வில்லிவாக்கத்தில் காணாமல் போன 4வயது பெண் குழந்தை காவ்யா அடுத்தநாள் தெருவில் குப்பத்தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் பக்கத்து வீட்டு லேடி தேவி என்பவர் அந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் என்பது தெரியவருகிறது! அவர் சொன்ன காரணம் : ஏற்கெனவே சிறுமியின் குடும்பத்தோடு இவருக்கு விரோதம் இருந்திருக்கிறது. அதுபோக இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறான். ஆனால் அவன் சரிவர பேசாமல் மந்தமாக இருக்கக்கூடிய பிள்ளையாக இருக்கிறான். மாறாக செத்து போன சிறுமி காவ்யா நன்றாக சிரித்து பேசக்கூடிய குழந்தையாக வளர்கிறாள். இது இந்த பெண்மணிக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அந்த கோபத்தில் சைக்கோவாக மாறி குழந்தையை கொன்றுள்ளார்.
காவ்யாவின் அம்மா அவரை வீட்டின் உள்ளே விட்டு வெளித் தாழ்ப்பாள் போட்டு வெளியே போனதை பார்த்து இவர் உள்ளே போய் குழந்தையை இவர் வீட்டுக்கு கூட்டி சென்று கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் கொலையாளி தேவியின் சைக்கோத்தனம் தெரிகிறது. அவர் தண்டனை பெற்றாலும் போன குழந்தையின் உயிர் திரும்ப போவதில்லை.
இந்த சம்பவத்திற்கு நிச்சயமாக இதுதான் காரணம் என சொல்லமுடியாது என்றாலும் இதை சமூகத்தில் நிலவும் வேறு ஒரு போக்கோடு தொடர்புப் படுத்தி எண்ணிப்பார்க்க வைக்கிறது.
காவ்யாவின் அம்மா வீட்டில் வேறு யாரும் இல்லாததால் குழந்தையை உள்ளே விட்டு வெளியே போயிருக்கிறார். அதுவே தேவியை குழந்தை யை அழைத்து போக வழிவகை செய்துள்ளது. குழந்தையின் வீட்டில் வேறு யாரேனும் இருந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.
இதை சென்னையில் நிலவும் நவீன தீண்டாமை யோடு முடிச்சுப்போட்டு பார்க்க விரும்புகிறேன்.
சென்னையில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் குடும்பத்தில் 4 பேருக்கு மேல் இருந்தால் பெரும்பாலும் வீடு தருவதில்லை. எனக்கு பலமுறை இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தில் 6 நபர்கள். என் குழந்தையோடு சேர்த்து மொத்தம் 7 பேர். நாங்கள் வீடு பார்க்கும்போது எங்களுக்கு வீடு தராததற்கு சொன்ன மிக முக்கிய காரணம் வீட்டில் நிறைய நபர்கள் இருப்பது தான். எங்கள் குடும்பத்தில் மூன்று பேர் வேலைக்கு போகிறவர்கள். இத்தனைக்கும் நாங்கள் டபுள் பெட்ரூம் டபுள் பாத்ரூம் உள்ள சுமார் 13ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான வாடகை வீடுகளைத்தான் எதிர்பார்த்து செல்கிறோம். வாடகைத்தொகை எங்களுக்கு சம்மதம் என்றாலுமே கூட குடும்பத்தில் உள்ள மொத்த நபர்கள் வாடகை விடுபவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. நிறைய பேர் இருந்தால் வீட்டில் நிறைய தண்ணீர் செலவாகும், வீடு அதிகமாக புழங்கும் (!) தேய்மானம் ஆகும் என்பது அவர்களின் எண்ணம்!
நாங்கள் இப்போது ஒரு சில அசவுகரியங்கள் இருந்தாலும் நல்ல தரமான வீட்டில் தான் வசிக்கிறோம் என்றாலும் இந்த வீடு கிடைப்பதற்கு முன்பு நாங்கள் வீடு தேடிய அனுபவங்கள் கசப்பானதாகவே இருந்தது!
வயதான காலத்தில் தாய் தகப்பனோடு சேர்ந்து வாழ்கிற கூட்டுக்குடும்ப வாழ்க்கை தான் எத்தனை ரம்மியமானது என வாட்சப் பார்வர்டு மெசேஜ் அனுப்பி கும்மியடிக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அதுபோல ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்கு வாடகை தேடி வந்தால் அதைத் தவிர்க்கிறார்கள்.
நிறைய பேர் வேண்டுமென்றே பெற்றோர்களை தனியாக விட்டு வருவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் தனித்தனியாக வாழ்கிறார்கள். அப்படியே ஒன்றாக பெரிய குடும்பமாக வந்தால் இங்கே வீடு கிடைப்பதில் சிக்கல்! சென்னையில் வீடு வைத்திருக்கும் அப்பாடக்கர்கள் தயவு செய்து இந்த மொண்ணையான காரணத்தை கூறி நிராகரிக்கக்கூடாது என்பதே என் வேண்டுகோள்..!
No comments:
Post a Comment