"சுத்தமான காற்று, சுவையான குடிநீர், மாசு இல்லா அமைதியான சூழல் என நம் கிராமத்து வாழ்க்கையை இழந்துவிட்டு பணத்துக்காக நகரங்களில் இயந்திரத்தனமாக வாழ்கிறோம். நம் உண்மையான சந்தோஷத்தை இழந்துவிட்டோம் தெரியுமா? "
இதுபோன்ற பாணியில் வருகிற வாட்சப் பார்வர்டு மெசேஜ்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும்.
நகரங்களில் நல்ல வசதியாக வாழ தொடங்கியவுடன் நிறைய பேருக்கு குற்றவுணர்ச்சி ஏற்படும் போல. அதனால் தான் ஆன்மிகம், ஆர்கானிக், யோகா, என்றெல்லாம் மனதை அலைபாயவிடுகிறார்கள்.
நான் கிராமம் சிறிய ஊர் இரண்டிலுமே வசித்திருக்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். சென்னை வாழ்க்கை தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தரமான வாழ்க்கையையும் தந்துள்ளது.
கிராமங்களில் சுவையான தண்ணீர் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லமுடியாது. எங்கள் ஊரில் தண்ணீர் வீட்டுக்கு வராது. எங்க வீட்டில் நான் தான் சைக்கிளில் குடத்தை கட்டிக்கொண்டு போய் குடிக்க தண்ணீர் கொண்டு வருவேன். செம கடுப்பா இருக்கும். நல்ல மழைக்காலத்தில் மழை நிற்கும் வரை வெளியே கக்கூசு போகாமல் அடக்கி இருக்கவேண்டும். இதோ இன்று சென்னையில் என் பெட்ரூமிலேயே அட்டாச்டு பாத்ரூம் வசதி இருக்கிறது.
நான் கிராமத்திலேயே இருந்திருந்தால் சாதி மாறி காதல் கல்யாணம் செய்திருப்பேனா என்று உறுதியாக சொல்லமுடியாது. ஊர்ல ஒரு பொண்ணு பையன் தனியா பேசுறத எவனாவது பார்த்தா போதும் அதையே ஊர் பூரா பேசி சாவடிப்பாங்க. வீட்டு ஓடு உடைசலா இருக்கும். அத மாத்தறதுக்கு காசு இருக்காது. ஆனா பேசும்போது, "நம்ம சாதி நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்குப்பா, அதுக்கு ஏத்தா போல நடந்துக்கப்பா " என பெருசுங்க மொக்கை போடுங்க.
நான் சென்னையில் இருப்பதால் கல்யாணத்திற்கு பிறகு என் மனைவியின் பெற்றோரோடு அவர்கள் வீட்டில் சேர்ந்து வசிக்கிறேன். எனக்கு பின்னாடி பேசுகிறார்களா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு நேராக யாரும் எதுவும் பேச முடியாது. ஊர்ல இருந்தா, "ஏம்பா ஆம்பளன்னா ஒரு இது இல்லையா, இப்படித்தான் மாமியார் ஊட்ல போய் இருக்கறதா மரியாதை தான்பா முக்கியம் " என மூஞ்சிக்கு நேரா அட்வைஸ் பண்ணி சாவடிப்பாங்க.
எனக்கு இந்த நகரத்து வாழ்க்கை தான் பிடிக்கிறது. ஆண்களும் பெண்களும் சரிசமமாக உழைக்கிறார்கள். பெண்கள் தனியாக வண்டி ஓட்டிக்கொண்டு செல்கிறார்கள். ஆண்களும் பெண்களும் சுதந்திரமாக உணர்கிறார்கள்.
எனவே வாட்சப் மெசேஜ், சினிமா இதெல்லாம் பார்த்து கிராமத்து வாழ்க்கையை தொலைத்துவிட்டோமே என பீல் செய்யவேண்டாம். நகரத்தில் இருக்கிறோமே என குற்றவுணர்ச்சிக்கு ஆளாகவேண்டாம். இங்கே நீங்கள் சொகுசாக உள்ளீர்கள். இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்களில் சுற்றுலா போல ஒருநாள் ரெண்டு நாள் தான் நம்மால் இருக்கமுடியும். மூணாவது நாள் செம கடுப்பாயிரும்..! பீல் பண்ணாம இருக்கற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்..!
No comments:
Post a Comment