" ராமதாஸை கூட்டணிக்கு அழைக்காமல் விஜயகாந்த் தை மட்டும் நீங்கள் அழைப்பது ஏன்?
ராமதாஸ் திமுக அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டார். அதன்பிறகு அவர் கூட்டணியில் சேர்வார் என எதிர்பார்க்க முடியாது. அவர் என்னையும் திமுகவையும் விமர்சித்தாலும் கூட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. விஜயகாந்த் தை மக்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிஜேபி தலைவர்கள் கூட்டணிக்கு அழைத்தார்கள். திமுக ஏன் அழைக்கவில்லை என்று அவர் கருதலாம். எனவே நாங்களும் அவரை கூட்டணிக்கு சேர அழைத்தோம்.
"சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களோடு கூட்டணியில் இருந்த திருமாவளவனை ஒதுக்கியது ஏன்? மற்ற சாதியினர் வாக்குகள் வராது என்பதற்காகவா?
திருமாவளவன் தனிப்பட்ட முறையில் என் நல்ல நண்பர், சிறந்த பேச்சாளர். அவரை என்றுமே திமுக ஒதுக்கியது கிடையாது. கூட்டணியில் சேர்வதும் விலகுவதும் சகஜமாகிவிட்ட பிறகு அதைப்பற்றி பெரிதாக பேசவேண்டிய அவசியமில்லை.
இரண்டாண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு அளித்த பேட்டியில் மோடி என் நண்பர் என்று சொல்லியிருந்தீர்கள். இப்போதும் அப்படித்தானா?
ஆமாம். ஒருமுறை முதலமைச்சர்கள் மாநாடு நடந்தபோது நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ரொம்ப தூரம் தொலைவில் அமர்ந்திருந்தார் மோடி. என்னைப் பார்த்துப் பேசுவதற்காக அங்கிருந்து எழுந்து வந்து கை குலுக்கி என் நலம் விசாரித்தார். அரசியல் என்பது வேறு நட்பு வேறு. அரசியல் சூழ்நிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும் . தனிமனித நட்பு அப்படியே தான் இருக்கும் //
மேலே சொன்னவை இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்த கலைஞர் அளித்துள்ள பேட்டி.
நான் கூட முன்பெல்லாம் நினைத்ததுண்டு: இவருடைய வயதென்ன அனுபவம் என்ன எப்பேர்ப்பட்ட ஆளுமைகளுடன் எல்லாம் அரசியல் செய்திருக்கிறார் இவர் ஏன் நேற்று வந்த ஆட்களை எல்லாம் அரவணைத்து அனுசரித்துப் போகிறார் என்று! ஏனென்றால் யாரிடமும் எதற்காகவும் நேரடியாக இறங்கிப்பேசாத, தலையிடாத, தலை காட்டாத, கண்டுகொள்ளாத அலட்சியத் தன்மையைத்தான் கெத்து, தில்லு என நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே கலைஞர்க்கு கெத்து காட்டத் தெரியல என்று நான் எண்ணியிருக்கிறேன். பிறகு மெல்ல மெல்ல தெரிந்துகொண்டேன் அனுசரிப்பதும் அரவணைப்பதும் தான் அவருடைய குணம் என்று.
கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னையில் பெய்த பெருமழையால் ஏழை பணக்காரர் வித்தியாசம் இன்றி பெருமளவில் பாதிப்புக்கொள்ளானது. மழை ஓய்ந்த இரண்டு தினங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வீட்டுக்கு தொலைபேசியில் அழைக்கிறார் கலைஞர். எதிர்முனையில் இருந்த நல்லக்கண்ணு மனைவியிடம் அவர்கள் வீட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை விசாரிக்கிறார்.
நல்லக்கண்ணு வீட்டுக்கு போன் போட்டு நலம் விசாரிப்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடன் கூட்டணியில் வந்துவிடும் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அரசியல் முதிர்ச்சியற்றவரல்ல அவர். ஆனாலும் நல்லக்கண்ணு வோடு பழகிய விதம், அவரது வீட்டின் நிலைமை இதெல்லாம் தெரிந்தும் அவரால் சும்மாயிருக்க முடியவில்லை. இதே காரணத்தால் தான் கோட்டூர்புரம் ஏரியா நிலவரம் பற்றி அவர் கேட்கவும் செய்தார்.
கலைஞருடைய இந்த சுபாவத்தைத்தான் "கூட்டணிக்காக தொங்குறவர், கெத்து இல்லாத மனுஷன், பதவிக்காக இறங்கிப்போறவர், அசிங்கப்படுத்தினாலும் பெரிது படுத்தாதவர், கலைஞருடைய பலவீனம் " என்று வெவ்வேறு பெயர்களில் அவரை விமர்சிப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆழ்ந்து ஆய்ந்து பார்த்தால் இது ஒரு தாய்மைக்குரிய சுபாவம். தாய்மை குணம் கொண்ட ஒருவரை கெத்து காட்டத் தெரியாதவராகவும், தாய்மைக்குரிய எந்த குணமும் இல்லாத ஒருவரை அம்மா என்றும் அழைக்கக்கூடியவர்கள் தான் நாம்...!
No comments:
Post a Comment