Thursday, 17 September 2015

அறிஞர் அண்ணா: அரசியல் நாகரிகத்தின் ஆசான்

1949ல் திராவிட முன்னேற்றக்கழகம் தோற்றுவிக்கப்படுகிறது. கிளை கழகம் என்ற ஒரு அமைப்பை தமிழக அரசியலுக்கு முதன்முதலாக அறிமுகம் செய்துவைக்கிறார் அண்ணா. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்ததே தேர்தலில் போட்டியிடத்தான் என்று கருதப்பட்ட சூழ்நிலையில் 1952ம் ஆண்டு பொதுத்தேர்தல் வருகிறது. தம்பிமார்கள் எல்லாரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினர். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தாமல் தேர்தலில் போட்டியிடுவதில் பயனில்லை என்று அண்ணா உணர்ந்ததால் அந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.

1956 திருச்சி மாநாட்டு வாக்கெடுப்பைத்தொடர்ந்து 1957 பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் முதன்முதலில் போட்டியிட்டது. 112 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த "சிறிய " கட்சிக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இருபது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் காங்கிரசு கட்சியை எதிர்த்து போட்டியிட்ட திமுக 15 இடங்களில் வெற்றி பெறுகிறது.  காங்கிரசோ 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.  திமுக "15 சீட்டு கட்சி" என்று காங்கிரசால் கேலி செய்யப்படுகிறது. இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே இந்த இடம் மிக முக்கியமான கட்டம். அறிஞர் அண்ணா ஒரு நல்ல பேச்சாளர் எழுத்தாளர் என்பது எல்லாருக்கும் தெரியும். முதன்முறையாக திமுக வெறும் 15 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு சட்ட சபைக்கு செல்லப்போகிறது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட எல்லாருமே புது முகங்கள்.

அண்ணா, " நாங்கள் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள். குழந்தை தவறு செய்தால் தாய் அதிகமாக அடிக்காமல் கட்டியணைத்து திருத்துவதைப்போல எங்களையும் தாங்கள் திருத்தி மக்களாட்சிவாதிகளாக ஆக்கவேண்டும்" என்று ஆளுங்கட்சியை கேட்டுக்கொண்டார். இந்திய ஜனநாயகம் அதுவரையில் இப்படியொரு முதிர்ச்சியான நாகரிக அரசியல்வாதியை கண்டதில்லை.  அறிஞர் அண்ணா தன்னுடைய கட்சி உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் எப்படி நாகரிகமாக நடந்துகொள்வது என்று வரையறுத்தார்.  வெறும் 15 சீட்டுகளே கொண்ட திமுக தனது முதல் சட்டமன்ற காலத்திலேயே எத்தகைய ஜனநாயக முதிர்ச்சிக்கு தன்னை தகுதிப்படுத்திக்கொண்டது என்பது இன்றளவும் ஒரு ஆச்சரியம் தான். அதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா.

1962 பொதுத்தேர்தல். காமராஜருக்கு ஆதரவாக களமிறங்கிய பெரியார், தேர்தல் மேடைகளில் திமுகவை கடுமையாக வறுத்தெடுக்க ஆரம்பித்தார். திமுகவினர்க்கோ அப்போது தர்மசங்கடமான நிலை. காலமெல்லாம் யாரை தலைவர் என்று அண்ணா சொல்லி வந்தாரோ அந்த தலைவர் இன்று தங்களுக்கெதிராக பிரச்சாரம் செய்கிறார். ஆனால் எந்த திமுகவினரும் பெரியாரை குறை சொல்லி பேசவில்லை. காரணம் அண்ணா. இப்படிப்பட்ட நாகரிக அரசியலில் தேர்ந்தவர் அண்ணா. 1963ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுகிறார். இன்றளவும் அதற்காக தமிழ் தேசிய ஆர்வலர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். ஆனால் ஜனநாயகத்தின் மூலமே எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்த அண்ணா அடுத்த நான்கே வருடங்களில் அதனை நிரூபித்துக்காட்டினார்.  1967 ல் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகிறார் இல்லை மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது. மாநில சுயாட்சி வலியுறுத்தப்பட்டது.

ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா சொன்ன வாசகங்கள் ஜனநாயக ஏட்டில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டவை. "ஆட்சிகள் மாறலாம், கட்சிகளும் மாறலாம்,  ஆனால் அரசாங்கம் நிலையானது" என்றார் . அரசியலில் தங்கள் எதிரி என்றாலும் காமராஜரை "குணாளா குலக்கொழுந்தே" என்றழைத்தவர அண்ணா.  நேரு விற்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய இயக்கம் தான் திமுக. ஆனால் தனிப்பட்ட முறையில் நேருவை குறிப்பிடும்போது "அவரோ கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் நாங்கள் கொட்டிக்கிடக்கும் செங்கல்" என்றார் அண்ணா. எத்தகைய நாகரிகம் பாருங்கள். அறிஞர் அண்ணாவின் அரசியல் நாகரிகம் இன்றைய அரசியலில் பயிலப்படவேண்டிய பாலபாடம்.

Monday, 14 September 2015

பேஸ்புக் மந்தைகள்..

"சுந்தர் பிச்சை என்னைப்போலவே  கடின உழைப்பால் தான் முன்னுக்கு வந்துள்ளார்- கருணாநிதி

# பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு அதை புடுங்கித்தின்னுச்சாம் அனுமாரு"

இப்படி ஒரு ஸ்டேட்டஸை என் ப்ரென்ட் லிஸ்ட்டில் இருக்கிற ஒருவர் நேற்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு இந்த விநாடி வரை 70 லைக்குகள் கிடைத்துள்ளன.

அந்த பதிவில் இன்னொரு பிரபலமான பதிவர் வந்து, "சுந்தர் பிச்சைக்கும் பெருமாள் பிச்சைக்கும் வித்தியாசம் தெரியாத ஆளு கருணாநிதி" என்று கமென்ட் போடுகிறார். கமென்ட் போட்டுவிட்டு நேராக தன்னுடைய சுவரில் இதே மேட்டரை,

"சுந்தர் பிச்சை என்னைப்போலவே கடின உழைப்பால் தான் முன்னுக்கு வந்துள்ளார்- கருணாநிதி

# அவர் காசு கொடுத்து ப்ளைட் டிக்கெட் வாங்கி பறந்தவர் உங்கள போல டிக்கெட் இல்லாம  ரயில் ஏறினவர் இல்லை"

என்று ஒரு போஸ்ட் போடுகிறார். அவர் பிரபலமான பதிவர் என்பதால், அவருடைய இந்த பதிவுக்கு சுமார் 200 லைக்குகள் கிடைக்கின்றன.

முதலில் இதை பதிவிட்டிருந்தார் இல்லையா என் நட்பு பட்டியலில் இருப்பவர், அவருடைய அந்த பதிவில் சென்று "கலைஞர் கருணாநிதி இதுபோல எப்போது சொன்னார்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர் "ஏன் அவர் சொன்னாதான் நம்புவீர்களா அவர் கடின உழைப்பாளி என்று?" என்று திருப்பிக்கேட்டார்.  நான், "கலைஞர் கடின உழைப்பாளியா இல்லையா என்பதல்ல என் கேள்வி. அவர்  எப்போது இதை சொன்னார் என்பது மட்டுமே" என்றேன்.

"எல்லார் டைம்லைன்லேயும் ஓடிட்டிருக்கு. கண்டிப்பா அவர் கடின உழைப்பாளி தான்" என்றார். அதாவது நான் கலைஞர் அபிமானி என்பதால் அவர் கடின உழைப்பாளி என்பதை எனக்கு அடிக்கடி சொல்கிறார். அதுவே, முதலில் சொன்ன கமென்ட் போட்ட அந்த பிரபல பதிவருக்கு அவருடைய ரிப்ளை கமென்ட்: "அந்தாளு லூசுகூ.... மச்சி" என்பதே.
திரும்பவும் நான் விடாப்பிடியாக, "அப்ப மற்றவர்கள் டைம்லைன் பார்த்துத்தான் போட்டீர்களா உங்களுக்கு உண்மையிலேயே கலைஞர் இப்படி சொன்னார் என்று தெரியாதா?" என்றேன். "இல்லை சொல்லியிருப்பார். சொல்லாம  எப்படி வரும்? டிவியில சொல்லியிருப்பார்" என்றார். நான் , "கலைஞர் கருணாநிதி பேசுவது எழுதுவது சொல்வது எல்லாமே உடனுக்குடனே ஆவணப்படுத்தப்படுகிறது. அப்படி என்றால் இது கண்டிப்பாக இது ஏதாவதொரு செய்தி வடிவில் இருக்கும். அதை கண்டு பிடித்து தாருங்கள்" என்றேன். "கண்டுபிடிக்கிறேன் " என்று நேற்று மாலை கூறினார். இப்போதுவரை அவரால் முடியவில்லை. இனியும் முடியாது. ஏனென்றால் கலைஞர் அப்படியொரு வாசகங்களை சொல்லவே இல்லை என்பதே நிஜம்.

இது ஒருபுறமிருக்க, "சுந்தர் பிச்சை என்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்" என்று கருணாநிதி ட்விட்டரில் டிவீட் செய்த்து போல ஒரு ஸ்கிரீன் ஷாட் நேற்று உலா வந்த்து. ஆனால் கலைஞர் அதுபோல எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

கருணாநிதி இப்படி சொன்னதாக ஸ்டேட்டஸ் போட்ட என் நண்பர், தானாக தன் கற்பனையில் இப்படி எழுதினாரா இல்லை மற்றவர்கள் போடுவதை பார்த்து எழுதினாரா என்பது அவர் மனசாட்சிக்குத்தான் தெரியும். எனக்குத்தெரியவில்லை. ஆனால் பேஸ்புக்கில் இந்த கேவலமான போக்கு அதிகரித்துள்ளது. இது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை கொஞ்சம் விளக்குகிறேன்.

1. அப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு யாரோ ஒருத்தர் சொன்னது போல இவர்களாகவே போலியாக ஒரு ஸ்டேட்மென்ட்டை உருவாக்கவேண்டியது. அதற்கு கவுன்ட்டர் கொடுக்கும் இன்னொரு வாசகங்களை அதனோடு இணைப்பது. பிறகு அது ஒரு முழு ஸ்டேட்டஸாக மாறி விடும். அந்த ஸ்டேட்டஸை பார்த்துவிட்டு அதே போல இன்னும் ஒரு பத்து பேர் போடவேண்டியது.

உதாரணமாக இன்று வாலு படம் ரிலீசாகியுள்ளது. இதைவைத்து கற்பனையாக ஒரு ஸ்டேட்டஸை உருவாக்க முடியும்.

"வாலு  படத்தை உயிரை கொடுத்து ரிலீஸ் செய்துள்ளோம்- டி ராஜேந்தர்

# படத்தை பார்த்துட்டு எத்தனை பேர் உயிரை வுடப்போறானோ.."

இந்த ஸ்டேட்டசை பார்த்துவிட்டு இதில் முதல்பாதியை மட்டும் அப்படியே பயன்படுத்தி இதே போல கற்பனையாக நிறைய ஸ்டேட்டஸ்களை உருவாக்கலாம். டி ராஜேந்தர் உண்மையில் அப்படி சொன்னாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள யாரும் அக்கறை காட்டுவதில்லை என்பதே இந்த ஸ்டேட்டஸ்கள் வெற்றி பெறுவதில் உள்ள ரகசியம்.

2. ஒரு பிரபலமானவர் சொன்னவற்றில் ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு அவரை கலாய்த்து ஸ்டேட்ஸ் போடுவது.

உதாரணம்: விஜயகாந்த், "மது பாட்டில்களில் குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதியிருக்கிறது. இவ்வளவு கேடு தரும் பொருளை ஏன் அரசாங்கம் விற்க வேண்டும்?" என்று சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இதிலிருந்து ஒரு காமெடி ஸ்டேட்டசை உருவாக்கலாம்.

"மது பாட்டில்களில் மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று எழுதியுள்ளது- கேப்டன்

- கேப்டன் இன்னைக்குத்தான் கண்ணாடி கழட்டாம சரக்கடிச்சார் போல "

இது ஒரு ஸ்டேட்டஸ்.

"அட டா,யாருக்கும் தெரியாத விஷயத்த கேப்டன் கண்டுபிடிச்சுட்டார்யா" என்று இன்னொரு ஸ்டேட்டஸ் போடலாம்.

இதையே வால் பிடித்தாற்போல follow செய்ய இங்கே நிறைய ஆட்டுமந்தைக்கூட்டம் உள்ளது. இந்த மந்தைக்கூட்டங்களுக்கு , செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை எதைப்பற்றியும் அக்கறையில்லை. ஒரு தெருவில் நாய் குரைத்தால், என்ன ஏதுவென்றே தெரியாமல் எல்லா தெருவிலும் உள்ள நாய்கள் குரைப்பது போல, அவன் போட்டுட்டான் அதையே நாமும் போடனும், லைக்ஸ் வாங்கனும் என்பதே இந்த மந்தைக்கூட்டத்தின் அடிப்படை விதி.

ஒரு சாதாரண common man க்கு இருக்கிற common sense கூட இந்த மந்தைக்கூட்டத்துக்கு கிடையாது என்பது இந்த மந்தை விதிகள் வெற்றிபெற முக்கிய காரணம்.

உடலரசியல்

முதல்வர் மற்றும் பிரதமர் இடையேயான சந்திப்பைப்பற்றி காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவருடைய உருவ பொம்மைகள் ஆங்காங்கே எரிக்கப்பட்டு வருகிற நிகழ்வை பார்க்கிறோம். அதிமுகவினர் தங்களது கடுமையான எதிர்ப்பைத்தெரிவிக்கிறார்கள். இந்த இடத்தில் ஒரு இயல்பான கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இளங்கோவன், மோடி மற்றும் ஜெ இருவர் குறித்தும் பேசியிருக்கிறார். ஆனால் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை காட்டுவதைப்போல பாஜகவினர் செயல்படவில்லை. ஏன்...? ரொம்ப சிம்பிளான விஷயம், மோடி ஒரு ஆண், ஜெ ஒரு பெண். ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சித்தலைவராக இருந்துகொண்டு இளங்கோவன் இப்படி பேசியிருக்கிறாரே என்ற ஆதங்கம் வருகிறதே தவிர இளங்கோவன் என்கிற ஒரு தனி ஆண் இப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை.

இளங்கோவன் அப்படி பேசிவிட்டார் என்று கொதிப்படைகிற எத்தனை ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் பெண்களை அப்படி பார்த்தும் பேசியும் இராதவர்கள்...? நாம் போற்றியும் பாதுகாத்தும் வருகிற கலாச்சாரங்கள் அத்தனையுமே பெண்களின் உடலின் மீது எழுதப்பட்டவை. விரகதாபத்துடன் உள்ள ஆண் என்று சொடுக்கி இணையத்தில் தேடிப்பார்த்தால் எதுவுமே கிடைக்காது. இதுவே விரகதாபம் உள்ள பெண் என்றால் கதைகள் வந்து கொட்டும்.

அரசியலில் பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்டாமலிருப்பதற்கு காரணம் இந்த உடற்சார்ந்த தாக்குதல்கள் தான். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களைப்பற்றிய விமர்சனம் வேறு. ஆனால் திவ்யா என்ற நடிகை அரசியலுக்கு வந்து எம்பியாகும்போது மட்டும் அவரை "குத்து" ரம்யா என்று எகத்தாளத்துடன் அழைப்பவர்கள் தானே நாம்? இத்தனைக்கும் அவர் எஸ் எம் கிருஷ்ணா என்கிற சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவரின் பேத்தி. அவருக்கே அந்த நிலைமை. எத்தனையோ ஆண் அரசியல்வாதிகள் சிறைக்கு செல்கிறார்கள். ஆனால் கனிமொழி சென்றபோது மட்டும் "திகாரில் கனிமொழிக்கு முதலிரவு" என்று வெளிவந்த செய்தியை லைக்கிட்டும் ஷேர் செய்தும் மகிழ்ந்தவர்கள்  நாம். குஷ்பு வையும் விஜயதாரிணி எம்எல்ஏ வையும் பேசாத ஆபாச பேச்சுகளா...?

இளங்கோவன் பேசியிருப்பது  மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள தமிழகத்தின் முதல்வர்.  மேலே சொன்ன பெண்கள் கூட பெரும் செல்வாக்கு உடையவர்கள் தான். இவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்முடைய சாதாரண பெண்களின் நிலைமையை நினைத்துப்பாருங்கள். அவர்களுக்காவது போராட இத்தனை பேர் இருக்கிறார்கள். ஆனால் சாமானிய பெண்களுக்கு...? 

அலுவலகத்தில் பணி புரியும் ஒரு ஆண் நட்பு ரீதியாக உடன் பணிபுரியும் ஒரு பெண்ணை பைக்கில்  ஏற்றி சென்றால் அது அந்த ஆண் குடும்பத்தில் ஒரு கௌரவ குறைச்சலாக பார்க்கப்படாது. அதுவே அந்த பெண் குடும்பத்திற்கு அதுவொரு கௌரவ குறைச்சல். பொதுவாக இந்த மாதிரி எழுதும்போது , "உன் வீட்டு பெண்கள் வேறு ஆண்களுடன் பைக்கில்  சென்றால் உனக்கு எப்படியிருக்கும்?" என்ற வழக்கமான டெம்ப்ளேட் கேள்வி வருமென்று எனக்குத்தெரியும். அதனால் நானாகவே அந்த கேள்வியை இங்கு வைத்துவிடுகிறேன். பாவம் அவர்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம்.

பெண்களுக்காக பரிந்து பேசி பெரிய யோக்கிய  சிகாமணியாக என்னை காட்டிக்கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எந்த காரணங்களுமேயன்றி ஒரு பெண்ணை அவள் உடல் சார்ந்து கமென்ட் செய்கிற பழக்கம் 90 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.  நான் அதுபோன்று பேசிய சந்தர்ப்பங்களை இப்போது நினைத்துப்பார்த்து வெட்கப்படுகிறேன். அதுவே தங்கள் வீட்டு பெண்கள் என்று வரும்போது மட்டும், தன் அம்மா ஒரு பத்தினி தெய்வம், மனைவி உத்தமி, மகள் கற்பு பிறழாதவள்.  பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் ஒரு சிக்கலை எதிர்கொள்வார். அது கமல்ஹாசனுக்கு மட்டுமான சிக்கலன்று. ஒட்டுமொத்த ஆண்களுக்கான சிக்கல். சுயம்புலிங்கம்,  இரவில் செக்ஸ் படங்களை தனது கேபிள் டிவியில் ஒளிபரப்புவார், அவரும் அதை விரும்பி பார்ப்பார். அதுவே அவருடைய மகளை ஒருத்தன் ரகசியமாக படம் பிடித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. இதுதான் நம் பிரச்சினை.

திருவிளையாடல் படத்தில் சிவபெருமானை பார்த்து பார்வதி வேதனையுடன் சொல்வார்: உலகையே காக்கின்ற மகேஸ்வரன் குடும்பம் முதல் சாதாரண குடும்பம் வரை பெண்களின் நிலைமை ஒன்றுதான் போல. அதையேதான் இப்போது கொஞ்சம் மாற்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாட்டையே ஆளுகின்ற பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு சாமானிய பெண்ணாக இருந்தாலும் சரி, ஆண்களின் பார்வை ஒன்றுதான் போல.

இன்று முதல்வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருப்பது தவறுதான். ஆனால், அதற்காக கொதிக்கிற நம்மில் பலர் அதைவிட கொடுமைகளை நம் வாழ்வில் பல்வேறு பெண்களுக்கு இழைத்துவருகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இளங்கோவனை கண்டிப்போம் ஆனால் எங்கள் தவறுகளை உணரமாட்டோம் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு அவரை விமர்சிக்க என்ன யோக்யதை இருக்கிறது சொல்லுங்கள்...? மகாத்மா காந்தி சொன்னது போல, எந்த மாற்றத்தை காண விரும்புகிறோமோ அந்த மாற்றத்தை முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பிப்போம்...!

Sunday, 13 September 2015

ஹிந்தி எனும் மாயை

தமிழ்நாட்டில் ஒரு ஏழைக்குழந்தையால் இந்தி படிக்க முடியுமா? வசதி படைத்த பிள்ளைகள் வேண்டுமானால் தனியார் பள்ளிகளில் காசு கொடுத்து படிக்கமுடியும் என்ற அங்கலாய்ப்பை பல நேரங்களில் நான் கேட்டிருக்கிறேன்.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இந்தி படிப்பதே ஒரு வித மாயை  தான். எனக்குத்தெரிந்தே நிறைய பெற்றோர்கள் ஆங்கில வழிப்பாடத்தில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். Language 2 என்று வரும்போது இந்தியை தேர்வு செய்கிறார்கள். இதற்கு அவர்கள் தருகிற விளக்கம் என்னவென்றால், ஆங்கில வழியில் படிப்பதால் ஆங்கிலம் அத்துப்படி ஆகிவிடுகிறது. அதுபோக தமிழ் ஒன்றும் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்ளவேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இருக்கிறோம், வீடு மற்றும் பொது இடங்களில் தமிழ் பேசுவதை வைத்தே தமிழை பேசிவிட முடியும். ஆகவே அதற்கு சிரத்தை எடுக்கவேண்டாம் என்பது அவர்கள் எண்ணம். தமிழ் இடத்தில் இந்தியை வைத்தால் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடிகிறது. போட்டிகள் நிறைந்த இந்த வியாபார உலகில் அது நாளை ஒருவேளை பயன்படலாம் என்கிறார்கள்.

பெற்றோர்களின் இந்த நியாயமான(!) ஆசையில் என்ன தவறு என்று தோன்றலாம்.  தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படிக்காவிட்டால் எப்படி என்று  நரம்புகளை புடைக்காமல் ஆற அமர இதை அணுகலாம்.  இந்தியை கூடுதல் பாடமாக எடுத்துப்படிக்கும் மாணவர்கள் உண்மையிலேயே இந்தி பேசுகிறார்களா என்றால் கிடையாது. எப்படி நாம் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் மொழியில் படித்தவர்கள் ஆங்கிலம் பேச வரவில்லையோ அதுபோலவே ஆங்கில வழியில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பவர்களாலும் இந்தியை பேச வராது. எனக்குத்தெரிந்த ஒருத்தர் ஆறாம் வகுப்பிலிருந்து இந்தியை ஒரு பாடமாக படித்தார். வழக்கம்போல அவருக்கு இந்தி பேச வராது. அதே நபர் மேல் படிப்புக்காக பூனே சென்று ஒரு வருடம் படித்துவிட்டு வந்தார். இங்கு வந்தவுடன் அவர் சரளமாக இந்தி பேசுகிறார், மராத்தியையும் தன்னால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் என்கிறார். ஏழு வருடங்களாக படித்தும் பேச வராத இந்தி ஒரே வருடத்தில் வந்துவிட்டது. என்னுடைய மாமனார் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். அவருக்கு ஆங்கிலம் பேச வராது. ஆனால் இந்தியில் சரளமாக பேசுவார். எப்படி என்றால் டெல்லியில் ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறார் அதுவும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு. இங்கு வந்து வட இந்தியர்களுடன் அவ்வப்போது பேசி டச் விடாமல் வைத்திருக்கிறார். ஆக தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பதால் ஒருத்தர் இந்தி பேசிவிடமுடியாது.

சரி பேச முடியாவிட்டால் என்ன எழுத முடிகிறதல்லவா,  எழுத்துகளை படிக்கமுடிகிறதல்லவா என்று கேட்கலாம். சரி அதன் அவசியம் தான் என்ன?  தமிழ்நாட்டில் தமிழ் மொழியை எழுத படிக்கத்தெரியாமலேயே நம்மால் சர்வைவ் பண்ண முடியும் என்று நினைத்துத்தானே இந்தியை தேர்வு செய்கிறார்கள்? தமிழ் எழுத படிக்கத்தெரியாமலே இவர்களால் சர்வைவ் ஆக முடியுமென்றால் இந்தி எழுத படிக்க தெரியாமல் முடியாதா? 

அலுவலகங்களில் இந்தி மொழி எழுத படிக்க அறிந்திருப்பதால் எந்த பயனாவது இருக்கிறதென்றால் அதுவும் இல்லை. எனக்குத்தெரிந்து எந்த தனியார் அலுவலகங்களிலும் தங்களது ஈமெயில், கடிதப்போக்குவரத்து, அப்பாயின்மென்ட் ஆர்டர் உள்ளிட்ட எந்த தொடர்புக்கும் ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியிலோ அல்லது தமிழ் மொழியிலோ இதுவரை ஒரு ஈமெயில் கூட நான் பார்த்ததில்லை. எல்லாமே ஆங்கிலத்தில் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டது. டெல்லியில் உள்ள கிளையில் தங்களுக்குள் இந்தியில் பேசுவார்கள். சென்னையில் நாங்கள் தமிழில் பேசிக்கொள்வோம். ஆனால் Official communication என்று வரும்போது ஆங்கிலம் தான்.

இல்லை பணி நிமித்தமாக தமிழ்நாடு தாண்டி வட மாநிலங்களுக்கு சென்றால் இந்தி அவசியம் என்று சொன்னால், பள்ளிப்படிப்பையே சரியாக படித்திராதவர்களே தங்கள் வேலையின் பொருட்டு ஒரு மொழியை கற்றுக்கொள்கிறார்கள் என்றால் நன்றாக படித்த இவர்களால் முடியாதா? இங்கிருந்து அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்கிறவர்கள் போகும்போதே அரபி கற்றுக்கொண்டா செல்கிறார்கள்? இல்லை வட மாநிலங்களில் இருந்து இங்கு முதலாளிகளாக வருகிற மார்வாடிகள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை வரும்போதே தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்களா?

ஆங்கில வழிப்பள்ளிகளில் கூட இந்தியை யாரும் படிக்கக்கூடாது என்று சொல்வதல்ல என் நோக்கம். ஆனால் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை படிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தனக்கு இந்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்று அங்கலாய்க்கிறார் நம்முடைய பிரதமர். ஒன்றும் ஆகியிருக்காது. டீ விற்கும்போதே அவரால் இந்தியை கற்றுக்கொள்ள முடிந்தது என்றால் மற்றவர்களால் முடியாதா? அவசியம் ஏற்பட்டால் யாராக இருந்தாலும் கற்றுக்கொள்வார்கள் என் மாமனாரை போல.

ஆனால் அந்த அவசியம் இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்படவில்லை. இந்தி தெரியாமலேயே எல்லாத்துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. அதற்காக அந்த அவசியத்தை வலியத்திணிக்கலாமா? அதைத்தான் நம்முடைய நடுவணரசு இப்போது செய்கிறது.  இல்லையே இப்போது ஒன்றும் இந்தி திணிப்பு இல்லையே,  தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக படிக்கத்தேவையில்லையே என்று கேட்கலாம். நேரடித்திணிப்பு வேறு மறைமுகத்திணிப்பு வேறு. மத்திய அரசு பணித்தேர்வுகளை இந்தி மயமாக்குவது உள்ளிட்ட இந்தி திணிப்புகளை கையிலெடுக்கிறது.  பிறந்ததிலிருந்தே இந்தியில் புழங்கிய ஒருவரோடு இந்தியை ஒரு பாடமாக மட்டும்  எடுத்து படித்தவர்  இந்தி தேர்வுகளில் போட்டியிட்டால் என்னவாகும்? இது இந்தி பேசாத மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியல்லவா?  இதைத்தான் நாம் தடுத்தாகவேண்டும். இந்தியா எனும் நாடு துண்டாடப்படாமல் இருக்கவேண்டுமென்றால் அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்கவேண்டும். எல்லாவற்றையும் ஆட்சி மொழிகளாக்கவேண்டும். எப்படி மொழியைத்திணித்து பாகிஸ்தான் இரண்டு நாடுகளானதோ இந்தியாவும் பல நாடுகளாக மாறிவிட வாய்ப்புண்டு. வேடிக்கை என்னவென்றால் இந்தியை திணித்து இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பவர்கள் தங்களை தேச பக்தர்கள் எனவும்,  இந்தி திணிப்பை எதிர்த்து  நாட்டை பிளவுபடாமல் காக்க நினைப்பவர்களை பிரிவினைவாதிகள் என்றும் சொல்கிறார்கள்.  உங்களுக்கு எதுவேண்டும்?
ஒரு நாடு பல மொழிகளா அல்லது ஒரே நாடு ஒரே மொழியா?

#StopHindiImperialism