Monday, 13 November 2017

ஜவஹர்லால் நேரு

நேரு,  காந்தியின் அணுக்கத்தொண்டராக இருந்தபோதும் அவர் தன்னை ஒரு முழுமையான காந்தியவாதியாக அடையாளப்படுத்திக்கொண்டதில்லை.  நிறைய முறை மகாத்மா வுடன் முரண்பட்டுள்ளார் நேரு!  குறிப்பாக காந்தியின் ராம ராஜ்ஜிய கனவில் எல்லாம் நேருவுக்கு பெரிதாக எந்த ஆர்வமுமில்லை.  இருந்துமே கூட காந்தி ஆட்சியை யார் வழிநடத்தவேண்டும் என்று வருகிறபோது நேருவைத்தான் தேர்ந்தெடுக்கிறார்.  மகாத்மா இந்தியாவிற்கு செய்த எத்தனையோ நல்ல விஷயங்களில் முக்கியமானது நேருவை முதல் பிரதமராக வர விரும்பியது! 

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் தான் விடுதலை பெற்றன.  இன்று இரு நாடுகளின் நிலைமையை ஒப்பிட்டு பாருங்கள்!  வறுமை,  பயங்கரவாதம்,  மக்களாட்சியை ராணுவம் கைப்பற்றுதல்,  பழமைவாதம் என சீரழியும் பாகிஸ்தானை போல இந்தியா இல்லை!  இதற்கு காரணம் ஜவஹர்லால் நேரு! 

முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்றால் இந்தியா இந்துக்களுக்கு அல்லவா என்ற கேள்வி வந்தபோது அதை அடியோடு நிராகரிக்கிறார்!   சுதந்திரம் அடைந்தபிறகு நேருவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கை கொண்டு அவர் நாட்டின் அதிபர் போல செயல்பட்டிருக்கமுடியும்.  ஆனால் அவர் அப்படி செய்யவில்லை!  நாடு தோறும் சுற்றுப்பிரயாணம் செய்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து ஜனங்களை ஜனநாயகத்திற்கு தயார்படுத்துகிறார்! 

இந்துத்துவம் மட்டும் தான் மதவாதமா ஏன் முஸ்லீம்களிடம் கிறித்தவர்களிடம் மதவாதம் இல்லையா என்ற கேள்வி இன்றும் வருகிறது!  நேருவுக்கும் வந்தது!  நேரு இதற்கு தந்த விளக்கம் இன்றியமையாத ஒன்று : எல்லா மதங்களிலும் மதவாதம் உண்டு.  எல்லா மதவாதங்களும் ஆபத்தானவையே.  ஆனால் ஒரு நாட்டின் பெரும்பான்மை மதத்தின் மதவாதம் என்பது அந்த நாட்டின் தேசியவாதமாக கட்டமைக்கப்படுகிற பெரும் அபாயம் உள்ளது என்றார். 

இன்றைக்கு நேரு சொன்னது தான் நடக்கிறது பாருங்கள்!  இந்துத்துவவாதிகள் தான் தங்களைத் தாங்களே தேச பக்தர்கள் என மார்தட்டிக்கொள்கிறார்கள்.  என்னவோ மற்ற மதத்தவர்களுக்கு தேசபக்தியே இல்லாதது போல தேசபக்திக்கு இவர்கள் தான் ஒட்டுமொத்த கான்ட்ராக்ட் போல சீன் போடுவதை பார்த்தால் நேரு சொன்னதின் அர்த்தம் நமக்கு விளங்கும்! 

நேருவை நவீன இந்தியாவின் சிற்பி என சொல்வது மிகைப்படுத்தப்பட்ட புகழ்மாலை அல்ல.  தேசத்தை அவர் தத்துவார்த்த ரீதியிலும் வளர்ச்சியை நோக்கியும் கட்டமைத்த பெருமை நேருவுக்கே உண்டு!  இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்த பிரதமர் என்ற பெருமை இன்றும் அவரிடம் தான் உள்ளது!  இத்தனைக்கும் நாடு அன்று இருந்த மிக ஏழ்மை நிலையிலும் அவர் இதை சாதித்திருக்கிறார்!  மருத்துவம்,  உயர்கல்வி யில் தொலைநோக்கோடு பணிகளை முடுக்கிவிட்டார்!  ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் நாட்டின் ஒன்றுபட்ட வளர்ச்சியை உறுதிபடுத்தினார்! 

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா மிக மோசமான சூழ்நிலையில் இருந்தது.  பஞ்சம் பசி,  கல்வி வேலைவாய்ப்பு இல்லை,  அடிப்படை வசதிகள் இல்லை.  இவ்வளவு மோசமான நிலையைத்தாண்டி நாம் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் நேரு!  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று உலக அரங்கில் நாம் இன்று மார் தட்டுகிறோம் என்றால் அதற்கு முழு காரணம் பண்டித நேரு அவர்களே!  உண்மையில் தான் ஒரு இந்தியன் என்ற உணர்வுள்ள மனசாட்சியுள்ள இந்தியர்கள் ஒவ்வொருவராலும் நன்றி கூறத்தக்கத்தலைவர் நேரு என்று சொன்னால் அதிலே மிகையேதுமில்லை! 

No comments:

Post a Comment