இன்று தமிழ்நாட்டின் அனைத்து தினசரி ஏடுகளிலும் முதல் பக்கத்தில், முதல்வரை கேலி செய்யும் விதமாக திமுக "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா " என்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. ஒரு திமுக அபிமானியாக என்னால் இந்த அணுகுமுறையை ரசிக்கமுடியவில்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
திமுக என்ன நோக்கத்திற்காக இப்படி விளம்பரம் செய்தார்களோ அதில் அவர்களுக்கு முழு வெற்றி கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன். காலையில் தான் செய்தித்தாளில் வந்தது. அதற்குள் வாட்சப் பார்வர்டு மெசேஜாக இரண்டு நபர்களிடமிருந்து வந்துவிட்டது. திமுகவிற்கு இந்த தேர்தலில் ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. அது பதினெட்டு முதல் 30 வயது வரையிலான வாக்காளர்களை கவர்வது. பேஸ்புக், ட்விட்டர் மூலமாக மட்டுமே அரசியல் பற்றி தெரிந்துவைத்துள்ள இந்த வயதுப்பிரிவினரில் 90 சதவீதம் பேர் மொண்ணைகள் தான். இந்த மொண்ணைகள் வாட்சப், பேஸ்புக் போஸ்ட்டுகள் மூலமாக மட்டுமே தங்கள் அரசியல் ஞானத்தை வளர்த்துவைத்திருக்கிறார்கள். சமூகநீதி என்றால் என்ன, மதச்சார்பின்மை என்றால் என்ன, திராவிட இயக்கத்தினால் தமிழகம் அடைந்த பயன்கள் இவைகள் எதுவுமே தெரியாது. இவர்கள் இப்படி இருப்பதற்கு நம்முடைய அரசியல் கட்சிகளும் ஒருவகையில் காரணம் என்பதை மறுக்கமுடியாது. துரதிர்ஷ்டவசமாக இந்தக்கூட்டம் தான் இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க இருக்கின்றன.
ஏதோ இப்படியானவர்கள் இந்த காலகட்டத்தில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றில்லை. எப்போதுமே இருந்து வருகிறார்கள் என்றாலும் இணையத் தொடர்பினால் ஒரு வலுவான சங்கிலிப்பிணைப்பு இவர்களுக்குள் தற்போது ஏற்படுகிறது. அதனால் தான் ஒரு படத்தை ஒரு முறை பகிர்ந்தாலே பல லட்சம் பேரால் அது பகிரப்பட்டு பார்க்கமுடிகிறது. ஒரு காலத்தில் தனது சித்தாந்தத்தால் இளைஞர்களை கவர்ந்த திராவிட இயக்கம் இன்று அதில் தோல்வியடைந்துவிட்டது. சித்தாந்தத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தாலும் அது செல்பி தலைமுறையினரிடையே எடுபடாது என்பதே நிஜம். அதனால் தான் முன்பு நான் ஒருவேளை திமுக பாஜக கூட்டணி ஏற்பட்டால் கூட அது இந்த தேர்தலில் வெற்றிபெறும் என்று தெரிவித்திருந்தேன்.
ஆட்சியை பிடித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிற திமுகவிற்கு கட்டாயம் இந்த மொண்ணைகளின் ஆதரவு தேவை. கலைஞரை முன்னிறுத்துவதா ஸ்டாலினை முன்னிறுத்துவதா என்ற ஊசலாட்டத்திற்கும் இதுதான் காரணம். ஒரு திராவிட இயக்கப்பற்றாளனாக எனக்கு ஸ்டாலினைக் காட்டிலும் கலைஞர் தான் முக்கியம். இதே மனநிலை எல்லாருக்கும் இருக்காது என்பதும் எனக்குத்தெரியும். கலைஞர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இணைய தாக்குதல்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கும் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஏற்கெனவே ஒருமுறை கலைஞர் எதிர்ப்பாளர்களை Type 1, type 2, type 3 என்று நான் வகைப்படுத்தியிருந்தேன். எந்த சாதி பின்புலமும் இல்லாமல் தமிழ்நாட்டில் திராவிடக்கொள்கைகளை உயிர்ப்போடு வைத்திருக்கும் கலைஞர் மீது வன்மத்துடன் Type 2 ஆட்களால் நடத்தப்படும் தாக்குதல்களை ஏன் எதற்கு என்று ஆராயமல் லைக் ஷேர் செய்தே பழகிய Type 3 மொண்ணைகளை கவரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் திமுகவுக்கு இருப்பதை மறுக்கமுடியாது.
இவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்ட திமுகவின் விளம்பரக்குழு அதை கனகச்சிதமாக நிறைவேற்றத்தொடங்கியிருக்கிறது. மீம்கள் ஆளும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் அம்மா தன் மாநில மக்களை சந்திக்காமல் இருப்பதை மையப்படுத்தி "என்னம்மா இப்டி பன்றீங்களேம்மா? " என்ற பிரபலமான வாக்கியத்தைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளது திமுக. இதற்கு பதிலடியாக சில நாட்களில் அதிமுகவும் ஆரம்பிக்கும் என்பது வேறு விஷயம். ஆனாலும் அமைச்சர்கள் கும்பிடுதல், துக்ளக் தர்பார், ஸ்டிக்கர் என பல அம்சங்களை மீம் போடுவதற்காகவே அதிமுக உருவாக்கி வைத்துள்ளதால் அதற்கெதிரான விளம்பரங்கள் தான் அதிக வெற்றியடையும். 1996 தேர்தலில் வளர்ப்புமகன் திருமணம், விதவிதமான செருப்புகள் பட்டுப்புடவைகள் எப்படி ஜெ அம்மையார் வீழ்வதற்கு முக்கியப்பங்காற்றினவோ அதே போல இந்த முறை ஸ்டிக்கர் தான் அவருடைய வீழ்ச்சிக் கு காரணமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
#STICKER_Govt
No comments:
Post a Comment