இன்றைய தமிழ் இந்து நாளிதழில் சமஸ் எழுதியிருந்த "காண்டாமிருகங்கள் ஆகிறோம் " என்ற கட்டுரையை படித்தேன். நடிகர் சங்கத்தேர்தலுக்கு ஊடகங்கள் கொடுத்த அதீத முக்கியத்துவம் குறித்து கவலைப்படுகிறார். அவருடைய கவலை நியாயமானதும் கூட. தமிழ் இந்து பத்திரிகையில் பொதுவாக இரவு பத்தரை பதினொன்று மணிவரைக்குமான நிகழ்வுகளை மட்டுமே அடுத்தநாள் பேப்பரில் செய்தியாக போடுவார்கள். ஐபிஎல் ஆட்டங்கள் நடக்கும்போது மாலை 4 மணி ஆட்டத்தைப்பற்றி அடுத்தநாள் விலாவரியாக செய்தி வரும். 8 மணி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி பெற்ற ஸ்கோர் விவரம் மட்டுமே வரும். நேற்று கூட இரவு 11 மணியளவில் திருச்சி நெடுஞ்சாலையில் பெரிய விபத்து ஏற்பட்டது. அது இன்றைய இந்து நாளிதழில் வெளிவரவில்லை. ஆனால் நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகள் துணைத்தலைவர் பதவிகள் உள்பட இரவு 11.30 மணிக்கு மேல்தான் கிடைத்தது. அடுத்தநாள் இந்து பத்திரிகையில் தேர்தல் முடிவு விபரங்களைப்பற்றி விலாவரியாக கடைசிப்பக்கத்தில் முழுப்பக்க செய்தி வெளியாகியிருந்தது.
நடிகர் சங்க தேர்தலை ஊடகங்கள் அதீத அக்கறையுடன் அணுகியது தவறா தவறில்லையா என்பது இருக்கட்டும். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய தவறுகளை நம் ஊடகங்கள் செய்கின்றன. அதற்கு அவர்களாகவே சூட்டிக்கொண்ட பெயர் தான் நடுநிலைத்தன்மை. நடுநிலைத்தன்மை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும். யார் தவறு செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பெயர்தான் நடுநிலைத்தன்மை என்று கருதப்படுகிறது. அதுவா நடுநிலை? தவறு என்றால் தவறு என்று சொல்லனும் சரி என்றால் சரி என்று சொல்லனும். இதுதானே நடுநிலைமை? தமிழ்நாட்டு ஊடகங்களை எடுத்துக்கொள்வோம். நிறைய ஊடகங்கள் மத்திய அரசை விமர்சிக்கின்றன. ஆனால் மாநில அரசு என்று வரும்போது கப் சிப் தான். ஊடகங்களுக்கென்று ஒரு குரல் இருக்கிறது. அது தலையங்கம் போன்ற இடங்களில் வெளிப்படும். இந்து பத்திரிகை வாரத்தில் ஒருமுறையாவது தனது தலையங்கத்தில் மத்திய அரசு மீது சில குற்றச்சாட்டுகளை வைக்கும். ஆனால் தமிழக அரசு நடவடிக்கைகள் மட்டும் அதற்கு தெரிவதில்லை.
ஒரு முறை டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் மதுவிலக்கு பற்றிய நிகழ்ச்சி வரும்போது நெறியாளரே இப்படி கேட்கிறார் : "தமிழக அரசு மீது மக்களுக்கு குறிப்பிடும்படியான அதிருப்தி எதுவும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் தற்போது மதுவிலக்கு பிரச்சினையை கையிலெடுக்கின்றனவா? "
தமிழக மக்களுக்கு அதிருப்தி இல்லையென்று அவருக்கு யார் சொன்னது? ஆனால் பத்திரிகை விமர்சனங்களை வைத்து பார்த்தால் உண்மையிலேயே தமிழக அரசு மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்று தான் தோன்றும். உண்மை என்னவென்றால் ஊடகங்களுக்கு அதிருப்தி இல்லை என்பதே. ஆனால் நான்கரை வருட மாநில ஆட்சி மீது வராத அதிருப்தி ஒன்றரை வருட மத்திய அரசு மீது மட்டும் ஊடகங்களுக்கு வருகின்றன. இந்த இடத்தில் பிரச்சினை ரொம்ப எளிமையானது. தமிழக அரசாங்கம் என்பது அதிமுக அரசு. அதை விமர்சித்தால் அது திமுகவிற்கு சாதகமாக பேசுவது போலாகிவிடும். ஆகவே நாம் நம் நடுநிலையை கட்டிக்காப்போம். அதிமுகவை விமர்சித்தால் நடுநிலை அந்தஸ்து பறிபோய்விடுமே. இதே நம்முடைய சமஸ், திமுகவிலிருந்து அழகிரி வெளியேற்றப்பட்டபோது ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் என்று கட்டுரை எழுதினார். அதன்பிறகு அதிமுகவில் அதன் தலைவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகினார். பிறகு விடுதலையாகி மீண்டும் முதல்வரானார். அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இப்படி எத்தனையோ நடந்தன. ஆனாலும் அந்த கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி கேட்க அவருக்கு மனம் வரவில்லை.
நான் ஒரு தனிமனிதன். போக ஒரு கட்சியின் அபிமானி. என்னால் அந்த கட்சி செய்யும் தவறுகளை பொதுவெளியில் கண்டிக்க முடியாமல் போகலாம். அல்லது எந்த கட்சி சார்பற்றவனாகவும் இருக்கலாம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்கதான் என்று எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கமுடியும். ஆனால் ஊடகங்கள் அப்படியா? அவைகளுக்கென்று எந்த பார்வையுமே கிடையாதா? ஆனால் மாநில அரசு விஷயத்தில் மட்டும் எல்லாவற்றையும் நடுநிலை என்ற பெயரில் கண்டுகொள்வதில்லை. ஒரு அரசு தவறு செய்தால் அதை எதிர்க்கவேண்டியது எதிர்கட்சிகளின் வேலையே தவிர தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கின்றன. அப்படி இருப்பவர்கள் எல்லா நேரமும் அப்படியா என்றால் அதுவுமில்லை. எதிர்கட்சி நடவடிக்கைகளை விமர்சித்தும் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இந்த விஷயத்தில் ஆங்கில செய்தித்தாள்கள் எவ்வளவோ தேவலை. தமிழ் ஊடகங்கள் அரசின் தவறுகளை எடுத்துரைக்கத் தயங்குகின்றன. கருணாநிதி காத்துக்கொண்டிருக்கிறார். ஏதாவது அரசுக்கெதிராக செய்தி வெளியிட்டால் உடனே அதை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை ரெடி பண்ணிவிடுகிறார். அதனால் நாம் நடுநிலையோடு (!) இருப்போம் என்ற முடிவில் உள்ளார்கள்.
இந்த மாநிலத்தின் முதல்வரை எந்த பத்திரிகையாளராலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அரசு நிகழ்ச்சிகளை பற்றி அரசு துறை தருவதுதான் செய்தி. யாராவது பிரபலம் இறந்துவிட்டால் அறிக்கை தருகிறார். அவ்வளவுதான். அதைப்பற்றி என்றைக்காவது நம் ஊடகங்கள் வருந்தியிருக்கின்றனவா? விமர்சனம் செய்திருக்கின்றனவா? குறிப்பிட்ட ஒரு அமைச்சர் ஏன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று ஒருமுறையாவது கேட்டதுண்டா? இந்த விஷயத்தில் ஜெயா டிவி மீதும் கலைஞர் டிவி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. யாருக்கு ஆதரவாக வேலை செய்கிறோம் என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு டிவி நடத்துகிறார்கள். ஆனால் நடுநிலை சேனல்கள் என்ற பெயரில் புதிய தலைமுறையும் தந்தி டிவியும் அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைகளையும் பற்றி விமர்சனம் செய்யத்துணியாத நடுநிலைக்கு அவர்கள் எவ்வளவோ மேல்.
ஊடகங்கள் தங்கள் பெருமைகளை பேசுகின்றன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால் என்றைக்காவது தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்களா? உதாரணத்திற்கு இந்த நடிகர் தேர்தல். ஒரு சேனலில், ஓட்டுகள் எண்ண ஆரம்பித்ததிலிருந்து அவ்வப்பொழுது தங்கள் செய்திகளை சொல்கிறார்கள். முதலில் ராதாரவி அணி முன்னிலையில் வரும்போது "நாம் முன்பே சொன்னது போல ராதாரவி அணிதான் முந்துகிறது " என்கிறார்கள். பிறகு இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோது அதுவும் தாங்கள் கணித்ததே என்கிறார்கள். போகப்போக முடிவு மாறும்போது அதையும் தங்களுக்கு சாதகமாகவே சொல்கிறார்கள். ஏன் "நாங்கள் ஆரம்பத்தில் சொன்னதற்கு மாறாக முடிவுகள் வந்திருக்கின்றன " என்று சொல்வதில் என்ன ஈகோ?
அடுத்தது இந்த விவாத நிகழ்ச்சிகள். விவாத நிகழ்ச்சியில் நெறியாளரும் ஒரு பங்கேற்பாளராக மாறி விடுகிறார். உதாரணமாக ஒரு திமுக ஆதரவு நபரிடம் கேள்வி கேட்கவேண்டுமென்றால் இவர் அதிமுக நபராக மாறிவிடுகிறார். பாஜக பிரமுகரிடம் கேள்வி கேட்கும்போது கம்யூனிஸ்ட்டாக மாறிவிடுகிறார். அதாவது நடுநிலையாக இருக்கிறாராமாம். இதற்கு தேவையே இல்லை. அவர் அவர் வேலையை செய்தால் மட்டுமே போதும். ஒளி ஊடகங்கள் இப்போது பெருகிய பிறகு அதில் பங்கேற்கும் ஊடகவியாலாளர்களுக்கு தன்முனைப்பு அதிகமாகிவிட்டது. தாங்கள் நடத்துகிற நிகழ்ச்சிகளில் தாங்களே பிரதானமாக தெரியவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது அந்தந்த டிவி நிர்வாகங்களுக்கும் தெரியும். தெரிந்தும், "சம்பளம் தான் குறைவாக தருகிறோம் அட்லீஸ்ட் இதுபோன்ற சந்தோஷங்களுக்காவது அவர்கள் உற்சாகமாக வேலை செய்யட்டும் " என்ற எண்ணத்தில் அதை கண்டுகொள்வதில்லை. அதனால் இவர்களும் அதை தங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமாக கருதி அதீத தன்முனைப்பில் ஈடுபடுகிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் ஒன்றும் போர்க்களத்தில் உயிரையும் பணயம் வைத்து செய்தி சேகரிக்கக்கூடிய துணிச்சலான பத்திரிகையாளர்கள் கிடையாது. ஏசி போட்ட கண்ணாடி அறையில் மூஞ்சி முழுக்க பவுடர் அப்பிக்கொண்டு உட்கார்ந்து, நிருபர்கள் தருகிற ஒன்றிரண்டு செய்திகளை வைத்துக்கொண்டு வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு பேசுபவர்கள் தான்.
இந்த அதீத தன்முனைப்பு ஒருவரை தனியாக பேட்டி எடுக்கும்போது கூட நீள்கிறது. பேட்டி கொடுப்பவரோடு கூட கேள்வி கேட்காமல் விவாதம் செய்கிறார்கள். இப்போது ஏ ஆர் ரகுமான் பேட்டி என்றால் அதில் பெரும் சதவீதம் ஏ ஆர் ரகுமான்தான் பேசவேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை. கேள்வி கேட்பவர்தான் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒளி ஒலி வடிவமாக இருப்பதால் பார்ப்பதற்கு வேண்டுமானால் சுவாரசியத்தை தரக்கூடும். ஆனால் செய்தி என்று எதுவுமே இருக்காது. யார் அதிக தன்முனைப்பு காட்டுகிறாரோ அவரே சிறப்பான புத்திசாலியான பத்திரிகையாளராக அடையாளங்காட்டப்படுகிறார். அதேவேளை இந்த தன்முனைப்பை மாநில அரசின் தவறுகளை விமர்சிக்க பயன்படுத்துகிறாரா என்றால் அதுமட்டும் இல்லை. உண்மையிலேயே தமிழக பத்திரிகைத்துறைக்கு இது துர்பாக்கியமான நிலைமை. ஒரு சாமானிய மனிதன், தனக்கு தவறு என்று படுகிற அரசின் நடவடிக்கைகளை தனக்கு வாய்ப்பாக கிடைத்த சமூக வலைதளங்களில் போகிற போக்கில் விமர்சிக்கிறார். ஆனால் பராக்கிரமம் பொருந்திய ஊடகங்கள் இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கின்றன. அவைகளால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேள்வி கேட்டு பதிலை பெறமுடியவுமில்லை. அதற்காக விமர்சிக்கவும் இயலவில்லை. இந்த தவறுகளோடு ஒப்பிடும்போது நடிகர் சங்க தேர்தலை லைவ் டெலிகாஸ்ட் செய்தது பெரிய விஷயம் இல்லை.
No comments:
Post a Comment