Thursday, 30 June 2016

திராவிட இயக்கம் பிராமணர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதா?

கேள்வி : திராவிட இயக்கம் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை கையாள்கிறதா?  பிராமணர்களுக்கு அச்சுறுத்தலாக அது விளங்குகிறதா?

இதற்கு பதில் சொல்லும் முன்பாக சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன்.

ஆர்எஸ்எஸ் மற்றும் திராவிட இயக்கம் ஆகிய இரண்டுமே 1920களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டவை.  ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய ஹிந்துத்வா சித்தாந்தத்தை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்டது.  திராவிட இயக்கம் சமூகநீதி,  மேட்டிமை இனவாத எதிர்ப்பு,  பகுத்தறிவு கொள்கைகளை மையமாக வைத்து தொடங்கப்பட்டது. 

ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே இந்த இரண்டு இயக்கங்களுமே மிகத்தீவிரமாக வளர ஆரம்பித்தன.  இந்திய அரசியலில் இவை இரண்டுமே முக்கியப்பங்காற்றின. ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்னுடைய வரலாற்றில் சிலபல தடவை அதனுடைய தீவிரவாத செயல்களுக்காக தடை செய்யப்பட்டது.  மகாத்மா காந்தி கொலையைத் தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் கூட ஒருமுறை ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தார்.  திராவிட இயக்க வரலாற்றில் வன்முறைச் செயல்களுக்காக ஒருமுறை கூட அது தடைசெய்யப்பட்டது கிடையாது.  இந்த இரண்டு இயக்கங்களுமே மாநில ஆட்சியை கைப்பற்றின.  ஆர்எஸ்எஸ் வடமாநிலங்களிலும் திராவிட கட்சிகள் தமிழகத்திலும் ஆட்சியை கைப்பற்றின.  திராவிட கட்சிகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக ஐம்பது வருடங்களாக ஆட்சி செய்துவருகின்றன.  

திராவிட இயக்கம் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை கையாண்டிருந்தால் ,  ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் வலுவாகவுள்ள குஜராத்தில் 3000 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டதைப் போல இங்கே தமிழகத்திலும் நடந்திருக்கும் அல்லவா?  ஏன் அதுபோல நடக்கவில்லை?  ஏனென்றால் திராவிட இயக்கம் மதவாத,  சாதியவாத,  இனவாத அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதல்ல.  மாறாக பகுத்தறிவும் சமூகநீதியுமே அதன் அடிப்படை .  அதனால் தான் ஒரு பிராமணப் பெண்மணியின் தலைமையைக் கூட ஒரு திராவிடக் கட்சியால் ஏற்று செயல்பட முடிகிறது.  அதுவே ஆர்எஸ்எஸ் தலைமைப் பதவிக்கு ஒரு பிராமணரைத் தவிர மற்றவர்களால் ஏன் வரமுடியவில்லை என்ற கேள்வியை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். 

ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வா வலதுசாரிகள் இடப்பங்கீட்டுக்கு எதிரானவர்கள். ஆனால் திராவிட இயக்கம் பிராமணர்கள் உள்பட அனைவருக்குமான இட ஒதுக்கீட்டைத்தான் இன்றளவும் வலியுறுத்துகிறது.  உங்கள் மனசாட்சிப்படி பதில் சொல்லுங்கள் : நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதைக்கூட முடிவு செய்து அதிகாரம் செய்ய நினைப்பவர்கள் யார்?  திராவிட இயக்கமா ஆர்எஸ்எஸ் இந்துத்துவர்களா?? 

ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ தலைவர்கள் தினந்தோறும் முஸ்லீம்களுக்கும் தலித்களுக்கும் எதிரான பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்கள்.  அதுபோல திராவிட கட்சிகளின் தலைவர்கள் யாராவது பிராமணர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுப்பதை நீங்கள் கேட்டதுண்டா?  தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு பற்றி நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.  அப்படியிருந்தும் எஸ் வீ சேகர் என்ற பிராமணர்  "ஈ வெ ராமசாமி ஒருநாளும் குளிக்கமாட்டார் " என்ற வசனத்தை திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நாடகம் ஒன்றிலேயே பயன்படுத்தினார்.   தமிழகத்தின் ஒரு திராவிட கட்சித்தலைவரை பார்த்து எச்.  ராஜா என்கிற பார்ப்பனர் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்.  திராவிட இயக்கத்தின் பிதாமகரான பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றார்.  ஐம்பதாண்டுகாலமாக இந்த மண்ணை ஆள்கிற சர்வ வல்லமை படைத்த திராவிட கட்சிகள் அவருக்கெதிராக எந்த வன்முறையாவது கையிலெடுத்தனவா?  திராவிட இயக்கமோ கட்சிகளோ ஒருநாளும் வன்முறையை கையிலெடுப்பதில்லை.  இன்னும் சொல்லப்போனால் எஸ் வீ சேகர் அதிமுகவிலிருந்து வெளியேறிய போது கருணாநிதியிடம் நெருக்கம் காட்டினார்.  அப்போது அவரே தான் திமுகவில் பிராமணர்களுக்கும் முக்கிய பதவிகள் கிடைக்கும் என்று பேட்டி தந்தார் .

இதெல்லாம் பிராமணர்களுக்கு எதிரான மிரட்டலாக படுகிறதா?  ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காகவே படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  அதுபோல எப்போதாவது பிராமணர் என்ற சாதிக்காக ஒருத்தர் கொலை செய்யப்பட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?  அக்லக் என்ற முதியவர் தனக்கு விருப்பமான உணவை சாப்பிட்டார் என்ற காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டாரே அதுபோல எந்த பிராமணராவது அவருக்கு பிடித்த உணவை உண்டார் என்ற காரணத்துக்காக கொலை செய்யப்பட்டதுண்டா சொல்லுங்கள்? 

ஆர்எஸ்எஸ் ஹிந்துத்வ அமைப்புகள் கோயில் கருவறையில் பிராமணர்களைத் தவிர வேறு எவரும் நுழையக்கூடாது என்பதில் இன்றளவும் உறுதியாக உள்ளது . திராவிட இயக்கம் என்ன சொல்கிறது?  அனைத்து சாதியினரும் கருவறைக்குள் நுழையவேண்டும் என்று தானே பாடுபடுகிறது?

இதெல்லாம் தெரிந்தும் நீங்கள் இல்லை திராவிட இயக்கம் பார்ப்பனர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சொல்வீர்களேயானால்,  திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய கொடையான உங்கள் சாதிப்பெயரை பேருக்கு பின்னால் போட்டுக்கொள்ள முடியாத கோபம் உங்களுக்கு இருக்கிறது என்றே அர்த்தம் . அடுத்த சாதியை சேர்ந்தவன் உங்களைப்போல படித்து முன்னுக்கு வருவதையும் உங்களுக்கு சரிசமமாக அமர்வதையும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றே அர்த்தம். 

நீங்கள் ஒருவேளை மோடி ஆதரவாளராக கூட இருக்கக்கூடும் . ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் , மோடி யால் பிரதமராக முடிந்தது என்றால் அதற்கு காரணம் அண்ணல் அம்பேத்கார்,  பண்டித நேரு . யார் வேண்டுமானாலும் பிரதமராக முடியும் என்ற அவர் தந்த அரசியலமைப்பு சட்டம்.  நேரு வார்த்தெடுத்த ஜனநாயகம்.  ஆனால் இந்திய நாட்டுக்கே பிரதமராக முடிந்த மோடியால் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் தலைவராக முடியாது . ஏனென்றால் மோடி நாட்டுக்கு வேண்டுமானால் தலைவராக இருக்கமுடியுமே தவிர மனு தர்ம வர்ணாசிரம அடுக்குப்படி அவர் பிராமணருக்குக் கீழே தான்! 

இதன்பிறகும் பிராமணர்களுக்கு திராவிட இயக்கத்தால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??

© Thameem Tantra
தமிழில் சுருக்கமாக Sivasankaran Saravanan

Tuesday, 14 June 2016

ஈழ ஆதரவும் ஈழ வியாபாரிகளும்

// திமுகவில் இருக்கும் ஈழ ஆதரவாளர்களையும் தமிழ் உணர்வாளர்களையும் இணையத்தில் எழுதும் சில திமுகவினரே விலக்கிவிடுவார்கள் // என்று டுபாக்கூர் திடீர் குபீர் ஈழ வியாபாரிகள் இப்போது திடீரென திமுக மீது கரிசனம் காட்டுகிறார்கள். 

ஈழ ஆதரவு என்றால் என்னவென்று தெரியுமா இந்த வியாபாரிகளுக்கு??  இன்று புலிகளை போற்றிக்கொண்டு ஈழத்துக்காக போலிக்கண்ணீர்  வடிக்கிற இந்த வியாபாரிகள் ஈழத்துக்காக ஒரு மயிறையாவது இழந்திருக்கிறார்களா?? 

ஈழத்துக்காக பதவியை இழந்த ஒரே கட்சி திமுக.  ஈழத்துக்காக ஆட்சியையே இழந்த ஒரே கட்சி திமுக தான். (1989 திமுக ஆட்சி ஈழ ஆதரவுக்காகத்தான் கலைக்கப்பட்டது)   தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். 1991 சட்டமன்ற தேர்தல் வருகிறது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்ற நிலை நிலவுகிறது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திருபெரும்புதூரில் வைத்து விடுதலைப்புலிகள் ஏற்பாட்டின் பேரில் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்.  ஒட்டுமொத்த தேர்தல் நிலவரமும் தலைகீழாக மாறுகிறது. திமுக வெறும் இரண்டே இடங்களில் வென்று வரலாற்று படுதோல்வி அடைகிறது. திமுக கட்சிக்காரர்களை தமிழகம் முழுதும் தேடி தேடி அடிக்கிறார்கள்.  புலிகளின் கொடூரத் தாக்குதலில் ராஜீவ் சிந்திய ரத்தத்தைப் போலவே தமிழ்நாட்டில் திமுக தொண்டர்கள் அடிவாங்கி ரத்தம் சிந்தினார்கள்.

வேறு எந்த அரசியல் கட்சியாக இருந்திருந்தால் புலிகள் தங்களுக்கு செய்த கெடுதல்களால் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையே மாற்றிக்கொண்டிருக்கும். ஆனால் திமுக செய்யவில்லை.  ஏனென்றால் திமுகவிற்கு முக்கியம் ஈழ விடுதலை தானே தவிர புலிகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ஆரம்பம் முதலே திமுகவிற்கு புலிகள் மீது பற்றுதல் ஏதும் கிடையாது.  ஆனால் ஈழ ஆதரவு எப்போதும் உண்டு. அதன் காரணமாகவோ என்னவோ திமுக புலிகளுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை,  புலிகள் அத்துணை கெடுதல்கள் புரிந்தகிறகும்.  ஏதோ ஒரு வகையில் ஈழ விடுதலை சாத்தியமானால் சரி என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருந்தது.

தமிழகத்தில் இரண்டு பிரதான கட்சிகள் திமுக அதிமுக . எம்ஜியார் புலிகளை ஆதரித்தார். அவருக்குப் பின் அந்த கட்சியின் முதல்வரான ஜெயலலிதா புலிகள் தலைவர் பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என்று தீர்மானம் இயற்றுகிற அளவுக்கு மிக கடுமையான புலி எதிர்ப்பு நிலையை எடுத்தார். இத்தனைக்கும் அவர் முதன்முறையாக முதலமைச்சராக உதவியர்களே புலிகள் தான்.  ஆனால் கலைஞர் தன்னுடைய உணர்வில் ஊறிப்போன ஈழ ஆதரவு காரணமாக ஈழப் போராட்ட குழுக்கள் எவர்மீதுமே விரோதம் காட்டாமல் தான் இருக்கிறார்.

நிலைமை இப்படியிருக்க,  2005க்கு பிறகு இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே வை தோற்கடித்து ராஜபக்சே ஆட்சிக்கு வருகிறார். ராஜபக்சே எப்படி ஆட்சிக்கு வந்தார்,  அதில் புலிகளின் பங்கு என்ன என்பதை தனியாக ஒரு பதிவாகவே எழுதலாம்.   அதன்பிறகு அமைதி ஒப்பந்தத்தை மீறி புலிகள் போரைத் துவக்குகிறார்கள்.  அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குததலுக்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் ஆயுதக்குழுக்களுக்கு எதிராக கை கோர்த்து நிற்க ஆரம்பித்துவிட்டன.  போரில் இலங்கை ராணுவத்தின் கை ஓங்கத்தொடங்கியவுடனே சண்டையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்திலிருந்து எழ ஆரம்பித்துவிட்டது.  இந்தியாவில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி ஜெயிக்க போகிறது,  அப்படி ஜெயித்தால் தனி ஈழம் அங்கீகரிக்கப்படும் என்று இங்கிருக்கும் டுபாக்கூர் ஆட்களின் பேச்சை கேட்டுக்கொண்டு புலிகள் போரை நிறுத்தாமல் தொடர்ந்து சண்டை இட்டுக்கொண்டே இருந்தனர்.  ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி எனத் தெரிந்தபின்பும் சுமார் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களை  குறுகிய பரப்பளவில் தங்களுக்கு மனிதகேடயமாக பயன்படுத்தி அட்டூழியம் செய்தனர் புலிகள். மனித குல வரலாற்றில் இனி எவருக்குமே நடக்கக்கூடாத இனப்படுகொலை நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சிலபல திடீர் குபீர் ஈழ வியாபாரிகள்  தோன்றினார்கள்.  அதுநாள்வரையில் புலிகளுக்கு நிதியுதவி அளித்துவந்த அயல்நாட்டு ஆட்கள் என்ன செய்வதென்று இருந்த நிலையில் இந்த வியாபாரிகள் அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர்.  எந்த பிரபாகரனை கொண்டுவந்து தூக்கில் போடவேண்டும் என ஜெ சொன்னாரோ,  அதே பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு அதே ஜெ ஜெயிப்பதற்கு வெட்கமே இல்லாமல் வேலை செய்தார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று மனதார பொய் சொன்னார்கள்.  2011 ல் இலையும் மலர்ந்துவிட்ட து.

அப்படியே விட்டால் வெளிநாட்டிலிருந்து வருகிற பணம் நின்றுவிடுமே என்ன செய்வது என்று அவ்வப்போது மெழுகுவர்த்தி ஏந்துவது மற்றும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என அவரவர் தங்கள் வழிகளில் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்தனர்.  பொதுவாக இதுபோல நிதியுதவி செலுத்துகிற ஆட்களில் பாதி பேருக்கு சண்டையை ரசிக்கிற மனநிலை தான் இருக்கும். ஈழத்தில் ரத்தம் பார்த்து முடிச்சாச்சு இனி தமிழ்நாட்டில் ரத்தம் பார்க்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். அதற்கு திமுக அதிமுகவை எதிர்த்தாக வேண்டும். அதிமுகவை எதிர்க்க முடியாது,  அந்தம்மா சொருவி சுண்ணாம்பு தடவிடும். இருக்கவே இருக்கு எவ்ளோ அடிச்சாலும் தாங்குற திமுக என்று திமுகவிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்ய ஆரம்பித்தனர்.  தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முயன்று தோற்றுப்போன இந்துத்வ மதவாத சக்திகள் இந்த முறை தங்களுடைய அடியாளாக இந்த வியாபாரிகளை பயன்படுத்த ஆரம்பித்தன.

இதெல்லாம் தெரிந்துமே கூட திமுகவினர் அமைதியாகத்தான் இருந்தார்கள். இயல்பிலேயே உண்மையான ஈழ ஆதரவாளர்களான திமுகவினர் இனப்படுகொலைக்கு பிறகு மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். தங்களுக்கு இருந்த ஈழப்பற்று காரணமாக 2011 வரை தங்கள் மீது பரப்பப்பட்ட அவதூறுகளை கூட பெரிதுபடுத்தாமல் அமைதி காத்தனர்.  எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனுக்குடனே பதிலடி கொடுப்பது தான் திமுகவினரின் பலமே.  ஆனால் இந்த விஷயத்தில் அவர்களுடைய உணர்வுப்பூர்வமான ஈழ ஆதரவு காரணமாக,  அப்பாவி உயிர்களை மனித கேடயமாக பயன்படுத்திய புலிகளைப் பற்றிக்கூட எதுவும் பேசாமல் இருந்தனர்.

2011 தேர்தலுக்குப் பிறகு 2016 தேர்தலில் மீண்டும் திமுகவிற்கு எதிராக ஈழ வியாபாரிகள் வியாபாரத்தை தூசு தட்ட ஆரம்பித்தனர்.  தேர்தலுக்குத் தேர்தல் வரும் சீசன் ஈழ வியாபாரிகளுக்கு நிதியுதவி தருபவர்கள் பூராவும் புலிகளுக்கு நிதியுதவி தந்தவர்கள் தான். எனவே இந்த வியாபாரிகளும் இனப்படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த புலிகள் அமைப்பை ஆதரித்துக்கொண்டே திமுகவிற்கு எதிராக அவதூறு பரப்பும் செயலை தொடர்ந்து செய்துவந்தனர்.  சாது மிரண்டால் கொள்ளாது என்பதைப்போல தற்போதுதான் திமுகவினர் புலிகளின் உண்மையான முகத்தை தோலுரித்துக்காட்ட  ஆரம்பித்துள்ளனர். புலிகள் ஆதரவு வேறு ,  ஈழத்தமிழர்கள் ஆதரவு வேறு என்பதை தெளிவுபடுத்தத் தொடங்கியுள்ளனர். 

இதுநாள்வரையில் உண்மையான ஈழ உணர்வு காரணமாக என்ன சொன்னாலும் பெரிது படுத்தாமல் புலிகளின் அட்டூழியம் எதைப்பற்றி யும்,  கட்டின மனைவி செய்யும் துரோகத்தை மறைக்க நினைக்கும் கணவனைப் போல  பொதுவெளியில் பேசாத திமுகவினர் இப்போது உண்மைகளை பேச ஆரம்பித்திருப்பது ஈழ வியாபாரிகளுக்கு கலக்கத்தை தர ஆரம்பித்துவிட்டது.  ஈழ ஆதரவோ எதிர்ப்போ இரண்டுமே தமிழ்நாட்டு வாக்கரசியலில் எப்போதுமே வேலைக்காகாது.  எனவே அதைப்பற்றி எந்த அலட்டலும் வியாபாரிகளுக்கு இல்லை.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் இதுநாள்வரையில் தங்கள் வியாபாரம் செழிக்க காரணமாக இருந்த திமுகவினரே இப்போது அதற்கு உலை வைக்க ஆரம்பித்துவிட்டார்களே என்பதுதான் அவர்களுடைய பயம்!

Friday, 3 June 2016

கலைஞருக்கு மூப்பு வருமா?

கலைஞருக்கு ஏன் மூப்பு இல்லை??

மூப்பு என்பது வாழ்க்கையில் ஏற்படுகிற சலிப்பு தான்.  மூப்பு வந்தால் வாழ்க்கையில் சலிப்பு வரும் என்பார் சிலர். அது தவறு. சலிப்பு வந்தால் தான் வாழ்வில் மூப்பு வரும். 

தேர்தல் முடிவுகள் வந்த அன்று என் நெருங்கிய நண்பர்களிடம் புலம்பினேன் நான். நாம என்னத்த எழுதினாலும் அதனால என்ன மாறிப்போச்சு,  இனி எதற்காக எழுதவேண்டும் என சலித்துக்கொண்டேன். பிறகு தான் நிதானமாக யோசித்தேன். ஒரு தேர்தல் முடிவுக்கே நீ நினைத்தது போல வரவில்லையென்று சலித்துக்கொள்கிறாயே அந்த மனிதர் எழுபதாண்டு கால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்வளவு சலித்துக்கொள்ள வேண்டும்?  ஏன் அவர் சலிப்பில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்.  அவரை பாராட்டினால் மட்டும் போதுமா அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டாமா?  என என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.

அவரே சொல்கிறார் : என் வாழ்நாளில் தொடர்ந்து 24 மணி நேரம் நான் மகிழ்ச்சியாகவும் இருந்ததில்லை,  சோகமாகவும் இருந்ததில்லை. பெரியார்,  அண்ணா,  ராஜாஜி,  காமராஜர்,  பக்தவச்சலம்,  எம்ஜியார் போன்ற ஆளுமைகளுடன் அரசியல் செய்தவர் இன்று இவர்களுடன் அரசியல் செய்யவேண்டுமா என நமக்கு சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவருக்கு உண்டா?  காலம் யாரை கை காட்டுகிறதோ அவர்களுடன் தான் அரசியல் செய்யவேண்டும் என சொல்லி அதை கடந்து செல்வது தான் கலைஞர்த்தனம்.

வாழ்க்கையில் சலிப்பே ஏற்படாதவர்கள் யார்?  குழந்தைகள் தானே!  நான் வீட்டிற்கு சென்றவுடன் என் மகள் என்னை மேலே தூக்கி போட சொல்வாள். ஒவ்வொருமுறை நான் அப்படி செய்யும்போதும் இன்னும் வேணும் என்று கேட்பாள். ஆறேழு முறை மேலே தூக்கி போடுவேன். அதன்பிறகு நான் சலித்துப்போவேன். அவள் ஒருபோதும் சலித்ததில்லை. கலைஞரும் அப்படித்தான்.  அவருக்கு எதுவுமே சலித்ததில்லை. பாராட்டு சலிக்கவில்லை,  வசவு சலிக்கவில்லை. அவருக்கு என்ன இல்லை? இனி புதிதாக அவர் சாதிக்கப்போவதென்ன?  பொதுவாழ்விலும் அக வாழ்விலும் நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டார். இனி அவர் அக்கடா என நிம்மதியாக இருக்கலாமே என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு ஒருபோதும் இல்லை. இதை பதவி ஆசை,  மோகம் என எப்படி வேண்டுமானால் சொல்லட்டும். ஆனால் கலைஞரிடம் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டியது சலிப்பில்லாமல் வாழ்வை வாழ்கிற அந்த குணம் தான். ஏனென்றால் வாழ்க்கையில் எப்போது உங்களுக்கு சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்! 

ஆக சலிப்பில்லாத வாழ்க்கை,  சிந்தனைத் தெளிவு  குறையாத செயல்திறன் இவைகளை பெற்ற ஒரு மனிதருக்கு வயது 93 ஆனால் என்ன 103 ஆனாலென்ன?  அவருக்கு மூப்பே கிடையாது. 

#முத்தமிழுக்கு_ஏது_மூப்பு