Monday, 14 March 2016

ஏன் தேவை சாதிமறுப்புத் திருமணம்?

பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் என்பவர் ஆணவக்கொலை பற்றிய பதிவொனொறில் // கலப்பு திருமணங்கள் செய்தால் சாதிகள் ஒழியும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்,  அவர்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்காதவர்கள் எத்தனை பேர்? // என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் சாதி மறுப்புத் திருமணம் புரிந்தவன் என்ற முறையிலும் தொடர்ச்சியாக சாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்துபவன் என்ற முறையிலும் இதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். 

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால சாதியை நான் ஒழித்து விடுவேன் என்றெல்லாம் பேசுகிற பழக்கம் எனக்கு கிடையாது.  அது என்னால் முடியவும் முடியாது. சாதிய உணர்வை தரைமட்டமாக்குவதற்கு திருமணம் என்பது மிக முக்கியமான இடம் என்பதை ஒரு மூத்தப் பத்திரிகையாளருக்கு எப்படி தெரியாமல் போனது என்று எனக்குத்தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் பிறக்கிற பையனோ அல்லது பெண்ணோ அவர்கள் பிறந்து வளர்ந்து திருமணத்திற்கு தயாராகிர வரையில் அவர்களை மையமாக வைத்து எந்த சாதிய பிரச்சினையும் எழாது.  ஒரு பையன் இன்னொரு சாதி பையனோடு நட்பாக சுற்றலாம். விளையாடலாம். பெண்கள் சேர்ந்து படிக்கலாம் (இல்லை இவற்றில் கூட சாதி துவேசம் பார்க்கப்படுகிறது என்பதைக்கூட நான் ஏற்றுக்கொள்கிறேன். அது வெறுமனே "டேய் அந்த சாதிப் பயலோட சேராத " என்ற அளவோடு நின்று விடும்.)

திருமணம் என்று வரும்போது முதலும் முக்கியமாகவும் வந்து நிற்பது சாதி மட்டுமே. மாப்பிள்ளை பொண்ணு படிச்சிருக்காங்களா,  நல்ல வேலையா,  நல்ல குடும்பமா என்பதெல்லாம் கூட இரண்டாம்பட்சம் தான். மொதல்ல கேட்பது / எதிர்பார்ப்பது "நாங்க இந்த சாதி " . அப்படி சொல்லிட்டாலே அப்ப அந்த சாதியில இருந்தே செலக்ட் பண்ணி போடுங்க என்று அர்த்தம்.  அதுநாள் வரைக்கும் அந்த வேற சாதி பையன் தன் வீட்டுக்கு வரக்கூட அனுமதித்திருப்பார்கள்,  வீட்டில் சாப்பிட கூட வைத்திருப்பார்கள். ஆனால் கல்யாணம் என்று வரும்போது அந்தப் பையனை தகுதி நீக்கம் செய்ய சாதி ஒரு காரணம் போதுமானது.

அப்ப,  நான் எல்லா சாதி ஆட்களோடும் சாதி துவேசம் இல்லாம பழகுவேன் பா,  எனக்கு சாதியுணர்வே இல்லப்பா என்று நாம் சொல்வது உண்மையாக இருந்தால் கல்யாணத்தில் மட்டும் ஏன் சாதி பார்க்கவேண்டும்?  ஆனால் பார்க்கிறோமா இல்லையா?  பார்க்கிறோம்.  அப்ப,  முற்போக்கு பேசுபவர்களிடம் கூட திருமண பந்தம் என்று வரும்போது சாதியுணர்வு வந்துவிடுகிறது.  சாதியின் வேரை அறுப்பதற்கு கல்யாணம் தான் நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.  பொண்ணு பையன் எந்த சாதி வேண்டுமானாலும் இருக்கட்டுமே,  அவர்களுக்கு விருப்பம் என்றால் கல்யாணம் செய்து கொள்ளட்டும். தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணம் புரிகிற எல்லாரையுமே கொலை செய்ய முடியாது அல்லவா!  இளைஞர்கள் மனதில் சாதி மறுப்புத் திருமணம் என்ற எண்ணம் வலுப்பெறுமானால் சாதியுணர்வு ஊறிப்போன பெரிய மனிதர்களும் வேறு வழியின்றி இறங்கி வருவார்கள். ஒரு ஊரில் ஒரேயொரு சாதி மறுப்புத் திருமணம் புரியும்போது அதை இழித்தும் பழித்தும் சாதியுணர்வாளர்கள் பேசுவார்கள். அதே ஊரில் ஒன்று இரண்டாகி இரண்டு பத்தாகி பத்து நூறானால் சாதி மறுப்புத் திருமணம் என்பதே சாதாரணமாகி விடும். பல்வேறு சாதிகளுக்குள் திருமண பந்தம் ஏற்படும்போது அங்கே நிச்சயம் சாதியுணர்வு மட்டுப்பட்டே ஆகவேண்டும். ஆக சாதியை ஒழித்திக்கட்ட முடிகிறதோ இல்லையோ சாதியுணர்வு வெளிப்படுவதைத் தடுக்க ஆகச்சிறந்த வழி சாதி மறுப்புத் திருமணங்களே!  இதனால் தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் இதை வலியுறுத்தினார்.

அடுத்ததாக அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்க மாட்டார்களா? என்ற கேள்வி. இதன் மறைபொருள் என்னவென்றால் குழந்தை எந்த சாதி?  அப்பா சாதியா அம்மா சாதியா?  அப்பா அம்மா இருவரில் ஒருவர்  BC இன்னொருவர் SC என்றால் எந்த சாதி யை எடுப்பீர்கள் என்பது தான்.

நல்லது.  சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தை களுக்கு சாதி சான்றிதழ் வாங்காமல் இருக்கிறார்கள் என்று கேட்டால் அதற்கு என்ன அர்த்தம்?  நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்கக்கூடாது என்று சொல்கிறாரா?  அது போன்ற மடத்தனத்தை நான் செய்ய மாட்டேன். நான் என் குழந்தைக்கு கண்டிப்பாக சாதி சான்றிதழ் வாங்குவேன். சாதி சான்றிதழ் வாங்காமல் விட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரைவேக்காட்டுக்காரன் கிடையாது.  நான் எந்த சாதி சான்றிதழை வைத்துக்கொண்டு என் கல்வியில் முன்னேறி வந்தேனோ அதில் பாதியாவது என் மகளுக்குக் கிடைக்க இந்த சாதி சான்றிதழ் தான் துணை நிற்கும் என்பதை நான் நன்கறிவேன். சமூகநீதி யை காப்பாற்றுவதற்கு இந்த சான்றிதழ் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நானறிவேன்.  ஆகையால் கட்டாயம் என் மகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவேன். என் மகள் சான்றிதழில் என்ன சாதி இருக்கவேண்டும் என்பது எங்களது தனிப்பட்ட விஷயம் என்றாலும் கூட அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள எனக்கு சங்கடம் ஏதுமில்லை. என் மனைவியின் சாதியை என் மகளுக்கு வைப்பதென்று நான் முடிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment