Saturday, 24 December 2016

பெரியாரும் காந்தியும்!

நேற்று நான் எழுதிய ஒரு பதிவிலும் இன்பாக்சிலும் சிலர் இப்படி கேட்டிருந்தார்கள் : "ஜெயலலிதா இறந்துவிட்டார்.  பாவம் இனி எதற்கு அவர் மீது விமர்சனம் வைக்கவேண்டும்?" . இதை நான் குறை கூறவில்லை.  இறந்தவர்களைப் பற்றி நெகட்டிவாக எதுவும் சொல்லக்கூடாது என்பது இங்கே நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இதே நாட்டில்தான் இறந்து 40,  50 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ச்சியாக இரு தலைவர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டே வருகிறது.  ஒருவர் காந்தியடிகள் இன்னொருவர் பெரியார்.  இந்த இரு தலைவர்கள் மீதுதான் தொடர்ச்சியாக விமர்சனங்களும் அதற்கு மறுப்பு விளக்கங்களும் என இன்னமும் நீண்டுகொண்டே செல்கிறது.  நேரு வை இப்போது சமீபமாகத்தான் இந்த லிஸ்ட்டில் சேர்க்க அவ்வப்பொழுது முயற்சிகள் நடக்கின்றன. 

காந்திக்கும் பெரியாருக்கும் மட்டும் இது நடப்பது ஏன்?  இத்தனைக்கும் அவர்கள் எந்த அரசுப் பதவியிலும் இல்லை.  இருந்திருந்தாலாவது நிர்வாகம் சரியாக நடத்தவில்லை,  ஊழல் வாதி கள் என ஏதாவது குற்றஞ்சாட்டலாம்.  அதுவும் இல்லை.  பிறகு ஏன் இவர்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால் இவர்கள் செய்த அரசியல் சமுதாயப்பணி ஆழமானது. 

காந்தி கடவுளின் எல்லையற்ற கருணை மூலம் இந்த சமுதாயத்தை சீர்படுத்தலாம் என எண்ணினார்.  பெரியாரோ எல்லா சீர்கேட்டுக்கும் கடவுளையே ஜவாப்தாரியாக்கிவிடுவதால் கடவுளே இல்லை என்பதன் மூலம் தனது சமுதாயப்பணியை தொடர்ந்தார்.  தான் இறக்கும் தருவாயில் கூட ராம நாமத்தை ஜெபிக்க மறவாத காந்திக்கும் தனது சிலையில் கூட கடவுள் இல்லை என எழுதச்சொன்ன பெரியாருக்கும் இருந்த பெரிய ஒற்றுமை மனிதாபிமானம். 

காந்தி பெரியார் இருவருமே வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற போதிலும் காந்தி கையாண்ட அளவுக்கு மிதவாத அரசியலை பெரியார் கையாளவில்லை. பெரியார் அப்படி செய்திருக்கவும் முடியாது.  கடவுளிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கு அந்த வசதி இருந்தது.  "தப்பு பண்ணாதப்பா சாமி கண்ண குத்திடும் " என்று சொல்லிவிடுவது ரொம்ப சுலபம்.  அதேசமயம் சாமி கண்ணையும் குத்தாது ஒண்ணும் பண்ணாது ஆனா நீ தப்பு பண்ணாம ஒழுக்கமா இருக்கனும் என்று சொல்லி திருத்துவதென்பது ரொம்ப சிரமம்.  அதனால் தான் காந்தியடிகள் தீண்டாமையை ஒழிக்க நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்,  கடவுள் முன் அனைவரும் சமம் என்றார்.  கடவுள் முன்பாக சமம் என்று சொன்னபிறகு மறுபேச்சு உண்டா?  ஆனால் கடவுள் இல்லை.  மனிதரிலும் உயர்வு தாழ்வு இல்லை.  அனைவரும் சமம் தான் என சொல்லி போராடுவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. 

காந்திக்கும் பெரியாருக்கும் இன்னொரு ஒற்றுமை இருந்தது.  அவர்கள் தாங்கள் வாழும் காலத்தில் தங்களது இமேஜ் குறித்து கவலைப்படவில்லை.  பொதுவாழ்க்கை என்றாலும் அந்தரங்க வாழ்க்கை என்றாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து அச்சப்படவில்லை.  ஒன்றின் மீதான தங்களது கருத்தை காலப்போக்கில் மாற்றுக்கொள்ள இருவருமே தயங்கியதில்லை.  தனது மகள் வயதுடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டால் தன் இமேஜ் போய்விடுமோ என பெரியாரும் கவலைப்படவில்லை.  தனது பேத்தி வயதுடைய பெண்ணிடம் பிரம்மச்சரிய பரிசோதனை மேற்கொள்வதற்காக காந்தியும் கவலைப்படவில்லை. 

எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கிய பெரியாரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதல்ல என் கருத்து.  தாராளமாக கேள்வி கேட்கலாம்.  விமர்சிக்கலாம்.  ஆனால் அவரை வாசித்துவிட்டு கேள்வி கேளுங்கள் என்பது தான் என் வேண்டுகோள்.  அப்படி கேட்கிறவர்கள் பெரியார் எழுதியவற்றில் நடுவிலும் கடைசியிலும் இரண்டு வரிகளை வெட்டி ஒட்டி அதை பெரியாரின் கருத்தாக கொண்டுவந்து நிறுத்தி அதன்மூலம் பெரியாரை குற்றம் சாட்டவேண்டும் என செய்கிறார்களே ஒழிய முழுவதுமாய் அவரை வாசிப்பார்களா என்பது தெரியவில்லை.  பெரியாரை நீங்கள் மொழி இனம் மதம் பண்பாடு கலாச்சாரம் என எந்த கோப்பைக்குள்ளும் அடைக்கமுடியாது.  அவர் எந்த பற்றுமில்லாத மானுடப்பற்று மட்டுமே தனது அடையாளமாக கொண்டவர்.  கடவுள் மறுப்பு தான் பெரியாரின் அடையாளம் என்றால் இன்று தமிழ்நாட்டில் ஒருத்தரும் பெரியாரை நன்றி பாராட்ட மாட்டார்கள்.  எப்படி அவர் குறிப்பிட்ட மொழிக்கோ மதத்துக்கோ இனத்துக்கோ பற்றாளர் இல்லையோ அதேபோல எந்த மொழிக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் எதிரானவர் இல்லை.  காந்தி வெள்ளைக்காரர்களை எதிர்த்தார் என்பதற்காக அவர் பிரிட்டிஷாரின் விரோதி என யாராவது சொல்வார்களா?  தென்னாப்பிரிக்காவில் தனக்கேற்பட்ட நிறவெறி சம்பவம் அவரை இந்திய சுதந்திரத்தில் கொண்டுவந்து தள்ளியது.  சிறுவயது முதலே தான் சந்தித்த சமூக சாதிய ஏற்றத்தாழ்வுகள் பெரியாரை சமூக அரசியல் செய்யவைத்தது. 

ஹிந்துத்வ வலது சாரி அரசியல் மற்றும் அறிவுஜீவிகளின் குரு என்று இன்றளவும் போற்றப்படுகிற ராஜாஜியோடு தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி மகிழ்ந்தவர் தானே பெரியார்!  தான் முற்றிலும் எதிர்க்கிற சித்தாந்தங்களை கூட தனக்கெதிராக பேச அனுமதித்தவர் தான் பெரியார்.  பெரியார் இத்தனையாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறார் என்றால் அவருடைய தேவை இன்றும் இருக்கிறது என்றே பொருள்.  பெரியார் எதையும் புனிதப்படுத்தவில்லை,  பெரியாரை புனிதராக்கவும் நாங்கள் விரும்பவில்லை,  ஏன் அவருமே அதை அனுமதிக்கவில்லை . பெரியாரை கேள்வி கேளுங்கள்,  பெரியாரை விமர்சியுங்கள்.  ஆனால் அதற்கு முன்பாக தயவு செய்து பெரியாரை வாசியுங்கள்..!

Sunday, 11 December 2016

அரசியல் வாரிசு - வாரிசு அரசியல்

அரசியல் வாரிசு - வாரிசு அரசியல்
------------------------------------------------------------

அரசியல் வாரிசு - வாரிசு அரசியல் இரண்டும் ஒன்றல்ல.  ஒரு தலைவர் தனது காலத்திலேயே தன்னுடைய அரசியல் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல இன்னொரு நபரை முன்னிறுத்துவது அரசியல் வாரிசு.  அப்படி முன்னிறுத்தப்படுபவர் மகனாகவோ மகளாகவோ மனைவி தோழியாகவோ இருக்கவேண்டும் என அவசியமில்லை.  யார் வேண்டுமானாலும் அரசியல் வாரிசாக வரமுடியும்.  வாரிசு அரசியல் என்பது வெற்றிபெற்ற தலைவரின் இடத்தை அவரது உறவுகளோ நட்புகளோ எவ்வித தகுதியுமின்றி பெறுவதாகும். 

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என நான் இன்னமும் நம்புவதால் ஜனநாயகத்திற்கு தங்கள் மக்களை பழக்கியவர்களாக தேசிய அளவில் நேருவையும் தமிழக அளவில் அண்ணாவையும் நன்றியுடன் நினைவு கூறுவேன்.  இவ்விரு தலைவர்களுமே தங்களுக்கு பிறகு இவர் தான் தங்களுது வாரிசு என யாரையும் அடையாளம் காட்டவில்லை.  அதேசமயம் தங்கள் காலத்திலேயே வருங்கால தலைவர்கள் உருவாவதை அனுமதித்தார்கள். 

சரி இப்போது தமிழக அரசியலுக்கு வருவோம்.  அறிஞர் அண்ணா மறைந்தபிறகு கட்சியில் நெடுஞ்செழியன்,  கருணாநிதி,  நாஞ்சில் மனோகரன் போன்ற அடுத்த தலைவர்கள் இருந்தனர்.  கட்சியின் Protocol படி முதலிடம் அண்ணா,  இரண்டாவது நெடுஞ்செழியன் மூன்றாவது கருணாநிதி இருந்தனர்.  அண்ணா மறைவுக்கு பிறகு முதல் இடத்திற்கு யார் செல்வதென நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் போட்டி.  கருணாநிதி க்கு மற்ற தலைவர்களின் ஆதரவு நெடுஞ்செழியனை விட அதிகமாக இருந்ததால் அவர் முதல் இடத்திற்கு வருகிறார்.  அடுத்த தேர்தலில் அண்ணா இருந்து பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றியை அதுவும் இன்றுவரை முறியடிக்கப்படாத ஒரு பெரிய வெற்றியை அடைந்து தனது தேர்வுக்கு நியாயம் சேர்க்கிறார். 

அதன்பிறகு எம்ஜியார் பிரிந்து சென்று அதிமுக வை ஆரம்பித்து தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்.  எம்ஜியார் மறைவுக்குப் பிறகு யார் அந்த கட்சியின் தலைமை ஏற்பவர் என்பதில் சிக்கல் வருகிறது.  தமிழ்நாட்டில் அப்போதுதான் முதன்முறையாக வாரிசு அரசியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.  தமிழ்நாட்டில் கருணாநிதி தான் வாரிசு அரசியலை ஆரம்பித்தார் என்ற பொய் பலரது மனதிலும் பதியவைக்கப்பட்டுள்ளது.  கருணாநிதி வாரிசு அரசியலை முடிந்தவரை தவிர்த்துவந்துள்ளார் என்பதை பிறகு சொல்கிறேன்.  எம்ஜியார் மறைவுக்கு பின்னர் கட்சியின் ப்ரோட்டாகால் படி டாப் 5 அல்லது டாப் 10 இடங்களில் இருந்து எவருமே தலைவராக உருவெடுக்க முடியவில்லை.  இரண்டு அணியாக பிரிகிறது.  ஒன்று ஜானகி அணி . இன்னொன்று ஜெயலலிதா அணி.  ஒருத்தர் எம்ஜியாரின் மனைவி.  இன்னொருத்தர் தோழி.  இதுதான் வாரிசு அரசியல்.  தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கட்சி அதிமுக தான் என்று அதனால் தான் சொல்கிறேன். 

ஜெ - ஜானகி போட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்று கட்சித்தலைமையை அடைகிறார்.  எம்ஜியாரால் எப்படி அடுத்த தலைவரை உருவாக்க முடியாமல் போனதோ அதேபோல ஜெயலலிதா வாலும் தனக்குப் பிறகு அடுத்த தலைமையை உருவாக்க முடியவில்லை அல்லது அவருக்கு விருப்பமில்லை.  ஆனால் எம்ஜியாராவது இரண்டாம் கட்ட தலைவர்களை அனுமதித்தார் ஜெ அதுகூட செய்யவில்லை.  ஜெயலலிதா தனது கட்சியில் Protocol என்ற ஒன்றையே இல்லாமல் செய்தார்.  இதன்காரணமாக ஆட்சி கட்சி இரண்டிலுமே அதிகாரங்கள் ஒரே நபரிடமே குவிக்கப்பட்டன.  இதைத்தான் ராணுவ கட்டுப்பாடு என ஊடகங்கள் பெருமையாக பேசுகின்றன.  அதனால் தான் அந்த கட்சியில் இன்று தலைமைக்கான போட்டியே வரவில்லை.  எப்படி ஜெயலலிதா எம்ஜியாரின் தோழி என்ற காரணத்தால் தலைமைக்கு வந்தாரோ அதே காரணம் தான் சசிகலாவுக்கும்.  ஆனால் ஜெவுக்கும் சசிகலாவுக்கும் சின்ன சின்ன வித்தியாசங்கள் உள்ளன . எம்ஜியார் ஜெயலலிதா வை நேரடியாக அரசியல் செய்ய அனுமதித்தார்.  ஜெயலலிதா சசிகலா வை அப்படி செய்ய அனுமதிக்கவில்லை . அதனால் தான் இன்று அவரை கட்சித் தொண்டர்களில் பலருக்கு (சரி சிலருக்கு)  பிடிக்கவில்லை.  இன்னொன்று கருணாநிதி நெடுஞ்செழியனோடு போட்டியிட்டு வென்றதை போல ஜெயலலிதா ஜானகியுடன் போட்டியிட்டு வென்றதைப் போல ஒரு போட்டி சசிகலாவுக்கு கட்சிக்குள்ளே இல்லாமல் போனது.  இது அவருக்கு கண்டிப்பாக மைனஸ் பாயின்ட் தான்.  நேரடி அரசியல் வாரிசாக இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதென்பது வேறு.  ஆனால் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாரிசாக யாரையும் அனுமதிக்கவில்லை.  அப்படியிருக்கும்போது வாரிசு அரசியல் மூலமாக தலைமைக்கு வருபவர் போட்டியில் ஜெயித்து வந்தால் அவரது காலம் நெடுந்தொலைவு பயணிக்கும்.  இதற்கு உதாரணம் ஜெயலலிதா.  அதிமுக சசிகலாவை தேர்வு செய்யும்பட்சத்தில் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக வாரிசு அரசியலை நுழைக்கிறது. 

சரி அப்படியென்றால் ஸ்டாலின் செய்வது என்ன அரசியல்?  கருணாநிதி தன்னுடைய மகனை அரசியலில் நுழைக்க விரும்பினார்.  ஆனால் அப்படி வாரிசு அரசியல் மூலமாக மட்டுமே நுழைவதை அவர் விரும்பவில்லை.  ஒரு பகுதியின் இளைஞரணி உறுப்பினராக பதினெட்டு வயதில் தன்னுடைய அரசியல் கேரியரை துவக்குகிறார் ஸ்டாலின்.  அதன்பிறகு எமர்ஜென்சி சிறைவாசம்,  எம்எல்ஏ,  இளைஞரணி செயலாளர்,  மேயர்,  உள்ளாட்சித் துறை அமைச்சர்,  துணை முதல்வர்,  பொருளாளர்,  சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் என நாற்பத்தைந்து வருடங்களில் அவர் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார். 

ஸ்டாலின் மிக இள வயதிலேயே அரசியலுக்கு வந்ததால் அவரால் தனது தந்தை கருணாநிதியை அப்பாவாக அணுகுவதை விட கட்சித்தலைவராகவே அணுக பழகிவிட்டார்.  கலைஞரோடு இன்று கனிமொழி தயாநிதி மாறன் போன்றவர்கள் பேசி பழகுவதற்கும் ஸ்டாலின் பேசி பழகுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் எளிதாக உணரலாம்.  பாடிலாங்குவேஜ் வித்தியாசம் கண்டிப்பாக தெரியும்.  கனிமொழி க்கு அவர் அப்பா தான் அதேபோல தயாநிக்கு அவர் தாத்தா.  அந்த நினைப்பிலேயே அவர்கள் இன்னமும் பழகுவதால் தான் தனது அப்பா தாத்தா விடம் வெளிப்படும் Body language வெளிப்படுகிறது.  மாறாக ஸ்டாலின் ஆரம்பகாலம் தொட்டே கலைஞரை கட்சித்தலைவராகவே பார்த்து பழகிவிட்டதால் அவருக்கு இன்றளவும் கலைஞரை தனது தலைவர் என்ற body language வோடு தான் அணுகுகிறார் .

அழகிரி,  கனிமொழி இவர்களுமே கூட கருணாநிதியின் வாரிசுகள் தான்.  ஆனால் இவர்களுக்கு கட்சியில் இல்லாத செல்வாக்கு ஸ்டாலினுக்கு மட்டும் இருக்கிறது என்றால் அது கலைஞரின் மகன் என்பதால் மட்டுமே இல்லை.  ஆரம்பகாலத்திலிருந்து படிப்படியாக மேலே வந்து இன்று கலைஞரின் அரசியல் வாரிசாக உயர்ந்து நிற்கிறார்.  ஸ்டாலினை எதிர்கால தலைவராக அறிவிப்பீர்களா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டபோது " திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல " என்று கலைஞரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் வெறும் ஒப்புக்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல . வட இந்தியாவில் நாற்பது வயதுக்குள்ளாகவே முதல்வர் பதவியை எட்டி விடுகிற வாரிசு அரசியல் நிலவுகிற நம் நாட்டில் அவர் இத்தனையாண்டுகளாக இன்னமும் கட்சியின் லகானை தனது கைக்குள்ளேயே வைத்திருப்பற்கு இரண்டு காரணம் உண்டு.  ஒன்று கலைஞரின் திறமை.  இன்னொன்று ஸ்டாலினின் பொறுமை. 

எம்ஜியார் தனது அரசியல் வாரிசை உருவாக்கவில்லை,  ஜெயலலிதா வும் உருவாக்கவில்லை.  ஆனால் அந்த கட்சியில் அவர்களின் மறைவுக்கு பின்னர் வாரிசு அரசியல் தான் தலைதூக்கியது.  கலைஞர் அரசியல் வாரிசாக ஸ்டாலினை மிக நீண்டகால திட்டமிடலுடன் உருவாக்கியுள்ளார்.  அவர் கொஞ்சம் வாரிசு அரசியலை அனுமதித்திருந்தாலும் கூட தனக்குப் பிறகு எவ்வித தகுதியும் தயார்படுத்தலும் இல்லாமல் வாரிசு அரசியல் தலைதூக்குவதை தடுத்துள்ளார்..!

Wednesday, 7 December 2016

கலைஞர் : சலிப்பில்லா பெருவாழ்வு

கலைஞர் காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.  அதை தனது பேஸ்புக் பக்கத்திலேயே செய்தியாகவும் வெளியிடுகிறார்.  கலைஞர் தன்னை எதிர்ப்பவர்கள்  எல்லாருக்கும் இரங்கற்பா எழுதுவார் என்பார்கள் . அது உண்மை என்றாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  ஏனென்றால் யாருடைய மரணங்களையும் நான் எதிர்பார்த்து காத்திருப்பதில்லை.  கலைஞரின் பிறந்தநாள் அன்று "கட்டுமரம் எப்ப சாகும்? " என்று கேட்பவர்களைப் பார்த்து முன்பெல்லாம் கோபம் வரும்.  இப்போது அதுகூட இல்லை. 

கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்று வந்தவரல்ல.  ஆனால் அவர் யாருடைய மரணத்தையும் எதிர்பார்த்ததில்லை.  கலைஞரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிக முக்கியமானது இரண்டு.  ஒன்று யாருடைய மரணத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது.  இன்னொன்று மரணங்களைக் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து காலம் நமக்கு தந்த பணியை செய்யவேண்டும்.  ஒருமுறை என்னை ஒரு நண்பர் கேட்டார் : கலைஞர் மீது இவ்வளவு பற்று வைத்துள்ளீர்களே,  அவர் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?  என்றார்.  நான் "வருத்தப்படுவேன்.  ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டது என முடங்காமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பேன் . ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும்.  ஓட முடியாவிட்டால் நடந்து செல்லவேண்டும் . அதுவும் முடியாவிட்டால் தவழ்ந்தாவது செல்லவேண்டும்.  முன்னேறிச் செல்வது மட்டுமே முக்கியம் என கலைஞர் கற்றுத்தந்திருக்கிறார்.  எனவே அத்தோடு சோர்ந்துபோய்விடமாட்டேன் " என பதிலளித்தேன்.  இப்போது ஜெயலலிதா வை இழந்து வாடும் அவரது தொண்டர்களுக்கு கூட இதையே தான் சொல்ல விரும்புகிறேன்.

ஆரம்பத்தில் சொன்னதுபோல கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்றவர் அல்ல தான்.  ஆனால் அவருக்கு இயற்கை நீண்ட ஆயுளை வழங்கியுள்ளது.  ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே அவர் கெட்ட பழக்கங்களை நிறுத்திவிட்டார்,  உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தார் என காரணங்கள் சொன்னாலும் அது அல்ல உண்மையான காரணம்.  அவர் இந்த வாழ்க்கையை சலிக்காமல் வாழ்கிறார்.  அவருக்கு எதுவுமே சலிப்பதில்லை.  வாழ்த்து சலிக்கவில்லை வசவு சலிக்கவில்லை எதுவுமே சலிக்கவில்லை.  வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் பெற்ற பையனுக்கு கூட இடம் தராமல் அவரே இன்னமும் நகராமல் இருக்கிறார் என்றுதான் தோன்றும்.  ஆனால் உண்மையில் அவருக்கு சலிப்பு என்பதே இல்லை.  25 வயதில் தமிழ் சினிமாவின் மிகப்புகழ் பெற்ற கதாசிரியர்,  இந்திய அரசியல் வரலாற்றில் எந்த கொம்பனாலும் செய்யவியலாத சாதனையான எவ்வித சாதிப் பின்புலமும் இன்றி ஐந்து முறை முதலமைச்சர்,  கிட்டத்தட்ட அறுபதாண்டுகளாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்,  45 ஆண்டுகளாக ஒரு கட்சியின் நிரந்தரத் தலைவர் என அவர் செய்த சாதனைகளை வேறு எவராலும் செய்யமுடியாது.  ஆனால் அவருக்கோ இவ்வளவு செய்துவிட்டோமே இனி என்ன என்று  சலிப்படையாமல் அடுத்து என்ன என்றுதான் போய்க்கொண்டிருப்பார். 

ஒருமுறை எம் எஸ் தோணியிடம் கேட்டார்கள் : இருபது ஓவர் போட்டியில் உலக கோப்பை வாங்கிவிட்டீர்கள்,  ஐம்பது ஓவர் போட்டி உலக கோப்பையும் ஜெயித்தீர்கள்,  சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் ஜெயித்துவிட்டீர்கள்.  இனி என்ன?  என்றபோது "இது எல்லாவற்றையும் மீண்டுமொருமுறை வாங்கவேண்டும் " என்றார் தோணி.  யாருக்குத் தெரியும் கலைஞரைக் கேட்டால் கூட தான் செய்த சாதனைகளை மீண்டும் ஒருமுறை செய்யவேண்டும் என சொன்னாலும் சொல்வார்.  தோணி கூட ஓயுவு பெற்றுவிட்டார்.  ஆனால் கலைஞருக்கு ஓய்வே இல்லை.  இந்த வாழ்க்கையின் மீது அவருக்கு என்றுமே சலிப்பே வந்தது இல்லை . அந்த சலிப்பின்மை தான் அவரை இத்தனையாண்டுகளாக தொடர்ந்து இயங்கிக்கொண்டே வரச்செய்கிறது! 

#கலைஞர்
#சலிப்பில்லா_பெருவாழ்வு

சோ ராமசாமி : திராவிட இயக்கத்தின் பெருமை

சோ ராமசாமி மறைவு!

சோ ராமசாமியின் கீர்த்தியும் பெருமையும் பற்றி இன்று அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு திராவிட அரசியல் கட்சி பிரமுகர்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டு ஊடகங்கள் வரை நிறையபேரால் விதந்தோதப்படுகிறது .

நல்லது.  சோ எதையுமே மூடி வைத்து செய்யவில்லை.  வெளிப்படையாகத்தான் செய்தார். அவருக்கு அந்த துணிச்சல் இருந்தது.  சோ ராமசாமி திராவிட கருத்தியலின் எதிரி என்பது பட்டவர்த்தனமான உண்மை. உண்மையில் சோ ராமசாமி யின் மறைவு ஒரு திராவிட கருத்தியல் ஆதரவாளனாக என்னை வருத்தமடையச் செய்கிறது. 

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆரம்பித்து நூறாண்டுகளும் திராவிட கட்சிகள் ஆட்சியைப் பிடித்து ஐம்பதாண்டுகளும் ஆகின்றன.  திராவிட இயக்கமானது என்றைக்குமே யாருக்குமே அச்சுறுத்தலாக விளங்கியதில்லை.  பெயர் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை வெளிப்படையாக எதிர்த்து அரசியல் செய்கிற திராவிட இயக்கத்தால் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு என்றைக்குமே அச்சுறுத்தல் இருந்ததில்லை.  வட இந்தியாவில் ஹிந்துத்வ சக்திகள் பாபர் மசூதியை இடித்தது போல இங்கே திராவிட கட்சிகள் எந்த வழிபாட்டுத்தலங்களையும் இடிக்கவில்லை. 

திராவிட கட்சிகள் அசைக்க முடியாத செல்வாக்கு நிறைந்த தமிழ்நாட்டில் திராவிடத்தை மிக கடுமையாக எதிர்த்துகொண்டு எந்தவித அச்சுறுத்தல்களுமின்றி அகில இந்திய அளவில் செல்வாக்கோடு ஒரு தமிழ்நாட்டு பிராமணர் கோலோச்சமுடியும். தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு திராவிட கட்சிகளால் எவ்வித அச்சுறுத்தலுமே கிடையாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் சோ ராமசாமி. 

திராவிட இயக்கம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம்.  வட இந்தியாவில் ஹிந்துத்வ சக்திகள் செய்வது போல தன்னுடைய  எதிரிகளுக்கு அது அச்சுறுத்தல் தராது.  அந்த வகையில் திராவிட இயக்கத்தின் பெருமையை பேச நம்மிடம் இருந்த நிறைய உதாரண புருஷர்களில் ஒருவரான சோ மறைந்தார் என்பது நமக்கெல்லாம் வருத்தமே..!

#திராவிட_இயக்கத்தின்_பெருமை
#சோ_ராமசாமி