கலைஞர் காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அதை தனது பேஸ்புக் பக்கத்திலேயே செய்தியாகவும் வெளியிடுகிறார். கலைஞர் தன்னை எதிர்ப்பவர்கள் எல்லாருக்கும் இரங்கற்பா எழுதுவார் என்பார்கள் . அது உண்மை என்றாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால் யாருடைய மரணங்களையும் நான் எதிர்பார்த்து காத்திருப்பதில்லை. கலைஞரின் பிறந்தநாள் அன்று "கட்டுமரம் எப்ப சாகும்? " என்று கேட்பவர்களைப் பார்த்து முன்பெல்லாம் கோபம் வரும். இப்போது அதுகூட இல்லை.
கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்று வந்தவரல்ல. ஆனால் அவர் யாருடைய மரணத்தையும் எதிர்பார்த்ததில்லை. கலைஞரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிக முக்கியமானது இரண்டு. ஒன்று யாருடைய மரணத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. இன்னொன்று மரணங்களைக் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து காலம் நமக்கு தந்த பணியை செய்யவேண்டும். ஒருமுறை என்னை ஒரு நண்பர் கேட்டார் : கலைஞர் மீது இவ்வளவு பற்று வைத்துள்ளீர்களே, அவர் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? என்றார். நான் "வருத்தப்படுவேன். ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டது என முடங்காமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பேன் . ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லவேண்டும் . அதுவும் முடியாவிட்டால் தவழ்ந்தாவது செல்லவேண்டும். முன்னேறிச் செல்வது மட்டுமே முக்கியம் என கலைஞர் கற்றுத்தந்திருக்கிறார். எனவே அத்தோடு சோர்ந்துபோய்விடமாட்டேன் " என பதிலளித்தேன். இப்போது ஜெயலலிதா வை இழந்து வாடும் அவரது தொண்டர்களுக்கு கூட இதையே தான் சொல்ல விரும்புகிறேன்.
ஆரம்பத்தில் சொன்னதுபோல கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்றவர் அல்ல தான். ஆனால் அவருக்கு இயற்கை நீண்ட ஆயுளை வழங்கியுள்ளது. ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே அவர் கெட்ட பழக்கங்களை நிறுத்திவிட்டார், உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தார் என காரணங்கள் சொன்னாலும் அது அல்ல உண்மையான காரணம். அவர் இந்த வாழ்க்கையை சலிக்காமல் வாழ்கிறார். அவருக்கு எதுவுமே சலிப்பதில்லை. வாழ்த்து சலிக்கவில்லை வசவு சலிக்கவில்லை எதுவுமே சலிக்கவில்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் பெற்ற பையனுக்கு கூட இடம் தராமல் அவரே இன்னமும் நகராமல் இருக்கிறார் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மையில் அவருக்கு சலிப்பு என்பதே இல்லை. 25 வயதில் தமிழ் சினிமாவின் மிகப்புகழ் பெற்ற கதாசிரியர், இந்திய அரசியல் வரலாற்றில் எந்த கொம்பனாலும் செய்யவியலாத சாதனையான எவ்வித சாதிப் பின்புலமும் இன்றி ஐந்து முறை முதலமைச்சர், கிட்டத்தட்ட அறுபதாண்டுகளாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 45 ஆண்டுகளாக ஒரு கட்சியின் நிரந்தரத் தலைவர் என அவர் செய்த சாதனைகளை வேறு எவராலும் செய்யமுடியாது. ஆனால் அவருக்கோ இவ்வளவு செய்துவிட்டோமே இனி என்ன என்று சலிப்படையாமல் அடுத்து என்ன என்றுதான் போய்க்கொண்டிருப்பார்.
ஒருமுறை எம் எஸ் தோணியிடம் கேட்டார்கள் : இருபது ஓவர் போட்டியில் உலக கோப்பை வாங்கிவிட்டீர்கள், ஐம்பது ஓவர் போட்டி உலக கோப்பையும் ஜெயித்தீர்கள், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் ஜெயித்துவிட்டீர்கள். இனி என்ன? என்றபோது "இது எல்லாவற்றையும் மீண்டுமொருமுறை வாங்கவேண்டும் " என்றார் தோணி. யாருக்குத் தெரியும் கலைஞரைக் கேட்டால் கூட தான் செய்த சாதனைகளை மீண்டும் ஒருமுறை செய்யவேண்டும் என சொன்னாலும் சொல்வார். தோணி கூட ஓயுவு பெற்றுவிட்டார். ஆனால் கலைஞருக்கு ஓய்வே இல்லை. இந்த வாழ்க்கையின் மீது அவருக்கு என்றுமே சலிப்பே வந்தது இல்லை . அந்த சலிப்பின்மை தான் அவரை இத்தனையாண்டுகளாக தொடர்ந்து இயங்கிக்கொண்டே வரச்செய்கிறது!
#கலைஞர்
#சலிப்பில்லா_பெருவாழ்வு
No comments:
Post a Comment