"ஆட்சி மாற்றத்திற்கான சமூக வலைதள நண்பர்களின் சந்திப்பு" என்ற சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன். பெயரைப்பார்த்தால் ஏதோ திமுக அதிமுகவிற்கு மாற்றாக நடைபெறப்போகும் சந்திப்பு என்பது போலத் தெரிந்தாலும் கனிமொழி பங்கு பெறுகிறார் என்பதிலேயே அது திமுக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பது புரியும். நான் இந்நிகழ்வில் கலந்துகொண்டதற்கு மூன்று காரணங்கள் :
1.இன்று எனக்கு விடுமுறை
2. நானும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்புபவன்
3.நிகழ்ச்சி நடந்த இடம் பெரியார் திடல். பெரியார் திடல் செல்வதற்காகவே காரணங்களைத் தேடுபவன் நான்.
நிறைய பேர் பேசியதால் ஆளுக்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே தரப்பட்டது. நான் பேசப்போன நேரம் ஆளுக்கு முப்பது விநாடிகள் மட்டுமே பேசவேண்டும் என்றனர். இது என்ன லாஜிக்கே இல்லாமல் 30 விநாடிகளில் பேச சொல்கிறார்களே என்று மனதில் நினைத்துக்கொண்டு பேசத்தொடங்கும் முன் "நான் இரண்டு நிமிடங்கள் தான் பேசப்போகிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறிவிட்டே ஆரம்பித்தேன்.
நான் திமுக உறுப்பினர் இல்லாவிட்டாலும் திராவிட இயக்கத்தின் மீதுள்ள பற்று காரணமாக தேர்தல் அரசியலில் திமுகவை ஆதரிப்பவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். எந்த சாதி பின்புலமும் இல்லாமல் தமிழக அரசியலில் கோலோச்சுகிற கலைஞர் மீது சாதிய அடிப்படைவாதிகளுக்கு தீராத வன்மம் இருக்கிறது என்பதற்கான தகவல்களைத் தெரிவித்தபோது கனிமொழி அதை தலையசைத்து ஆமோதித்தது என் கண்ணில் பட்டது. தமிழக தேர்தல்களில் வரலாற்றில் இல்லாதவகையில் இம்முறை தான் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்ற செய்தியைக் குறிப்பிட்டு, அதன் காரணமாக திமுக மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட்டிருக்கவேண்டும் என்றேன். முதல்வரும் அதன் காரணமாகவே சென்ற வாரம் உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்திருக்கிறார் என்ற ஒப்பீட்டையும் வைத்தேன்.
கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்களை மிகச்சிறப்பாக கையாண்டதையும் அதன் காரணமாக ஊரகப்புற பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றிருந்தனர். இந்த ஆட்சி அந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது. திமுக பெண் வாக்காளர்களை கவர வேண்டுமானால் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மறுமலர்ச்சி மட்டுமல்லாது பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பணி நிரந்தரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று யோசனை தெரிவித்தேன்.
செல்வி ஜெயலலிதா அம்மையார் மிகச்சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் என்று தொடர்ந்து அறிவுஜீவிகளும் ஊடகங்களும் கட்டமைத்துவந்த மாய பிம்பம் டிசம்பர் மாத மழையில் தரைமட்டமாகிப்போனது என்றும் திமுக 1996-2001 காலத்தில் வழங்கியது போன்ற நிர்வாக ரீதியிலான சிறந்த ஆட்சியை இம்முறை தருவதற்கு உறுதியெடுக்கவேண்டும் என்றேன். இந்த தேர்தலில் அதிமுக வெல்லவேண்டும் என்ற ஒரு அணியும் திமுக வெல்லவேண்டும் என்று இன்னொரு அணியும் திமுக மீண்டும் வந்துவிடவே கூடாது என்று மற்றொரு அணியும் வேலை பார்ப்பதால் திமுகவிற்கு இது சவாலான ஒரு தேர்தல். அதிமுக வின் தவறுகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். கட்அவுட் கலாச்சாரம், பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர்கள், ஆளுயர மாலை, தனிநபர் துதிபாடல் இவைகளை தற்போது பொதுமக்கள் விரும்புவதில்லை. அதிமுகவின் இந்த தவறுகளிலிருந்து திமுக பாடம் கற்கவேண்டுமே தவிர திமுகவும் இதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது அப்போதுதான் அதிமுக மீதான அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள திமுகவால் முடியும் என்ற செய்தியை கடைசியாகத் தெரிவித்துவிட்டு என் பேச்சை முடித்துக்கொண்டேன்.
கடைசியாக கனிமொழி பேச வந்தார். எனது பேச்சை அவர் உன்னிப்பாக கவனித்துள்ளார் என்பது அவருடைய மறுமொழியில் தெரிந்தது. நான் பெண்கள் வாக்குகளை கவர்வதற்காக திமுக மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று சொன்னதைக் குறிப்பிட்டு, திமுக பெண்கள் வாக்குகளுக்காக மட்டும் அதை அறிவிக்கவில்லை, அப்படியென்றால் ஆண்கள் வாக்குகள் எங்களுக்கு வேண்டாமா? ஒட்டுமொத்த தமிழகத்தின் நன்மைக்காகத்தான் திமுக அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். "சற்று முன்னர் தான் ஒருத்தர் பேனர் கட் அவுட், ஆளுயர மாலை இவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றார். அதற்குள் நீங்கள் எனக்கு ஆளுயர மாலையை அணிவிக்கிறீர்கள். இது அன்பின் வெளிப்பாடு என்றாலும் இதைத் தவிருங்கள் " என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை செல்லமாக கேட்டுக்கொண்டார்.
கடைசியாக கனிமொழியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டினார்கள். நான் "மேடம் ஒரு ரெக்வஸ்ட் " என்று கேட்டுவிட்டு "திராவிடக் கொள்கைகளை முன்னிறுத்தி இயக்கம் கண்ட திமுகவில் தற்போது கொள்கை சார்ந்த அரசியல் சற்று குறைந்து வருகிறது. திமுகவில் இருப்பவர்களுக்கே திராவிட கொள்கைகள் பற்றிய புரிதல் சிலருக்கு இல்லை. உங்களைப்போன்ற திமுகவின் முன்னணித்தலைவர்கள் திராவிடக்கொள்கைகளை மையப்படுத்தி தொண்டர்களை தயார்படுத்தவேண்டும் " என்ற கோரிக்கையை வைத்தேன். "உங்களைப்போன்ற ஆட்கள் தொடர்ந்து திராவிட கொள்கைகளை எழுதுங்கள். அதிலேயே பலர் தெளிவடைவார்கள் " என்று பந்தை என்னிடமே திருப்பினார். நான் "நாங்கள் எழுதுவதை விட உங்களைப்போன்ற கட்சி முன்னணியினரின் முயற்சியால் தான் அது முடியும் " என்று தெரிவித்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றேன்.
No comments:
Post a Comment