ஸ்டாலின் செய்வது ஜெ பாணி அரசியலா?
இன்றைய தமிழ் இந்துவில் சமஸ் எழுதியிருக்கும் "ஜெயலலிதாவாதல் " என்ற கட்டுரையில் ஸ்டாலினும் ஜெ பாணி அரசியலையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இரண்டு காரணங்களைத் தெரிவித்துள்ளார்.
1. நமக்கு நாமே பொதுக்கூட்டங்களில் பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். அதில் சம்பிரதாயமாக ஒன்றிரண்டு ஆட்களை பேசவைத்துவிட்டு ஸ்டாலினே பிரதானமாக மேடையில் இருக்கிறார்.
2. மேடையிலிருந்தபடியே கட்சித்தொண்டன் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார் கருணாநிதி. ஆனால் ஸ்டாலின் முன் வரிசை ஆட்களுக்கு பதில் வணக்கம் கூட தெரிவிப்பதில்லை.
நல்லது. இந்த இரண்டிற்கும் பதிலளிப்பதற்கு முன்பாக ஸ்டாலின் அரசியலுக்கும் ஜெ அரசியலுக்கும் உள்ள குறைந்தது பத்து வேறுபாடுகளை நான் பட்டியலிட விரும்புகிறேன்.
1. ஆட்சியில் இருக்கும்போது ஜெ மக்களை அணுகவே மாட்டார். ஸ்டாலின் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களை சந்திப்பவராகவே இருக்கிறார்.
2. பத்திரிகையாளர்களை சந்திப்பதில் ஜெ வின் அணுகுமுறை அனைவருக்கும் தெரிந்தது. ஸ்டாலின் அவர்களை அழைத்து பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே கேள்விகளை எதிர்கொள்கிற அளவுக்கு மாறியிருக்கிறார்.
3. மற்ற கட்சித் தலைவர்களிடம் பழகும் விதத்தில் ஜெ வை விட ஸ்டாலின் மேம்பட்டவர்.
4. பொது நலக் கோரிக்கை ஒன்றை ஆளும் அரசு நிறைவேற்றினால் அதை வரவேற்கவும் ஸ்டாலின் தயங்குவதில்லை. "தமிழக அரசு மதுவிலக்கு கொண்டு வந்தால் அதை திமுக வரவேற்கும் " என்று அவர் சில மாதங்கள் சொன்னது ஒரு உதாரணம். இதுபோல ஒரு உதாரணம் கூட ஜெ வுக்கு காட்ட முடியாது.
5. கட்சித்தொண்டர்களே நினைத்த நேரத்தில் ஜெ வை சந்திக்க முடியாது. ஸ்டாலினை எந்நேரமும் சந்திக்கலாம்.
6. எல்லாவற்றிலும் தனது பெயர் தனது படம் மட்டுமே இருக்கவேண்டும் என்ற அரசியல் ஜெ வினுடையது. ஸ்டாலின் அப்படியல்ல.
7. ஒரு காலத்தில் ஜெயலலிதா வை பேரிட்டு அழைத்த ஒரு அதிமுக தலைவர் கூட இன்று அவரை பெயர் சொல்லி அழைக்க முடியாது. ஸ்டாலினை இன்னமும் பெயர் சொல்லி அழைக்கிற திமுக முன்னணியினர் அநேகம்.
8. உட்கட்சி ஜனநாயகம் என்பது ஜெ விடம் பெயரளவுக்குக் கூட இல்லை . ஸ்டாலினிடம் அது ஓரளவுக்கு இருக்கிறது.
9. செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கற மனம் ஜெ வுக்கு என்றைக்குமே இருந்ததில்லை. அது ஸ்டாலினுக்கு இருக்கிறது.
10. கடைசியாக ஜெ வினுடைய அரசியல் ஆகாயத்தில் பறக்கிற ஹெலிகாப்டர் பாணி அரசியல். ஸ்டாலினின் அரசியல் மக்களோடு மக்களாக பயணிப்பது.
ஸ்டாலின் நமக்கு நாமே கூட்டங்களில் கட்சியினருக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது சமஸுடைய குற்றச்சாட்டு. அது உண்மைதான். ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் கட்சியினரை தவிர்த்ததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது.
1. அரசியல்வாதிகள் என்றாலே மக்களிடமிருந்து வெளிப்படுகிற ஒரு ஒவ்வாமை
2. லோக்கல் திமுக பிரமுகர்கள் (சமஸ் போன்றவர்களின் பாணியில் சொன்னால் குறுநில மன்னர்கள்) பொதுமக்களிடையே ஏற்படுத்தி வைத்துள்ள கெட்ட பெயர்.
இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்வதற்காகத்தான் அவர் அந்த பயணம் முழுவதுமே திமுக பொருளாளர் ஸ்டாலின் என்ற அடையாளத்தைத் தவிர்த்தார். ஒரு இடத்தில் கூட திமுக கரை வேட்டியை பயன்படுத்தாத காரணமும் அதுதான். தான் மக்களோடு மக்களாக இருப்பதாக காட்டுவதற்குத்தான் அவர் ரொம்பவே மெனக்கெட்டார். இளந்தலைமுறை வாக்காளர்களிடையே தனது இந்த பாணி கை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
அடுத்ததாக ஸ்டாலின் முன் வரிசை பிரமுகர்களுக்கு பதில் வணக்கம் தெரிவிப்பதில்லை என்பது சமஸுடைய இரண்டாவது குற்றச்சாட்டு. எனக்குத் தெரிந்தவரை இது தவறான குற்றச்சாட்டு. அவர் எல்லோருக்கும் வணக்கம் சொல்பவராகவும் கை குலுக்குபவராகத்தான் நான் பார்த்து வருகிறேன். கருணாநிதி போல ஸ்டாலின் மேடையிலிருந்தபடியே தொண்டன் பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை என்பது ரொம்ப சரி. இந்த விஷயத்தில் கலைஞருக்கு இருக்கும் திறமை ஸ்டாலினிடம் இல்லை.
ஸ்டாலின் செய்கிற அரசியல் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று நான் சொல்ல மாட்டேன். அவருடைய அரசியலில் சில குறைகள் உள்ளன. கலைஞர் போல அவரால் கட்சியின் அடிமட்டத் தொண்டனின் மனதை பல்ஸ் பாரக்கத் தெரியவில்லை. மேடைப்பேச்சு, பத்திரிகையாளர்களை எதிர்கொள்வது போன்றவற்றில் கலைஞர் பக்கத்தில் கூட அவரால் வர முடியவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக திராவிட இயக்க கொள்கையை பிரதானப்படுத்திய அரசியல் அவரிடம் குறைந்து விடுமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது. ஆனால் எந்த விதத்தில் பார்த்தாலும் ஸ்டாலினுடைய அரசியல் என்பது நிச்சயம் ஜெ பாணி அரசியலே அல்ல ...!
No comments:
Post a Comment