நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்று நேர்பட பேசு நிகழ்ச்சியை கொஞ்சநேரம் பார்த்தேன். திரு. ஸ்டாலின் ,மக்களை சந்திக்கும் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் ராமாநுஜர் சன்னதிக்கு சென்றதை பற்றித்தான் இன்றைய நிகழ்ச்சியாம். வேடிக்கை என்னவென்றால் ஸ்டாலின் கோயிலுக்கு போனதை நமது எம்ஜியார் நாளேடு கடுமையாக விமர்சித்திருக்கிறதாம். அதுகுறித்தே இன்றைய நிகழ்ச்சியும். அது கிடக்கட்டும். எழுத்தாளர் ஞாநி நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்டார் : " ராமாநுஜர் சீர்திருத்தவாதி என்பதால் அவரைப்பற்றி சீரியல் எழுதுகிற கலைஞர், ஏன் பெரியாரைப்பற்றி இதுவரைக்கும் எந்த சீரியலும் எடுக்கவில்லை? " என்று கேட்டார்.
இப்படிப்பட்ட ஒரு கேள்வியை கேட்டவர் நம்முடைய ஞாநி யா என்பதை ஒருமுறை உறுதிபடுத்திக்கொண்டேன். பெரியார் திரைப்படம் உருவாக காரணமாக இருந்தவரே கலைஞர் தான். அந்தப்படத்திற்கு தமிழக அரசு நிதியிலிருந்து 95 லட்ச ரூபாய் எடுத்துக்கொடுத்து அதற்காக வழக்கையும் சந்தித்தார். பெரியார் மரணத்தின் போது தமிழ்நாட்டு முதல்வர் மரபை மீறி அரசு மரியாதை அளித்தவரும் இதே கலைஞர் தான். பெரியார் நினைவு சமத்துவபுரங்களை யாரும் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புவாய்ந்த சட்டத்தையும் மறந்துவிடமுடியாது.
இதெல்லாம் நம்முடைய ஞாநிக்கு தெரியாததல்ல. தெரிந்தும் அவர் ஏன் கலைஞர், பெரியார் டிவி சீரியல் எடுக்கவில்லை என்று கேட்டார் என்பதை ரொம்ப நேரமாக யோசித்துப்பார்த்தேன். அப்புறம் தான் எனக்கு விடை கிடைத்தது. பிரச்சினை ஞாநியல்ல. கலைஞர் தான்.
*கலைஞர் தமிழ் மொழிக்கு என்ன செய்தார்?
*கலைஞர் இந்தி திணிப்புக்கெதிராக என்ன செய்தார்?
*கலைஞர் சாதியை ஒழிக்க என்ன செய்தார்?
*கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார்?
அரசியல் செய்திகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் இணையத்தில் அதிகமாக புழங்கக்கூடியவர்கள் பலருக்கும் இந்த கேள்விகள் பரிச்சயமானவை. உண்மையில் சமகால அரசியல்வாதிகளில், மேலே சொன்ன விஷயங்களில் கலைஞர் அளவுக்கு செய்தவர்கள் ஒருத்தர் கூட கிடையாது. அவர் நிறைவாக செய்தாரா குறைவாக செய்தாரா என்பது வேறு விஷயம். ஆனால் அவர் செய்த அளவுக்கு, தமிழ் மொழிக்கோ சமூகநீதிக்கோ வேறு எவரும் செய்ததில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர் மீது மட்டும்தான் இத்தகைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
காரணம் என்னவென்றால் கலைஞர் மீதான எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை வேறு யாரிடமும் வைக்கமுடியாது. இதே ஞாநியால் தமிழ்நாட்டில் இன்னொரு அரசியல் தலைவரை "ஏன் பெரியார் பற்றி டிவி சீரியல் எடுக்கவில்லை? " என்று கேட்கமுடியுமா? சத்தியமாக முடியாது. இன்றைக்கு ஈழ ஆதரவாளர்கள் சிலருக்கு கலைஞர் விரோதியாகிப்போனதற்கு காரணமும் இதே எதிர்பார்ப்பு. இது எப்படியென்றால், "எப்பவும் தராத ஸ்ரீதேவி இப்பவும் தரல, என்னைக்கும் தர்ற மூதேவி ஏன் இன்னிக்கு தரல? " போலத்தான். சரி இந்த எதிர்பார்ப்பு எப்படி அவர் மீது மட்டும் வந்தது என்று பார்த்தால் அதற்கு காரணம் அவருடைய ஆற்றல். அந்த ஆற்றல் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பே எதிர்பார்ப்பு.
அந்த நம்பிக்கை காரணமாக கலைஞர் அபிமானிகள் மற்றும் கலைஞர் எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிரிவுகள் உருவாகிறது. மற்றவர்களுடன் கலைஞரை ஒப்பிட்டு அவர் மீதான நம்பிக்கை காரணமாக அபிமானிகள் பிரிவும், தங்களுடைய அளவுகடந்த நம்பிக்கை பொய்த்துப்போன விரக்தியில் எதிர்ப்பாளர்கள் பிரிவும் தொடர்ந்து எல்லா காலத்திலும் வந்துகொண்டே இருக்கிறது.
ஆகவே தான் நம்முடைய ஞாநி கலைஞரை பார்த்து ஏன் பெரியார் டிவி சீரியல் எடுக்கவில்லை என்று கேட்கிறார். சரி என் பங்குக்கு நான் ஒன்று கேட்கிறேன் : கலைஞர் ஏன் இதுவரைக்கும் அறிஞர் அண்ணா பற்றிய திரைப்படமோ அல்லது மெகா சீரியலோ உருவாக்கவில்லை?!
No comments:
Post a Comment