2016 தேர்தல் முடிவுகள் - ஒரு பார்வை
------------------------------------------------------------------
முதலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய அதிமுகவிற்கு எனது வாழ்த்துகள். பொதுவாக தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை மக்கள் என்ன முடிவு தருகிறார்களோ அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை என்னால் அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திமுக தோற்றுள்ளது என்பதற்காக இதை சொல்லவில்லை. 130 - 100 என்பதற்கு பதிலாக அதிமுக 150 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருந்தால் கூட நான் அதை மக்கள் தீர்ப்பு என மகிழ்ந்திருப்பேன். இப்போது வந்துள்ள தீர்ப்பு மகிழ்வதற்கு அல்ல என்பதற்கு என்னிடம் சில காரணங்கள் உள்ளன.
அதிமுக ஆளுங்கட்சி எதிர்ப்பு அலையை வென்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது. 294 தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் மம்தா 220 தொகுதிகள் பெற்றுள்ளார் அல்லவா, அதுதான் எதிர்ப்பை வென்ற அரசு. 100 தொகுதிகளில் வந்துள்ள திமுகவை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் கொள்ளமுடியாது. தொழில் புரிவோர், சிறு வியாபாரிகள், ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள் என இவர்கள் திமுக வர வேண்டும் என விரும்பினார்கள். அதே சமயம் பெண்கள் அதிகளவில் அதிமுகவிற்கே வாக்களித்துள்ளார்கள்.
ஜெ அம்மையார் தன்னுடைய மிகப்பெரிய பலமே பெண்கள் வாக்கு வங்கி என்பதை நிரூபித்துள்ளார். இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம். திமுகவும் அதன் காரணமாக பெண்களை கவர்ந்துவிடலாம் என எண்ணி அழுத்தம் திருத்தமான உறுதியுடன் மதுவிலக்கு திட்டத்தை வலியுறுத்தியது. ஆனால் அது பெண்கள் மத்தியில் எடுபடவில்லை. மாறாக தமிழகத்திலுள்ள 45 சதவீத குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் Backfire ஆகிவிட்டுள்ளது. "படிப்படியாக மதுவிலக்கு " என்று அதிமுக வின் அறிவிப்பே மதுவிலக்கு இல்லை என்பதை நாசூக்காக அறிவித்தது. அந்த கவர்ச்சிகரமான அறிவிப்பில் திமுகவிற்கு வழக்கமாக போடுபவர்கள் கூட மாற்றி போட்டிருக்க வாய்ப்புண்டு.
அடுத்ததாக தேர்தல் அறிக்கை. நடுநிலையான அனைவருக்குமே தெரியும் அதிமுக வை விட திமுகவின் தேர்தல் அறிக்கை தான் மிகச்சிறப்பானது என்று. அதிமுக தேர்தல் முடிய பத்து நாட்கள் உள்ள போது ஏதோ கடமைக்கு விட்ட அறிக்கை போல இலவசங்களை அடுக்கியிருந்தது. மக்கள் தேர்தல் அறிக்கையை எல்லாம் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. விளைவாக கட்சிகள் தேர்தல் அறிக்கைக்கென மெனக்கெடுவதை நிறுத்திவிடுவார்கள்.
முக்கியமான விஷயம் ஜெ வின் ஆட்சி பாணி. ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒருவரிடமே குவிக்கப்படுவது நல்ல நிர்வாகமல்ல. தேர்தல் பிரச்சாரத்தைக் கூட அவரால் ஜனநாயக முறைப்படி செய்ய முடியவில்லை. ஆனால் திமுக தரப்பில் மக்களோடு மக்களாக பயணித்தனர். இருப்பினும் வந்த முடிவுகளோ அதிமுகவிற்குத்தான் சாதகம். இது ஏற்படுத்தப்போகிற விளைவுகள் ஆபத்தானவை. ஜெ பாணி அரசியல் தான் தமிழகத்திற்கு லாயக்கு என்பது போல ஆகிவிடும். அவர் மீண்டும் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என நினைத்து இன்னும் அதிகமாக அதே பாணியையே கையாள்வார். அரசியல் செய்பவர்கள் தேர்தலின் போது மட்டும் மக்களை தேடி வந்தால் போதும் போல என்ற விரக்தி சிந்தனையை மற்ற கட்சிகளிடையே வளற ஆரம்பிக்கும். இது மக்களாட்சிக்கு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியின்மை, பொருளாதார வீழ்ச்சி, திட்டங்கள் நடைபெறாமல் கிடப்பது, விலைவாசி உயர்வு என பல அதிருப்திகள் இருந்தாலும் தேர்தலின் போது பணம் செலவழித்தால் மறக்கடித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது.
தமிழ்நாட்டில் தலையெடுத்துள்ள ஆணவக்கொலைகள் விவகாரம் ஒரு புறம் இருக்க, கொங்கு மண்டலம் முழுக்க அதிமுக வின் கோட்டையாக மாறியிருப்பது ஆபத்தானது. மிக துணிச்சலான லேடி என்ற பெயரெடுத்த முதல்வர் கடந்த ஐநுதாண்டுகளில் ஆணவக்கொலைகள் பற்றி என்ன கருத்து தெரிவித்துள்ளார்? ஒன்றுமில்லையே. ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் தைரியமாக வாட்சப் ஆடியோ ரிலீஸ் செய்கிற அளவிற்கு சாதியத்தை கண்டும் காணாமல் இருக்கிற நிலை தொடருமானால் அது ஆபத்தானது இல்லையா? அதே கொங்கு மண்டலத்தில் பாஜக வும் தனது வாக்கு வங்கியை பலப்படுத்தி வருவதும் ஆபத்தானது. இனிமேல் அரசியல் கட்சிகள் அங்கு நடைபெறுகிற சாதிய வெறியாட்டங்களை கண்டும் காணாமலே இருப்பார்கள்.
அடுத்ததாக திமுகவின் தவறாக நான் பார்ப்பது காங்கிரசிற்கு 41 தொகுதிகளை வழங்கியது. அதில் நான்கில் ஒரு இடங்களைத்தான் காங்கிரஸ் வென்றுள்ளது. 41ல் இருபது இடங்கள் திமுக நின்றிருந்தால் இன்னும் பத்து இடங்களை கூடுதலாக வந்து சம பலம் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதுபோக மூன்றாவது அணி. அந்த அணி 30 இடங்களில் வந்திருந்தால் கூட பரவாயில்லை. அட்லீஸ்ட் ஒரு கட்சி படுதோல்வி அடையக்கூட செய்ய முடியவில்லை. இதன் விளைவு என்னவென்றால் திமுக அதிமுக விற்கு மாற்று என்ற கோஷத்தை குழி தோண்டி புதைத்துவிட்டது. இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மூன்றாவது அணியால் தலை தூக்க முடியாது. அது மட்டுமின்றி விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் இவைகளின் நிலைமை இனி கவலைக்கிடமாகிவிடும். ஆக மொத்தம் திமுக அதிமுக விற்கு மாற்றும் கிடையாது, அதேவேளை இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது என்பது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் திமுகவையே தங்கள் முதன்மை எதிரியாக பார்த்ததின் விளைவு இது.
தோல்விகளுக்கு எவ்வளவு காரணங்கள் தேடினாலும் அவை நிராகரிக்கப்படும் என்பது தெரிந்ததே. அதற்காக தோல்விக்கான காரணத்தை ஆராயாமலும் இருக்கமுடியாது. அப்புறம் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இப்படியொரு வெற்றியை தந்ததற்காக ஜெ அம்மையார் உண்மையிலேயே தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்கவேண்டும். குறைந்தபட்சம் எவர்சில்வர் தட்டிலாவது வைத்து தாங்குகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் ...!