Sunday, 26 November 2017

வி பி சிங் : சமூகநீதிக் காவலர்

தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தில் கலைஞரின் உதவியாளர் திரு.  சண்முகநாதனிடம் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது!  தேசிய அளவில் உள்ள தலைவர்களில் கலைஞர் யாரிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்?  என.  அதற்கு அவர் சொன்ன பதில் வி.பி சிங்! 

யார் இந்த வி பி சிங்?!  வெறும் 11 மாதங்களே இந்த நாட்டை ஆட்சி செய்த இவர் பெயரைக்கேட்டால் இன்றும் மதவாத சக்திகள்,  பார்ப்பனிய சக்திகள் அலறுவது ஏன்??

1950 ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்துகிறார் அண்ணல் அம்பேத்கார்!  ஆங்கிலேயர்கள் செய்த நிர்வாக நடவடிக்கைகளால் பட்டியல் வகுப்பினர் என்ற பிரிவு மட்டுமே அப்போது இந்திய அரசிடம் இருந்தது!  யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற விபரம் இல்லை.  எனவே பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீடை செயல்படுத்துகிற அம்பேத்கார்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளங்காண பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை அமைக்கிறார்! 

1978 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியில் அந்த ஆணைய வழிகாட்டுதலில் மண்டல் என்பவரது தலைமையில் கமிசன் ஒன்று அமைக்கப்படுகிறது! 

தமிழ்நாடு கேரளாவில் எப்படி எல்லா சமூகங்களும் ஒன்றுபட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறுகின்றன,  மருத்துவம் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் எப்படி அந்தந்த மக்களிடமிருந்தே உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்கிறது!  அதற்கு காரணம் அந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு தான் என புரிந்துகொள்ளப்படுகிறது.  சுமார் 3700 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என கண்டறியப்பட்டு மத்திய அரசின் பணிகளில் 27% பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என 1980 ல் அந்த கமிசன் அறிவிக்கிறது!

மத்திய அரசுப்பணிகளில் A grade officers ஆக முழுக்க பார்ப்பனர்கள் மற்றும் உயர் வகுப்பினர் தான் இருந்துவந்தார்கள்.  அவ்வளவு ஏன் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்கள்,  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது! 

மண்டல் கமிசன் பரிந்துரைகளை 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது!  1989 ல் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு பிரதமரானார் வி பி சிங்!  இதில் வேடிக்கை என்னவென்றால் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை,  ராஜீவ்காந்தி பிரதமராக விடாமல் தடுப்பதற்காக பாஜக கூட வெளியிலிருந்து அவருக்கு ஆதரவு தந்தது!

அப்படிப்பட்ட பலவீனமான ஆட்சியை வைத்துக்கொண்டு மண்டல் கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவெடுக்கிறார்!  காங்கிரஸ்,  பாஜக உள்பட நாடு முழுவதும் பார்ப்பனிய சக்திகள் கைகோர்த்துக்கொண்டு அதை கடுமையாக எதிர்க்கிறார்கள்!  இருந்தும் எதிர்ப்புகளை மீறி 27% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தார்!  திராவிட முன்னேற்க்கழகத் தலைவர் கலைஞர்,  சமூகநீதி காத்த காவலர் வி பி சிங் என புகழாரம் சூட்டுகிறார்!  ரதயாத்திரை ஆரம்பித்திருந்த அத்வானி பாஜக வின் ஆதரவை திரும்பப்பெறுகிறார்! 

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு வருகிறது!  மண்டல் கமிசன் அமல்படுத்துவதை எதிர்த்து சுமார் 10 மணி நேரங்கள் பேசுகிறார் ராஜீவ்காந்தி!  எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்க பேச ஆரம்பித்த பிரதமர் விபி சிங், 

"டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் இவர்களுக்கு நன்றி! " என்று சொல்லித்தான் பேச்சையே தொடங்குகிறார்!  "இன்று நாடாளுமன்றத்தில் இரண்டு பிரிவுகள் : 1. சமூகநீதியை காக்கிற பிரிவு,  2. சமூகநீக்கு எதிரானவர்கள்,  யார் யார் எப்படி என்பதை மக்கள் பார்க்கிறார்கள்! " என்றார்!  வாக்கெடுப்பின் முடிவில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார் விபி சிங்! 

வெறும் 11 மாதங்களே ஆட்சி செய்த வி பி சிங் ஆட்சிக்காலத்தில் தான் அண்ணல் அம்பேத்காருக்கு பாரதரத்னா வழங்கப்பட்டது!  எம்ஜியார்க்கு எல்லாம் வழங்கி முடித்த பிறகு தான் அம்பேத்காருக்கு வழங்கப்பட்டது ஏன் என்றால் இதனால் தான்!  இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தவரும் இவரே! 

1991 ராஜீவ் படுகொலை க்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் தூக்கி எறியப்பட்டார் வி பி சிங் என்றொரு மாணிக்க முத்து!  ஆனாலும் அவர் வரலாற்றில் நிரந்தரமாக வாழ்கிறார்..!

Tuesday, 14 November 2017

நீதிமன்ற வினோதங்கள்

வேடிக்கையும் வினோதங்களையும் வெளிப்படுத்துவது நம் நீதித்துறைக்கு ஒன்றும் புதிதில்லை.  இதோ மற்றுமொரு வேடிக்கையான தீர்ப்பு :

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நீக்கவேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இதையடுத்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சாலையோரக்கடைகள் அகற்றப்பட்டன. 

பாஜக ஆட்சி செய்யும் சண்டிகர் அரசு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டது!  தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் தானே மதுக்கடைகள் கூடாதுன்னு சொன்னிங்க,  ஓகே இனிமே அதன் பெயர் அது கிடையாது.  அவை இனிமே உள்ளாட்சி சாலைகள் என அழைக்கப்படும் என்று மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளை லோக்கல் சாலைகளாக பெயர் மாற்றி உத்தரவிட்டது.  கடைகளும் வழக்கம்போல செயல்பட்டன. 

இது தொடர்பாக ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது.  உச்சநீதிமன்றம்,  " மாநில சாலைகளின் பெயர்களை முடிவு செய்வது மாநில அரசுகளின் உரிமை.  அதிலெல்லாம் நாங்க தலையிடமாட்டோம் " என சொல்லி வழக்கை முடித்துவைத்தது! 

பாஜகவின் வழியொட்டி ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு சும்மாயிருக்குமா?  நாங்களாம் சட்டசபை கட்டிடத்தையே ஆஸ்பத்திரியா மாத்தனவங்கயா எங்களுக்கா சாலை பேர மாத்த முடியாது?  என சண்டிகர் அரசின் முடிவை பின்பற்றி தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சியில் செல்கிற நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகள் என பெயர் மாற்றி மூடப்பட்ட மூவாயிரத்து சொச்சம் மதுக்கடைகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது..!

Monday, 13 November 2017

ஜவஹர்லால் நேரு

நேரு,  காந்தியின் அணுக்கத்தொண்டராக இருந்தபோதும் அவர் தன்னை ஒரு முழுமையான காந்தியவாதியாக அடையாளப்படுத்திக்கொண்டதில்லை.  நிறைய முறை மகாத்மா வுடன் முரண்பட்டுள்ளார் நேரு!  குறிப்பாக காந்தியின் ராம ராஜ்ஜிய கனவில் எல்லாம் நேருவுக்கு பெரிதாக எந்த ஆர்வமுமில்லை.  இருந்துமே கூட காந்தி ஆட்சியை யார் வழிநடத்தவேண்டும் என்று வருகிறபோது நேருவைத்தான் தேர்ந்தெடுக்கிறார்.  மகாத்மா இந்தியாவிற்கு செய்த எத்தனையோ நல்ல விஷயங்களில் முக்கியமானது நேருவை முதல் பிரதமராக வர விரும்பியது! 

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் தான் விடுதலை பெற்றன.  இன்று இரு நாடுகளின் நிலைமையை ஒப்பிட்டு பாருங்கள்!  வறுமை,  பயங்கரவாதம்,  மக்களாட்சியை ராணுவம் கைப்பற்றுதல்,  பழமைவாதம் என சீரழியும் பாகிஸ்தானை போல இந்தியா இல்லை!  இதற்கு காரணம் ஜவஹர்லால் நேரு! 

முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்றால் இந்தியா இந்துக்களுக்கு அல்லவா என்ற கேள்வி வந்தபோது அதை அடியோடு நிராகரிக்கிறார்!   சுதந்திரம் அடைந்தபிறகு நேருவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கை கொண்டு அவர் நாட்டின் அதிபர் போல செயல்பட்டிருக்கமுடியும்.  ஆனால் அவர் அப்படி செய்யவில்லை!  நாடு தோறும் சுற்றுப்பிரயாணம் செய்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து ஜனங்களை ஜனநாயகத்திற்கு தயார்படுத்துகிறார்! 

இந்துத்துவம் மட்டும் தான் மதவாதமா ஏன் முஸ்லீம்களிடம் கிறித்தவர்களிடம் மதவாதம் இல்லையா என்ற கேள்வி இன்றும் வருகிறது!  நேருவுக்கும் வந்தது!  நேரு இதற்கு தந்த விளக்கம் இன்றியமையாத ஒன்று : எல்லா மதங்களிலும் மதவாதம் உண்டு.  எல்லா மதவாதங்களும் ஆபத்தானவையே.  ஆனால் ஒரு நாட்டின் பெரும்பான்மை மதத்தின் மதவாதம் என்பது அந்த நாட்டின் தேசியவாதமாக கட்டமைக்கப்படுகிற பெரும் அபாயம் உள்ளது என்றார். 

இன்றைக்கு நேரு சொன்னது தான் நடக்கிறது பாருங்கள்!  இந்துத்துவவாதிகள் தான் தங்களைத் தாங்களே தேச பக்தர்கள் என மார்தட்டிக்கொள்கிறார்கள்.  என்னவோ மற்ற மதத்தவர்களுக்கு தேசபக்தியே இல்லாதது போல தேசபக்திக்கு இவர்கள் தான் ஒட்டுமொத்த கான்ட்ராக்ட் போல சீன் போடுவதை பார்த்தால் நேரு சொன்னதின் அர்த்தம் நமக்கு விளங்கும்! 

நேருவை நவீன இந்தியாவின் சிற்பி என சொல்வது மிகைப்படுத்தப்பட்ட புகழ்மாலை அல்ல.  தேசத்தை அவர் தத்துவார்த்த ரீதியிலும் வளர்ச்சியை நோக்கியும் கட்டமைத்த பெருமை நேருவுக்கே உண்டு!  இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்த பிரதமர் என்ற பெருமை இன்றும் அவரிடம் தான் உள்ளது!  இத்தனைக்கும் நாடு அன்று இருந்த மிக ஏழ்மை நிலையிலும் அவர் இதை சாதித்திருக்கிறார்!  மருத்துவம்,  உயர்கல்வி யில் தொலைநோக்கோடு பணிகளை முடுக்கிவிட்டார்!  ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் நாட்டின் ஒன்றுபட்ட வளர்ச்சியை உறுதிபடுத்தினார்! 

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா மிக மோசமான சூழ்நிலையில் இருந்தது.  பஞ்சம் பசி,  கல்வி வேலைவாய்ப்பு இல்லை,  அடிப்படை வசதிகள் இல்லை.  இவ்வளவு மோசமான நிலையைத்தாண்டி நாம் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம் என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் நேரு!  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று உலக அரங்கில் நாம் இன்று மார் தட்டுகிறோம் என்றால் அதற்கு முழு காரணம் பண்டித நேரு அவர்களே!  உண்மையில் தான் ஒரு இந்தியன் என்ற உணர்வுள்ள மனசாட்சியுள்ள இந்தியர்கள் ஒவ்வொருவராலும் நன்றி கூறத்தக்கத்தலைவர் நேரு என்று சொன்னால் அதிலே மிகையேதுமில்லை! 

Saturday, 11 November 2017

வீடு வாடகைக்கு இல்லை

வில்லிவாக்கத்தில் காணாமல் போன 4வயது பெண் குழந்தை காவ்யா அடுத்தநாள் தெருவில் குப்பத்தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.  விசாரணையில் பக்கத்து வீட்டு லேடி தேவி என்பவர் அந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார் என்பது தெரியவருகிறது!  அவர் சொன்ன காரணம் : ஏற்கெனவே சிறுமியின் குடும்பத்தோடு இவருக்கு விரோதம் இருந்திருக்கிறது.  அதுபோக இவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறான்.  ஆனால் அவன் சரிவர பேசாமல் மந்தமாக இருக்கக்கூடிய பிள்ளையாக இருக்கிறான்.  மாறாக செத்து போன சிறுமி காவ்யா நன்றாக சிரித்து பேசக்கூடிய குழந்தையாக வளர்கிறாள்.  இது இந்த பெண்மணிக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.  அந்த கோபத்தில் சைக்கோவாக மாறி குழந்தையை கொன்றுள்ளார். 

காவ்யாவின் அம்மா அவரை வீட்டின் உள்ளே விட்டு வெளித் தாழ்ப்பாள் போட்டு வெளியே போனதை பார்த்து இவர் உள்ளே போய் குழந்தையை இவர் வீட்டுக்கு கூட்டி சென்று கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் கொலையாளி தேவியின் சைக்கோத்தனம் தெரிகிறது.  அவர் தண்டனை பெற்றாலும் போன குழந்தையின் உயிர் திரும்ப போவதில்லை. 

இந்த சம்பவத்திற்கு நிச்சயமாக இதுதான் காரணம் என சொல்லமுடியாது என்றாலும் இதை சமூகத்தில் நிலவும் வேறு ஒரு போக்கோடு தொடர்புப் படுத்தி எண்ணிப்பார்க்க வைக்கிறது. 

காவ்யாவின் அம்மா வீட்டில் வேறு யாரும் இல்லாததால் குழந்தையை உள்ளே விட்டு வெளியே போயிருக்கிறார்.  அதுவே தேவியை குழந்தை யை அழைத்து போக வழிவகை செய்துள்ளது.  குழந்தையின் வீட்டில் வேறு யாரேனும் இருந்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். 

இதை சென்னையில் நிலவும் நவீன தீண்டாமை யோடு முடிச்சுப்போட்டு பார்க்க விரும்புகிறேன். 

சென்னையில் வீடு வாடகைக்கு விடுபவர்கள் குடும்பத்தில் 4 பேருக்கு மேல் இருந்தால் பெரும்பாலும் வீடு தருவதில்லை.  எனக்கு பலமுறை இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.  எங்கள் குடும்பத்தில் 6 நபர்கள்.  என் குழந்தையோடு சேர்த்து மொத்தம் 7 பேர்.  நாங்கள் வீடு பார்க்கும்போது எங்களுக்கு வீடு தராததற்கு சொன்ன மிக முக்கிய காரணம் வீட்டில் நிறைய நபர்கள் இருப்பது தான்.  எங்கள் குடும்பத்தில் மூன்று பேர் வேலைக்கு போகிறவர்கள்.  இத்தனைக்கும் நாங்கள் டபுள் பெட்ரூம் டபுள் பாத்ரூம் உள்ள சுமார் 13ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான வாடகை வீடுகளைத்தான் எதிர்பார்த்து செல்கிறோம்.  வாடகைத்தொகை எங்களுக்கு சம்மதம் என்றாலுமே கூட குடும்பத்தில் உள்ள மொத்த நபர்கள் வாடகை விடுபவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.  நிறைய பேர் இருந்தால் வீட்டில் நிறைய தண்ணீர் செலவாகும்,  வீடு அதிகமாக புழங்கும் (!) தேய்மானம் ஆகும் என்பது அவர்களின் எண்ணம்! 

நாங்கள் இப்போது ஒரு சில அசவுகரியங்கள் இருந்தாலும் நல்ல தரமான வீட்டில் தான் வசிக்கிறோம் என்றாலும் இந்த வீடு கிடைப்பதற்கு முன்பு நாங்கள் வீடு தேடிய அனுபவங்கள் கசப்பானதாகவே இருந்தது! 

வயதான காலத்தில் தாய் தகப்பனோடு சேர்ந்து வாழ்கிற கூட்டுக்குடும்ப வாழ்க்கை தான் எத்தனை ரம்மியமானது என வாட்சப் பார்வர்டு மெசேஜ் அனுப்பி கும்மியடிக்கிறார்கள்.  ஆனால் நிஜத்தில் அதுபோல ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்கு வாடகை தேடி வந்தால் அதைத் தவிர்க்கிறார்கள். 

நிறைய பேர் வேண்டுமென்றே பெற்றோர்களை தனியாக விட்டு வருவதில்லை.  சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் தனித்தனியாக வாழ்கிறார்கள்.  அப்படியே ஒன்றாக பெரிய குடும்பமாக வந்தால் இங்கே வீடு கிடைப்பதில் சிக்கல்!  சென்னையில் வீடு வைத்திருக்கும் அப்பாடக்கர்கள் தயவு செய்து இந்த மொண்ணையான காரணத்தை கூறி நிராகரிக்கக்கூடாது என்பதே என் வேண்டுகோள்..!

Thursday, 9 November 2017

திராவிடம் என்றால் என்ன?

கமல்ஹாசன் பேட்டியைத்தொடர்ந்து ஏற்பட்ட நல்ல விஷயமாக நான் கருதுவது,  ஆங்காங்கே "திராவிடம் னா என்ன?  கொள்கையா அடையாளமா?  ஆந்திரா கேரளா ல ஏன் திராவிடம் பேசப்படுவதில்லை?  " என்ற வாதங்கள் எழுகின்றன.  கேள்வி கேட்பது நல்ல விஷயம் தான்.  திராவிடம் என்ற சொல் எப்படி வந்ததற்கான விளக்கத்தை முதல்  கமென்ட்டில் தந்துள்ளேன்.  விருப்பமுள்ளவர்கள் அந்த நீண்ட விளக்கத்தை படித்துத்தெரிந்துகொள்ளலாம். 

பெரியார் தமிழர் இல்லை அதனால் தான் திராவிட அடையாளத்தை முன்வைத்தார் என சொல்லப்படுகிறது.  இது முற்றிலும் தவறு.  திராவிட அடையாளத்தை பெரியார் முதன்முதலில் கையிலெடுக்கவில்லை.  1882 ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் கௌரவ நீதிபதியாக இருந்த ஜான் ரத்தினம் என்பவர் தான் முதன்முதலில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவுகிறார்.  அதைத்தொடர்ந்து அவருடன் இணைந்து தாத்தா அயோத்திதாச பண்டிதர் 1885 ம் ஆண்டு திராவிட பாண்டியன்,  திராவிட மித்திரன் ஆகிய இதழ்களை ஆரம்பிக்கிறார். 1891 ம் ஆண்டு அயோத்திதாசர் திராவிட மகாஜன சபா வை ஏற்படுத்துகிறார்.  மகாராஷ்டிராவில் மகாத்மா ஜோதிராவ் பூலே அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி சூத்திரர்கள் என்று அழைத்த காரணத்தால் அயோத்திதாசர் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஆதி திராவிடர்கள் என அடையாளப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. 

1912ம் ஆண்டு மதராஸ் மாகாண பிராமணர் அல்லாத அரசு ஊழியர்களின் அமைப்பான மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற பெயரை நடேசனார் மெட்ராஸ் திராவிட சபை என மாற்றியபோது அந்த பதம் பெரியளவில் கவனம் பெற தொடங்கியது.  1922ம் ஆண்டு அப்போதைய அமைச்சரவையிலிருந்த  எம் சி ராஜா அவர்கள் "ஆதி திராவிடர் " என்ற சொல்லை சட்டபூர்வமாக ஆக்குகிறார்.  மேலே சொன்ன எல்லாருமே இப்போது இவர்கள் சொல்கிற அடையாளப்படி வைத்தால் பச்சைத் தமிழர்களே.  இதற்கெல்லாம் பிறகு தான் பெரியார் திராவிடர் என்ற அடையாளத்தை கையில் எடுக்கிறார் . ஆரிய இனம் பிறப்பால் உயர்ந்தது என்ற கருத்துகளை வலுவாக இந்த மண்ணில் ஊன்றியதை அறிந்த பெரியார் ஆரியர்களுக்கு முன்னரே இந்த மண்ணில் திராவிட இனம் இருந்துள்ளதை என்ற காரணத்தால்,  "நீ எந்த அடையாளத்தால் எங்களை மட்டம் தட்ட பார்க்கிறாயோ அதே அடையாளத்தை வைத்தே உன்னை எதிர்க்கிறேன் பார் " என அதை வெற்றிகரமான அரசியலாக மாற்றினார். 

என்னை சில நண்பர்கள் அரக்கன் என செல்லமாக கூப்பிடுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  இது நானாக விரும்பி ஏற்றுக்கொண்ட அடையாளம் . ஏன்?  நீங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் எங்கள் மக்களை அரக்கர்கள் என அடையாளப்படுத்தி அவர்களை கெட்டவர்களாக சித்தரித்தீர்கள். அதே அடையாளத்தை வைத்தே உங்களுக்கு பதிலடி தருகிறேன் பார் என்பது தான் எதிர்ப்பு அரசியல். 

திராவிட இயக்கம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இயக்கம்.  நூறு வருடங்களுக்கு மேலாக அது தமிழ்நாட்டில் மட்டுமே இருந்துவருகிறது.  எனவே ஆந்திராவில் ஏன் இல்லை,  கர்னாடாகாவில் ஏன் இல்லை என கேட்பது அபத்தமானது.  திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் தமிழ் என்பதைத்தவிர வேறெந்த பெரியளவிலும் திராவிட இயக்கம் மற்ற மாநிலங்களில் Influence செய்யவில்லை.  தமிழ் மொழியிலிருந்து தான் மலையாளம் வந்தது,  கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள அந்த மக்கள் விரும்புவதில்லை.  (தன்னுடைய தாய் மொழிக்கே தாய் தமிழ் தான் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாது என்பது வேறுவிஷயம்) .எனவே அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கலை நாம் புரிந்துகொள்ளவேண்டும் .

எனவே திராவிட இயக்கம் முழுக்க தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம்.  அதனால் தான் ஆட்சிக்கு வந்த வுடன் செய்த முதல் வேலை இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியது.  சமூக நீதி,  வர்ண பேதங்களை கடுமையாக எதிர்த்தல்,  தமிழ் மொழியுரிமை, பகுத்தறிவு,  மாநில சுயாட்சி இதெல்லாம் முக்கியமான திராவிட கொள்கைகள்.  திராவிட இயக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தாலே சிலர்,  தமிழ்நாட்டில் கோயில்கள் அதிகமாகி வருகிறது,  பக்தர்கள் அதிகமாகி வருகிறது இது திராவிட வீழ்ச்சியை காட்டுகிறது என எழுதுகிறார்கள். கடவுள் எதிர்ப்பு என்பது முழுமையான திராவிட கொள்கை அல்ல.  இந்தியாவில் உள்ள சாதிய கொடுமைகளுக்கு காரணம் வர்ண பேதம்.  வர்ண பேதத்திற்கு காரணம் இந்து மதம்.  சாதிய அடுக்கை கொண்ட இந்து மதத்தை எதிர்க்காமல் செய்கிற எந்த புரட்சியும் டுபாக்கூர் புரட்சி தான் . ஹிந்துத்வா வை திராவிட இயக்கம் வெகுஜன மக்கள் பங்களிப்புடன்  மிகச்சரியாக டார்கெட் செய்து அடித்ததால் தான் இத்தனையாண்டுகளுக்கு பிறகும் இந்த மண்ணில் ஹிந்துத்வா வால் நேரடியாக நுழையமுடியவில்லை. 

திராவிட இயக்கம் ஹிந்துத்வா எதிர்ப்பில் எழுந்த இயக்கம் . திராவிடம் ஒழிய வேண்டுமென்றால் அதற்கு முற்றிலுமாக இந்த மண்ணிலிருந்து ஹிந்துத்வா ஒழிய வேண்டும்.  ஹிந்துத்வா ஒழியாதவரை திராவிடத்தின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும் .

Saturday, 21 October 2017

மெர்சல் மருத்துவம்

மெர்சல் மருத்துவம்
-------------------------------

மெர்சல் படத்தில் மருத்துவர்கள் மீதும் மருத்துவத்துறை மீதும் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.  விஜய் ஒழுங்கா,  அட்லீ ஒழுங்கா என கேட்டு சண்டை போடவேண்டியதில்லை.  அதை பார்க்கிறவர்கள் அட ஆமால்ல சரியாத்தான் கேக்கறார் ல என்று எண்ணுவதை நாம் மறைக்கமுடியாது.  என் மனைவி கூட என்னிடம் மருத்துவர்களைப் பற்றி அந்த படத்தில் சொல்லப்படுகிற பெரும்பாலான குற்றச்சாட்டுகள் சரிதானே என்று கேட்கிறார்.  எனவே படக்குழுவினர் மீது கோபப்படுவதை விட உண்மைகளை விளக்குவதற்கு நாம் முயலவேண்டும். 

அதற்கு முன் ஒரு வரலாற்று செய்தியை தெரிந்துகொள்ளலாம்.  ஜவஹர்லால் நேரு ஏன் மாபெரும் தீர்க்கதரிசி என தெரிந்துகொள்ளமுடியும். 

நேரு பிரதமராக இருக்கும்போது மருத்துமனைகள் ஆரம்பிக்க தனியாருக்கு வங்கிக்கடன் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வருகிறது.  நேரு கோப்பு ஒன்றில் தன் கைப்பட எழுதுகிறார் : தயவு செய்து மருத்துவமனைகள் ஆரம்பிக்க வங்கிகள் கடன் தரக்கூடாது என்று.  நேருவின் எண்ணம் யாதெனில் ஒருத்தர் வங்கிக்கடன் வாங்கி மருத்துவமனை ஆரம்பிக்கிறார் என்றால் அவர் கடனை அடைப்பதற்காகவாவது அந்த ஆஸ்பத்திரியில் டார்கெட் பிக்ஸ் பண்ணப்படும் என்பதே. 

ஆக ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தவரை இந்தியாவில் தனியார் மருத்துவமனை கட்ட லோன் கிடையாது.  அவருக்கு பின் வந்த சாஸ்திரி காலத்திலும் கூட இல்லை.  பிறகு செல்வாக்கான நபர் மூலம் செல்வாக்கான வழியில் அந்த நடைமுறை தளர்த்தப்பட்டது வேறு கதை. 

சரி அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ளவேண்டியது சிங்கப்பூர் ஆசியாவிலேயே காஸ்ட்லியான மருத்துவத்திற்கு பேர் போன நாடு.  சிங்கப்பூரில் வாங்குகிற கட்டணத்தை பார்த்து மிரண்டு போய் சென்னைக்கு வருகிற நோயாளிகள் ஏராளம்.    அடுத்த எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த தகவலை இன்னொரு முறை ஞாபகப்படுத்திவிடுகிறேன் :

சிங்கப்பூர் நாட்டின் மொத்த மக்கட்தொகை 50 லட்சம் பேர்.  சென்னையின் மக்கட்தொகை மட்டும் 75 லட்சம் பேர்.  இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி போகிற டாக்டர்கள் அதிகம்.  காரணம் இந்தியாவில் ஒரு டாக்டருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட சிங்கப்பூரில 300% முதல் 500% வரை அதிகம்.  எனக்குத்தெரிந்த ஒரு கண் டாக்டர் சென்னையில் 1.5 லட்ச ரூபாய் சம்பள வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூரில 6 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு சென்றார். 

சிங்கப்பூரோடு இந்தியாவை ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே அல்ல.  தமிழ் சினிமாவில் இந்த அபத்தத்தை ஆரம்பித்தது சுஜாதா என்றே நினைக்கிறேன். 

சரி,  காசு உள்ளவன் தாஜ் ஓட்டலுக்கு போவான்,  காசு இல்லாதவன் அம்மா கேன்டீனுக்கு போவான்.  அதுபோலத்தான் ஏழைகளுக்கும் அரசாங்க ஆஸ்பத்திரி தான் கதியா?  அப்பல்லோ விற்கு ஒரு ஏழையால் போக முடியுமா?  அப்பல்லோ போல தர்மாஸ்பத்திரி இருக்கவேணாமா?  என்று கேட்கிற கேள்வி யில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.  இதை எப்படி சரி செய்வது? 

அப்பல்லோ வில் இருக்கிற எல்லா பெசிலிட்டியும் சென்னை பொது மருத்துவமனையிலும் இருக்கிறது.  பிறகு வேறென்ன வித்தியாசம்? 

அப்பல்லோ வில் ஒரு டாக்டர் செய்யும் வேலையை விட ஒரு அரசு டாக்டர் இரண்டு மடங்கு அதிக வேலையை செய்கிறார்.  ஆனால் அப்பல்லோ டாக்டர் வாங்குற சம்பளத்தில் பாதி தான் இவர் வாங்குறார்.  டாக்டர்கள் கார்ப்பரேட் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுப்பதை தடுத்து நிறுத்த ஒரே வழி தனியார் மருத்துவர்களுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும்.  அரசு சம்பளத்தை விட நிறைய தருகிறார்கள் என்று தானே ஒரு டாக்டர் தனியாருக்கு போகிறார்,  பிறகு மேனேஜ்மென்ட் அழுத்தம் தர அதை நோயாளிகள் மீது திருப்புகிறார்!  அரசாங்கத்திலும் அதே சம்பளம் என்றால் அவர் போங்கயா நான் கவர்ன்மென்ட் லயே வேலை பார்த்துக்கறேன் என்று வருவார். 

இலவச மருத்துவம் என்பது தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்து வருகிற ஒன்று தான்.  ஏழைகள் அதிகளவில் பெரும் பயன் அடைகிறார்கள்.  ஒரேயொரு சின்ன உதாரணம் : பாம்புக்கடி விஷத்துக்கு மருந்து தயார் செய்து அதை இலவசமாக வழங்குகிற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் அதுவும் ஒவ்வொரு இருபது  கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளேயே.  ஏன் தனியாரிடம் அது இல்லை என்றால் அந்த மருந்துக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் ஆகும்.  பாம்பு கடித்து வருபவர்கள் கிராமப்புற ஏழைகளாக இருப்பார்கள்.  காசு இருக்காது.  காசு இல்லாதவனுக்கு வைத்தியம் பார்க்க தனியாருக்கு அவசியம் இல்லை.  இது ஒரு உதாரணம் மட்டுமே. 

ஆக ஏழைகளுக்கு தர்மாஸ்பத்திரிகள் துணை புரிகின்றன.  பணக்காரர்களுக்கு அது அவசியமே இல்லை.  அவன் நேரா கார்ப்பரேட் ஆஸ்பத்திரிக்கு போறான்.  பிரச்சினை மிடில் கிளாஸ் மொண்ணைகளிடம் தான்.  இவருக்கு ஏழையோடு ஏழையாக தர்மாஸ்பத்திரி போகவும் கவுரவம் தடுக்கிறது,  கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் வாங்குற கட்டணமும் வாயை பிளக்க வைக்கிறது.  இவர் உடனே தான் வஞ்சிக்கப்படுகிறோம் என உணர்கிறார்.  இந்த குரூப் தான் தடுப்பூசி போடலாமா போடக்கூடாதா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.  நான் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கிறவன்.  எங்கள் பகுதிவாசிகள் அரசு இலவசமாக போடுகிற எல்லா ஊசிகளையும் தங்கள் குழந்தைகளுக்கு கேள்வியே கேட்காமல் போட்டுவிடுவார்கள்.  போயஸ்கார்டன் ல வசிக்கிற ஆட்களும் தப்பித்துவிடுவார்கள்.  தடுப்பூசி போடக்கூடாது என வாட்சப் வதந்திகளை நம்பி வீணா போற குரூப் நடுசென்ட்டர் குரூப் தான். 

சினிமா வில் மருத்துவம் மேம்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கருத்து சொல்பவர்கள்,  நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றெல்லாம் வியாக்கியானம் பேசாமல் அரசாங்கம் இலவசமாக வழங்குகிற ஊசிகளை போட சொல்வது தான் நியாயமானதாக இருக்கும். 

அடுத்தது நுகர்வோர் சட்டத்திலிருந்து மருத்துவத்தை விடுவிக்கவேண்டும்.  ஒரு நோயாளி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஒரு ஆஸ்பத்திரியில் எல்லா டெஸ்ட்டுகளும் எடுக்கிறார்.  பிறகு வேறொரு டாக்டரிடம் செல்கிறார்.  அந்த டாக்டர் ஏற்கெனவே எடுத்த டெஸ்ட்டுகளே போதும் என்று கருதினால் கூட அவர் மீண்டும் புதுசாக எடுக்க சொல்லி எழுதுவார். 

ஏன்? 

ஏனென்றால் நோயாளிக்கு ஏதாவது பிரச்சினையாகி அவர் சார்பாக டாக்டர் மீது யாரேனும் வழக்கு தொடர்ந்தால் அப்ப ஜட்ஜ் கேட்கக்கூடிய முதல் கேள்வி : நீ ஏன் இந்த இந்த டெஸ்ட் லாம் எடுத்து பார்க்கவே இல்ல என்பது தான். 

ஒரு இதய டாக்டர் தனது அனுபவத்தால் பரிசோதனை செய்து நார்மல் என முடிவுக்கு வந்தாலும் அவரால் நார்மல் என சொல்லிவிடமுடியாது.  ஏனென்றால் நாளைக்கு உங்களுக்கு ஒன்றாகி அவர் மீது கேஸ் போட்டால்,  எந்த டெஸ்ட்டுமே எடுத்து பார்க்காம நீ எப்படி நார்மல் என சட்டம் கேட்கும்.  டெஸ்ட் எடுத்து பிறகு ஏதாவது ஆனால் கூட,  நான் டெஸ்ட் எடுத்தபோது நார்மல் ரிசல்ட் தான் வந்தது எனக்காட்டி சேஃப் ஆகலாம்.  டெஸ்டு எடுத்திராவிட்டால் டாக்டர் காலி. 

அப்புறம் Family physician concept ஐ திரும்ப கொண்டுவரவேண்டும்.  இது டாக்டர்கள் கையில் இல்லை.  நமது கையில் தான் இருக்கிறது.  நம்ம பக்கத்து தெருவிலேயே இருக்கிற டாக்டரிடம் செல்லாமல் ஒரு சாதாரண பிரச்சினைக்குக் கூட மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியது.  இந்த லோக்கல் டாக்டர் எவ்ளோ நாள் தான் கிளினிக் ல ஈயோட்டுவார்?  க்ளினிக் க இழுத்து மூடிட்டு அந்த மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரியில் சம்பளத்துக்கு வேலையில் சேர்வார். 

அதாவது டாக்டர்கள் என்றாலே மனித புனிதர்கள் என்று நான் சொல்வதாக கருதவேண்டாம்.  நான் அரசு மருத்துவமனையில் படித்து தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்தவன்.  இன்றும் அந்த இரண்டு ஆஸ்பத்திரிகளோடும் தொடர்பில் இருந்து பணியாற்றுகிறவன்.  டாக்டர்கள் பணம் பறிப்பதே இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன்.  அதே சமயம் எது நியாயம் எது அநியாயம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும்.  மூணு வருஷ டிகிரி முடிச்சுட்டு ஐடி கம்பெனில 40 ஆயிரம் சம்பளத்துக்கு ஒருத்தர் வேலைக்கு சேருவார்,  நமக்கு வருடா வருடம் நல்ல இன்கிரிமென்ட் வேண்டும்,  கை நிறைய சம்பாதிக்கிற மாப்பிள்ளை வேண்டும் ஆனால் டாக்டர் மட்டும் காசு வாங்காமல் சேவை செய்யவேண்டும் என எதிர்பார்க்கலாமா?  பாவம் அவருக்கும் வயிறு,  மனசு இருப்பதை புரிந்துகொள்ளவேண்டும். 

சிசேரியன் குறித்து ஒரு ஆர்டிஐ போட்டிருக்கிறேன்.  அதற்கு பதில் கிடைத்தவுடன் அந்த டேட்டாவை வைத்துக்கொண்டு இன்னொரு தனிப்பதிவாக எழுதுகிறேன். 

நன்றி!
- சிவசங்கரன் சரவணன்