சுஷ்மா சுவராஜ்
வெங்கையா நாயுடு
நிதீஷ்குமார்
லாலு பிரசாத்
முலாயம் சிங் ...
இவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதை கடைசியாக பார்க்கலாம்.
1975 இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வருகிறார். நாடு முழுவதும் எமர்ஜென்சி கொடுமைகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறது திமுக. ஜனநாயக விரோத எமர்ஜென்சியை தமிழகத்தில் அமல்படுத்த மறுக்கிறார் கலைஞர். கூடவே அதைக்கண்டித்து தீர்மானமும் இயற்றுகிறார். அதைத்தொடர்ந்து திமுகவினர் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள்.
1976 ஜனவரி 31, கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு போலீசார் செல்கிறார்கள். ஸ்டாலினை கைது செய்ய வாரன்ட்டோடு வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஸ்டாலின் 23 வயது இளைஞர். சில மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. 'ஸ்டாலின் இப்போது வீட்டில் இல்லை, நாளை வந்ததும் நாங்களே அனுப்பிவைக்கிறோம் ' என்று கலைஞர் பதிலுரைக்கிறார். நம்பாமல் வீடு முழுவதும் தேடிப்பார்த்துவிட்டு வெறுங்கையோடு செல்கிறார்கள் போலீசார். அடுத்தநாள் இரவு சொன்னபடியே போலீசாரால் கைது செய்யப்படுகிறார் ஸ்டாலின். கிட்டத்தட்ட அது நள்ளிரவு நேரம். சென்னை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் அவர். "வாடா போடா " என்று ஒருமையில் பேசிய சிறை அதிகாரி ஸ்டாலின் உள்பட வந்திருந்த அனைவரையும் சோதனை இட சொல்கிறார். ஸ்டாலினுடன் அன்று அந்த சமயத்தில் கைதானவர்கள் ஆற்காடு வீராசாமி, ஏவிபி ஆசைத்தம்பி, நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு, நீல நாராயணன், கோவிந்தராசன் உள்ளிட்டோர்.
ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்பதாம் எண் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அது தொழுநோயாளி கைதிகளை அடைத்து வைத்திருக்கக்கூடிய சிறை. மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஸ்டாலின் சிறை அறையில் சிதறிக்கிடப்பவற்றை பார்க்கிறார். அவை தொழுநோயாளிகள் ரத்தத்தைத் துடைத்துப்போட்ட பஞ்சுகள். அவருக்கு குமட்டிக்கொண்டு வருகிறது. முதலில் சம்பிரதாயப்படி சிறைக்காவலர்கள் வந்து அடிக்கிறார்கள். அதன்பிறகு சிறைக்கைதிகளாக இருக்கும் குண்டர்களை கொண்டே அடிக்க விடுகிறார்கள்.
காவலர்களோடு குண்டர்களும் சேர்ந்து தாக்குகிற அறைக்கு ஒருவர் பின் ஒருவராக இவர்கள் அனுப்பப்படுகிறார்கள். முதலில் சிட்டிபாபு, தொடர்ந்து ஆற்காடு வீராசாமி, கோவிந்தராசன் கடைசியாக ஸ்டாலின். ஸ்டாலினால் அந்த அடிகளை தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தரையில் சுருண்டு விழுகிறார். தரையில் கிடக்கும் ஸ்டாலின் முகத்தைத் தூக்கிப்பார்த்து அவர் வாயிலும் வயிற்றிலும் லத்தியால் உதைக்கிறார்கள். அரை மயக்கத்திலிருந்த சிட்டிபாபுவிற்கு விபரீதம் புரிந்துவிட்டது. இன்னும் சில நிமிடங்கள் தாக்குதல் நீடித்தால் ஸ்டாலின் இறந்துவிடக்கூடும் என்று தெரிந்துகொள்கிறார். உடனே விழுந்துகிடக்கும் ஸ்டாலினை தள்ளிவிட்டு தான் போய் அவர் மேல் படுத்துக்கொள்கிறார். ஸ்டாலினுக்கு விழ வேண்டிய அடிகள் சிட்டிபாபுவின் உடல் வாங்குகிறது. அதன் விளைவு எல்லாருக்கும் தெரியும்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டாலினிடம் இருந்த துடுக்குத்தனம் மறைகிறது. நிதான குணத்தைப் பெறுகிறார். அந்த நிதானம் தான் எல்லாவற்றையும் உடனுக்குடன் பெற்றுவிட நினைக்காமல் படிப்படியாக அவரைத் தேடி பொறுப்புகளும் பதவிகளும் வருவதற்கு வழிவகுத்தன. "ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தவேண்டும் " என்று கட்சி சாராத ஆட்களே கூட கேட்கிற வகையில் அவர் தொடர்ந்து தன்னை ஒவ்வொரு படியாக உயர்த்தி வந்திருக்கிறார். தியாகம், உழைப்பு, அர்ப்பணிப்பு, அனுபவம் என எந்த விதத்திலுமே தனக்கு சமமில்லாத சிலருடன் இன்று அவர் அரசியல் செய்தாகவேண்டும் என்பது அவருடைய துரதிர்ஷ்டம்.
ஆரம்பத்தில் சொன்ன அரசியல் தலைவர்கள் அனைவருமே ஸ்டாலினை போலவே எமர்ஜென்சியால் எழுச்சி பெற்றவர்கள் அது மட்டுமின்றி இன்று இந்திய அரசியலில் கோலோச்சுபவர்களும் கூட...!
No comments:
Post a Comment