ரொம்ப காலம் எல்லாம் வேண்டாம். ஒரு இருபது இருபத்தைத்து ஆண்டுகள் பின்னோக்கிப் போகலாம் வாருங்கள். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஜெயலலிதா மூன்று முறையும் கலைஞர் இரண்டு முறையும் ஆட்சி செய்திருக்கிறார்கள். திமுக ஆளுங்கட்சி யாக இருந்து தேர்தலை இரண்டு முறை சந்தித்துள்ளது. அதிமுக ஆளுங்கட்சி யாக இருந்து தேர்தலை சந்திப்பது இது மூன்றாவது முறை. திமுக எப்போதும் தனது ஆட்சிக்காலத்தில் நடத்திய சாதனைகளை, கொண்டுவரப்பட்ட திட்டங்களை முன்னிலைப்படுத்தியே வாக்கு கேட்கும். நீங்கள் கவனித்து இருந்தால் தெரியும், ஜெ ஒருமுறை கூட தனது ஆட்சியை முன்னிறுத்தி வாக்கு கேட்டதில்லை. இதோ இந்த முறையும் அவர் இந்த ஆட்சியை முன்னிறுத்தி வாக்கு கேட்கப்போவதில்லை. அவரிடம் இருக்கும் ஒரே அஸ்திரம் வழக்கம்போல எம்ஜியார்.
என் சொந்தக்காரர் ஒருத்தர் இருக்கிறார். வயது 60 இருக்கும். மழை வெள்ளத்தில் வீட்டிலுள்ள பொருட்களை இழந்துவிட்டு வாடியவர்களில் அவரும் ஒருத்தர். தீவிர எம்ஜியார் பக்தர். எம்ஜியார் நடித்த ஒரு படத்தின் ஸ்டில்லை வைத்தே அது எந்தப்படம் என்று சொல்லிவிடுவார். அவரை சென்ற மாதம் பார்த்தேன். சும்மாவாச்சும் அவர் வாயை கிளறுவதற்காக என்னங்க எலக்சன் லாம் எப்படி இருக்கும்? யார் ஜெயிப்பாங்க? என்று கேட்டேன். அவர் "இந்த வாட்டி எதுவும் சொல்ல முடியலப்பா, ரொம்ப டப்பா தான் போகும் போல இருக்கு! " என்றார். நான், "சரி நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க? " என்றேன். அவர் "நாம எப்பவுமே ரெட்ட எல தான் " என்றார். "ஏன் அவ்ளோ சிறப்பாவா அம்மா ஆட்சி பண்றாங்க? " என்றேன். " இந்த முறை அந்தம்மா ரொம்ப மோசம்பா! " என்றார். "அப்புறம் ஏன் அம்மாவுக்கே திரும்ப போடுவீங்க? " என்றால் "அது எம்ஜியார் ஆரம்பிச்சப்போ இருந்ததில இருந்து வருதுப்பா அத மாத்த முடியாது. எம்ஜியார் னா ரெட்ட எல " என்ற பதில் வந்தது.
தமிழ்நாட்டில் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி என்று இப்போது அடிக்கடி டிவி விவாதங்களில் பேசுகிறார்கள் இல்லையா அது இப்படி வந்தது தான். தமிழ்நாட்டிலேயே எம்ஜியார் தான் சிறப்பாக ஆட்சி செய்தார் அதனால் தான் அவருடைய பெயருக்காக இன்னமும் வாக்களிக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எம்ஜியார் நன்றாக ஆட்சி செய்தாரா? ஆமாம் நன்றாக செய்தார். ஆனால் அதற்காக அவரை ஞாபகம் வைத்து வாக்களிப்பதில்லை. அப்படியென்றால் அறிஞர் அண்ணா போல ஆட்சியை தருவோம் என்று திமுகவும் காமராஜர் போல ஆட்சியை தருவோம் என்று காங்கிரசும் சொன்னால் ஓட்டு விழுந்துவிடுமா என்றால் விழாது. எம்ஜியாரின் நிர்வாகத்திறன் மீது எனக்கு சில விமர்சனங்கள் உள்ளன. ஆனால் எம்ஜியார் பக்திக்கும் அவருடைய ஆட்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதுதான் நான் சொல்கிற விஷயம். ஆட்சி நிர்வாகத்தை ஒட்டி இந்த பக்தி வந்திருந்தால் அந்த ஆட்சி போல இந்த ஆட்சி இல்லை என்று தெரிந்தவுடனேயே போய்விடும். ஆனால் இது சினிமா கவர்ச்சியினால் வந்த பக்தி.
எனவே தான் ஜெ வும் தேர்தல் காலங்களில் எம்ஜியார் பிம்பத்தையே நம்பி இருக்கிறார். தான் எவ்வளவு தவறுகள் செய்தாலும் எம்ஜியார் பெயருக்காக தனக்கு வாக்களிக்கும் தொண்டர்கள் அவருக்கு உண்டு. நேரு பெயருக்காக காங்கிரசுக்கு யாரும் ஓட்டு போடுவதில்லை, காமராஜருக்காக போடுவதில்லை. அண்ணா பெயருக்காக கலைஞருக்கு போடுவதில்லை. ஆனால் ஜெ வுக்கு மட்டும் எம்ஜியார் பெயருக்காக ஓட்டு போடும் தொண்டர்கள் உண்டு. அப்படியென்றால் எம்ஜியார் தான் அவருடைய ஆட்சியிலும் கட்சியிலும் பிரதானமாக வைத்திருக்கவேண்டும் இல்லையா? அப்படியா என்றால் அதுதான் இல்லை!
கருணாநிதி முதன்முறையாக ஆட்சிக்கு வருகிறார். தனது ஆட்சிக்காலத்தில் உருவான நகருக்கு தனது தலைவரின் நினைவாக அண்ணா நகர் என்று பெயர் வைக்கிறார். சென்னையின் பிரதான சாலைக்கு அண்ணா சாலை என்று பெயர் மாற்றுகிறார். கட்சி அலுவலகத்திலிருந்து கடைசியாக கட்டிய நூலகம் வரைக்கும் அண்ணா பெயரை வைக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிறார். தான் உருவாக்கிய பகுதிக்கு ஜெ ஜெ நகர் என்று தன்னுடைய பெயரை வைத்துக்கொள்கிறார். திரைப்பட நிறுவனத்திற்கு ஜெ ஜெ திரைப்பட நகரம் என்ற பெயரை வைக்கிறார். போக்குவரத்து கழகத்துக்கு தனது பெயரை வைத்துக்கொள்கிறார். அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா தண்ணீர் என சகலவற்றிலும் அவருடைய பெயர் தான். அண்ணா நினைவுநாளில் அண்ணா படத்தை பெரிதாக போட்டு போஸ்டர் அடிப்பதுதான் திமுகவில் வழக்கம். எம்ஜியார் நினைவுநாள் போஸ்டரில் கூட எம்ஜியார் படத்தை சின்னதாக போட்டுவிட்டு ஜெயலலிதா படத்தைப் பெரிதாக போட்ட கூத்துகளை கூட கடந்த வருடங்களில் பார்த்தோம்.
ஆக ஆட்சியிலிருக்கும் ஐந்து வருடங்களில் ஜெவுக்கு எம்ஜியார் ஞாபகம் வருவதில்லை. தேர்தல் வரும்போது மட்டுமே அவர் தேவைப்படுவார். சரி, தங்களுடைய இதய தெய்வத்தை ஜெ நடத்துவதைப் பார்த்து அவருடைய பக்தர்கள் கோபம் கொள்கிறார்களா என்றால் அதுவுமில்லை. அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? என்ற பாடலைக் கேட்டு ரசித்துக்கோண்டே, ஹெலிகாப்டரில் ஜெ பறந்து வருகிறார் என்றால் வானத்தைப்பார்த்து கையெடுத்து கும்பிடுகிற தொண்டர்கள் இருக்கும் வரை அவருக்கு எம்ஜியார் எப்போதாவது தொட்டுக்கொள்ள பயன்படும் ஊறுகாய் தான்.