"சுந்தர் பிச்சை என்னைப்போலவே கடின உழைப்பால் தான் முன்னுக்கு வந்துள்ளார்- கருணாநிதி
# பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதை புடுங்கித்தின்னுச்சாம் அனுமாரு"
இப்படி ஒரு ஸ்டேட்டஸை என் ப்ரென்ட் லிஸ்ட்டில் இருக்கிற ஒருவர் நேற்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு இந்த விநாடி வரை 70 லைக்குகள் கிடைத்துள்ளன.
அந்த பதிவில் இன்னொரு பிரபலமான பதிவர் வந்து, "சுந்தர் பிச்சைக்கும் பெருமாள் பிச்சைக்கும் வித்தியாசம் தெரியாத ஆளு கருணாநிதி" என்று கமென்ட் போடுகிறார். கமென்ட் போட்டுவிட்டு நேராக தன்னுடைய சுவரில் இதே மேட்டரை,
"சுந்தர் பிச்சை என்னைப்போலவே கடின உழைப்பால் தான் முன்னுக்கு வந்துள்ளார்- கருணாநிதி
# அவர் காசு கொடுத்து ப்ளைட் டிக்கெட் வாங்கி பறந்தவர் உங்கள போல டிக்கெட் இல்லாம ரயில் ஏறினவர் இல்லை"
என்று ஒரு போஸ்ட் போடுகிறார். அவர் பிரபலமான பதிவர் என்பதால், அவருடைய இந்த பதிவுக்கு சுமார் 200 லைக்குகள் கிடைக்கின்றன.
முதலில் இதை பதிவிட்டிருந்தார் இல்லையா என் நட்பு பட்டியலில் இருப்பவர், அவருடைய அந்த பதிவில் சென்று "கலைஞர் கருணாநிதி இதுபோல எப்போது சொன்னார்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர் "ஏன் அவர் சொன்னாதான் நம்புவீர்களா அவர் கடின உழைப்பாளி என்று?" என்று திருப்பிக்கேட்டார். நான், "கலைஞர் கடின உழைப்பாளியா இல்லையா என்பதல்ல என் கேள்வி. அவர் எப்போது இதை சொன்னார் என்பது மட்டுமே" என்றேன்.
"எல்லார் டைம்லைன்லேயும் ஓடிட்டிருக்கு. கண்டிப்பா அவர் கடின உழைப்பாளி தான்" என்றார். அதாவது நான் கலைஞர் அபிமானி என்பதால் அவர் கடின உழைப்பாளி என்பதை எனக்கு அடிக்கடி சொல்கிறார். அதுவே, முதலில் சொன்ன கமென்ட் போட்ட அந்த பிரபல பதிவருக்கு அவருடைய ரிப்ளை கமென்ட்: "அந்தாளு லூசுகூ.... மச்சி" என்பதே.
திரும்பவும் நான் விடாப்பிடியாக, "அப்ப மற்றவர்கள் டைம்லைன் பார்த்துத்தான் போட்டீர்களா உங்களுக்கு உண்மையிலேயே கலைஞர் இப்படி சொன்னார் என்று தெரியாதா?" என்றேன். "இல்லை சொல்லியிருப்பார். சொல்லாம எப்படி வரும்? டிவியில சொல்லியிருப்பார்" என்றார். நான் , "கலைஞர் கருணாநிதி பேசுவது எழுதுவது சொல்வது எல்லாமே உடனுக்குடனே ஆவணப்படுத்தப்படுகிறது. அப்படி என்றால் இது கண்டிப்பாக இது ஏதாவதொரு செய்தி வடிவில் இருக்கும். அதை கண்டு பிடித்து தாருங்கள்" என்றேன். "கண்டுபிடிக்கிறேன் " என்று நேற்று மாலை கூறினார். இப்போதுவரை அவரால் முடியவில்லை. இனியும் முடியாது. ஏனென்றால் கலைஞர் அப்படியொரு வாசகங்களை சொல்லவே இல்லை என்பதே நிஜம்.
இது ஒருபுறமிருக்க, "சுந்தர் பிச்சை என்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்" என்று கருணாநிதி ட்விட்டரில் டிவீட் செய்த்து போல ஒரு ஸ்கிரீன் ஷாட் நேற்று உலா வந்த்து. ஆனால் கலைஞர் அதுபோல எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
கருணாநிதி இப்படி சொன்னதாக ஸ்டேட்டஸ் போட்ட என் நண்பர், தானாக தன் கற்பனையில் இப்படி எழுதினாரா இல்லை மற்றவர்கள் போடுவதை பார்த்து எழுதினாரா என்பது அவர் மனசாட்சிக்குத்தான் தெரியும். எனக்குத்தெரியவில்லை. ஆனால் பேஸ்புக்கில் இந்த கேவலமான போக்கு அதிகரித்துள்ளது. இது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை கொஞ்சம் விளக்குகிறேன்.
1. அப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு யாரோ ஒருத்தர் சொன்னது போல இவர்களாகவே போலியாக ஒரு ஸ்டேட்மென்ட்டை உருவாக்கவேண்டியது. அதற்கு கவுன்ட்டர் கொடுக்கும் இன்னொரு வாசகங்களை அதனோடு இணைப்பது. பிறகு அது ஒரு முழு ஸ்டேட்டஸாக மாறி விடும். அந்த ஸ்டேட்டஸை பார்த்துவிட்டு அதே போல இன்னும் ஒரு பத்து பேர் போடவேண்டியது.
உதாரணமாக இன்று வாலு படம் ரிலீசாகியுள்ளது. இதைவைத்து கற்பனையாக ஒரு ஸ்டேட்டஸை உருவாக்க முடியும்.
"வாலு படத்தை உயிரை கொடுத்து ரிலீஸ் செய்துள்ளோம்- டி ராஜேந்தர்
# படத்தை பார்த்துட்டு எத்தனை பேர் உயிரை வுடப்போறானோ.."
இந்த ஸ்டேட்டசை பார்த்துவிட்டு இதில் முதல்பாதியை மட்டும் அப்படியே பயன்படுத்தி இதே போல கற்பனையாக நிறைய ஸ்டேட்டஸ்களை உருவாக்கலாம். டி ராஜேந்தர் உண்மையில் அப்படி சொன்னாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள யாரும் அக்கறை காட்டுவதில்லை என்பதே இந்த ஸ்டேட்டஸ்கள் வெற்றி பெறுவதில் உள்ள ரகசியம்.
2. ஒரு பிரபலமானவர் சொன்னவற்றில் ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு அவரை கலாய்த்து ஸ்டேட்ஸ் போடுவது.
உதாரணம்: விஜயகாந்த், "மது பாட்டில்களில் குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதியிருக்கிறது. இவ்வளவு கேடு தரும் பொருளை ஏன் அரசாங்கம் விற்க வேண்டும்?" என்று சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இதிலிருந்து ஒரு காமெடி ஸ்டேட்டசை உருவாக்கலாம்.
"மது பாட்டில்களில் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதியுள்ளது- கேப்டன்
- கேப்டன் இன்னைக்குத்தான் கண்ணாடி கழட்டாம சரக்கடிச்சார் போல "
இது ஒரு ஸ்டேட்டஸ்.
"அட டா,யாருக்கும் தெரியாத விஷயத்த கேப்டன் கண்டுபிடிச்சுட்டார்யா" என்று இன்னொரு ஸ்டேட்டஸ் போடலாம்.
இதையே வால் பிடித்தாற்போல follow செய்ய இங்கே நிறைய ஆட்டுமந்தைக்கூட்டம் உள்ளது. இந்த மந்தைக்கூட்டங்களுக்கு , செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை எதைப்பற்றியும் அக்கறையில்லை. ஒரு தெருவில் நாய் குரைத்தால், என்ன ஏதுவென்றே தெரியாமல் எல்லா தெருவிலும் உள்ள நாய்கள் குரைப்பது போல, அவன் போட்டுட்டான் அதையே நாமும் போடனும், லைக்ஸ் வாங்கனும் என்பதே இந்த மந்தைக்கூட்டத்தின் அடிப்படை விதி.
ஒரு சாதாரண common man க்கு இருக்கிற common sense கூட இந்த மந்தைக்கூட்டத்துக்கு கிடையாது என்பது இந்த மந்தை விதிகள் வெற்றிபெற முக்கிய காரணம்.
No comments:
Post a Comment