"ஹிந்திய" மாயை
---------------------------------
தமிழ்நாட்டில் ஒரு ஏழைக்குழந்தையால் இந்தி படிக்க முடியுமா? வசதி படைத்த பிள்ளைகள் வேண்டுமானால் தனியார் பள்ளிகளில் காசு கொடுத்து படிக்கமுடியும் என்ற அங்கலாய்ப்பை பல நேரங்களில் நான் கேட்டிருக்கிறேன்.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இந்தி படிப்பதே ஒரு வித மாயை தான். எனக்குத்தெரிந்தே நிறைய பெற்றோர்கள் ஆங்கில வழிப்பாடத்தில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். Language 2 என்று வரும்போது இந்தியை தேர்வு செய்கிறார்கள். இதற்கு அவர்கள் தருகிற விளக்கம் என்னவென்றால், ஆங்கில வழியில் படிப்பதால் ஆங்கிலம் அத்துப்படி ஆகிவிடுகிறது. அதுபோக தமிழ் ஒன்றும் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்ளவேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இருக்கிறோம், வீடு மற்றும் பொது இடங்களில் தமிழ் பேசுவதை வைத்தே தமிழை பேசிவிட முடியும். ஆகவே அதற்கு சிரத்தை எடுக்கவேண்டாம் என்பது அவர்கள் எண்ணம். தமிழ் இடத்தில் இந்தியை வைத்தால் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடிகிறது. போட்டிகள் நிறைந்த இந்த வியாபார உலகில் அது நாளை ஒருவேளை பயன்படலாம் என்கிறார்கள்.
பெற்றோர்களின் இந்த நியாயமான(!) ஆசையில் என்ன தவறு என்று தோன்றலாம். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படிக்காவிட்டால் எப்படி என்று நரம்புகளை புடைக்காமல் ஆற அமர இதை அணுகலாம். இந்தியை கூடுதல் பாடமாக எடுத்துப்படிக்கும் மாணவர்கள் உண்மையிலேயே இந்தி பேசுகிறார்களா என்றால் கிடையாது. எப்படி நாம் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் மொழியில் படித்தவர்கள் ஆங்கிலம் பேச வரவில்லையோ அதுபோலவே ஆங்கில வழியில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பவர்களாலும் இந்தியை பேச வராது. எனக்குத்தெரிந்த ஒருத்தர் ஆறாம் வகுப்பிலிருந்து இந்தியை ஒரு பாடமாக படித்தார். வழக்கம்போல அவருக்கு இந்தி பேச வராது. அதே நபர் மேல் படிப்புக்காக பூனே சென்று ஒரு வருடம் படித்துவிட்டு வந்தார். இங்கு வந்தவுடன் அவர் சரளமாக இந்தி பேசுகிறார், மராத்தியையும் தன்னால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் என்கிறார். ஏழு வருடங்களாக படித்தும் பேச வராத இந்தி ஒரே வருடத்தில் வந்துவிட்டது. என்னுடைய மாமனார் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். அவருக்கு ஆங்கிலம் பேச வராது. ஆனால் இந்தியில் சரளமாக பேசுவார். எப்படி என்றால் டெல்லியில் ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறார் அதுவும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு. இங்கு வந்து வட இந்தியர்களுடன் அவ்வப்போது பேசி டச் விடாமல் வைத்திருக்கிறார். ஆக தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பதால் ஒருத்தர் இந்தி பேசிவிடமுடியாது.
சரி பேச முடியாவிட்டால் என்ன எழுத முடிகிறதல்லவா, எழுத்துகளை படிக்கமுடிகிறதல்லவா என்று கேட்கலாம். சரி அதன் அவசியம் தான் என்ன? தமிழ்நாட்டில் தமிழ் மொழியை எழுத படிக்கத்தெரியாமலேயே நம்மால் சர்வைவ் பண்ண முடியும் என்று நினைத்துத்தானே இந்தியை தேர்வு செய்கிறார்கள்? தமிழ் எழுத படிக்கத்தெரியாமலே இவர்களால் சர்வைவ் ஆக முடியுமென்றால் இந்தி எழுத படிக்க தெரியாமல் முடியாதா?
அலுவலகங்களில் இந்தி மொழி எழுத படிக்க அறிந்திருப்பதால் எந்த பயனாவது இருக்கிறதென்றால் அதுவும் இல்லை. எனக்குத்தெரிந்து எந்த தனியார் அலுவலகங்களிலும் தங்களது ஈமெயில், கடிதப்போக்குவரத்து, அப்பாயின்மென்ட் ஆர்டர் உள்ளிட்ட எந்த தொடர்புக்கும் ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியிலோ அல்லது தமிழ் மொழியிலோ இதுவரை ஒரு ஈமெயில் கூட நான் பார்த்ததில்லை. எல்லாமே ஆங்கிலத்தில் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டது. டெல்லியில் உள்ள கிளையில் தங்களுக்குள் இந்தியில் பேசுவார்கள். சென்னையில் நாங்கள் தமிழில் பேசிக்கொள்வோம். ஆனால் Official communication என்று வரும்போது ஆங்கிலம் தான்.
இல்லை பணி நிமித்தமாக தமிழ்நாடு தாண்டி வட மாநிலங்களுக்கு சென்றால் இந்தி அவசியம் என்று சொன்னால், பள்ளிப்படிப்பையே சரியாக படித்திராதவர்களே தங்கள் வேலையின் பொருட்டு ஒரு மொழியை கற்றுக்கொள்கிறார்கள் என்றால் நன்றாக படித்த இவர்களால் முடியாதா? இங்கிருந்து அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்கிறவர்கள் போகும்போதே அரபி கற்றுக்கொண்டா செல்கிறார்கள்? இல்லை வட மாநிலங்களில் இருந்து இங்கு முதலாளிகளாக வருகிற மார்வாடிகள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை வரும்போதே தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்களா?
ஆங்கில வழிப்பள்ளிகளில் கூட இந்தியை யாரும் படிக்கக்கூடாது என்று சொல்வதல்ல என் நோக்கம். ஆனால் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை படிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தனக்கு இந்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்று அங்கலாய்க்கிறார் நம்முடைய பிரதமர். ஒன்றும் ஆகியிருக்காது. டீ விற்கும்போதே அவரால் இந்தியை கற்றுக்கொள்ள முடிந்தது என்றால் மற்றவர்களால் முடியாதா? அவசியம் ஏற்பட்டால் யாராக இருந்தாலும் கற்றுக்கொள்வார்கள் என் மாமனாரை போல.
ஆனால் அந்த அவசியம் இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்படவில்லை. இந்தி தெரியாமலேயே எல்லாத்துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. அதற்காக அந்த அவசியத்தை வலியத்திணிக்கலாமா? அதைத்தான் நம்முடைய நடுவணரசு இப்போது செய்கிறது. இல்லையே இப்போது ஒன்றும் இந்தி திணிப்பு இல்லையே, தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக படிக்கத்தேவையில்லையே என்று கேட்கலாம். நேரடித்திணிப்பு வேறு மறைமுகத்திணிப்பு வேறு. மத்திய அரசு பணித்தேர்வுகளை இந்தி மயமாக்குவது உள்ளிட்ட இந்தி திணிப்புகளை கையிலெடுக்கிறது. பிறந்ததிலிருந்தே இந்தியில் புழங்கிய ஒருவரோடு இந்தியை ஒரு பாடமாக மட்டும் எடுத்து படித்தவர் இந்தி தேர்வுகளில் போட்டியிட்டால் என்னவாகும்? இது இந்தி பேசாத மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியல்லவா? இதைத்தான் நாம் தடுத்தாகவேண்டும். இந்தியா எனும் நாடு துண்டாடப்படாமல் இருக்கவேண்டுமென்றால் அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்கவேண்டும். எல்லாவற்றையும் ஆட்சி மொழிகளாக்கவேண்டும். எப்படி மொழியைத்திணித்து பாகிஸ்தான் இரண்டு நாடுகளானதோ இந்தியாவும் பல நாடுகளாக மாறிவிட வாய்ப்புண்டு. வேடிக்கை என்னவென்றால் இந்தியை திணித்து இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பவர்கள் தங்களை தேச பக்தர்கள் எனவும், இந்தி திணிப்பை எதிர்த்து நாட்டை பிளவுபடாமல் காக்க நினைப்பவர்களை பிரிவினைவாதிகள் என்றும் சொல்கிறார்கள். உங்களுக்கு எதுவேண்டும்?
ஒரு நாடு பல மொழிகளா அல்லது ஒரே நாடு ஒரே மொழியா?
#StopHindiImperialism
No comments:
Post a Comment