Monday, 12 October 2015

சாதியத்தைக் கண்டு பயப்படும் அரசாங்கம்

கோகுல்ராஜ் கொலைவழக்கில் யுவராஜ்க்கு சம்பந்தம் இருக்கிறதா இல்லையா அல்லது அவர் தவறு செய்தாரா இல்லையா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக அவரை காவல்துறை தேடி வந்தது. அவர் தலைமறைவாக இருந்தார். தேடப்படக்கூடிய நபராக அறிவிக்கப்பட்டு இப்போது தானாக வந்து சரண் அடைந்துள்ளார்.

நல்லது. இந்த இடத்தில் அரசாங்கம் மற்றும் அதன் காவல்துறையின் செயல்பாடுகள் தான் பேரதிர்ச்சியைத்தருகின்றன. போலீசாரால் தேடப்படும் ஒருவர் டிவி சேனலுக்கு பேட்டி தருகிறார்,  நேரலை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  பொதுவாக சரண் அடைபவர்கள் ரகசியமாக மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வக்கீல்கள் துணையோடு சரண் அடைவார்கள். போலீசாரால் தேடப்படும் (!) அவரோ சர்வசாதாரணமாக மோட்டார் சைக்கிளில் தனியாளாக வந்து நிற்கிறார். அவர் வருவதை முன்கூட்டியே அறிந்த அவரது ஆதரவாளர்களும் பெருந்திரளாக வந்து வரவேற்பு தருகிறார்கள்.

இதெல்லாம் பார்க்கும்போது அரசாங்கத்தின் மீதும் காவல்துறையின் திறமை மீதும் ஒரு ஏளனப்பார்வை ஏற்படுகிறதல்லவா? அரசாங்கமும் காவல்துறையும் உண்மையில் அந்தளவிற்கு சோப்லாங்கியா என்ன?  ஒருத்தர் எந்த மூலையிலோ இருந்துகொண்டு ஒரு போன் கால் செய்தோ அல்லது மெயில் அனுப்பி குண்டு மிரட்டல் விடுத்தால் கூட அந்த ஐபி அட்ரசை வைத்தே அவரை திறமையாக வளைத்துப்பிடிப்பதும் இதே காவல்துறைதான். அதே சமயம் டிவி சேனல் நேரலை விவாதத்தில் கலந்துகொள்பவரை பிடிக்கமுடியாமல் திணறுவதும் இதே காவல்துறைதான்.  பெண்கள்,  மாற்றுத்திறனாளிகள் மறியல் நடத்தினாலே அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிற அதே காவல்துறை தான் இன்று அவர் சரண் அடையும்போது குழுமியிருந்த ஆதரவாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாலும் அவர்கள் மீது தூசி துரும்பு படாமல் பார்த்துக்கொண்டது.

இங்கே பிரச்சினை காவல்துறையின் திறமையின்மை அல்ல. காவல்துறையை கட்டுப்படுத்தக்கூடிய அரசாங்கம்,  தீவிரவாத சக்திகளை முறியடித்து மாநிலத்தை அமைதிப்பூங்காவாக திகழச்செய்கிற அரசாங்கம்,  ஆட்சிக்கு வந்தவுடன் கொலை கொள்ளையர்களை ஆந்திராவுக்கும் ஒரிசாவுக்கும் தப்பியோடச்செய்த சர்வ வல்லமை படைத்த அரசாங்கம்,  சாதியம் என்று வரும்போது பம்மி பதுங்குகிறது. யுவராஜ் குற்றவாளியா நிரபராதியா என்பதெல்லாம் விசாரணை முடிவில் வெளிவரட்டும். அந்த விவகாரத்தில் நுழைய விரும்பவில்லை. ஆனால் அரசாங்கம்,  சாதியத்திடம் பயந்து போகிற இந்த போக்கு இருக்கிறதே இது மிக மிக ஆபத்தான ஒன்று. இது பல்வேறு சாதிய உணர்வாளர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.  இன்று ஒரு குறிப்பிட்ட  சாதியினர் அரசாங்கத்திடம் தங்கள் வெயிட்டேஜை காண்பித்து கெத்து காட்டினோம் என்று பெருமிதம் அடைந்தால் நாளை இந்த பொறி வேறொரு சாதிக்கு பரவும். பிறகு ஒவ்வொரு சாதியாக தங்கள் பராக்கிரமத்தை காட்டத்தொடங்குவார்கள். அரசாங்கத்திற்கு இதுவொரு பெரும் தலைவலியாக உருவெடுக்கும்.

இந்த விஷயத்தில் வெறுமனே அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. நம்முடைய அடி மனதிலேயே சாதி பற்றிய உணர்வுகளை விட்டொழிக்கவேண்டும். சாதிச்சங்கம்,  சாதிக்கட்சி என்று வரும்போது அந்தந்த சாதியை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவை இவர்களுக்கு தருவதை விட்டொழித்தாலே போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்தது.  ஏன் சாதிய உணர்வுகளை விட்டொழிக்கவேண்டுமென்றால்,  அதை வைத்துக்கொண்டு  நாம் விரும்புகிற அமைதி,  வளம்,  வளர்ச்சி என எதையுமே அடையமுடியாது.  பீகார் மாநிலத்தை சேர்ந்த என் நண்பர் ஒருவரிடம் சமீபத்தில் அங்கு   நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசியபோது அங்கே நிலவுகிற சாதிய அரசியல் குறித்து கவலை தெரிவித்தார். "உங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போன்ற நிலைமை இங்கே கிடையாது. அங்கே Cost politics,  இங்கே Cast Politics"  என்றார். அவர் சென்னையில் மட்டும் மூன்றாண்டுகாலம் இருந்துவிட்டு சென்றவர் என்ற காரணத்தால் அவரைப்பொறுத்தவரை தமிழ்நாட்டில் சாதியம் இல்லை,  அதனால் தான் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பது அவர் எண்ணம்.  ஆனால் தமிழ்நாடு விரைவில் இன்னொரு பீகாராக இன்னொரு உத்தரபிரதேசமாக மாறிவிடுகிற அபாயமும் இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இவற்றையெல்லாம் களைவதற்கு ஒரே வழி சாதிய அரசியலை மட்டுப்படுத்தவேண்டும். "என்னால் எப்படி அதை செய்யமுடியும்? " என்று கேட்டால் கண்டிப்பாக முடியும். ரொம்ப எளிது,  ஒவ்வொருவரும் தங்களது சாதிய உணர்வுகளை அல்லது குறைந்தபட்சம் அது குறித்த பெருமித உணர்வுகளை விட்டொழித்தாலே போதும்..!

No comments:

Post a Comment