Thursday, 17 September 2015

அறிஞர் அண்ணா: அரசியல் நாகரிகத்தின் ஆசான்

1949ல் திராவிட முன்னேற்றக்கழகம் தோற்றுவிக்கப்படுகிறது. கிளை கழகம் என்ற ஒரு அமைப்பை தமிழக அரசியலுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்துவைக்கிறார் அண்ணா. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்ததே தேர்தலில் போட்டியிடத்தான் என்று கருதப்பட்ட சூழ்நிலையில் 1952ம் ஆண்டு பொதுத்தேர்தல் வருகிறது. தம்பிமார்கள் எல்லாரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினர். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் தேர்தலில் போட்டியிடுவதில் பயனில்லை என்று அண்ணா உணர்ந்ததால் அந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.

1956 திருச்சி மாநாட்டு வாக்கெடுப்பைத்தொடர்ந்து 1957 பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் முதன்முதலில் போட்டியிட்டது. 112 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த "சிறிய " கட்சிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் காங்கிரசு கட்சியை எதிர்த்து போட்டியிட்ட திமுக 15 இடங்களில் வெற்றி பெறுகிறது.  காங்கிரசோ 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.  திமுக "15 சீட்டு கட்சி" என்று காங்கிரசால் கேலி செய்யப்படுகிறது. இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே இந்த இடம் மிக முக்கியமான கட்டம். அறிஞர் அண்ணா ஒரு நல்ல பேச்சாளர் எழுத்தாளர் என்பது எல்லாருக்கும் தெரியும். முதன்முறையாக திமுக வெறும் 15 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு சட்ட சபைக்கு செல்லப்போகிறது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட எல்லாருமே புது முகங்கள்.

அண்ணா, " நாங்கள் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள். குழந்தை தவறு செய்தால் தாய் அதிகமாக அடிக்காமல் கட்டியணைத்து திருத்துவதைப்போல எங்களையும் தாங்கள் திருத்தி மக்களாட்சிவாதிகளாக ஆக்கவேண்டும்" என்று ஆளுங்கட்சியை கேட்டுக்கொண்டார். இந்திய ஜனநாயகம் அதுவரையில் இப்படியொரு முதிர்ச்சியான நாகரிக அரசியல்வாதியை கண்டதில்லை.  அறிஞர் அண்ணா தன்னுடைய கட்சி உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் எப்படி நாகரிகமாக நடந்துகொள்வது என்று வரையறுத்தார்.  வெறும் 15 சீட்டுகளே கொண்ட திமுக தனது முதல் சட்டமன்ற காலத்திலேயே எத்தகைய ஜனநாயக முதிர்ச்சிக்கு தன்னை தகுதிப்படுத்திக்கொண்டது என்பது இன்றளவும் ஒரு ஆச்சரியம் தான். அதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா.

1962 பொதுத்தேர்தல். காமராஜருக்கு ஆதரவாக களமிறங்கிய பெரியார், தேர்தல் மேடைகளில் திமுகவை கடுமையாக வறுத்தெடுக்க ஆரம்பித்தார். திமுகவினர்க்கோ அப்போது தர்மசங்கடமான நிலை. காலமெல்லாம் யாரை தலைவர் என்று அண்ணா சொல்லி வந்தாரோ அந்த தலைவர் இன்று தங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்கிறார். ஆனால் எந்த திமுகவினரும் பெரியாரை குறை சொல்லி பேசவில்லை. காரணம் அண்ணா. இப்படிப்பட்ட நாகரிக அரசியலில் தேர்ந்தவர் அண்ணா. 1963ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுகிறார். இன்றளவும் அதற்காக தமிழ் தேசிய ஆர்வலர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். ஆனால் ஜனநாயகத்தின் மூலமே எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்த அண்ணா அடுத்த நான்கே வருடங்களில் அதனை நிரூபித்துக்காட்டினார்.  1967 ல் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகிறார் இல்லை மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது. மாநில சுயாட்சி வலியுறுத்தப்பட்டது.

ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா சொன்ன வாசகங்கள் ஜனநாயக ஏட்டில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டவை. "ஆட்சிகள் மாறலாம், கட்சிகளும் மாறலாம்,  ஆனால் அரசாங்கம் நிலையானது" என்றார் . அரசியலில் தங்கள் எதிரி என்றாலும் காமராஜரை "குணாளா குலக்கொழுந்தே" என்றழைத்தவர அண்ணா.  நேரு விற்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய இயக்கம் தான் திமுக. ஆனால் தனிப்பட்ட முறையில் நேருவை குறிப்பிடும்போது "அவரோ கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் நாங்கள் கொட்டிக்கிடக்கும் செங்கல்" என்றார் அண்ணா. எத்தகைய நாகரிகம் பாருங்கள். அறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரிகம் இன்றைய அரசியலில் பயிலப்படவேண்டிய பாலபாடம்.

No comments:

Post a Comment