முதல்வர் மற்றும் பிரதமர் இடையேயான சந்திப்பைப்பற்றி காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவருடைய உருவ பொம்மைகள் ஆங்காங்கே எரிக்கப்பட்டு வருகிற நிகழ்வை பார்க்கிறோம். அதிமுகவினர் தங்களது கடுமையான எதிர்ப்பைத்தெரிவிக்கிறார்கள். இந்த இடத்தில் ஒரு இயல்பான கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இளங்கோவன், மோடி மற்றும் ஜெ இருவர் குறித்தும் பேசியிருக்கிறார். ஆனால் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை காட்டுவதைப்போல பாஜகவினர் செயல்படவில்லை. ஏன்...? ரொம்ப சிம்பிளான விஷயம், மோடி ஒரு ஆண், ஜெ ஒரு பெண். ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சித்தலைவராக இருந்துகொண்டு இளங்கோவன் இப்படி பேசியிருக்கிறாரே என்ற ஆதங்கம் வருகிறதே தவிர இளங்கோவன் என்கிற ஒரு தனி ஆண் இப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை.
இளங்கோவன் அப்படி பேசிவிட்டார் என்று கொதிப்படைகிற எத்தனை ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் பெண்களை அப்படி பார்த்தும் பேசியும் இராதவர்கள்...? நாம் போற்றியும் பாதுகாத்தும் வருகிற கலாச்சாரங்கள் அத்தனையுமே பெண்களின் உடலின் மீது எழுதப்பட்டவை. விரகதாபத்துடன் உள்ள ஆண் என்று சொடுக்கி இணையத்தில் தேடிப்பார்த்தால் எதுவுமே கிடைக்காது. இதுவே விரகதாபம் உள்ள பெண் என்றால் கதைகள் வந்து கொட்டும்.
அரசியலில் பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்டாமலிருப்பதற்கு காரணம் இந்த உடற்சார்ந்த தாக்குதல்கள் தான். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களைப்பற்றிய விமர்சனம் வேறு. ஆனால் திவ்யா என்ற நடிகை அரசியலுக்கு வந்து எம்பியாகும்போது மட்டும் அவரை "குத்து" ரம்யா என்று எகத்தாளத்துடன் அழைப்பவர்கள் தானே நாம்? இத்தனைக்கும் அவர் எஸ் எம் கிருஷ்ணா என்கிற சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவரின் பேத்தி. அவருக்கே அந்த நிலைமை. எத்தனையோ ஆண் அரசியல்வாதிகள் சிறைக்கு செல்கிறார்கள். ஆனால் கனிமொழி சென்றபோது மட்டும் "திகாரில் கனிமொழிக்கு முதலிரவு" என்று வெளிவந்த செய்தியை லைக்கிட்டும் ஷேர் செய்தும் மகிழ்ந்தவர்கள் நாம். குஷ்பு வையும் விஜயதாரிணி எம்எல்ஏ வையும் பேசாத ஆபாச பேச்சுகளா...?
இளங்கோவன் பேசியிருப்பது மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள தமிழகத்தின் முதல்வர். மேலே சொன்ன பெண்கள் கூட பெரும் செல்வாக்கு உடையவர்கள் தான். இவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்முடைய சாதாரண பெண்களின் நிலைமையை நினைத்துப்பாருங்கள். அவர்களுக்காவது போராட இத்தனை பேர் இருக்கிறார்கள். ஆனால் சாமானிய பெண்களுக்கு...?
அலுவலகத்தில் பணி புரியும் ஒரு ஆண் நட்பு ரீதியாக உடன் பணிபுரியும் ஒரு பெண்ணை பைக்கில் ஏற்றி சென்றால் அது அந்த ஆண் குடும்பத்தில் ஒரு கௌரவ குறைச்சலாக பார்க்கப்படாது. அதுவே அந்த பெண் குடும்பத்திற்கு அதுவொரு கௌரவ குறைச்சல். பொதுவாக இந்த மாதிரி எழுதும்போது , "உன் வீட்டு பெண்கள் வேறு ஆண்களுடன் பைக்கில் சென்றால் உனக்கு எப்படியிருக்கும்?" என்ற வழக்கமான டெம்ப்ளேட் கேள்வி வருமென்று எனக்குத்தெரியும். அதனால் நானாகவே அந்த கேள்வியை இங்கு வைத்துவிடுகிறேன். பாவம் அவர்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம்.
பெண்களுக்காக பரிந்து பேசி பெரிய யோக்கிய சிகாமணியாக என்னை காட்டிக்கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எந்த காரணங்களுமேயன்றி ஒரு பெண்ணை அவள் உடல் சார்ந்து கமென்ட் செய்கிற பழக்கம் 90 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது. நான் அதுபோன்று பேசிய சந்தர்ப்பங்களை இப்போது நினைத்துப்பார்த்து வெட்கப்படுகிறேன். அதுவே தங்கள் வீட்டு பெண்கள் என்று வரும்போது மட்டும், தன் அம்மா ஒரு பத்தினி தெய்வம், மனைவி உத்தமி, மகள் கற்பு பிறழாதவள். பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் ஒரு சிக்கலை எதிர்கொள்வார். அது கமல்ஹாசனுக்கு மட்டுமான சிக்கலன்று. ஒட்டுமொத்த ஆண்களுக்கான சிக்கல். சுயம்புலிங்கம், இரவில் செக்ஸ் படங்களை தனது கேபிள் டிவியில் ஒளிபரப்புவார், அவரும் அதை விரும்பி பார்ப்பார். அதுவே அவருடைய மகளை ஒருத்தன் ரகசியமாக படம் பிடித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. இதுதான் நம் பிரச்சினை.
திருவிளையாடல் படத்தில் சிவபெருமானை பார்த்து பார்வதி வேதனையுடன் சொல்வார்: உலகையே காக்கின்ற மகேஸ்வரன் குடும்பம் முதல் சாதாரண குடும்பம் வரை பெண்களின் நிலைமை ஒன்றுதான் போல. அதையேதான் இப்போது கொஞ்சம் மாற்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாட்டையே ஆளுகின்ற பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு சாமானிய பெண்ணாக இருந்தாலும் சரி, ஆண்களின் பார்வை ஒன்றுதான் போல.
இன்று முதல்வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது தவறுதான். ஆனால், அதற்காக கொதிக்கிற நம்மில் பலர் அதைவிட கொடுமைகளை நம் வாழ்வில் பல்வேறு பெண்களுக்கு இழைத்துவருகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இளங்கோவனை கண்டிப்போம் ஆனால் எங்கள் தவறுகளை உணரமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு அவரை விமர்சிக்க என்ன யோக்யதை இருக்கிறது சொல்லுங்கள்...? மகாத்மா காந்தி சொன்னது போல, எந்த மாற்றத்தை காண விரும்புகிறோமோ அந்த மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பிப்போம்...!
No comments:
Post a Comment