Wednesday, 16 December 2015

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த வரலாற்றுச்சிறப்புவாய்ந்த ஒரு அரசாணையை தற்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதைக் கண்டு தமிழகத்தின் பெரும்பாலான ஆட்கள் எதிர்ப்புத்தெரிவிப்பதையும் சிலர் உள்ளுக்குள் மகிழ்வதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

கலைஞரின் அரசாணை என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதற்கு முன்னால் நம்முடைய கோயில் வழிபாட்டு முறையை பார்ப்போம். "பெரிய " கடவுள்களான விஷ்ணு,  சிவன்,  முருகன்,  விநாயகர் போன்ற கடவுள்களின் சந்நிதிகளில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராக இருப்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கோயில் கருவறையினுள் நுழைகிற உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. "லோக்கல் " சாமிகளான மாரியாத்தா,  செல்லாத்தா,  முனிசுவரன்,  அய்யனார்,  சுடலைமாடசாமி போன்ற சாமிகளுக்கு பிராமணர் அல்லாத பிற சாதியினர் பூஜை செய்வார்கள்.  இதுதான் இங்கே நடைமுறை. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அர்ச்சகர் ஒருவேளை அய்யனாருக்கு தான் பூஜை செய்ய விரும்பினால் அவருக்கு அந்த உரிமை உண்டு. அவர் அதை செய்ய முடியும். ஆனால் முனிசுவரனுக்கு பூஜை செய்கிற பூஜாரி (அவர் அர்ச்சகர் இவர் பூஜாரி - இந்த வித்தியாசம் முக்கியம்)  வெங்கடாசலபதி க்கு பூஜை செய்ய விரும்பினால் அது நடக்காது. அவருக்கு அந்த உரிமையில்லை.

கலைஞர் கருணாநிதி இந்த விசயத்தில் பிராமணர்கள் மட்டுமல்ல அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இயலும் என்று ஒரு அரசாணையை பிறப்பிக்கிறார். "கருணாநிதிக்கு ஏன் புத்தி இப்படி போகிறது?  பிராமணர்களுக்குத்தானே எல்லா மந்திரங்களும் தெரியும்?  மற்ற சாதியினர் போனால் என்ன செய்வார்கள்? " என்று உங்களுக்கு தோன்றலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றால் யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதல்ல. ஒருத்தருக்கு உண்மையிலேயே மிக அதிகமான கடவுள் பக்தி இருக்கிறது,  அவரால் அர்ச்சகர் ஆக முடியுமா என்றால் முடியாது. கோயில் கருவறைகளில் கடவுளுக்கு ஓதப்படும் மந்திரங்களை ஒருத்தர் (எந்த சாதியினராக வேண்டுமானாலும் இருக்கலாம்)  முறையாக கற்க வேண்டும். அவர்களை அரசாங்கம் முறையாக கண்காணிக்கும். அவர்களுக்கு பயிற்சி தருகிறவர் இன்னார் முழுப்பயிற்சி பெற்று அர்ச்சகராவதற்கு தகுதி பெற்றுவிட்டார் என்று சான்று அளிக்கப்பட்ட பிறகே தான் அவரால் அர்ச்சகராக முடியும். எப்படி ஒரு கிறித்தவர் பாதிரியாராக வேண்டுமென்றால் அதற்கான முறைப்படி படித்து பயிற்சி பெற்று ஆகிறாரோ அதே போலத்தான்.  ஆக ஒரு பிராமணருக்கு என்ன்ன்ன மந்திரங்கள் தெரியுமோ அது இவருக்கும் தெரியும். ஒரேயொரு வித்தியாசம் அவருக்கு பூணூல் இருக்கும் இவருக்கு இருக்காது அவ்வளவு தான்.

இதை எதிர்த்து பிராமண அர்ச்சகர்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது. நீதிமன்றம் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கோயில்கள் இயங்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆகம விதி என்றால் என்னவென்று குழம்பவேண்டாம்,  வழக்கம்போல பெரிய கடவுள்களின் கருவறைகளில் பிராமணர்கள் தான் நுழைய இயலும், மற்றவர்கள் நுழைந்தால் தீட்டு பட்டுவிடும்  என்பதே அந்த விதி. அவரும் மனிதர் இவரும் மனிதர்,  அவருக்கு தெரிந்த எல்லா மந்திரங்களும் இவருக்கும் தெரியும். ரெண்டு பேருமே மிகுந்த கடவுள் பக்தி உடையவர்கள். குளித்துவிட்டு சுத்தபத்தமாகத்தான் ரெண்டு பேருமே பூஜை செய்ய போகிறார்கள். அப்படியிருக்க அவர் நுழைந்தால் கடவுள் ஏற்றுக்கொள்வார் இவர் போனால் தீட்டாக்கி விடுவார் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுதான் ஆகம விதி.

கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதி எதற்காக இந்த அரசாணையை வெளியிடவேண்டும்?  எந்த சாதியினர் அர்ச்சனை செய்தால் அவருக்கென்ன வந்தது என்று கேட்கலாம். கருணாநிதிக்கு உண்மையிலேயே எல்லா சாதியினரும் அர்ச்சனை செய்யவேண்டுமென்ற ஆசையெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் எந்த சாதியை பல நூற்றண்டுகாலமாக சாதியின் பெயரல் தீட்டு தீட்டு என்று சொல்லி கோயிலுக்கு உள்ளே கூட நுழைய முடியாமல்  மறுக்கப்பட்டர்களோ,  அந்த தலித் மக்களை பிராமணர்களுக்கு இணையாக,  கோவிலுக்குள் என்ன கருவறையிலேயே  நுழைவதை காண அவர் விரும்பினார். ஆனால் ஆதி திராவிடர்களும் அர்ச்சகராகலாம் என்று அவரால் சட்டம் போட முடியாது. அதனால் தான் அனைத்து சாதியினரும் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றுகிறார். திராவிட பஜகோவிந்தமான கருணாநிதியின் லீலைக ளை நிஜ பஜகோவிந்தங்களால் புரிந்துகொள்ள முடியாதா என்ன?  ஒரு தலித் தங்களுக்கு இணையாக கோயில் கருவறையில் நுழைவதை அவர்களால் பொறுக்கமுடியவில்லை. எனவே தங்களது பஜகோவிந்த தனத்தின் மூலமாக அதை முறியடித்துள்ளார்கள். திராவிட பஜகோவிந்தமான கருணாநிதி இதை முறியடித்து மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

Friday, 20 November 2015

திராவிட இயக்க நூற்றாண்டு நினைவலைகள்

இன்று நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழா ஆரம்பம்... "தென்னிதிய நல உரிமை சங்கம்" என்று துவங்கப்பட்டு, நடேச முதலியார், பிட்டி தியாகராய செட்டியார் மற்றும் T.M. நாயர் ஆகிய மும்மூர்த்திகளால் வழிநடத்தபட்டு "ஜஸ்டிஸ் பார்டி - நீதி கட்சி" என்று 1916 முதல் செயல்பட்டது... 

அன்றைய சென்னை மாகாணத்தில் (திருவிதாங்கூர், மைசூர், புதுக்கோட்டை சமஸ்தானங்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் பகுதிகள் நீங்கலான முழு தெனிந்தியா) ஆட்சியை பிடித்து,  ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மற்றவர்களை அடிமைகளாக நடத்திக்கொண்டிருந்த நிலையை மாற்றி எல்லா மக்களும் நலமுடன் வாழ்ந்திட வழிவகுத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம், கோவில் பணத்தை கொள்ளை போவதிலிருந்து காத்த அறநிலைய சட்டம், ஆங்கில மருத்துவக்கல்விக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்கியது போன்ற எண்ணற்ற பல முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்தது..

நீதி கட்சியின் (ஜஸ்டிஸ் பார்டி) சாதனைகள்...

நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி. தியாகராயர், சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் முதன் முதலாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது, கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும், பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டது.

1921 ஆம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது நீதிக்கட்சி அரசு. 1922 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பில் மட்டுமின்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டுமென நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது.

ஒவ்வொரு அரசுத் துறையிலும் அந்தந்த துறைகள் மூலமாகவே வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதைப் பயன்படுத்தி ஏராளமான வேலைகளுக்கு பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டு வந்தார்கள். இதை மாற்றிட நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் சி.நடேசனார் அயராது உழைத்தார். அதன் விளைவாக 1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் “ஸ்டாப் செலக்ஷன் போர்டு” ஏற்படுத்தப்பட்டது.

மருத்துவ பட்டப் படிப்பில் சேர சமஸ்கிருதம் கட்டாயம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றியது நீதிகட்சி அரசு. ஆதி திராவிடர், தாழ்த்தப்பட்டோர் பொதுத் தெருவிலும் எல்லாத் தெருவிலும் நடந்து போகலாம் என்று முதன்முதலில் அதற்காகவே தனியாக ஒரு ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி அரசு.

கோயில்களின் வருமானத்தை குடும்பத்தோடு கொள்ளை அடித்து வந்த பார்ப்பனக் கொள்ளையை முறியடிக்க இந்துக் கோயில்களை வரைமுறைப் படுத்த இந்து அறநிலையத் துறையை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு.

ஒரு சாதியின் ஆதிக்கத்தில் இருந்து கோயில் சொத்துக்களை காப்பாற்ற இந்து அற நிலையத் துறையை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு. பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே நீதிக் கட்சியின் முதலமைச்சர் பனகல் அரசர் பெரும் முயற்சி எடுத்து 1925 இல் இத்துறையை உருவாக்கினார்.

இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்காக தனியாக அமைச்சகத்தை முதன்முதலில் அமைத்தது பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி அரசு.

ஒரத்த நாடு, ராஜமாடம் போன்ற இடங்களில் இருந்த தர்மச் சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற முறையை மாற்றியவர் தஞ்சை மாவட்ட மன்றத் தலைவராக இருந்த நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர் செல்வம்.

1935 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்துகளில் “பஞ்சமருக்கு இடமில்லை” என்று எழுதியதோடு டிக்கெட்டுகளிலும் அவ்வாறே அச்சிட்டு இருந்தனர். நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் இராமநாத புரம் மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவருமான டபுள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அதை ஒழித்தார்.

நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் அறங்காவல் குழு தாலுகா போர்டு தலைவருமான எ.ஸ்.ராமச்சந்திரன் சேர்வை தனது பதவிக் காலத்தில் “இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்குக்கூட வேலை கொடுக்க மாட்டேன்” என்று பகிரங்கமாக மேடையிலேயே அறிவித்தார்.

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி தேவதாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

தேவதாசி மசோதா வந்தபோது சட்டத்தை மீறினாலும் மீறுவேனே தவிர சாஸ்திரத்தை மீற மாட்டேன் என்று கூறிய அந்த மசோதாவை எதிர்த்து தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார் சத்தியமூர்த்தி அய்யர். “தேவதாசி முறை நீடிக்க வேண்டுமென அய்யர் விரும்பினால் இனிமேல் அவர் இனத்துப் பெண்கள் அதைச் செய்யட்டும்” என்று தந்தை பெரியாரின் கருத்தை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பதிலடியாக கொடுத்தப் பிறகு சத்தியமூர்த்தி அய்யர் வாயை மூடினார்.

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சேர்க்க குழுக்களை நியமித்தது நீதிக்கட்சி அரசு.

தனியார் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர் களை சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றியது நீதிக்கட்சி அரசு.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கென தனியாக இருந்த பள்ளிகளை மூடி பிற சாதி மாணவர்களுடன் சேர்ந்து பயில வழி வகுத்தது நீதிக்கட்சி அரசு.

தாழ்த்தப்பட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ளாத பள்ளிகளுக்கு அரசு நிதி உதவி தரப்பட மாட்டாது என அறிவித்தது நீதிக்கட்சி அரசு.

தாழ்த்தப்பட்டவர்கள் வீடு கட்டிக் கொள்ள புறம்போக்கு நிலங்களை அளித்தது நீதிக்கட்சி அரசு.

கிறிஸ்துவரை கல்லூரி முதல்வர், சட்டமன்றத் தலைவர், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர், உயர்நீதிமன்ற நீதிபதி, உள்துறை உறுப்பினர் போன்ற பதவிகளில் அமர்த்தியது நீதிக்கட்சி அரசு.

மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் பார்ப்பனர்களுக்கு என்று தனியாக அறைகள் ஒதுக்கப்பட் டிருந்த முறையை ஒழித்தது நீதிக்கட்சி அரசு.

மாவட்ட நீதிபதிகள் நியமனங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவித்தது நீதிக்கட்சி அரசு.

அண்ணாமலை பல்கலைக்கழகம், ஆந்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றை உருவாக்கியது நீதிக்கட்சி அரசு.

துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்கு கூட்டுறவுச் சங்கங்களை நீதிக்கட்சி அரசு ஏற்படுத்தியது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் நீதிக்கட்சி அரசால் செய்யப்பட்டது.
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றங் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டதோடு அவர்கள் மேலும் முன்னேற  அதிகாரிகளை லேபர் கமிஷனர்களாக நியமித்தது நீதிக்கட்சி அரசு.

கோவை மாவட்டத்திலுள்ள குறவர், வலையர் ஆகியோரை குற்றப் பரம்பரையில் இருந்து மீட்க சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட துடன் அவர்களின் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப்புகளை அளித்தது நீதிக்கட்சி அரசு.

ஆதி திராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிறசாதியினரிட மிருந்து பாதுகாப்பு, அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என பலவித உதவிகளையும் நீதிக்கட்சி அரசு செய்தது.

ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்காக நிலங் களை ஒதுக்குகிறபோது, மரங்களின் மதிப்பு அளவு கட்டணத்தை தள்ளுபடி செய்தது நீதிக்கட்சி அரசு.

நிலத்தில் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோருக்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டத்தை நீதிக்கட்சி அரசு கொண்டு வந்தது. இச்சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் என்னும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.

கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காக தனியாக லேபர் கமிஷன் நியமிக்கப்பட்டு, அவர் சில வழி முறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்யப்பட் டது. தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று ஐந்து பள்ளிகளை தஞ்சை வட்டாரத் தில் திறக்க நீதிக்கட்சி அரசு உ.த்தரவிட்டது.

அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை – இட ஒதுக்கீடு நிலைநாட்டப்பட, ஆண்டுதோறும் பொதுப் பணித்துறை அறிக்கை வெளியிட வேண்டுமென நீதிக்கட்சி அரசு அறிவித்தது.

கல்லூரித் தலைவர்களே மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த முறைக்கு நீதிக்கட்சி அரசு தடை விதித்து, ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைக்கப் பட்டன.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பொதுப் பாதைகள், பொது இடங்கள், கிணறு, குளம் போன்றவைகளை உபயோகிப்பதை தடுப்பவர்களுக்கு நீதிக்கட்சி அரசு அபராதம் விதித்து ஆணை பிறப்பித்தது.

தலைமைச் செயலகம் பார்ப்பனர்களின் ஏகபோக சொத்தாக இருந்ததை புள்ளி விவரங்களோடு சட்டமன்றத்தில் வெளிப்படுத்தி, “தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பார்ப்பனர்களுக்கும் திராவிடர்களுக்கும் ஓரளவிற்காவது சமநிலை உண்டாக அடுத்த மூன்று ஆண்டுகள் பார்ப்பன ரல்லாத சமூகத்தினர் மட்டுமே உத்தியோகங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்து, அத்தீர்மானம் நிறைவேற டாக்டர் சி.நடேசனார் முன்னின்றார்.

“பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விகிதாச்சார அளவுக்கு உத்தியோகம் கிடைக்கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனரல்லாதாருக்கே கொடுக்கப்பட வேண்டும்” என்ற புரட்சிகரமான தீர்மானம் ஒன்றை 1921, ஆகஸ்டு 5 இல் சட்ட மன்றத்தில் டாக்டர் சி.நடேசனார் கொண்டு வந்தார். பின்னர் நீதிக்கட்சியினர் வேண்டுகோளின்படி தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார். எல்லா வகுப்பினருக்கும் உத்தியோகத்தில் சமநீதி வழங்கும் வகையில் ஏற்கெனவே ரெவின்யூ துறையில் இருக்கும் நடைமுறையை விரிவுபடுத்தி, எல்லா துறைகளிலும் அதைக் கடைபிடிக்குமாறு செப்டம்பர் 16 இல் ஓர் ஆணையை நீதிக்கட்சி அரசாங்கம் பிறப்பித்தது. நீதிக்கட்சி ஆட்சியின் முதல் வகுப்புரிமை வழங்கும் ஆணை இதுவே ஆகும். பார்ப்பனரல்லாதாருக்கு அரசுப் பணியில் நுழைய ஓர் உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைந்த முதல் அரசாணையான இது பார்ப்பன அதிகார வர்க்கத்தால் சரிவர அமுல்படுத்தப்படவில்லை.

நீதிக்கட்சியின், பனகல் அரசர் அமைச்சரவை, 1922 மார்ச் 25 இல் “பஞ்சமர், பறையர்” என்ற சொற் களை நீக்கி, ஆதி திராவிடர் என்றே இனி அழைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி, அதனை அமுல்படுத்தியது. வேலை வாய்ப் போடு அன்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற ஓர் ஆணையை நீதிக்கட்சி ஆட்சி ஆகஸ்டு 15 இல் வெளி யிட்டது. (M.R.O. Public Ordinary Service G.O.No.658 Dated 15.8.22 )  இதுவே நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது வகுப்புரிமை ஆணையாகும்.

--- பெரியார் தளம் உதவியுடன் (periyarthalam)

Saturday, 7 November 2015

மக்களை நோக்கி ஒரு நெடும்பயணம்

மக்களை நேரடியாக சந்திக்கிற தனது "நமக்கு நாமே " பயணத்தின் மூன்றாவது கட்டத்தை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் திரு. ஸ்டாலின். சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல் அவர் இந்த குறுகிய காலத்தில்  இதுவரை பயணித்திருக்கிறார் என்பது,  எனக்குத்தெரிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத ஒரு சாதனை.

ஏன் ஸ்டாலினின் இந்த பயணம் பெரிதும் பேசப்படுகிறது?  அவர் இதற்கு முன்னால் மக்களை சந்தித்ததில்லையா என்றால்,  இல்லை அவர் தொடர்ந்து மக்களை சந்திக்கிற ஒரு அரசியல்வாதியாகத்தான் இருந்து வருகிறார்.  ஸ்டாலின் என்ற பெயரைக்கேட்டவுடன் முதலில் என் மனக்கண்ணில் எழுகிற பிம்பம் எதுவென்றால்,  பதினாறு வருடங்களுக்கு முன்பாக ஒரு பெருமழைக்கால சென்னையில்,  ரெயின் கோட் அணிந்து,  பேண்ட்டை முட்டி வரை மடித்துவிட்டுக்கொண்டு தேங்கிய தண்ணீரில் நின்று கொண்டிருந்த அன்றைய சென்னை மேயர்  ஸ்டாலினின் அந்த உருவம் தான். அப்போதுதான் என் வாழ் நாளில் ஒரு அரசியல் தலைவரை மிக அருகில் வைத்து பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அதன் பிறகு எத்தனையோ முறை அவரை நேரில் பார்த்திருந்தாலும் அந்த சம்பவமே எனக்கு அவருடைய அடையாளமாக மாறிப்போனது.

தான் துணை முதல்வராக இருந்த காலத்தில் காலையில் வாக்கிங் செல்லும்போது மக்கள் அவரை சந்திப்பது சென்னைவாசிகள் பரவலாக அறிந்த செய்தி.  ஸ்டாலின் மக்களை சந்திக்க செல்கிறார் என்று சொன்னால்,  "அதான் மாசாமாசம் சந்திக்கிறாரே,  இது என்ன புதுசா ஒரு மக்கள் சந்திப்பு " என்று கொளத்தூர் தொகுதி மக்கள் ஆச்சரியப்பட்டு சொன்னாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு தன் தொகுதி மக்களை அவர் சந்தித்திருக்கிறார்.

சரி,  அப்போதெல்லாம் பேசப்படாத அவருடைய மக்கள் சந்திப்பு இப்போது மட்டும் ஏன் அதிகம் பேசப்படுகிறது என்றால்,  அது அவர் தேர்ந்தெடுத்துள்ள உத்தி.  ஒரு அரசியல் தலைவரின் சுற்றுப்பிரயாணம் போல இல்லாமல் மக்கள் தலைவரின் பயணம் போல காட்ட அவர் மிகுந்த மெனக்கெட்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் எங்குமே கறுப்பு சிவப்பு கரை வேட்டியை பயன்படுத்தவில்லை. தொண்டர்களை விட மக்களை சந்திக்கவே அவர் ஆர்வம் காட்டியிருக்கிறார். இதுவரை வழக்கமாக எந்த சுற்றுப்பிரயாணங்களை மேற்கொண்டபோதும் கூடுதலாக உள்கட்சி விவகாரங்களையும்  பார்ப்பவர் இந்தமுறை அதைத் தவிர்த்திருக்கிறார். மிக அதிக அளவில் பெண்களை சந்தித்திருக்கிறார். எந்த அரசியல் அறிவும் இல்லாத கன்னி வாக்காளர்களை கவருவது அவருடைய திட்டமாக இருக்கலாம்.   "கார்ப்பரேட் கம்பெனி பாணியில் திட்டமிடப்பட்டுள்ளது,  ஆலன் சொலே பேண்ட் அணிந்து மக்களை சந்திக்கிறார் " என்று விதவிதமாக விமர்சனங்கள் வந்தாலும்,  அவருடைய இந்த பயணம் ஒரு செய்தியை கோடிட்டுக்காட்டியுள்ளது. இனி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு மக்களை நோக்கி செல்லவேண்டியது என்ற அவசியத்தை அவர் காண்பித்துள்ளார். திட்டங்கள் மட்டும் மக்களை நோக்கி சென்றால் போதாது,  அரசியல்வாதிகளும் மக்களை நோக்கி செல்லவேண்டும் என்ற உண்மையை வெளிச்சமாக்கியிருக்கிறார்.  அவருடைய இந்த புது பாணியிலான உத்தி தேர்தலில் அவருக்கு வெற்றியை தேடித்தருமா இல்லையா என்று கணித்து சொல்வதற்கு நான் ஒன்றும் தேர்தல் ஜோதிடர் அல்ல. ஆனால் இதன் தாக்கம் இனிவரும் எதிர்கால அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ராஜா,  ராணி போன்ற மேட்டிமைத்தன அரசியல் கண்டிப்பாக மட்டுப்படும்.

சரி,  தமிழ்நாடு முழுவதும் பயணித்து மக்களை சந்திருக்கிறார் ஸ்டாலின்,  இனி அடுத்து என்ன என்றால்,  தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை அவர் மக்களை சந்திப்பார். அதுதான் ஸ்டாலின். இதோ,  அவர் தனது மக்களை சந்திக்கும் அடுத்த ஒரு நெடும்பயணத்திற்கு தயாராகிவிட்டார்...!

Wednesday, 21 October 2015

ஊடகங்களின் நடுநிலைமை

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் சமஸ் எழுதியிருந்த "காண்டாமிருகங்கள் ஆகிறோம் " என்ற கட்டுரையை படித்தேன். நடிகர் சங்கத்தேர்தலுக்கு ஊடகங்கள் கொடுத்த அதீத முக்கியத்துவம் குறித்து கவலைப்படுகிறார். அவருடைய கவலை நியாயமானதும் கூட.  தமிழ் இந்து பத்திரிகையில் பொதுவாக இரவு பத்தரை பதினொன்று மணிவரைக்குமான நிகழ்வுகளை மட்டுமே அடுத்தநாள் பேப்பரில் செய்தியாக போடுவார்கள். ஐபிஎல் ஆட்டங்கள் நடக்கும்போது மாலை 4 மணி ஆட்டத்தைப்பற்றி அடுத்தநாள் விலாவரியாக செய்தி வரும். 8 மணி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி பெற்ற ஸ்கோர் விவரம் மட்டுமே வரும். நேற்று கூட இரவு 11 மணியளவில் திருச்சி நெடுஞ்சாலையில் பெரிய விபத்து ஏற்பட்டது. அது இன்றைய இந்து நாளிதழில் வெளிவரவில்லை. ஆனால் நடிகர் சங்கத்தேர்தல் முடிவுகள் துணைத்தலைவர் பதவிகள் உள்பட இரவு 11.30 மணிக்கு மேல்தான் கிடைத்தது. அடுத்தநாள் இந்து பத்திரிகையில் தேர்தல் முடிவு விபரங்களைப்பற்றி விலாவரியாக கடைசிப்பக்கத்தில் முழுப்பக்க செய்தி வெளியாகியிருந்தது.

நடிகர் சங்க தேர்தலை ஊடகங்கள் அதீத அக்கறையுடன் அணுகியது தவறா தவறில்லையா என்பது இருக்கட்டும். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய தவறுகளை நம் ஊடகங்கள் செய்கின்றன.  அதற்கு அவர்களாகவே சூட்டிக்கொண்ட பெயர் தான் நடுநிலைத்தன்மை.  நடுநிலைத்தன்மை என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும். யார் தவறு செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு பெயர்தான் நடுநிலைத்தன்மை என்று கருதப்படுகிறது.  அதுவா நடுநிலை?  தவறு என்றால் தவறு என்று சொல்லனும் சரி என்றால் சரி என்று சொல்லனும்.  இதுதானே நடுநிலைமை?  தமிழ்நாட்டு ஊடகங்களை எடுத்துக்கொள்வோம். நிறைய ஊடகங்கள் மத்திய அரசை விமர்சிக்கின்றன. ஆனால் மாநில அரசு என்று வரும்போது கப் சிப் தான். ஊடகங்களுக்கென்று ஒரு குரல் இருக்கிறது. அது தலையங்கம் போன்ற இடங்களில் வெளிப்படும். இந்து பத்திரிகை வாரத்தில் ஒருமுறையாவது தனது தலையங்கத்தில் மத்திய அரசு மீது சில குற்றச்சாட்டுகளை வைக்கும். ஆனால் தமிழக அரசு நடவடிக்கைகள் மட்டும் அதற்கு தெரிவதில்லை.

ஒரு முறை டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் மதுவிலக்கு பற்றிய நிகழ்ச்சி வரும்போது நெறியாளரே இப்படி கேட்கிறார் : "தமிழக அரசு மீது மக்களுக்கு குறிப்பிடும்படியான அதிருப்தி எதுவும் இல்லாததால் எதிர்க்கட்சிகள் தற்போது மதுவிலக்கு பிரச்சினையை கையிலெடுக்கின்றனவா? "
தமிழக மக்களுக்கு அதிருப்தி இல்லையென்று அவருக்கு யார் சொன்னது?  ஆனால் பத்திரிகை விமர்சனங்களை வைத்து பார்த்தால் உண்மையிலேயே தமிழக அரசு மீது யாருக்கும் அதிருப்தி இல்லையென்று தான் தோன்றும். உண்மை என்னவென்றால் ஊடகங்களுக்கு அதிருப்தி இல்லை என்பதே. ஆனால் நான்கரை வருட மாநில ஆட்சி மீது வராத அதிருப்தி ஒன்றரை வருட மத்திய அரசு மீது மட்டும் ஊடகங்களுக்கு வருகின்றன. இந்த இடத்தில் பிரச்சினை ரொம்ப எளிமையானது. தமிழக அரசாங்கம் என்பது அதிமுக அரசு. அதை விமர்சித்தால் அது திமுகவிற்கு சாதகமாக பேசுவது போலாகிவிடும். ஆகவே நாம் நம் நடுநிலையை கட்டிக்காப்போம். அதிமுகவை விமர்சித்தால் நடுநிலை அந்தஸ்து பறிபோய்விடுமே.  இதே நம்முடைய சமஸ்,  திமுகவிலிருந்து அழகிரி வெளியேற்றப்பட்டபோது ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம் என்று கட்டுரை எழுதினார். அதன்பிறகு அதிமுகவில் அதன் தலைவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகினார். பிறகு விடுதலையாகி மீண்டும் முதல்வரானார். அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இப்படி எத்தனையோ நடந்தன. ஆனாலும் அந்த கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி கேட்க அவருக்கு மனம் வரவில்லை.

நான் ஒரு தனிமனிதன். போக ஒரு கட்சியின் அபிமானி. என்னால் அந்த கட்சி செய்யும் தவறுகளை பொதுவெளியில் கண்டிக்க முடியாமல் போகலாம். அல்லது எந்த கட்சி சார்பற்றவனாகவும் இருக்கலாம். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்கதான் என்று எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கமுடியும். ஆனால் ஊடகங்கள் அப்படியா?  அவைகளுக்கென்று எந்த பார்வையுமே கிடையாதா?  ஆனால் மாநில அரசு விஷயத்தில் மட்டும் எல்லாவற்றையும் நடுநிலை என்ற பெயரில் கண்டுகொள்வதில்லை.  ஒரு அரசு தவறு செய்தால் அதை எதிர்க்கவேண்டியது எதிர்கட்சிகளின் வேலையே தவிர தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கின்றன. அப்படி இருப்பவர்கள்  எல்லா நேரமும் அப்படியா என்றால் அதுவுமில்லை. எதிர்கட்சி நடவடிக்கைகளை விமர்சித்தும் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.  இந்த விஷயத்தில் ஆங்கில செய்தித்தாள்கள் எவ்வளவோ தேவலை.  தமிழ் ஊடகங்கள் அரசின் தவறுகளை எடுத்துரைக்கத் தயங்குகின்றன. கருணாநிதி காத்துக்கொண்டிருக்கிறார். ஏதாவது அரசுக்கெதிராக செய்தி வெளியிட்டால் உடனே அதை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை ரெடி பண்ணிவிடுகிறார். அதனால் நாம் நடுநிலையோடு (!) இருப்போம் என்ற முடிவில் உள்ளார்கள்.

இந்த மாநிலத்தின் முதல்வரை எந்த பத்திரிகையாளராலும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அரசு நிகழ்ச்சிகளை பற்றி அரசு துறை தருவதுதான் செய்தி. யாராவது பிரபலம் இறந்துவிட்டால் அறிக்கை  தருகிறார். அவ்வளவுதான்.  அதைப்பற்றி என்றைக்காவது நம் ஊடகங்கள் வருந்தியிருக்கின்றனவா?  விமர்சனம் செய்திருக்கின்றனவா?  குறிப்பிட்ட ஒரு அமைச்சர் ஏன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று ஒருமுறையாவது கேட்டதுண்டா?  இந்த விஷயத்தில் ஜெயா டிவி மீதும் கலைஞர் டிவி மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. யாருக்கு ஆதரவாக வேலை செய்கிறோம் என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டு டிவி நடத்துகிறார்கள். ஆனால் நடுநிலை சேனல்கள் என்ற பெயரில் புதிய தலைமுறையும் தந்தி டிவியும் அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைகளையும் பற்றி விமர்சனம் செய்யத்துணியாத நடுநிலைக்கு அவர்கள் எவ்வளவோ மேல்.

ஊடகங்கள் தங்கள் பெருமைகளை பேசுகின்றன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால் என்றைக்காவது தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்களா?  உதாரணத்திற்கு இந்த நடிகர் தேர்தல். ஒரு சேனலில்,  ஓட்டுகள் எண்ண ஆரம்பித்ததிலிருந்து அவ்வப்பொழுது தங்கள் செய்திகளை சொல்கிறார்கள். முதலில் ராதாரவி அணி முன்னிலையில் வரும்போது "நாம் முன்பே சொன்னது போல ராதாரவி அணிதான் முந்துகிறது " என்கிறார்கள். பிறகு இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோது அதுவும் தாங்கள் கணித்ததே என்கிறார்கள். போகப்போக முடிவு மாறும்போது அதையும் தங்களுக்கு சாதகமாகவே சொல்கிறார்கள். ஏன் "நாங்கள் ஆரம்பத்தில் சொன்னதற்கு மாறாக முடிவுகள் வந்திருக்கின்றன " என்று சொல்வதில் என்ன ஈகோ? 

அடுத்தது இந்த விவாத நிகழ்ச்சிகள். விவாத நிகழ்ச்சியில் நெறியாளரும் ஒரு பங்கேற்பாளராக மாறி விடுகிறார். உதாரணமாக ஒரு திமுக ஆதரவு நபரிடம் கேள்வி கேட்கவேண்டுமென்றால் இவர் அதிமுக நபராக மாறிவிடுகிறார். பாஜக பிரமுகரிடம் கேள்வி கேட்கும்போது கம்யூனிஸ்ட்டாக மாறிவிடுகிறார். அதாவது நடுநிலையாக இருக்கிறாராமாம். இதற்கு தேவையே இல்லை. அவர் அவர் வேலையை செய்தால் மட்டுமே போதும். ஒளி ஊடகங்கள் இப்போது பெருகிய பிறகு அதில் பங்கேற்கும் ஊடகவியாலாளர்களுக்கு தன்முனைப்பு அதிகமாகிவிட்டது. தாங்கள் நடத்துகிற நிகழ்ச்சிகளில் தாங்களே பிரதானமாக தெரியவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது அந்தந்த டிவி நிர்வாகங்களுக்கும் தெரியும். தெரிந்தும்,  "சம்பளம் தான் குறைவாக தருகிறோம் அட்லீஸ்ட் இதுபோன்ற சந்தோஷங்களுக்காவது அவர்கள் உற்சாகமாக வேலை செய்யட்டும் " என்ற எண்ணத்தில் அதை கண்டுகொள்வதில்லை. அதனால் இவர்களும் அதை தங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமாக கருதி அதீத தன்முனைப்பில் ஈடுபடுகிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் ஒன்றும் போர்க்களத்தில் உயிரையும் பணயம் வைத்து செய்தி சேகரிக்கக்கூடிய துணிச்சலான பத்திரிகையாளர்கள் கிடையாது. ஏசி போட்ட கண்ணாடி அறையில் மூஞ்சி முழுக்க பவுடர் அப்பிக்கொண்டு உட்கார்ந்து,  நிருபர்கள் தருகிற ஒன்றிரண்டு செய்திகளை வைத்துக்கொண்டு வார்த்தைகளை மாற்றி மாற்றி போட்டு பேசுபவர்கள் தான்.

இந்த அதீத தன்முனைப்பு ஒருவரை தனியாக பேட்டி எடுக்கும்போது கூட நீள்கிறது. பேட்டி கொடுப்பவரோடு கூட கேள்வி கேட்காமல் விவாதம் செய்கிறார்கள். இப்போது ஏ ஆர் ரகுமான் பேட்டி என்றால் அதில் பெரும் சதவீதம் ஏ ஆர் ரகுமான்தான் பேசவேண்டும். ஆனால் இப்போது அப்படியில்லை. கேள்வி கேட்பவர்தான் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒளி ஒலி வடிவமாக இருப்பதால் பார்ப்பதற்கு வேண்டுமானால் சுவாரசியத்தை தரக்கூடும். ஆனால் செய்தி என்று எதுவுமே இருக்காது. யார் அதிக தன்முனைப்பு காட்டுகிறாரோ அவரே சிறப்பான புத்திசாலியான பத்திரிகையாளராக அடையாளங்காட்டப்படுகிறார். அதேவேளை இந்த தன்முனைப்பை மாநில அரசின் தவறுகளை விமர்சிக்க பயன்படுத்துகிறாரா என்றால் அதுமட்டும் இல்லை.  உண்மையிலேயே தமிழக பத்திரிகைத்துறைக்கு இது துர்பாக்கியமான நிலைமை. ஒரு சாமானிய மனிதன்,  தனக்கு தவறு என்று படுகிற அரசின் நடவடிக்கைகளை தனக்கு வாய்ப்பாக கிடைத்த சமூக வலைதளங்களில் போகிற போக்கில் விமர்சிக்கிறார். ஆனால் பராக்கிரமம் பொருந்திய ஊடகங்கள் இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கின்றன. அவைகளால் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேள்வி கேட்டு பதிலை பெறமுடியவுமில்லை. அதற்காக விமர்சிக்கவும் இயலவில்லை.  இந்த தவறுகளோடு ஒப்பிடும்போது நடிகர் சங்க தேர்தலை லைவ் டெலிகாஸ்ட் செய்தது பெரிய விஷயம் இல்லை.