Monday, 14 March 2016

ஏன் தேவை சாதிமறுப்புத் திருமணம்?

பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் என்பவர் ஆணவக்கொலை பற்றிய பதிவொனொறில் // கலப்பு திருமணங்கள் செய்தால் சாதிகள் ஒழியும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்,  அவர்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்காதவர்கள் எத்தனை பேர்? // என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் சாதி மறுப்புத் திருமணம் புரிந்தவன் என்ற முறையிலும் தொடர்ச்சியாக சாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்துபவன் என்ற முறையிலும் இதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். 

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால சாதியை நான் ஒழித்து விடுவேன் என்றெல்லாம் பேசுகிற பழக்கம் எனக்கு கிடையாது.  அது என்னால் முடியவும் முடியாது. சாதிய உணர்வை தரைமட்டமாக்குவதற்கு திருமணம் என்பது மிக முக்கியமான இடம் என்பதை ஒரு மூத்தப் பத்திரிகையாளருக்கு எப்படி தெரியாமல் போனது என்று எனக்குத்தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் பிறக்கிற பையனோ அல்லது பெண்ணோ அவர்கள் பிறந்து வளர்ந்து திருமணத்திற்கு தயாராகிர வரையில் அவர்களை மையமாக வைத்து எந்த சாதிய பிரச்சினையும் எழாது.  ஒரு பையன் இன்னொரு சாதி பையனோடு நட்பாக சுற்றலாம். விளையாடலாம். பெண்கள் சேர்ந்து படிக்கலாம் (இல்லை இவற்றில் கூட சாதி துவேசம் பார்க்கப்படுகிறது என்பதைக்கூட நான் ஏற்றுக்கொள்கிறேன். அது வெறுமனே "டேய் அந்த சாதிப் பயலோட சேராத " என்ற அளவோடு நின்று விடும்.)

திருமணம் என்று வரும்போது முதலும் முக்கியமாகவும் வந்து நிற்பது சாதி மட்டுமே. மாப்பிள்ளை பொண்ணு படிச்சிருக்காங்களா,  நல்ல வேலையா,  நல்ல குடும்பமா என்பதெல்லாம் கூட இரண்டாம்பட்சம் தான். மொதல்ல கேட்பது / எதிர்பார்ப்பது "நாங்க இந்த சாதி " . அப்படி சொல்லிட்டாலே அப்ப அந்த சாதியில இருந்தே செலக்ட் பண்ணி போடுங்க என்று அர்த்தம்.  அதுநாள் வரைக்கும் அந்த வேற சாதி பையன் தன் வீட்டுக்கு வரக்கூட அனுமதித்திருப்பார்கள்,  வீட்டில் சாப்பிட கூட வைத்திருப்பார்கள். ஆனால் கல்யாணம் என்று வரும்போது அந்தப் பையனை தகுதி நீக்கம் செய்ய சாதி ஒரு காரணம் போதுமானது.

அப்ப,  நான் எல்லா சாதி ஆட்களோடும் சாதி துவேசம் இல்லாம பழகுவேன் பா,  எனக்கு சாதியுணர்வே இல்லப்பா என்று நாம் சொல்வது உண்மையாக இருந்தால் கல்யாணத்தில் மட்டும் ஏன் சாதி பார்க்கவேண்டும்?  ஆனால் பார்க்கிறோமா இல்லையா?  பார்க்கிறோம்.  அப்ப,  முற்போக்கு பேசுபவர்களிடம் கூட திருமண பந்தம் என்று வரும்போது சாதியுணர்வு வந்துவிடுகிறது.  சாதியின் வேரை அறுப்பதற்கு கல்யாணம் தான் நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.  பொண்ணு பையன் எந்த சாதி வேண்டுமானாலும் இருக்கட்டுமே,  அவர்களுக்கு விருப்பம் என்றால் கல்யாணம் செய்து கொள்ளட்டும். தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணம் புரிகிற எல்லாரையுமே கொலை செய்ய முடியாது அல்லவா!  இளைஞர்கள் மனதில் சாதி மறுப்புத் திருமணம் என்ற எண்ணம் வலுப்பெறுமானால் சாதியுணர்வு ஊறிப்போன பெரிய மனிதர்களும் வேறு வழியின்றி இறங்கி வருவார்கள். ஒரு ஊரில் ஒரேயொரு சாதி மறுப்புத் திருமணம் புரியும்போது அதை இழித்தும் பழித்தும் சாதியுணர்வாளர்கள் பேசுவார்கள். அதே ஊரில் ஒன்று இரண்டாகி இரண்டு பத்தாகி பத்து நூறானால் சாதி மறுப்புத் திருமணம் என்பதே சாதாரணமாகி விடும். பல்வேறு சாதிகளுக்குள் திருமண பந்தம் ஏற்படும்போது அங்கே நிச்சயம் சாதியுணர்வு மட்டுப்பட்டே ஆகவேண்டும். ஆக சாதியை ஒழித்திக்கட்ட முடிகிறதோ இல்லையோ சாதியுணர்வு வெளிப்படுவதைத் தடுக்க ஆகச்சிறந்த வழி சாதி மறுப்புத் திருமணங்களே!  இதனால் தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் இதை வலியுறுத்தினார்.

அடுத்ததாக அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்க மாட்டார்களா? என்ற கேள்வி. இதன் மறைபொருள் என்னவென்றால் குழந்தை எந்த சாதி?  அப்பா சாதியா அம்மா சாதியா?  அப்பா அம்மா இருவரில் ஒருவர்  BC இன்னொருவர் SC என்றால் எந்த சாதி யை எடுப்பீர்கள் என்பது தான்.

நல்லது.  சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தை களுக்கு சாதி சான்றிதழ் வாங்காமல் இருக்கிறார்கள் என்று கேட்டால் அதற்கு என்ன அர்த்தம்?  நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்கக்கூடாது என்று சொல்கிறாரா?  அது போன்ற மடத்தனத்தை நான் செய்ய மாட்டேன். நான் என் குழந்தைக்கு கண்டிப்பாக சாதி சான்றிதழ் வாங்குவேன். சாதி சான்றிதழ் வாங்காமல் விட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரைவேக்காட்டுக்காரன் கிடையாது.  நான் எந்த சாதி சான்றிதழை வைத்துக்கொண்டு என் கல்வியில் முன்னேறி வந்தேனோ அதில் பாதியாவது என் மகளுக்குக் கிடைக்க இந்த சாதி சான்றிதழ் தான் துணை நிற்கும் என்பதை நான் நன்கறிவேன். சமூகநீதி யை காப்பாற்றுவதற்கு இந்த சான்றிதழ் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நானறிவேன்.  ஆகையால் கட்டாயம் என் மகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவேன். என் மகள் சான்றிதழில் என்ன சாதி இருக்கவேண்டும் என்பது எங்களது தனிப்பட்ட விஷயம் என்றாலும் கூட அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள எனக்கு சங்கடம் ஏதுமில்லை. என் மனைவியின் சாதியை என் மகளுக்கு வைப்பதென்று நான் முடிவு செய்துள்ளேன்.

Sunday, 13 March 2016

ஏன் இந்த கலைஞர் பாசம்?

கேள்வி : நீங்கள் திமுக அபிமானியாக இருந்தாலும் ஓரளவுக்காவது நியாயத்துடன் பேசுவீர்கள்.  மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்,  கலைஞர் இதற்கு முன்னர் தவறே செய்ததில்லையா?  அவர் ஒன்றும் குற்றங்குறைகள் அற்றவர் இல்லையே?  ஆட்சி அதிகாரத்துக்காக யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைப்பவர் தானே?  இதெல்லாம் தெரிந்தும் எதற்காக நீங்கள் கலைஞரை ஆதரிக்கவேண்டும்? 

பதில் : இதுவொரு நல்ல கேள்வி. நான் ஓரளவுக்காவது நியாயத்தைப் பேசுபவன் என்ற உங்கள் அபிப்பிராயத்துக்கு நன்றி.

யெஸ்,  நீங்களே சொன்னது போல கலைஞர் குற்றங்குறைகள் அற்றவரல்ல தான். கூட்டணிகளை மாற்றுவார்,  சில சமயம் பேச்சைக்கூட மாற்றிப் பேசுவார். இது எல்லாமே உண்மை. நான் மறுக்கமாட்டேன். அவரது கடந்த அறுபதாண்டுகால அரசியல் வாழ்க்கையை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் அவர் மூன்று விஷயங்களில் மட்டும் எந்தவித விட்டுக்கொடுத்தலும் இல்லாமல் உறுதிப்பாட்டோடு இருப்பார்,  இருந்தும் வருகிறார்.

1. சமூகநீதி

இடப்பங்கீட்டை அமல்படுத்துவதிலும் அதை ஆதரிப்பதிலும் அவருடைய நிலைப்பாடு அன்றிலிருந்து இன்றுவரை அவருடைய நிலைப்பாடு ஒன்று தான். இதில் அவர் மாறவே மாட்டார்.

2. மொழியுரிமை

என்னதான் கருணாநிதி எங்களை இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டார் என்று அவர் மீது புழுதி வாறித் தூற்றினாலும் கூட தனது மொழியுரிமைக் கொள்கையில் சமரசமே செய்துகொள்ளமாட்டார். இன்றும் கூட இந்தியாவில் எங்கு எந்த விதத்தில் மொழித்திணிப்பு வந்தாலும் முதல் எதிர்ப்புக்குரல் கலைஞருடையது.

3. மதவாத எதிர்ப்பு

பாரதீய ஜனதாவோடு கூட்டணி வைத்தால் கூட ராமர் கோயில் பிரச்சினையை எழுப்பமாட்டோம் என்று குறைந்நபட்ச செயல்திட்டத்தில் கொண்டுவரச்செய்த பிறகு தான் அணி சேர்ந்திருக்கிறார். மதவாதத்திற்கு அவருடைய அரசியலில் இடமே இல்லை.

இந்த காரணங்களுக்காகத்தான் அவரை மதவாத சாதியவாத அடிப்படைவாத சக்திகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இன்றுவரை தமிழகத்தில் அவர்களுக்கு சிம்மசொப்பனமும் கலைஞர் தான். இதே காரணங்களுக்காகத்தான் நானும் அவருடைய எல்லா குறைகளையும் பொறுத்துக்கொண்டு அவரை விடாமல் ஆதரித்துவருகிறேன்.  ஒருவேளை கலைஞர் காலத்துக்குப் பிறகு திமுக இந்த கொள்கைகளை கைவிடுமேயானால் நான் அப்போது திமுகவை ஆதரிப்பதை நிறுத்திவிடுவேன்.  என் வாழ்நாள் முழுதும் திமுகவை ஆதரிப்பேன் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் அந்தக் கட்சிக்குத் தாலி கட்டிக்கொண்டவன் இல்லை...!

Friday, 11 March 2016

கலைஞர் : தாய்மை குணம் கொண்ட தலைவர்

" ராமதாஸை கூட்டணிக்கு அழைக்காமல் விஜயகாந்த் தை மட்டும் நீங்கள் அழைப்பது ஏன்? 

ராமதாஸ் திமுக அதிமுகவோடு கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டார். அதன்பிறகு அவர் கூட்டணியில் சேர்வார் என எதிர்பார்க்க முடியாது. அவர் என்னையும் திமுகவையும் விமர்சித்தாலும் கூட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. விஜயகாந்த் தை மக்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிஜேபி தலைவர்கள் கூட்டணிக்கு அழைத்தார்கள். திமுக ஏன் அழைக்கவில்லை என்று அவர் கருதலாம்.  எனவே நாங்களும் அவரை கூட்டணிக்கு சேர அழைத்தோம்.

"சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களோடு கூட்டணியில் இருந்த திருமாவளவனை ஒதுக்கியது ஏன்?  மற்ற சாதியினர் வாக்குகள் வராது என்பதற்காகவா? 

திருமாவளவன்  தனிப்பட்ட முறையில் என் நல்ல நண்பர்,  சிறந்த பேச்சாளர்.  அவரை என்றுமே திமுக ஒதுக்கியது கிடையாது.  கூட்டணியில் சேர்வதும் விலகுவதும் சகஜமாகிவிட்ட பிறகு அதைப்பற்றி பெரிதாக பேசவேண்டிய அவசியமில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு அளித்த பேட்டியில் மோடி என் நண்பர் என்று சொல்லியிருந்தீர்கள்.  இப்போதும் அப்படித்தானா? 

ஆமாம். ஒருமுறை முதலமைச்சர்கள் மாநாடு நடந்தபோது நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ரொம்ப தூரம் தொலைவில் அமர்ந்திருந்தார் மோடி. என்னைப் பார்த்துப் பேசுவதற்காக அங்கிருந்து எழுந்து வந்து கை குலுக்கி என் நலம் விசாரித்தார். அரசியல் என்பது வேறு நட்பு வேறு. அரசியல் சூழ்நிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும் . தனிமனித நட்பு அப்படியே தான் இருக்கும் //

மேலே சொன்னவை இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்த கலைஞர் அளித்துள்ள பேட்டி.

நான் கூட முன்பெல்லாம் நினைத்ததுண்டு: இவருடைய வயதென்ன அனுபவம் என்ன எப்பேர்ப்பட்ட ஆளுமைகளுடன் எல்லாம் அரசியல் செய்திருக்கிறார் இவர் ஏன் நேற்று வந்த ஆட்களை எல்லாம் அரவணைத்து அனுசரித்துப் போகிறார் என்று!  ஏனென்றால் யாரிடமும் எதற்காகவும் நேரடியாக இறங்கிப்பேசாத,  தலையிடாத,  தலை காட்டாத,  கண்டுகொள்ளாத அலட்சியத்  தன்மையைத்தான் கெத்து,  தில்லு என நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே கலைஞர்க்கு கெத்து காட்டத் தெரியல என்று நான் எண்ணியிருக்கிறேன். பிறகு மெல்ல மெல்ல தெரிந்துகொண்டேன் அனுசரிப்பதும் அரவணைப்பதும் தான் அவருடைய குணம் என்று.

கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னையில் பெய்த பெருமழையால் ஏழை பணக்காரர் வித்தியாசம் இன்றி பெருமளவில் பாதிப்புக்கொள்ளானது. மழை ஓய்ந்த இரண்டு தினங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வீட்டுக்கு தொலைபேசியில் அழைக்கிறார் கலைஞர். எதிர்முனையில் இருந்த நல்லக்கண்ணு மனைவியிடம் அவர்கள் வீட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை விசாரிக்கிறார்.

நல்லக்கண்ணு வீட்டுக்கு போன் போட்டு நலம் விசாரிப்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடன் கூட்டணியில் வந்துவிடும் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அரசியல் முதிர்ச்சியற்றவரல்ல அவர்.  ஆனாலும் நல்லக்கண்ணு வோடு பழகிய விதம்,  அவரது வீட்டின் நிலைமை இதெல்லாம் தெரிந்தும் அவரால் சும்மாயிருக்க முடியவில்லை. இதே காரணத்தால் தான் கோட்டூர்புரம் ஏரியா நிலவரம் பற்றி அவர் கேட்கவும் செய்தார்.

கலைஞருடைய இந்த சுபாவத்தைத்தான் "கூட்டணிக்காக தொங்குறவர்,  கெத்து இல்லாத மனுஷன்,  பதவிக்காக இறங்கிப்போறவர்,  அசிங்கப்படுத்தினாலும் பெரிது படுத்தாதவர்,  கலைஞருடைய பலவீனம் " என்று வெவ்வேறு பெயர்களில் அவரை விமர்சிப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆழ்ந்து ஆய்ந்து பார்த்தால் இது ஒரு தாய்மைக்குரிய சுபாவம்.  தாய்மை குணம் கொண்ட ஒருவரை கெத்து காட்டத் தெரியாதவராகவும்,  தாய்மைக்குரிய எந்த குணமும் இல்லாத ஒருவரை அம்மா என்றும்  அழைக்கக்கூடியவர்கள் தான் நாம்...!

Sunday, 6 March 2016

ஸ்டாலினுடையது ஜெ பாணி அரசியலா?

ஸ்டாலின் செய்வது ஜெ பாணி அரசியலா? 

இன்றைய தமிழ் இந்துவில் சமஸ் எழுதியிருக்கும் "ஜெயலலிதாவாதல் " என்ற கட்டுரையில் ஸ்டாலினும் ஜெ பாணி அரசியலையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இரண்டு காரணங்களைத் தெரிவித்துள்ளார்.

1. நமக்கு நாமே பொதுக்கூட்டங்களில் பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். அதில் சம்பிரதாயமாக ஒன்றிரண்டு ஆட்களை பேசவைத்துவிட்டு ஸ்டாலினே பிரதானமாக மேடையில் இருக்கிறார்.

2. மேடையிலிருந்தபடியே கட்சித்தொண்டன் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார் கருணாநிதி.  ஆனால் ஸ்டாலின் முன் வரிசை ஆட்களுக்கு பதில் வணக்கம் கூட தெரிவிப்பதில்லை.

நல்லது. இந்த இரண்டிற்கும் பதிலளிப்பதற்கு முன்பாக ஸ்டாலின் அரசியலுக்கும் ஜெ அரசியலுக்கும் உள்ள குறைந்தது பத்து வேறுபாடுகளை நான் பட்டியலிட விரும்புகிறேன்.

1. ஆட்சியில் இருக்கும்போது ஜெ மக்களை அணுகவே மாட்டார். ஸ்டாலின் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களை சந்திப்பவராகவே இருக்கிறார்.

2. பத்திரிகையாளர்களை சந்திப்பதில் ஜெ வின் அணுகுமுறை அனைவருக்கும் தெரிந்தது. ஸ்டாலின் அவர்களை அழைத்து பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே கேள்விகளை எதிர்கொள்கிற அளவுக்கு மாறியிருக்கிறார். 

3. மற்ற கட்சித் தலைவர்களிடம் பழகும் விதத்தில் ஜெ வை விட ஸ்டாலின் மேம்பட்டவர்.

4.  பொது நலக் கோரிக்கை ஒன்றை ஆளும் அரசு நிறைவேற்றினால் அதை வரவேற்கவும் ஸ்டாலின் தயங்குவதில்லை. "தமிழக அரசு மதுவிலக்கு கொண்டு வந்தால் அதை திமுக வரவேற்கும் " என்று அவர் சில மாதங்கள் சொன்னது ஒரு உதாரணம். இதுபோல ஒரு உதாரணம் கூட ஜெ வுக்கு காட்ட முடியாது.

5. கட்சித்தொண்டர்களே நினைத்த நேரத்தில் ஜெ வை சந்திக்க முடியாது. ஸ்டாலினை எந்நேரமும் சந்திக்கலாம்.

6. எல்லாவற்றிலும் தனது பெயர் தனது படம் மட்டுமே இருக்கவேண்டும் என்ற அரசியல் ஜெ வினுடையது. ஸ்டாலின் அப்படியல்ல.

7.  ஒரு காலத்தில் ஜெயலலிதா வை பேரிட்டு அழைத்த ஒரு அதிமுக தலைவர் கூட இன்று அவரை பெயர் சொல்லி அழைக்க முடியாது. ஸ்டாலினை இன்னமும் பெயர் சொல்லி அழைக்கிற திமுக முன்னணியினர் அநேகம்.

8. உட்கட்சி ஜனநாயகம் என்பது ஜெ விடம் பெயரளவுக்குக் கூட இல்லை . ஸ்டாலினிடம் அது ஓரளவுக்கு இருக்கிறது.

9. செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கற மனம் ஜெ வுக்கு என்றைக்குமே இருந்ததில்லை. அது ஸ்டாலினுக்கு இருக்கிறது. 

10. கடைசியாக ஜெ வினுடைய அரசியல் ஆகாயத்தில் பறக்கிற ஹெலிகாப்டர் பாணி அரசியல். ஸ்டாலினின் அரசியல் மக்களோடு மக்களாக பயணிப்பது.

ஸ்டாலின் நமக்கு நாமே கூட்டங்களில் கட்சியினருக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது சமஸுடைய குற்றச்சாட்டு. அது உண்மைதான். ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் கட்சியினரை தவிர்த்ததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. 

1. அரசியல்வாதிகள் என்றாலே மக்களிடமிருந்து வெளிப்படுகிற ஒரு ஒவ்வாமை

2. லோக்கல் திமுக பிரமுகர்கள் (சமஸ் போன்றவர்களின் பாணியில் சொன்னால் குறுநில மன்னர்கள்)  பொதுமக்களிடையே ஏற்படுத்தி வைத்துள்ள கெட்ட பெயர்.

இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்வதற்காகத்தான் அவர் அந்த பயணம் முழுவதுமே திமுக பொருளாளர் ஸ்டாலின் என்ற அடையாளத்தைத் தவிர்த்தார். ஒரு இடத்தில் கூட திமுக கரை வேட்டியை பயன்படுத்தாத காரணமும் அதுதான். தான் மக்களோடு மக்களாக இருப்பதாக காட்டுவதற்குத்தான் அவர் ரொம்பவே மெனக்கெட்டார்.  இளந்தலைமுறை வாக்காளர்களிடையே தனது இந்த பாணி கை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.

அடுத்ததாக ஸ்டாலின் முன் வரிசை பிரமுகர்களுக்கு பதில் வணக்கம் தெரிவிப்பதில்லை என்பது சமஸுடைய இரண்டாவது குற்றச்சாட்டு.  எனக்குத் தெரிந்தவரை இது தவறான குற்றச்சாட்டு.  அவர் எல்லோருக்கும் வணக்கம் சொல்பவராகவும் கை குலுக்குபவராகத்தான் நான் பார்த்து வருகிறேன்.  கருணாநிதி போல ஸ்டாலின் மேடையிலிருந்தபடியே தொண்டன் பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை என்பது ரொம்ப சரி.  இந்த விஷயத்தில் கலைஞருக்கு இருக்கும் திறமை ஸ்டாலினிடம் இல்லை.

ஸ்டாலின் செய்கிற அரசியல் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று நான் சொல்ல மாட்டேன். அவருடைய அரசியலில் சில குறைகள் உள்ளன. கலைஞர் போல அவரால் கட்சியின் அடிமட்டத் தொண்டனின் மனதை பல்ஸ் பாரக்கத் தெரியவில்லை.  மேடைப்பேச்சு,  பத்திரிகையாளர்களை எதிர்கொள்வது போன்றவற்றில் கலைஞர் பக்கத்தில் கூட அவரால் வர முடியவில்லை.  எல்லாவற்றையும் விட முக்கியமாக திராவிட இயக்க கொள்கையை பிரதானப்படுத்திய அரசியல் அவரிடம் குறைந்து விடுமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது.   ஆனால் எந்த விதத்தில் பார்த்தாலும் ஸ்டாலினுடைய அரசியல் என்பது நிச்சயம் ஜெ பாணி அரசியலே அல்ல ...!

Tuesday, 1 March 2016

M.K. ஸ்டாலின் : எமர்ஜென்சி தந்த நிதானம்

சுஷ்மா சுவராஜ்
வெங்கையா நாயுடு
நிதீஷ்குமார்
லாலு பிரசாத்
முலாயம் சிங் ...

இவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதை கடைசியாக பார்க்கலாம்.

1975 இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வருகிறார்.  நாடு முழுவதும் எமர்ஜென்சி கொடுமைகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கிறது திமுக. ஜனநாயக விரோத எமர்ஜென்சியை தமிழகத்தில் அமல்படுத்த மறுக்கிறார் கலைஞர். கூடவே அதைக்கண்டித்து தீர்மானமும் இயற்றுகிறார். அதைத்தொடர்ந்து திமுகவினர் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள்.

1976 ஜனவரி 31, கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு போலீசார் செல்கிறார்கள். ஸ்டாலினை கைது செய்ய வாரன்ட்டோடு வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஸ்டாலின் 23 வயது இளைஞர். சில மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. 'ஸ்டாலின் இப்போது வீட்டில் இல்லை,  நாளை வந்ததும் நாங்களே அனுப்பிவைக்கிறோம் ' என்று கலைஞர் பதிலுரைக்கிறார். நம்பாமல் வீடு முழுவதும் தேடிப்பார்த்துவிட்டு வெறுங்கையோடு செல்கிறார்கள் போலீசார்.  அடுத்தநாள் இரவு சொன்னபடியே போலீசாரால் கைது செய்யப்படுகிறார் ஸ்டாலின்.  கிட்டத்தட்ட அது நள்ளிரவு நேரம். சென்னை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் அவர். "வாடா போடா " என்று ஒருமையில் பேசிய சிறை அதிகாரி ஸ்டாலின் உள்பட வந்திருந்த அனைவரையும் சோதனை இட சொல்கிறார்.  ஸ்டாலினுடன் அன்று அந்த சமயத்தில் கைதானவர்கள் ஆற்காடு வீராசாமி,  ஏவிபி ஆசைத்தம்பி,  நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு,  நீல நாராயணன்,  கோவிந்தராசன் உள்ளிட்டோர்.

ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்பதாம் எண் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். அது தொழுநோயாளி கைதிகளை அடைத்து வைத்திருக்கக்கூடிய சிறை. மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஸ்டாலின் சிறை அறையில் சிதறிக்கிடப்பவற்றை பார்க்கிறார். அவை தொழுநோயாளிகள் ரத்தத்தைத் துடைத்துப்போட்ட பஞ்சுகள். அவருக்கு குமட்டிக்கொண்டு வருகிறது. முதலில் சம்பிரதாயப்படி சிறைக்காவலர்கள் வந்து அடிக்கிறார்கள். அதன்பிறகு சிறைக்கைதிகளாக இருக்கும் குண்டர்களை கொண்டே அடிக்க விடுகிறார்கள்.

காவலர்களோடு குண்டர்களும் சேர்ந்து தாக்குகிற அறைக்கு ஒருவர் பின் ஒருவராக இவர்கள் அனுப்பப்படுகிறார்கள். முதலில் சிட்டிபாபு,  தொடர்ந்து ஆற்காடு வீராசாமி,  கோவிந்தராசன் கடைசியாக ஸ்டாலின்.  ஸ்டாலினால் அந்த அடிகளை தாக்குப்பிடிக்க முடியவில்லை.  அடிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தரையில் சுருண்டு விழுகிறார். தரையில் கிடக்கும் ஸ்டாலின் முகத்தைத் தூக்கிப்பார்த்து அவர் வாயிலும் வயிற்றிலும் லத்தியால்  உதைக்கிறார்கள். அரை மயக்கத்திலிருந்த சிட்டிபாபுவிற்கு விபரீதம் புரிந்துவிட்டது. இன்னும் சில நிமிடங்கள் தாக்குதல் நீடித்தால் ஸ்டாலின் இறந்துவிடக்கூடும் என்று  தெரிந்துகொள்கிறார். உடனே விழுந்துகிடக்கும் ஸ்டாலினை தள்ளிவிட்டு தான் போய் அவர் மேல் படுத்துக்கொள்கிறார். ஸ்டாலினுக்கு விழ வேண்டிய அடிகள் சிட்டிபாபுவின் உடல் வாங்குகிறது. அதன் விளைவு எல்லாருக்கும் தெரியும்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டாலினிடம் இருந்த துடுக்குத்தனம் மறைகிறது. நிதான குணத்தைப் பெறுகிறார்.  அந்த நிதானம் தான் எல்லாவற்றையும் உடனுக்குடன் பெற்றுவிட நினைக்காமல் படிப்படியாக அவரைத் தேடி பொறுப்புகளும் பதவிகளும் வருவதற்கு வழிவகுத்தன. "ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தவேண்டும் " என்று கட்சி சாராத ஆட்களே கூட கேட்கிற வகையில் அவர் தொடர்ந்து தன்னை ஒவ்வொரு படியாக உயர்த்தி வந்திருக்கிறார். தியாகம்,  உழைப்பு,  அர்ப்பணிப்பு,  அனுபவம் என எந்த விதத்திலுமே தனக்கு சமமில்லாத சிலருடன் இன்று அவர் அரசியல் செய்தாகவேண்டும் என்பது அவருடைய துரதிர்ஷ்டம். 

ஆரம்பத்தில் சொன்ன அரசியல் தலைவர்கள் அனைவருமே ஸ்டாலினை போலவே எமர்ஜென்சியால் எழுச்சி பெற்றவர்கள் அது மட்டுமின்றி இன்று இந்திய அரசியலில் கோலோச்சுபவர்களும் கூட...!