கேள்வி : அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஏன் தமிழர் எழுச்சித்திருநாள்...?
பதில் : தலைவன் என்பதற்கு இலக்கணம் தான் கொண்ட லட்சியத்துக்காகத் தன் மக்களை இழந்தாலும் பரவாயில்லை, கொள்கையில் உறுதியாக நிற்பது அல்ல. தன் மக்களுக்கு எது நல்லது என்பதை தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து அதனால் கிடைக்கும் பெரிய நன்மைக்காக தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்து சிறிய நன்மையை இழந்து அந்த பெரிய நன்மையை நோக்கி நகர்பவனே உண்மையான தலைவன். அந்த வகையில் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் மிகச்சிறந்த தலைவர்.
மொழியுரிமை, சுயாட்சி, சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக களம் கண்ட திமுக திராவிட நாடு கோரிக்கை என்ற நிலையிலும் இருந்தது அந்த இயக்கம். அப்போது அண்ணாவுக்கு தமிழகத்தில் இருந்த செல்வாக்கு அனைவருக்கும் தெரியும். அவர் நினைத்திருந்தால் தனி நாடு கோரிக்கையில் உறுதியாக நின்று லட்சக்கணக்கான மக்களை காவு கொடுத்து அந்த நாட்டின் அதிபர் ஆகியிருக்கலாம். அல்லது அதற்காக தொடர்ந்து இயங்கியிருக்கமுடியும். ஆனால் மக்கள் இறப்பது உறுதி. அந்த நேரத்தில் அண்ணா எடுத்த முடிவுதான் அவரை மிகச்சிறந்த தலைவனாக கொண்டாடச் செய்கிறது.
தேர்தல் ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்து இந்தியநாட்டின் ஒருபகுதியாகவே இருக்கிற நிலைமைக்கு இணங்கி வாக்குகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற அவர் அன்று எடுத்த முடிவு தான் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடாமல் தடுக்கச்செய்தது. அப்படி அன்று அவர் தவறான முடிவு எடுத்திருந்தால் தமிழகத்தின் அமைதி பறிபோய், மக்கள் மின்சாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இழந்து, மாணவர்கள் படிக்க வேண்டிய வயதில் ஆயுதங்களை ஏந்தி, குடும்பத்திற்கு ஒருத்தர் ஆயுதப்போராட்டத்தில் செத்து, எப்ப யார் சாவார்கள் என்று அச்சத்திலேயே மக்கள் வாழவேண்டி இருந்திருக்கும்.
அண்ணா தனக்காக தன் மக்களை இழக்க விரும்பவில்லை. தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து வாக்கரசியலில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மாநில சுயாட்சி, சமூக நீதி என தன்னுடைய இயக்கத்தின் கொள்கைகளை ஒவ்வொன்றாக ஜனநாயகத்தின் மூலமே சாத்தியப்படுத்தினார். அதனுடைய விளைவு தமிழகம் இன்று மற்ற மாநிலங்களை விட சிறந்து விளங்குகிறது. ஜனநாயகத்தின் மூலமாகவே மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று எம் மக்களுக்கு கற்றுத்தந்த அண்ணா தான் எங்கள் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தியத் தலைவர். அவருடைய பிறந்தநாள் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் தமிழர்களின் எழுச்சி நாள் தான்...!
No comments:
Post a Comment