Wednesday, 21 October 2015

ஊடகங்களின் நடுநிலைமை

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் சமஸ் எழுதியிருந்த "காண்டாமிருகங்கள் ஆகிறோம் " என்ற கட்டுரையை படித்தேன். நடிகர் சங்கத்தேர்தலுக்கு ஊடகங்கள் கொடுத்த அதீத முக்கியத்துவம் குறித்து கவலைப்படுகிறார். அவருடைய கவலை நியாயமானதும் கூட.  தமிழ் இந்து பத்திரிகையில் பொதுவாக இரவு பத்தரை பதினொன்று மணிவரைக்குமான நிகழ்வுகளை மட்டுமே அடுத்தநாள் பேப்பரில் செய்தியாக போடுவார்கள். ஐபிஎல் ஆட்டங்கள் நடக்கும்போது மாலை 4 மணி ஆட்டத்தைப்பற்றி அடுத்தநாள் விலாவரியாக செய்தி வரும். 8 மணி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி பெற்ற ஸ்கோர் விவரம் மட்டுமே வரும். நேற்று கூட இரவு 11 மணியளவில் திருச்சி நெடுஞ்சாலையில் பெரிய விபத்து ஏற்பட்டது. அது இன்றைய இந்து நாளிதழில் வெளிவரவில்லை. ஆனால் நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகள் துணைத்தலைவர் பதவிகள் உள்பட இரவு 11.30 மணிக்கு மேல்தான் கிடைத்தது. அடுத்தநாள் இந்து பத்திரிகையில் தேர்தல் முடிவு விபரங்களைப்பற்றி விலாவரியாக கடைசிப்பக்கத்தில் முழுப்பக்க செய்தி வெளியாகியிருந்தது.

நடிகர் சங்க தேர்தலை ஊடகங்கள் அதீத அக்கறையுடன் அணுகியது தவறா தவறில்லையா என்பது இருக்கட்டும். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய தவறுகளை நம் ஊடகங்கள் செய்கின்றன.  அதற்கு அவர்களாகவே சூட்டிக்கொண்ட பெயர் தான் நடுநிலைத்தன்மை.  நடுநிலைத்தன்மை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும். யார் தவறு செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பெயர்தான் நடுநிலைத்தன்மை என்று கருதப்படுகிறது.  அதுவா நடுநிலை?  தவறு என்றால் தவறு என்று சொல்லனும் சரி என்றால் சரி என்று சொல்லனும்.  இதுதானே நடுநிலைமை?  தமிழ்நாட்டு ஊடகங்களை எடுத்துக்கொள்வோம். நிறைய ஊடகங்கள் மத்திய அரசை விமர்சிக்கின்றன. ஆனால் மாநில அரசு என்று வரும்போது கப் சிப் தான். ஊடகங்களுக்கென்று ஒரு குரல் இருக்கிறது. அது தலையங்கம் போன்ற இடங்களில் வெளிப்படும். இந்து பத்திரிகை வாரத்தில் ஒருமுறையாவது தனது தலையங்கத்தில் மத்திய அரசு மீது சில குற்றச்சாட்டுகளை வைக்கும். ஆனால் தமிழக அரசு நடவடிக்கைகள் மட்டும் அதற்கு தெரிவதில்லை.

ஒரு முறை டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் மதுவிலக்கு பற்றிய நிகழ்ச்சி வரும்போது நெறியாளரே இப்படி கேட்கிறார் : "தமிழக அரசு மீது மக்களுக்கு குறிப்பிடும்படியான அதிருப்தி எதுவும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் தற்போது மதுவிலக்கு பிரச்சினையை கையிலெடுக்கின்றனவா? "
தமிழக மக்களுக்கு அதிருப்தி இல்லையென்று அவருக்கு யார் சொன்னது?  ஆனால் பத்திரிகை விமர்சனங்களை வைத்து பார்த்தால் உண்மையிலேயே தமிழக அரசு மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்று தான் தோன்றும். உண்மை என்னவென்றால் ஊடகங்களுக்கு அதிருப்தி இல்லை என்பதே. ஆனால் நான்கரை வருட மாநில ஆட்சி மீது வராத அதிருப்தி ஒன்றரை வருட மத்திய அரசு மீது மட்டும் ஊடகங்களுக்கு வருகின்றன. இந்த இடத்தில் பிரச்சினை ரொம்ப எளிமையானது. தமிழக அரசாங்கம் என்பது அதிமுக அரசு. அதை விமர்சித்தால் அது திமுகவிற்கு சாதகமாக பேசுவது போலாகிவிடும். ஆகவே நாம் நம் நடுநிலையை கட்டிக்காப்போம். அதிமுகவை விமர்சித்தால் நடுநிலை அந்தஸ்து பறிபோய்விடுமே.  இதே நம்முடைய சமஸ்,  திமுகவிலிருந்து அழகிரி வெளியேற்றப்பட்டபோது ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் என்று கட்டுரை எழுதினார். அதன்பிறகு அதிமுகவில் அதன் தலைவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகினார். பிறகு விடுதலையாகி மீண்டும் முதல்வரானார். அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இப்படி எத்தனையோ நடந்தன. ஆனாலும் அந்த கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி கேட்க அவருக்கு மனம் வரவில்லை.

நான் ஒரு தனிமனிதன். போக ஒரு கட்சியின் அபிமானி. என்னால் அந்த கட்சி செய்யும் தவறுகளை பொதுவெளியில் கண்டிக்க முடியாமல் போகலாம். அல்லது எந்த கட்சி சார்பற்றவனாகவும் இருக்கலாம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்கதான் என்று எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கமுடியும். ஆனால் ஊடகங்கள் அப்படியா?  அவைகளுக்கென்று எந்த பார்வையுமே கிடையாதா?  ஆனால் மாநில அரசு விஷயத்தில் மட்டும் எல்லாவற்றையும் நடுநிலை என்ற பெயரில் கண்டுகொள்வதில்லை.  ஒரு அரசு தவறு செய்தால் அதை எதிர்க்கவேண்டியது எதிர்கட்சிகளின் வேலையே தவிர தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கின்றன. அப்படி இருப்பவர்கள்  எல்லா நேரமும் அப்படியா என்றால் அதுவுமில்லை. எதிர்கட்சி நடவடிக்கைகளை விமர்சித்தும் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.  இந்த விஷயத்தில் ஆங்கில செய்தித்தாள்கள் எவ்வளவோ தேவலை.  தமிழ் ஊடகங்கள் அரசின் தவறுகளை எடுத்துரைக்கத் தயங்குகின்றன. கருணாநிதி காத்துக்கொண்டிருக்கிறார். ஏதாவது அரசுக்கெதிராக செய்தி வெளியிட்டால் உடனே அதை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை ரெடி பண்ணிவிடுகிறார். அதனால் நாம் நடுநிலையோடு (!) இருப்போம் என்ற முடிவில் உள்ளார்கள்.

இந்த மாநிலத்தின் முதல்வரை எந்த பத்திரிகையாளராலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அரசு நிகழ்ச்சிகளை பற்றி அரசு துறை தருவதுதான் செய்தி. யாராவது பிரபலம் இறந்துவிட்டால் அறிக்கை  தருகிறார். அவ்வளவுதான்.  அதைப்பற்றி என்றைக்காவது நம் ஊடகங்கள் வருந்தியிருக்கின்றனவா?  விமர்சனம் செய்திருக்கின்றனவா?  குறிப்பிட்ட ஒரு அமைச்சர் ஏன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று ஒருமுறையாவது கேட்டதுண்டா?  இந்த விஷயத்தில் ஜெயா டிவி மீதும் கலைஞர் டிவி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. யாருக்கு ஆதரவாக வேலை செய்கிறோம் என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு டிவி நடத்துகிறார்கள். ஆனால் நடுநிலை சேனல்கள் என்ற பெயரில் புதிய தலைமுறையும் தந்தி டிவியும் அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைகளையும் பற்றி விமர்சனம் செய்யத்துணியாத நடுநிலைக்கு அவர்கள் எவ்வளவோ மேல்.

ஊடகங்கள் தங்கள் பெருமைகளை பேசுகின்றன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால் என்றைக்காவது தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்களா?  உதாரணத்திற்கு இந்த நடிகர் தேர்தல். ஒரு சேனலில்,  ஓட்டுகள் எண்ண ஆரம்பித்ததிலிருந்து அவ்வப்பொழுது தங்கள் செய்திகளை சொல்கிறார்கள். முதலில் ராதாரவி அணி முன்னிலையில் வரும்போது "நாம் முன்பே சொன்னது போல ராதாரவி அணிதான் முந்துகிறது " என்கிறார்கள். பிறகு இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோது அதுவும் தாங்கள் கணித்ததே என்கிறார்கள். போகப்போக முடிவு மாறும்போது அதையும் தங்களுக்கு சாதகமாகவே சொல்கிறார்கள். ஏன் "நாங்கள் ஆரம்பத்தில் சொன்னதற்கு மாறாக முடிவுகள் வந்திருக்கின்றன " என்று சொல்வதில் என்ன ஈகோ? 

அடுத்தது இந்த விவாத நிகழ்ச்சிகள். விவாத நிகழ்ச்சியில் நெறியாளரும் ஒரு பங்கேற்பாளராக மாறி விடுகிறார். உதாரணமாக ஒரு திமுக ஆதரவு நபரிடம் கேள்வி கேட்கவேண்டுமென்றால் இவர் அதிமுக நபராக மாறிவிடுகிறார். பாஜக பிரமுகரிடம் கேள்வி கேட்கும்போது கம்யூனிஸ்ட்டாக மாறிவிடுகிறார். அதாவது நடுநிலையாக இருக்கிறாராமாம். இதற்கு தேவையே இல்லை. அவர் அவர் வேலையை செய்தால் மட்டுமே போதும். ஒளி ஊடகங்கள் இப்போது பெருகிய பிறகு அதில் பங்கேற்கும் ஊடகவியாலாளர்களுக்கு தன்முனைப்பு அதிகமாகிவிட்டது. தாங்கள் நடத்துகிற நிகழ்ச்சிகளில் தாங்களே பிரதானமாக தெரியவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது அந்தந்த டிவி நிர்வாகங்களுக்கும் தெரியும். தெரிந்தும்,  "சம்பளம் தான் குறைவாக தருகிறோம் அட்லீஸ்ட் இதுபோன்ற சந்தோஷங்களுக்காவது அவர்கள் உற்சாகமாக வேலை செய்யட்டும் " என்ற எண்ணத்தில் அதை கண்டுகொள்வதில்லை. அதனால் இவர்களும் அதை தங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமாக கருதி அதீத தன்முனைப்பில் ஈடுபடுகிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் ஒன்றும் போர்க்களத்தில் உயிரையும் பணயம் வைத்து செய்தி சேகரிக்கக்கூடிய துணிச்சலான பத்திரிகையாளர்கள் கிடையாது. ஏசி போட்ட கண்ணாடி அறையில் மூஞ்சி முழுக்க பவுடர் அப்பிக்கொண்டு உட்கார்ந்து,  நிருபர்கள் தருகிற ஒன்றிரண்டு செய்திகளை வைத்துக்கொண்டு வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு பேசுபவர்கள் தான்.

இந்த அதீத தன்முனைப்பு ஒருவரை தனியாக பேட்டி எடுக்கும்போது கூட நீள்கிறது. பேட்டி கொடுப்பவரோடு கூட கேள்வி கேட்காமல் விவாதம் செய்கிறார்கள். இப்போது ஏ ஆர் ரகுமான் பேட்டி என்றால் அதில் பெரும் சதவீதம் ஏ ஆர் ரகுமான்தான் பேசவேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை. கேள்வி கேட்பவர்தான் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒளி ஒலி வடிவமாக இருப்பதால் பார்ப்பதற்கு வேண்டுமானால் சுவாரசியத்தை தரக்கூடும். ஆனால் செய்தி என்று எதுவுமே இருக்காது. யார் அதிக தன்முனைப்பு காட்டுகிறாரோ அவரே சிறப்பான புத்திசாலியான பத்திரிகையாளராக அடையாளங்காட்டப்படுகிறார். அதேவேளை இந்த தன்முனைப்பை மாநில அரசின் தவறுகளை விமர்சிக்க பயன்படுத்துகிறாரா என்றால் அதுமட்டும் இல்லை.  உண்மையிலேயே தமிழக பத்திரிகைத்துறைக்கு இது துர்பாக்கியமான நிலைமை. ஒரு சாமானிய மனிதன்,  தனக்கு தவறு என்று படுகிற அரசின் நடவடிக்கைகளை தனக்கு வாய்ப்பாக கிடைத்த சமூக வலைதளங்களில் போகிற போக்கில் விமர்சிக்கிறார். ஆனால் பராக்கிரமம் பொருந்திய ஊடகங்கள் இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கின்றன. அவைகளால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேள்வி கேட்டு பதிலை பெறமுடியவுமில்லை. அதற்காக விமர்சிக்கவும் இயலவில்லை.  இந்த தவறுகளோடு ஒப்பிடும்போது நடிகர் சங்க தேர்தலை லைவ் டெலிகாஸ்ட் செய்தது பெரிய விஷயம் இல்லை.

Monday, 12 October 2015

சாதியத்தைக் கண்டு பயப்படும் அரசாங்கம்

கோகுல்ராஜ் கொலைவழக்கில் யுவராஜ்க்கு சம்பந்தம் இருக்கிறதா இல்லையா அல்லது அவர் தவறு செய்தாரா இல்லையா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்காக அவரை காவல்துறை தேடி வந்தது. அவர் தலைமறைவாக இருந்தார். தேடப்படக்கூடிய நபராக அறிவிக்கப்பட்டு இப்போது தானாக வந்து சரண் அடைந்துள்ளார்.

நல்லது. இந்த இடத்தில் அரசாங்கம் மற்றும் அதன் காவல்துறையின் செயல்பாடுகள் தான் பேரதிர்ச்சியைத்தருகின்றன. போலீசாரால் தேடப்படும் ஒருவர் டிவி சேனலுக்கு பேட்டி தருகிறார்,  நேரலை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  பொதுவாக சரண் அடைபவர்கள் ரகசியமாக மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வக்கீல்கள் துணையோடு சரண் அடைவார்கள். போலீசாரால் தேடப்படும் (!) அவரோ சர்வசாதாரணமாக மோட்டார் சைக்கிளில் தனியாளாக வந்து நிற்கிறார். அவர் வருவதை முன்கூட்டியே அறிந்த அவரது ஆதரவாளர்களும் பெருந்திரளாக வந்து வரவேற்பு தருகிறார்கள்.

இதெல்லாம் பார்க்கும்போது அரசாங்கத்தின் மீதும் காவல்துறையின் திறமை மீதும் ஒரு ஏளனப்பார்வை ஏற்படுகிறதல்லவா? அரசாங்கமும் காவல்துறையும் உண்மையில் அந்தளவிற்கு சோப்லாங்கியா என்ன?  ஒருத்தர் எந்த மூலையிலோ இருந்துகொண்டு ஒரு போன் கால் செய்தோ அல்லது மெயில் அனுப்பி குண்டு மிரட்டல் விடுத்தால் கூட அந்த ஐபி அட்ரசை வைத்தே அவரை திறமையாக வளைத்துப்பிடிப்பதும் இதே காவல்துறைதான். அதே சமயம் டிவி சேனல் நேரலை விவாதத்தில் கலந்துகொள்பவரை பிடிக்கமுடியாமல் திணறுவதும் இதே காவல்துறைதான்.  பெண்கள்,  மாற்றுத்திறனாளிகள் மறியல் நடத்தினாலே அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிற அதே காவல்துறை தான் இன்று அவர் சரண் அடையும்போது குழுமியிருந்த ஆதரவாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாலும் அவர்கள் மீது தூசி துரும்பு படாமல் பார்த்துக்கொண்டது.

இங்கே பிரச்சினை காவல்துறையின் திறமையின்மை அல்ல. காவல்துறையை கட்டுப்படுத்தக்கூடிய அரசாங்கம்,  தீவிரவாத சக்திகளை முறியடித்து மாநிலத்தை அமைதிப்பூங்காவாக திகழச்செய்கிற அரசாங்கம்,  ஆட்சிக்கு வந்தவுடன் கொலை கொள்ளையர்களை ஆந்திராவுக்கும் ஒரிசாவுக்கும் தப்பியோடச்செய்த சர்வ வல்லமை படைத்த அரசாங்கம்,  சாதியம் என்று வரும்போது பம்மி பதுங்குகிறது. யுவராஜ் குற்றவாளியா நிரபராதியா என்பதெல்லாம் விசாரணை முடிவில் வெளிவரட்டும். அந்த விவகாரத்தில் நுழைய விரும்பவில்லை. ஆனால் அரசாங்கம்,  சாதியத்திடம் பயந்து போகிற இந்த போக்கு இருக்கிறதே இது மிக மிக ஆபத்தான ஒன்று. இது பல்வேறு சாதிய உணர்வாளர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.  இன்று ஒரு குறிப்பிட்ட  சாதியினர் அரசாங்கத்திடம் தங்கள் வெயிட்டேஜை காண்பித்து கெத்து காட்டினோம் என்று பெருமிதம் அடைந்தால் நாளை இந்த பொறி வேறொரு சாதிக்கு பரவும். பிறகு ஒவ்வொரு சாதியாக தங்கள் பராக்கிரமத்தை காட்டத்தொடங்குவார்கள். அரசாங்கத்திற்கு இதுவொரு பெரும் தலைவலியாக உருவெடுக்கும்.

இந்த விஷயத்தில் வெறுமனே அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியாது. நம்முடைய அடி மனதிலேயே சாதி பற்றிய உணர்வுகளை விட்டொழிக்கவேண்டும். சாதிச்சங்கம்,  சாதிக்கட்சி என்று வரும்போது அந்தந்த சாதியை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவை இவர்களுக்கு தருவதை விட்டொழித்தாலே போதும். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்தது.  ஏன் சாதிய உணர்வுகளை விட்டொழிக்கவேண்டுமென்றால்,  அதை வைத்துக்கொண்டு  நாம் விரும்புகிற அமைதி,  வளம்,  வளர்ச்சி என எதையுமே அடையமுடியாது.  பீகார் மாநிலத்தை சேர்ந்த என் நண்பர் ஒருவரிடம் சமீபத்தில் அங்கு   நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசியபோது அங்கே நிலவுகிற சாதிய அரசியல் குறித்து கவலை தெரிவித்தார். "உங்கள் தமிழ்நாட்டில் இருப்பது போன்ற நிலைமை இங்கே கிடையாது. அங்கே Cost politics,  இங்கே Cast Politics"  என்றார். அவர் சென்னையில் மட்டும் மூன்றாண்டுகாலம் இருந்துவிட்டு சென்றவர் என்ற காரணத்தால் அவரைப்பொறுத்தவரை தமிழ்நாட்டில் சாதியம் இல்லை,  அதனால் தான் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்பது அவர் எண்ணம்.  ஆனால் தமிழ்நாடு விரைவில் இன்னொரு பீகாராக இன்னொரு உத்தரபிரதேசமாக மாறிவிடுகிற அபாயமும் இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இவற்றையெல்லாம் களைவதற்கு ஒரே வழி சாதிய அரசியலை மட்டுப்படுத்தவேண்டும். "என்னால் எப்படி அதை செய்யமுடியும்? " என்று கேட்டால் கண்டிப்பாக முடியும். ரொம்ப எளிது,  ஒவ்வொருவரும் தங்களது சாதிய உணர்வுகளை அல்லது குறைந்தபட்சம் அது குறித்த பெருமித உணர்வுகளை விட்டொழித்தாலே போதும்..!

Sunday, 4 October 2015

சிம்பு தேவன் - தொலைந்துபோன புத்திசாலித்தனம்

இயக்குநர் சிம்பு தேவன் அவர் இயக்குநராவதற்கு முன்பாக ஆனந்தவிகடன் பத்திரிகையில் நகைச்சுவைத்துணுக்குகள் எழுதக்கூடிய கார்ட்டூனிஸ்ட் டாக இருந்த காலத்திலிருந்தே ஓரளவுக்கு கவனத்தை ஈர்த்தவர் தான். ஒரு முறை சுஜாதா தனது "திரைக்கதை எழுதுவது எப்படி?" என்ற புத்தகத்தைப்பற்றி குறிப்பிடும்போது,  சிம்பு தேவன் அந்த புத்தகத்தை படித்துவிட்டு "அதுவரை பஜ்ஜென தெரிந்த திரைக்கதை பற்றிய அறிவு அந்த புத்தகத்தை படித்தபிறகு கண்ணாடி போட்டு பார்ப்பது போல தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டதாக " தெரிவித்ததாக சுஜாதா,  நமக்கு சிம்பு தேவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இம்சை அரசன் புலிகேசி படம் வந்தபோது தமிழ் சினிமா அதுவரை அடைந்திராத ஒரு புது அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தந்தது. மிக புத்திசாலித்தனத்துடன் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்களில் புலிகேசி படத்திற்கு முக்கிய இடமுண்டு. வடிவேலு என்ற நடிகரின் அத்தனை பரிமாணங்களையும் அந்தப்படம் வெளிக்காட்டியது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கே உரித்தான அறிவுஜீவித்தனத்துடன் சிம்பு தேவன் பிரகாசித்தார். இன்றுவரை அந்தப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் கொண்டாடப்பட்டும் பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டும் வருவதே சிம்பு தேவன் புத்தி கூர்மைக்கு எடுத்துக்காட்டு.

அறை எண் 305ல் கடவுள் படம் இம்சை அரசன் அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனாலும் சிம்பு தேவன் என்ற இயக்குநரின் புத்திசாலித்தனம் படம் முழுவதும் வெளிப்பட்டது. அந்தப்படத்தை பார்க்கிற ஒரு ஆத்திகர் நாத்திகராகவும்,  நாத்திகர் ஆத்திகராகவும் மாறிவிட வாய்ப்புண்டு. கடவுளான பிரகாஷ்ராஜ் திருவல்லிக்கேணி மேன்சனில் வசித்து வருவார். பிரகாஷ்ராஜ் தான் கடவுள் என்பது அங்குள்ள ஒரு சிறுமிக்கு தெரியும். பிள்ளையார் சிலை ஊர்வலம் ஒன்று அந்தப்பகுதியில் வரும். அப்பொழுது ஏற்பட்ட கலவரத்தில் அந்த சிறுமியின் அப்பாவை சாகடித்துவிடுவார்கள்.  கடவுளால் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி "கடவுள்" பிரகாஷ் ராஜை "நீ கெட்டவன்" என்று திட்டி செருப்பால் அடிப்பாள்.  நடந்ததை புரிந்துகொண்ட கடவுள் மதவெறி பிடித்த மனிதர்களின் செயலால் வெட்கப்பட்டு அவமானத்தில் தலை குனிந்து அந்த சிறுமியை கட்டிக்கொண்டு அழுவார். இந்தக்காட்சியை எப்போது பார்த்தாலும் என்னால் கண்ணீர் விடாமல் இருக்கமுடியாது.

இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படமும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறாத படம் தான். இருந்தபோதிலும் பல தரப்பினரால் கவனிக்கப்பட்ட ஒரு படம். வல்லாதிக்க நாடுகளின் சர்வதேச நுண்ணரசியலை அந்த படத்தில் சிம்புதேவன் நகைச்சுவை கலந்து காண்பித்திருப்பார்.  கன்னியும் களவாணிகளும் படத்தை  மட்டும் நான் இன்னமும்  பார்க்கவில்லை . தொடர்ந்து சிம்பு தேவன் தனது அறிவு ஜீவித்தன இமேஜை தக்கவைத்துவந்த காரணத்தால் புலி படத்தை உற்சாகத்துடன் எதிர்பார்த்தேன்.

விஜய் என்கிற வெகுஜன அபிமானம் பெற்ற நாயகன்,  ஸ்ரீதேவி,  சுதீப்,  ஸ்ருதி,  ஹன்சிகா,  பிரபு என எக்கச்சக்க நட்சத்திரங்கள்,  நட்ராஜ் உள்ளிட்ட மிகச்சிறந்த டெக்னிசியன்கள் இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு சிம்பு தேவன் தனது வழக்கமான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்து சென்றால் பட்டை நாமத்தை சாத்திவிட்டார். பேன்டசி கதை என்று முடிவெடுத்தவர் திரைக்கதையை பற்றி மருந்துக்கு கூட கவலைப்படவில்லை. முதல் ஒருமணி நேரம் அமெச்சூர் தனமான காட்சிகள் மூலம் பார்ப்பவர்கள் பொறுமையை முடிந்தவரைக்கும் சோதிக்கிறார்.

குழந்தைகளை கவர்வதற்காக அங்கங்கே ஏதோ சில கிராபிக்ஸ் சமாச்சாரங்களை சேர்த்திருக்கிறார். தனது முதல் படத்தில் கரடியை வைத்து காறி துப்ப வைத்தது போல இந்த படத்தில் ஆமையை விட்டு துப்ப வைத்திருக்கிறார். ஆனால் அந்த ஆமை தம்பி ராமையா முகத்தில் மட்டும் துப்பியது போல தோன்றவில்லை. பேன்டசி படத்தை எடுப்பதா இல்லை விஜய்யின் நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிப்பதா என்ற குழப்பம் படம் முழுவதும் தெரிகிறது.  தம்பி ராமையா,  சத்யன் காமெடிக்கு இருந்தும் ப்ளாஷ்பேக்கில் வருகிற அப்பா விஜய் அளவுக்கு அவர்களால் ஸ்கோர் செய்ய முடியவில்லை.

புலி படத்தில் விஜய் இருக்கிறார்,  பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்,  மிகச்சிறந்த ஒளிப்பதிவு,  கலையலங்காரம்,  கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் இருக்கிறது. ஆனால் சிம்பு தேவன் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருகிற அவருடைய புத்திசாலித்தனம் - அதுமட்டும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

கலைஞர் - அரசியலின் சச்சின்

நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்று நேர்பட பேசு நிகழ்ச்சியை கொஞ்சநேரம் பார்த்தேன். திரு. ஸ்டாலின் ,மக்களை சந்திக்கும் நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் ராமாநுஜர் சன்னதிக்கு சென்றதை பற்றித்தான் இன்றைய நிகழ்ச்சியாம்.  வேடிக்கை என்னவென்றால் ஸ்டாலின் கோயிலுக்கு போனதை நமது எம்ஜியார் நாளேடு கடுமையாக விமர்சித்திருக்கிறதாம். அதுகுறித்தே இன்றைய நிகழ்ச்சியும்.  அது கிடக்கட்டும். எழுத்தாளர் ஞாநி நிகழ்ச்சியில் ஒரு கேள்வி கேட்டார் : " ராமாநுஜர் சீர்திருத்தவாதி என்பதால் அவரைப்பற்றி சீரியல் எழுதுகிற கலைஞர்,  ஏன் பெரியாரைப்பற்றி இதுவரைக்கும் எந்த சீரியலும் எடுக்கவில்லை? " என்று கேட்டார்.

இப்படிப்பட்ட ஒரு    கேள்வியை கேட்டவர் நம்முடைய ஞாநி யா என்பதை ஒருமுறை உறுதிபடுத்திக்கொண்டேன்.  பெரியார் திரைப்படம் உருவாக காரணமாக இருந்தவரே கலைஞர் தான். அந்தப்படத்திற்கு தமிழக அரசு நிதியிலிருந்து 95 லட்ச ரூபாய் எடுத்துக்கொடுத்து அதற்காக வழக்கையும் சந்தித்தார். பெரியார் மரணத்தின் போது தமிழ்நாட்டு முதல்வர் மரபை மீறி அரசு மரியாதை அளித்தவரும் இதே கலைஞர் தான். பெரியார் நினைவு சமத்துவபுரங்களை யாரும் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புவாய்ந்த சட்டத்தையும் மறந்துவிடமுடியாது.

இதெல்லாம் நம்முடைய ஞாநிக்கு தெரியாததல்ல. தெரிந்தும் அவர் ஏன் கலைஞர்,  பெரியார் டிவி சீரியல் எடுக்கவில்லை என்று கேட்டார் என்பதை ரொம்ப நேரமாக யோசித்துப்பார்த்தேன்.  அப்புறம் தான் எனக்கு விடை கிடைத்தது. பிரச்சினை ஞாநியல்ல. கலைஞர் தான்.

*கலைஞர் தமிழ் மொழிக்கு என்ன செய்தார்?

*கலைஞர் இந்தி திணிப்புக்கெதிராக என்ன செய்தார்?

*கலைஞர் சாதியை ஒழிக்க என்ன செய்தார்?

*கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார்? 

அரசியல் செய்திகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் இணையத்தில் அதிகமாக புழங்கக்கூடியவர்கள் பலருக்கும் இந்த கேள்விகள் பரிச்சயமானவை. உண்மையில் சமகால அரசியல்வாதிகளில்,  மேலே சொன்ன விஷயங்களில் கலைஞர் அளவுக்கு செய்தவர்கள் ஒருத்தர் கூட கிடையாது. அவர் நிறைவாக செய்தாரா குறைவாக செய்தாரா என்பது வேறு விஷயம். ஆனால் அவர் செய்த அளவுக்கு, தமிழ் மொழிக்கோ சமூகநீதிக்கோ   வேறு எவரும் செய்ததில்லை. ஆனாலும் தொடர்ந்து அவர் மீது மட்டும்தான் இத்தகைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

காரணம் என்னவென்றால் கலைஞர் மீதான எதிர்பார்ப்பு.  இந்த எதிர்பார்ப்பை வேறு யாரிடமும் வைக்கமுடியாது. இதே ஞாநியால் தமிழ்நாட்டில் இன்னொரு அரசியல் தலைவரை "ஏன் பெரியார் பற்றி டிவி சீரியல் எடுக்கவில்லை? " என்று கேட்கமுடியுமா? சத்தியமாக முடியாது.  இன்றைக்கு ஈழ ஆதரவாளர்கள் சிலருக்கு கலைஞர் விரோதியாகிப்போனதற்கு காரணமும் இதே எதிர்பார்ப்பு. இது எப்படியென்றால்,  "எப்பவும் தராத ஸ்ரீதேவி இப்பவும் தரல,  என்னைக்கும் தர்ற மூதேவி ஏன் இன்னிக்கு தரல? " போலத்தான்.  சரி இந்த எதிர்பார்ப்பு எப்படி அவர் மீது மட்டும் வந்தது என்று பார்த்தால் அதற்கு காரணம் அவருடைய ஆற்றல். அந்த ஆற்றல் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பே எதிர்பார்ப்பு.

அந்த நம்பிக்கை காரணமாக கலைஞர் அபிமானிகள் மற்றும் கலைஞர் எதிர்ப்பாளர்கள் என்ற இரண்டு பிரிவுகள் உருவாகிறது. மற்றவர்களுடன் கலைஞரை ஒப்பிட்டு அவர் மீதான நம்பிக்கை காரணமாக அபிமானிகள் பிரிவும்,  தங்களுடைய அளவுகடந்த நம்பிக்கை பொய்த்துப்போன விரக்தியில் எதிர்ப்பாளர்கள் பிரிவும் தொடர்ந்து எல்லா காலத்திலும் வந்துகொண்டே இருக்கிறது.

ஆகவே தான் நம்முடைய ஞாநி கலைஞரை பார்த்து ஏன் பெரியார் டிவி சீரியல் எடுக்கவில்லை என்று கேட்கிறார். சரி என் பங்குக்கு நான் ஒன்று கேட்கிறேன் : கலைஞர் ஏன் இதுவரைக்கும் அறிஞர் அண்ணா பற்றிய திரைப்படமோ அல்லது மெகா சீரியலோ உருவாக்கவில்லை?!