் விதந்தோதப்படுகிறது .
நல்லது. சோ எதையுமே மூடி வைத்து செய்யவில்லை. வெளிப்படையாகத்தான் செய்தார். அவருக்கு அந்த துணிச்சல் இருந்தது. சோ ராமசாமி திராவிட கருத்தியலின் எதிரி என்பது பட்டவர்த்தனமான உண்மை. உண்மையில் சோ ராமசாமி யின் மறைவு ஒரு திராவிட கருத்தியல் ஆதரவாளனாக என்னை வருத்தமடையச் செய்கிறது.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆரம்பித்து நூறாண்டுகளும் திராவிட கட்சிகள் ஆட்சியைப் பிடித்து ஐம்பதாண்டுகளும் ஆகின்றன. திராவிட இயக்கமானது என்றைக்குமே யாருக்குமே அச்சுறுத்தலாக விளங்கியதில்லை. பெயர் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை வெளிப்படையாக எதிர்த்து அரசியல் செய்கிற திராவிட இயக்கத்தால் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு என்றைக்குமே அச்சுறுத்தல் இருந்ததில்லை. வட இந்தியாவில் ஹிந்துத்வ சக்திகள் பாபர் மசூதியை இடித்தது போல இங்கே திராவிட கட்சிகள் எந்த வழிபாட்டுத்தலங்களையும் இடிக்கவில்லை.
திராவிட கட்சிகள் அசைக்க முடியாத செல்வாக்கு நிறைந்த தமிழ்நாட்டில் திராவிடத்தை மிக கடுமையாக எதிர்த்துகொண்டு எந்தவித அச்சுறுத்தல்களுமின்றி அகில இந்திய அளவில் செல்வாக்கோடு ஒரு தமிழ்நாட்டு பிராமணர் கோலோச்சமுடியும். தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு திராவிட கட்சிகளால் எவ்வித அச்சுறுத்தலுமே கிடையாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் சோ ராமசாமி.
திராவிட இயக்கம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம். வட இந்தியாவில் ஹிந்துத்வ சக்திகள் செய்வது போல தன்னுடைய எதிரிகளுக்கு அது அச்சுறுத்தல் தராது. அந்த வகையில் திராவிட இயக்கத்தின் பெருமையை பேச நம்மிடம் இருந்த நிறைய உதாரண புருஷர்களில் ஒருவரான சோ மறைந்தார் என்பது நமக்கெல்லாம் வருத்தமே..!
#திராவிட_இயக்கத்தின்_பெருமை
#சோ_ராமசாமி
No comments:
Post a Comment