Tuesday, 30 May 2017

கலைஞர் வாழ்த்து

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த தங்கப் புதல்வா!
நெஞ்சகத்தை வென்றெடுத்த எங்கள் முதல்வா!

எழுபது வருடங்கள் தாண்டி  எழுதும் கலைஞர்!
என்றென்றும் எங்களுக்கு இளைஞர்!

ஈரோட்டு பாசறையில் கற்றவன் நீ!
பாராட்டு புகழுரை பல பெற்றவன் நீ!

சூரியனை எழுப்பிவிடும் சூரியன் நீ!
சுயமரியாதையை எழுப்பிவிடும் வீரியம் நீ!

ஆண்டு பல ஏறும்போது வயது கூடும்!  உனக்கோ
ஆண்டு பல ஏறும்போது வனப்பு கூடும்!

வாழ்க்கை தோறும் வரலாற்று மாணவன் நீ!
வாழும்போதே வரலாறு மானவன் நீ!

தீந்தமிழ் பைந்தமிழ் செந்தமிழ் - நீ
சீர் இளமை திறம் வியக்கும்  கன்னித்தமிழ்!

அனைத்து சாதி அர்ச்சகராக சட்டம் போட்டாய்!
அனைத்து சாதி சேர்ந்துவாழ திட்டம் போட்டாய்!

பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுத்தந்தாய்!
எங்களுக்கு மொழியுரிமை கற்றுத்தந்தாய்!

துறைமுகத்தின் வழிகாட்டும் கலங்கரைவிளக்கம் நீ!
அண்ணாதுரை முகத்தின் வழிகாட்டும்  விளக்கு நீ!

வாழ்த்துகளும் வசவுகளும் சளைத்ததில்லை!
எந்நாளும் எதுவுமுனக்கு சலித்ததில்லை!

சமூகநீதியின் வேர் தாங்கும் ஆலமரம்!
சாமானியனும் வந்து போகும் கோபாலபுரம்!

கல்லக்குடி  பெயர் பிறக்க  தலை கொடுத்தாய்!
வள்ளுவனின் பெயர் சிறக்க சிலை வடித்தாய்!

பாளையங்கோட்டை சிறையினிலும் ஒரே முகம்!
ஜார்ஜ் கோட்டை அறையினிலும் ஒரே முகம்! 

வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே நிலை!
என்றும் மாறா ஜென் நிலை உன் நிலை!

நின்ற இடம் அனைத்திலுமே வென்றவன் நீ!
சென்றவிடம் தடம் பதித்து நின்றவன் நீ!

அவ்வப்பொழுது எங்களுக்கு ஆட்சித்தலைவன்!
எப்பொழுதும் எங்களுக்கு மீட்சித்தலைவன்!

மூப்பு வந்ததாலே வாழ்வில் சலிப்பு வருமோ?
சலிப்பின்றி வாழ்வோர்க்கு மூப்பு வருமோ?

தித்திக்கும் முத்தமிழ்க்கு மூப்பு ஏது?
அத்தமிழும் மோகம் கொள்ளும் உன் பேனா மீது!

நீண்ட தமிழ் மணக்கும் ஒரு பாயிரமே!
ஆண்டு பல வாழ்க இன்னும் ஆயிரமே!

#முத்தமிழுக்கு_ஏது_மூப்பு

No comments:

Post a Comment