கலைஞருக்கு ஏன் மூப்பு இல்லை??
மூப்பு என்பது வாழ்க்கையில் ஏற்படுகிற சலிப்பு தான். மூப்பு வந்தால் வாழ்க்கையில் சலிப்பு வரும் என்பார் சிலர். அது தவறு. சலிப்பு வந்தால் தான் வாழ்வில் மூப்பு வரும்.
தேர்தல் முடிவுகள் வந்த அன்று என் நெருங்கிய நண்பர்களிடம் புலம்பினேன் நான். நாம என்னத்த எழுதினாலும் அதனால என்ன மாறிப்போச்சு, இனி எதற்காக எழுதவேண்டும் என சலித்துக்கொண்டேன். பிறகு தான் நிதானமாக யோசித்தேன். ஒரு தேர்தல் முடிவுக்கே நீ நினைத்தது போல வரவில்லையென்று சலித்துக்கொள்கிறாயே அந்த மனிதர் எழுபதாண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்வளவு சலித்துக்கொள்ள வேண்டும்? ஏன் அவர் சலிப்பில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார். அவரை பாராட்டினால் மட்டும் போதுமா அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டாமா? என என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.
அவரே சொல்கிறார் : என் வாழ்நாளில் தொடர்ந்து 24 மணி நேரம் நான் மகிழ்ச்சியாகவும் இருந்ததில்லை, சோகமாகவும் இருந்ததில்லை. பெரியார், அண்ணா, ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், எம்ஜியார் போன்ற ஆளுமைகளுடன் அரசியல் செய்தவர் இன்று இவர்களுடன் அரசியல் செய்யவேண்டுமா என நமக்கு சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவருக்கு உண்டா? காலம் யாரை கை காட்டுகிறதோ அவர்களுடன் தான் அரசியல் செய்யவேண்டும் என சொல்லி அதை கடந்து செல்வது தான் கலைஞர்த்தனம்.
வாழ்க்கையில் சலிப்பே ஏற்படாதவர்கள் யார்? குழந்தைகள் தானே! நான் வீட்டிற்கு சென்றவுடன் என் மகள் என்னை மேலே தூக்கி போட சொல்வாள். ஒவ்வொருமுறை நான் அப்படி செய்யும்போதும் இன்னும் வேணும் என்று கேட்பாள். ஆறேழு முறை மேலே தூக்கி போடுவேன். அதன்பிறகு நான் சலித்துப்போவேன். அவள் ஒருபோதும் சலித்ததில்லை. கலைஞரும் அப்படித்தான். அவருக்கு எதுவுமே சலித்ததில்லை. பாராட்டு சலிக்கவில்லை, வசவு சலிக்கவில்லை. அவருக்கு என்ன இல்லை? இனி புதிதாக அவர் சாதிக்கப்போவதென்ன? பொதுவாழ்விலும் அக வாழ்விலும் நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டார். இனி அவர் அக்கடா என நிம்மதியாக இருக்கலாமே என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு ஒருபோதும் இல்லை. இதை பதவி ஆசை, மோகம் என எப்படி வேண்டுமானால் சொல்லட்டும். ஆனால் கலைஞரிடம் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டியது சலிப்பில்லாமல் வாழ்வை வாழ்கிற அந்த குணம் தான். ஏனென்றால் வாழ்க்கையில் எப்போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்!
ஆக சலிப்பில்லாத வாழ்க்கை, சிந்தனைத் தெளிவு குறையாத செயல்திறன் இவைகளை பெற்ற ஒரு மனிதருக்கு வயது 93 ஆனால் என்ன 103 ஆனாலென்ன? அவருக்கு மூப்பே கிடையாது.
#முத்தமிழுக்கு_ஏது_மூப்பு
No comments:
Post a Comment