Sunday, 4 October 2015

சிம்பு தேவன் - தொலைந்துபோன புத்திசாலித்தனம்

இயக்குநர் சிம்பு தேவன் அவர் இயக்குநராவதற்கு முன்பாக ஆனந்தவிகடன் பத்திரிகையில் நகைச்சுவைத்துணுக்குகள் எழுதக்கூடிய கார்ட்டூனிஸ்ட் டாக இருந்த காலத்திலிருந்தே ஓரளவுக்கு கவனத்தை ஈர்த்தவர் தான். ஒரு முறை சுஜாதா தனது "திரைக்கதை எழுதுவது எப்படி?" என்ற புத்தகத்தைப்பற்றி குறிப்பிடும்போது,  சிம்பு தேவன் அந்த புத்தகத்தை படித்துவிட்டு "அதுவரை பஜ்ஜென தெரிந்த திரைக்கதை பற்றிய அறிவு அந்த புத்தகத்தை படித்தபிறகு கண்ணாடி போட்டு பார்ப்பது போல தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டதாக " தெரிவித்ததாக சுஜாதா,  நமக்கு சிம்பு தேவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இம்சை அரசன் புலிகேசி படம் வந்தபோது தமிழ் சினிமா அதுவரை அடைந்திராத ஒரு புது அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தந்தது. மிக புத்திசாலித்தனத்துடன் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்களில் புலிகேசி படத்திற்கு முக்கிய இடமுண்டு. வடிவேலு என்ற நடிகரின் அத்தனை பரிமாணங்களையும் அந்தப்படம் வெளிக்காட்டியது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கே உரித்தான அறிவுஜீவித்தனத்துடன் சிம்பு தேவன் பிரகாசித்தார். இன்றுவரை அந்தப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் கொண்டாடப்பட்டும் பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டும் வருவதே சிம்பு தேவன் புத்தி கூர்மைக்கு எடுத்துக்காட்டு.

அறை எண் 305ல் கடவுள் படம் இம்சை அரசன் அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனாலும் சிம்பு தேவன் என்ற இயக்குநரின் புத்திசாலித்தனம் படம் முழுவதும் வெளிப்பட்டது. அந்தப்படத்தை பார்க்கிற ஒரு ஆத்திகர் நாத்திகராகவும்,  நாத்திகர் ஆத்திகராகவும் மாறிவிட வாய்ப்புண்டு. கடவுளான பிரகாஷ்ராஜ் திருவல்லிக்கேணி மேன்சனில் வசித்து வருவார். பிரகாஷ்ராஜ் தான் கடவுள் என்பது அங்குள்ள ஒரு சிறுமிக்கு தெரியும். பிள்ளையார் சிலை ஊர்வலம் ஒன்று அந்தப்பகுதியில் வரும். அப்பொழுது ஏற்பட்ட கலவரத்தில் அந்த சிறுமியின் அப்பாவை சாகடித்துவிடுவார்கள்.  கடவுளால் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி "கடவுள்" பிரகாஷ் ராஜை "நீ கெட்டவன்" என்று திட்டி செருப்பால் அடிப்பாள்.  நடந்ததை புரிந்துகொண்ட கடவுள் மதவெறி பிடித்த மனிதர்களின் செயலால் வெட்கப்பட்டு அவமானத்தில் தலை குனிந்து அந்த சிறுமியை கட்டிக்கொண்டு அழுவார். இந்தக்காட்சியை எப்போது பார்த்தாலும் என்னால் கண்ணீர் விடாமல் இருக்கமுடியாது.

இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படமும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறாத படம் தான். இருந்தபோதிலும் பல தரப்பினரால் கவனிக்கப்பட்ட ஒரு படம். வல்லாதிக்க நாடுகளின் சர்வதேச நுண்ணரசியலை அந்த படத்தில் சிம்புதேவன் நகைச்சுவை கலந்து காண்பித்திருப்பார்.  கன்னியும் களவாணிகளும் படத்தை  மட்டும் நான் இன்னமும்  பார்க்கவில்லை . தொடர்ந்து சிம்பு தேவன் தனது அறிவு ஜீவித்தன இமேஜை தக்கவைத்துவந்த காரணத்தால் புலி படத்தை உற்சாகத்துடன் எதிர்பார்த்தேன்.

விஜய் என்கிற வெகுஜன அபிமானம் பெற்ற நாயகன்,  ஸ்ரீதேவி,  சுதீப்,  ஸ்ருதி,  ஹன்சிகா,  பிரபு என எக்கச்சக்க நட்சத்திரங்கள்,  நட்ராஜ் உள்ளிட்ட மிகச்சிறந்த டெக்னிசியன்கள் இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு சிம்பு தேவன் தனது வழக்கமான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்து சென்றால் பட்டை நாமத்தை சாத்திவிட்டார். பேன்டசி கதை என்று முடிவெடுத்தவர் திரைக்கதையை பற்றி மருந்துக்கு கூட கவலைப்படவில்லை. முதல் ஒருமணி நேரம் அமெச்சூர் தனமான காட்சிகள் மூலம் பார்ப்பவர்கள் பொறுமையை முடிந்தவரைக்கும் சோதிக்கிறார்.

குழந்தைகளை கவர்வதற்காக அங்கங்கே ஏதோ சில கிராபிக்ஸ் சமாச்சாரங்களை சேர்த்திருக்கிறார். தனது முதல் படத்தில் கரடியை வைத்து காறி துப்ப வைத்தது போல இந்த படத்தில் ஆமையை விட்டு துப்ப வைத்திருக்கிறார். ஆனால் அந்த ஆமை தம்பி ராமையா முகத்தில் மட்டும் துப்பியது போல தோன்றவில்லை. பேன்டசி படத்தை எடுப்பதா இல்லை விஜய்யின் நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிப்பதா என்ற குழப்பம் படம் முழுவதும் தெரிகிறது.  தம்பி ராமையா,  சத்யன் காமெடிக்கு இருந்தும் ப்ளாஷ்பேக்கில் வருகிற அப்பா விஜய் அளவுக்கு அவர்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

புலி படத்தில் விஜய் இருக்கிறார்,  பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்,  மிகச்சிறந்த ஒளிப்பதிவு,  கலையலங்காரம்,  கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் சிம்பு தேவன் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருகிற அவருடைய புத்திசாலித்தனம் - அதுமட்டும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment