அறிஞர் அண்ணா, ஏன் தனிநாடு கோரிக்கையை கைவிட்டார்..??
தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையுடன் 1949 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய அண்ணா, அதன்பிறகு தனது கொள்கையில் சமரசம் செய்துகொண்டு தனி நாடு கோரிக்கையை கைவிட்டதாக இன்றும் சிலர் விமர்சனம் செய்வது உண்டு.
சீனா வுடனான போருக்குப் பின்னர் இந்திய நடுவரசு, 1963 ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 16வது சட்ட திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் செய்தது. அதன்படி இந்தியாவில் பிரிவினை கோருபவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இதற்குப்பிறகு அண்ணாவுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன.
1. தனிநாடு கோரிக்கையில் உறுதியாக இருத்தல். ஆனால் தேர்தலில் போட்டியிட முடியாது .
2. தனிநாடு கோரிக்கையை கைவிட்டு தேர்தலில் நின்று மக்கள் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றி திராவிட கொள்கைகளை சட்டமாக்குதல்
அண்ணா தனி நாடு கோரிக்கையை கைவிடாமல் இருந்தால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்று கடைசிவரைக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாமல் அறவழிப் போராட்டங்களை செய்திருக்கவேண்டும் . இல்லையேல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைக் கையில் எடுக்கவேண்டும். அண்ணாவுக்கு ஆயுதத்தின் மீது ஒரு போதும் நம்பிக்கை இல்லை . கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்பது தான் அவருடைய அறிவுரை. தவிர ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தால் என்னவாகும்? அண்ணாவுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கு காரணமாக நிச்சயம் பெருமளவிலான மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்பார்கள். இந்திய ராணுவத்தை வெற்றி கண்டு கிடைக்கிற நாட்டுக்கு அவர் அதிபதியாக கூட ஆகியிருக்க முடியும். ஆனால் அதற்குள் தன்னை நம்பி வந்த மக்களில் பெரும்பகுதியினர் உயிரை விட்டோ, உடல் உறுப்புகளை உடைமைகளை இழந்தோ நிர்க்கதியாக இருப்பர் என்ற உண்மையையும் அவர் உணராமல் இல்லை.
தன்னை நம்பி வந்த மக்களை காவு கொடுத்து அந்த பிணக்குவியலின் மீது சிம்மாசனத்தைப் போட்டு அரியணை ஏற அண்ணா விரும்பவில்லை. அன்று அண்ணா எடுத்த முடிவு தான் தமிழகத்தின் வரலாறையே மாற்றிப்போட்டது. ஒட்டுமொத்த தமிழர்களையும் நிம்மதியுடன் தலை நிமிர வைத்தது. ஜனநாயகத்தின் மூலமே கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என மனதார நம்பினார். அதை நிறைவேற்றியும் காட்டினார். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை கையில் எடுத்தார். தேர்தலில் வென்று வந்தவுடன் முதல் காரியமாக மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என மாற்றி சட்டமாக்கினார். தமிழகத்தில் கட்டாயம் இந்தி படித்தாக வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் உத்தரவை மாற்றி இருமொழிக்கொள்கையை சட்டமாக்கினார்.
இன்று அண்ணா தனது தனிநாடு கோரிக்கையை கைவிட்டார் என்று குற்றம் சுமத்திக்கொண்டே தேர்தலில் நிற்கிற சில அமைப்புகளை பார்த்தால் உண்மையிலேயே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் 16 வது சட்ட சீர்திருத்தத்தின் படி இந்திய பிரிவினையை கோரமாட்டேன் என பிரமாணம் எழுதிக்கொடுத்துவிட்டு வந்து தேர்தலில் நிற்பவர்கள் அண்ணா மீது அப்படியொரு குற்றச்சாட்டை வைத்தால் நகைப்பு வராதா?
அண்ணாவின் மிகச்சாதுரியமான அந்த முடிவு தான் அவரை மகத்தான தலைவனாக அடையாளங்காட்டுகிறது. தலைவன் என்பவன் தன்னுடைய மக்களை இழந்தாவது வெற்றியை பெறுபவன் அல்லன். தன்னை நம்பி வந்த மக்களை கொல்லாமலேயே, அவர்களை இழக்காமலேயே தன்னுடைய சிறிய நன்மையை தியாகம் செய்து மக்கள் நலன் எனும் பெரிய நன்மையை முன்னெடுத்துச் செல்பவனே உண்மையான தலைவன். அறிஞர் அண்ணா - இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவன்! இன்று தமிழகத்தில் ரத்த ஆறு ஓடாமல், தமிழர்கள் வீடுகளில் மரண ஓலம் ஒலித்துக்கொண்டு, படிக்க வேண்டிய பிள்ளைகள் ஆயுதங்களை சுமந்துகொண்டு, தாய்மார்கள் பிள்ளைகளை இழந்து, பெண்கள் கணவனை இழந்து, வீடிழந்து நாடிழந்து போன்ற கொடுமைகள் ஏதுமின்றி நிம்மதியுடன் வாழ முடிகிறது என்றால், அதற்காக நாம் அனைவரும் அறிஞர் அண்ணா என்ற தலைவனுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் என்றால் அது மிகையாகாது ...!