மக்களை நேரடியாக சந்திக்கிற தனது "நமக்கு நாமே " பயணத்தின் மூன்றாவது கட்டத்தை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் திரு. ஸ்டாலின். சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் அவர் இந்த குறுகிய காலத்தில் இதுவரை பயணித்திருக்கிறார் என்பது, எனக்குத்தெரிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒரு சாதனை.
ஏன் ஸ்டாலினின் இந்த பயணம் பெரிதும் பேசப்படுகிறது? அவர் இதற்கு முன்னால் மக்களை சந்தித்ததில்லையா என்றால், இல்லை அவர் தொடர்ந்து மக்களை சந்திக்கிற ஒரு அரசியல்வாதியாகத்தான் இருந்து வருகிறார். ஸ்டாலின் என்ற பெயரைக்கேட்டவுடன் முதலில் என் மனக்கண்ணில் எழுகிற பிம்பம் எதுவென்றால், பதினாறு வருடங்களுக்கு முன்பாக ஒரு பெருமழைக்கால சென்னையில், ரெயின் கோட் அணிந்து, பேண்ட்டை முட்டி வரை மடித்துவிட்டுக்கொண்டு தேங்கிய தண்ணீரில் நின்று கொண்டிருந்த அன்றைய சென்னை மேயர் ஸ்டாலினின் அந்த உருவம் தான். அப்போதுதான் என் வாழ் நாளில் ஒரு அரசியல் தலைவரை மிக அருகில் வைத்து பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அதன் பிறகு எத்தனையோ முறை அவரை நேரில் பார்த்திருந்தாலும் அந்த சம்பவமே எனக்கு அவருடைய அடையாளமாக மாறிப்போனது.
தான் துணை முதல்வராக இருந்த காலத்தில் காலையில் வாக்கிங் செல்லும்போது மக்கள் அவரை சந்திப்பது சென்னைவாசிகள் பரவலாக அறிந்த செய்தி. ஸ்டாலின் மக்களை சந்திக்க செல்கிறார் என்று சொன்னால், "அதான் மாசாமாசம் சந்திக்கிறாரே, இது என்ன புதுசா ஒரு மக்கள் சந்திப்பு " என்று கொளத்தூர் தொகுதி மக்கள் ஆச்சரியப்பட்டு சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு தன் தொகுதி மக்களை அவர் சந்தித்திருக்கிறார்.
சரி, அப்போதெல்லாம் பேசப்படாத அவருடைய மக்கள் சந்திப்பு இப்போது மட்டும் ஏன் அதிகம் பேசப்படுகிறது என்றால், அது அவர் தேர்ந்தெடுத்துள்ள உத்தி. ஒரு அரசியல் தலைவரின் சுற்றுப்பிரயாணம் போல இல்லாமல் மக்கள் தலைவரின் பயணம் போல காட்ட அவர் மிகுந்த மெனக்கெட்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் எங்குமே கறுப்பு சிவப்பு கரை வேட்டியை பயன்படுத்தவில்லை. தொண்டர்களை விட மக்களை சந்திக்கவே அவர் ஆர்வம் காட்டியிருக்கிறார். இதுவரை வழக்கமாக எந்த சுற்றுப்பிரயாணங்களை மேற்கொண்டபோதும் கூடுதலாக உள்கட்சி விவகாரங்களையும் பார்ப்பவர் இந்தமுறை அதைத் தவிர்த்திருக்கிறார். மிக அதிக அளவில் பெண்களை சந்தித்திருக்கிறார். எந்த அரசியல் அறிவும் இல்லாத கன்னி வாக்காளர்களை கவருவது அவருடைய திட்டமாக இருக்கலாம். "கார்ப்பரேட் கம்பெனி பாணியில் திட்டமிடப்பட்டுள்ளது, ஆலன் சொலே பேண்ட் அணிந்து மக்களை சந்திக்கிறார் " என்று விதவிதமாக விமர்சனங்கள் வந்தாலும், அவருடைய இந்த பயணம் ஒரு செய்தியை கோடிட்டுக்காட்டியுள்ளது. இனி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மக்களை நோக்கி செல்லவேண்டியது என்ற அவசியத்தை அவர் காண்பித்துள்ளார். திட்டங்கள் மட்டும் மக்களை நோக்கி சென்றால் போதாது, அரசியல்வாதிகளும் மக்களை நோக்கி செல்லவேண்டும் என்ற உண்மையை வெளிச்சமாக்கியிருக்கிறார். அவருடைய இந்த புது பாணியிலான உத்தி தேர்தலில் அவருக்கு வெற்றியை தேடித்தருமா இல்லையா என்று கணித்து சொல்வதற்கு நான் ஒன்றும் தேர்தல் ஜோதிடர் அல்ல. ஆனால் இதன் தாக்கம் இனிவரும் எதிர்கால அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ராஜா, ராணி போன்ற மேட்டிமைத்தன அரசியல் கண்டிப்பாக மட்டுப்படும்.
சரி, தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களை சந்திருக்கிறார் ஸ்டாலின், இனி அடுத்து என்ன என்றால், தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை அவர் மக்களை சந்திப்பார். அதுதான் ஸ்டாலின். இதோ, அவர் தனது மக்களை சந்திக்கும் அடுத்த ஒரு நெடும்பயணத்திற்கு தயாராகிவிட்டார்...!
No comments:
Post a Comment