Wednesday, 18 October 2017

எது மருத்துவம்?

ஆங்கில மருத்துவம் என்றோ அலோபதி என்றெல்லாம் ஒரு மருத்துவம் கிடையாது.  அது வேறுபாடு தெரியவேண்டும் என்பதற்காக கொடுத்த பெயர் தானே ஒழிய அதற்கு பெயர் அறிவியல் மருத்துவம் அல்லது நவீன மருத்துவம். 

அறிவியல் மருத்துவம் தான் சிறந்ததா மற்றவை எல்லாம் சிறந்தது இல்லையா எனக்கேட்கிறவர்களுக்கு : சந்தேகமே வேண்டாம்,  Modern medicine தான் சிறந்த மருத்துவம். 

பொது ஜனங்களுக்கு ஒரு எளிய கேள்வியை முன்வைக்கிறேன் :

எத்தனையோ பெயர்களில் மருத்துவம் இருக்கிறது.  ஒரு நோயாளியின் உடலில் கத்தியை போட்டு அறுக்கிற உரிமையை அரசாங்கம் எந்த டாக்டருக்கு வழங்கியுள்ளது?  எம்பிபிஎஸ் படிச்ச டாக்டருக்குத்தானே!  ஏனென்றால் அவர் தான் நோய்களை பற்றி படிப்பதற்கு முன்னரே ஒரு உடலின் அமைப்பியல் Anatomy,  இயங்கியல் Physiology படிக்கிறார். 

ஒருத்தர் ரோடு ஆக்ஸிடென்ட் ல தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து கிடக்கிறார்.  அவரை எந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவீங்க? 

அடுத்தது மருத்துவ அறிவியல் என்பது மூடி மறைக்காமல் ஒளிவுமறைவற்றதாக இருக்கவேண்டும்.  அமெரிக்காவில் படிச்ச ஒரு டாக்டர் சென்னை ஆஸ்பத்திரியில் வந்தாலும் சர்ஜரி செய்ய முடியும்.  நான் பண்ற மருந்து என் ஊரு ஆளுங்களுக்குத்தான் கேட்கும்,  அதுக்குள்ள என்னென்ன கலந்துருக்கேன் என்பதை என் சக மருத்துவரிடம் கூட சொல்லமாட்டேன் என்பதற்கு பெயர் பாரம்பரிய மருத்துவம் கிடையாது டுபாக்கூர் மருத்துவம். 

அடுத்தது மருத்துவம் என்றால் அதில் பேத்தாலஜி Pathology என்ற ஒன்று இருக்கவேண்டும்.  எந்த மருத்துவத் தில் Pathology இருக்கிறது? 

ஒருத்தருக்கு காய்ச்சல் னா நெற்றிய தொட்டு பார்த்து உடம்பு சூடா இருக்கு என சொல்வது நீங்களோ நானோ செய்வது.  அதை மட்டுமே வைத்துக்கொண்டு வைத்தியம் பார்ப்பதற்கு பெயர் மருத்துவம் அல்ல.  குறைந்தபட்சம் தெர்மாமீட்டரை கொண்டு உடலின் வெப்பநிலை எவ்வளவு என்பதை துல்லியமாக அளக்கவேண்டும்!

அனாட்டமி தெளிவாக இருப்பதால் தான் நவீன மருத்துவத்தால் மனுஷனுக்கும் வைத்தியம் பார்க்க முடிகிறது.  நாய் பூனை மாடு குரங்குங்கும் வைத்தியம் பார்க்க முடிகிறது.  மனுஷனுக்கு வைத்தியம் பார்க்க இத்தனை மாற்று மருத்துவ முறையாளர்கள் போட்டியில் உள்ளனரே ஏன் மிருகங்களுக்கு மாற்று மருத்துவ முறைகள் இல்லை?

உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கென தனித்தனி அனாட்டமி பிசியாலஜி சிகிச்சை முறைகள் இருப்பதால் தான் நவீன மருத்துவத்தில் ஒவ்வொ ரு உறுப்பு மண்டலத்துக்கும் தனித்தனி டாக்டர் இருக்கிறார்.  சிட்டியிலேயே பெரிய கார்டியாலஜிஸ்ட் ட போய் டாக்டர் நீங்க பெரிய ஹார்ட் சர்ஜன் ஆச்சே என் கண்ணுல கேட்டராக்ட் இருக்கு Cataract surgery பண்ணுங்க என்றால் பண்ணமாட்டார்.  Ophthamic surgeon க்குத்தான் அனுப்புவார்.  உடம்பிற்கு ஏற்படுகிற எல்லா வகையான பிரச்சினைக்கும் நான் ஒரே டாக்டரே போதும் என சொல்கிற மருத்துவமுறை அல்ல நவீன மருத்துவம். 

அடுத்தது மருத்துவ அறிவியல் என்பது உயிரோடு இருப்பவர்களின் காய்ச்சலுக்கு மருந்து தருவது மட்டுமே அல்ல.  ஒருத்தன் செத்துட்டான் னா எப்படி செத்தான்,  எத்தனை மணிக்கு செத்தான் எல்லாத்தையும் கண்டுபிடிக்கறதும் சேர்த்துத்தான் மருத்துவம்.  ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாலா,  எத்தனை பேர் பாலியல் வல்லுறவு செய்தனர்,  விந்தணுவை வச்சு எவன் ரேப் பண்ணான் என கண்டுபிடிக்கறதும் அறிவியல் மருத்துவம் தான்.  ஒரு வருஷத்துக்கு முன்ன புதைக்கப்பட்ட பிரேதத்தை தோண்டியெடுத்து உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிப்பது என இது எல்லாம் சேர்ந்தது தான் ஒரு மருத்துவம். 

அடுத்தது பக்க விளைவுகளைப் பற்றி சொல்கிறார்கள்.  ஆமாம் பக்கவிளைவு இருக்கிறது தான்.  விளைவு என்ற ஒன்று இருந்தால் பக்க விளைவு என்ற ஒன்றும் இருக்கத்தான் செய்யும்.  கேன்சருக்கு கதிரியக்க சிகிச்சை அளித்தால் பக்க விளைவாக முடி கொட்டும் தான்.  அதற்காக பக்க விளைவுகளே இல்லாமல் சூரணம் கொடுத்து கேன்சரை குணப்படுத்துவோம் என்று சொல்வது டுபாக்கூர். 

அரசாங்கமே சித்தா,  ஆயுர்வேதம்,  ஓமியோ என மருத்துவக்கல்லூரிகளை நடத்துகிறது  அதிலே படித்து அந்தந்த மருத்துவர்களாக வெளியே வருகிறார்கள்.  தவறேதுமில்லை.  வாருங்கள் வந்து கிளினிக் போடுங்க,  வைத்தியம் பாருங்க. நம் நாட்டின் ஜனத்தொகைக்கு இன்னும் எத்தனை டாக்டர்கள் வந்தாலும் தேவைதான்.  ஆனால் நவீன அறிவியல் மருத்துவத்தை விட நாங்க தான் பெஸ்ட்,  சூப்பர்,  நவீன மருத்துவம் கூடாது என சீன்  போட்டா உங்களை அறிவியல்பூர்வமாகவே தோலுரிப்பதை தவிர்க்க முடியாது. 

நான் டாக்டர் லாம் கிடையாது.  எனக்கு இருக்கிற பகுத்தறிவை கொண்டு சிந்திக்கிறவன்.  வேறு ஏதாவது இதில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். என்னால் முடிந்தவரை பதிலளிக்கிறேன்.  தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமேதுமில்லை..!

-சிவசங்கரன் சரவணன்

Sunday, 8 October 2017

பெரியார் : தலித் விரோதியா? உண்மை என்ன?

தாழ்த்தப்பட்ட பெண் ரவிக்கை அணிவதை பெரியார் எதிர்த்தாரா? திரிபுவாதங்களுக்கு மறுப்பு: பெரியாரே விளக்குகிறார்
தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கை அணிவதையே பெரியார் எதிர்த்ததாக உண்மைக்கு மாறான ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த செய்தியை பரப்பியபோது, அதை மறுத்து பெரியார் ஆற்றிய உரை ‘விடுதலை’ 15.12.1968 இல் இடம் பெற்றுள்ளது. உரை விவரம்:
இன்றைய தினம் பெருமை மிக்க மேயர் (வேலூர் நாராயணன்) அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதைச் சாப்பிட்டேன். சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72-75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தீன் ரீ-ஆக்ஷன் தான் அது வேறொன்றுமில்லை. உங்களுக்கு வயது அதிக மானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். வேறொன்றுமில்லை என்று சொல்லி ஒரு ஊசியைப் போட்டு என்னை இரண்டு நாள்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். சாயந்திரம் பேச வேண்டுமே என்று சொன்னேன். நல்லா பேசுங்க என்று சொன்னார். அதன் பின் தான் கூட்டத்திற்கு வர முடிந்தது.
நான் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது எனக்கு போன் வந்தது. போனில் பேசியவர்கள் நம்முடைய மாண்புமிகு அமைச்சர், அம்மையாரவர் களை (திருமதி சத்தியவாணி முத்து) மேயரவர்கள் சாதியைக் குறித்துக் கேவலமாகப் பேசியதாக குறிப்பிட்டார்கள். அதற்கு நான் அவர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். அவர் படித்தவர், பெரிய பதவி வகிப்பவர், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டார். அப்படி அவர் சொல்லியிருந்தால் நானே கண்டிக்கின்றேன். மன்னிப்பு கேட்கச் செய்கின்றேன் என்று சொன்னேன். மேயரவர்களைக் கேட்டதற்கு நான் சொல்லவில்லை என்று சொன்னார்.
சாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் – சக்கிலி – வண்ணான் – பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பனர் தன்னை மேன்மைப்படுத்திக் கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால், நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான் தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல, சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசி புத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலு மிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான், ‘ராஜா சர்’ருக்கும் தான். வேறு பார்ப்பனரல்லாத எல்லோருக்கும் தான்.
பறையன் என்று சொல்லக் கூடாது என்று தான் சொன்னார்களே தவிர, தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.  பறையன் என்று சொல்லக் கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குக் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரூ.55,000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்து விட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக் கேணி, கோயில், பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன். நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில், பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.
“நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ் களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்ட சிலர் என்னிடம் வந்து நீ எப்படி சொல்லலாம் என்று கேட்டார்கள். நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது, போட்டால் துணியே போடக் கூடாது. அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது? இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடிய வில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய் வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும்” என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர். இன்று காலை ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசக் கவுண்டரின் மகளுக்கும் ராஜா சர் முத்தய்யா செட்டியாரின் தங்கை மகனுக்கும் (ப. சிதம்பரம்) நடைபெற்ற திருமணம். இதைக் கலப்புத் திருமணம் என்று சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை எது கலப்புத் திருமணம் என்றால் மனித ஜாதிக்கும் மிருகத்திற்கும் நடப்பதே கலப்புத் திருமணமாகும்.
ஒரே ஜாதி மனித ஜாதி என்பது மாத்திரமல்லாமல் மணமக்கள் இருவருமே சூத்திர ஜாதி நாலாஞ் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதோடு நாலாம் சாதி நடுத்தர சாதியாக இருப்பதைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாத சாதியைச் சார்ந்தவர்களாவார்கள். நான் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும் பார்ப்பானுக் கும், பார்ப்பனத்திற்கும் தாழ்த்தப்பட்ட ஆணுக்கும் இன்னும் இது போன்று பல சாதி கலப்புள்ள நூற்றுக்கணக்கான திருமணங்களைச் செய்து வைத்திருக்கின்றேன்.
ஜாதி என்பது ஒன்றுதான். இரண்டு பேர்களும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி பிள்ளைகள்தான். ஜாதியைக் காப்பாற்றத் தான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் இராஜாஜிகூட தன் மகளைச் சூத்திரரான காந்தியின் மகனுக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார். காங்கிரசினால் காமராஜரும் அவருடைய கம்பெனியும் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் இராஜாஜியின் சீடர்கள்தான். இராஜாஜி அவர்கள் நம்மோடு தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் சாப்பிடுவார். தன்னுடைய மகளைச் சூத்திரனான காந்தியின் மகனுக்குக் கொடுத்திருக்கிறார் என்றாலும் பிள்ளைகளை (பேரன்களை)யெல்லாம் பூணூல் மாட்டிப் பார்ப்பானாக்கி விட்டார்.
தேவதாசி வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை ஜாதியைக் காப்பதற்கென்றே பத்திரிகை நடத்துகின்ற ‘கல்கி’ பத்திரிகையின் அதிபர் சதாசிவம் என்ற பார்ப்பனர் திருமணம் செய்து கொண்டார். அவருக்குத்தான் இராஜாஜி முன்னோடும் பிள்ளையாக இருக்கிறார்.  தேவதாசி வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மியை ஜாதியைக் காப்பதற்கென்றே பத்திரிகை நடத்துகின்ற ‘கல்கி’ பத்திரிகையின் அதிபர் சதாசிவம் என்ற பார்ப்பனர் திருமணம் செய்து கொண்டார். அவருக்குத்தான் இராஜாஜி முன்னோடும் பிள்ளையாக இருக்கிறார்.
இப்படி ஏராளமான பெரிய இடம் என்று சொல்லும்படியான இடங்களிலெல்லாம் நடை பெற்று இருக்கிறது. நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பிலேயே மாறுபட்ட ஜாதியைச் சார்ந்த பலரைத் திருமணம் செய்து வைத்திருக்கின்றேன். அதற்கெல் லாம் இராஜா சர் (முத்தையா செட்டியார்) வந்து பாராட்டியிருக்கின்றார். இராஜா சர் எனக்கு ரொம்பவும் வேண்டியவர். நான் செய்கின்ற காரியங்களை எல்லாம் பாராட்டுபவர். எனது மதிப்பிற்குரியவர். பணத்தில் மட்டுமல்ல, உண்மையிலேயே பெருந்தன்மை வாய்ந்த பெரியவர். அவர் அந்த சமுதாயத்தையே திருத்த வேண்டிய வராவார். அவர் இத்திருமணத்திற்கு வராததன் மூலம் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பையே இழந்து விட்டார் என்று தான் சொல்லுவேன்.
பார்ப்பானைத் தவிர ஜாதியைப் பற்றி பேசுகின்றவன் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனேயாவான். என்னைப் பொருத்த வரை நான் பறையனாக இருப்பதை கேவலமாக கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைவிட பறையனாக இருப்பதை பெருமையாகக் கருதுகின்றேன். எனக்குப் பிள்ளை இல்லை என்பது பற்றி ரொம்ப சந்தோசப்படுகின்றேன். ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன். காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதுபோல தாழ்ந்த சாதி பையன்களைப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அய்யா (வேலூர் நாராயணன்) அவர்கள் அப்படி கருதி இருப் பாரானால் அவர் முன்னேற்றக் கழகத்திலிருப்பதற்கே லாயக்கற்றவர்தான். அவர்களைப் பார்த்து பறையர் என்று சொல்லி விட்டோம். அவர்களிலே வைப் பாட்டி மகன் இல்லை. நம்மில் தான் வைப்பாட்டி மகன் என்று இருக்கிறது. தாழ்த்தப்பட்ட பெண் தானாகப் போனால்கூட பார்ப்பான் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
நாம் ஜாதியை ஒழிக்க வேண்டும். நம் நாட்டில் இரண்டே ஜாதி தான் இருக்கிறது. ஒன்று பார்ப்பான். மற்றொன்று சூத்திரன். இதைத் தான் ஒழிக்க வேண்டும். ஒழியாமல் பாதுகாப்பதற்காகத் தான் பார்ப்பான், செட்டி, முதலி, நாயக்கர், கவுண்டன், படையாச்சி என்று நமக்குள் பல சாதிகளைப் பிரித்து அதில் ஒன்றுக்கொன்று நம்மை ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்திருக்கின்றான்.
நாங்கள் தமிழர்கள், சூத்திரர்கள் அல்லர். இந்துக்கள் அல்ல என்கிற உணர்ச்சி நம் மக்களுக்கு வரவேண்டும். இன்றைய தினம் இந்த பேச்சு பேசியதற்கு அம்மையாரிடம் அய்யா மேயர் அவர்களிடமிருக்கிற அன்பைவிட அதிகமான அன்பு கொண்டிருக்கின்றேன். அம்மையாரும் பெருமைமிகு மேயரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். நமக்குள் இதெல்லாம் இருக்கக் கூடாது.
(‘விடுதலை’ 15.12.1968)
பெரியார் முழக்கம் 26092013 இதழ் (‘விடுதலை’ 15.12.1968)
பெரியார் முழக்கம் 26092013 இதழ் (‘விடுதலை’ 15மல்

Tuesday, 5 September 2017

திமுக சொம்பு

இணையத்தில் ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து எழுதுபவர்களுக்கு பல நோக்கங்கள் இருக்கலாம்.  கட்சியில் உறுப்பினராகவோ பொறுப்பிலோ இருக்கலாம்,  அவர்களது குடும்பத்தினர் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம்,  தனிப்பட்ட முறையில் நேரடியாக அந்த கட்சியால் ஆதாயம் பெற்றவராக இருக்கலாம்,  அந்த கட்சியை ஆதரிப்பது பொது சமுதாயத்திற்கு நல்லது என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம்.  இப்படி பல காரணங்கள் இருக்கலாம். 

நான் இணையத்தில் திமுகவை ஆதரித்து எழுதுபவன் என்பதை ஒருபோதும் மூடி மறைத்தோ முக்காடு போட்டதோ இல்லை. 

நான் அரசுப்பள்ளியில் படித்து எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி . எங்கள் குடும்பத்தில் நான் தான் முதன்முறையாக ஷூ போட்டுக்கொண்டு வேலைக்கு போகிற வேலையில் சேர்ந்தவன்.  பொருளாதார பின்புலம் இல்லாத காரணத்தால் மன நிறைவான கை நிறைய சம்பளம் வாங்கினால் கூட எங்களுக்கென சில நெருக்கடிகள் உள்ளன.  மாதம் பிறந்தால் வீட்டு வாடகை கட்டவேண்டும்,  ஈஎம்ஐ தவணை கட்டவேண்டும் என சில கமிட்மென்டுகள் உள்ளன .

பெரியார் அம்பேத்கார் புகைப்படங்களை வைத்துக்கொண்டு,  நான் திமுக ஆதரவாளன் என பிரகடனப்படுத்திக்கொண்டே ஒரு வணிக நிறுவனத்தில் அதிலும் மேல்தட்டு மக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட கம்பெனிகளில் பணியாற்றுகிற சிரமங்களை நண்பர்கள் உணர்ந்திருப்பார்கள். 

ஜெய்ஹிந்த்,  ஐ லவ் இந்தியா,  எத்தனை பூக்கள் பூத்து உதிர்ந்தாலும் என்றும் உதிராத பூ நம் நட்பூ,  ஹாப்பி ஆவணி அவிட்டம் ப்ரன்ட்ஸ்,  Watching விவேகம் in sathyam cinemas,  selfie with our office friends,  விராட் கோலி fantastic innings,  today my மச்சினிச்சி Birthday வாழ்த்துங்க ப்ரன்ட்ஸ் இப்படி மட்டுமே ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டு இருப்பது தான் எங்களுக்கு மிக பாதுகாப்பான நிலை . யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை . வீடு அலுவலகம் மற்றும் நண்பர்களிடமும் நல்ல பேர். எந்த பிரச்சினைக்கும் போகாம தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிற நல்ல பையன்ங்க என்ற பாராட்டுப்பத்திரம்.  இத்தனை ப்ளஸ்கள் எங்களுக்கு கிடைக்கும் .

மாறாக சாதிய மதவாதங்களை எதிர்த்து எழுதுதல்,  பார்ப்பனியத்தை பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது,  திமுக விற்கு ஆதரவு,  ஹிந்துத்வ அரசியலை எதிர்ப்பது,  பெரியார் அம்பேத்கார் தான் எங்கள் ஆசான்கள் என்பது,  நீட் எதிர்ப்பு இதனால் எல்லாம் எங்களுக்கு நேரடி பலன் ஏதாவது இருக்கிறதா என்றால் ஒன்றும் கிடையாது.  எப்பவும் நமது சொந்தக்காரங்க,  அலுவலக உயரதிகாரிகள் நம்மள ஏதாச்சும் சொல்லிடுவாங்களோ என்ற மெல்லிய சந்தேகம் மனதிற்குள்   ஓடிக்கொண்டே இருக்கும்.  எந்நேரம் பார்த்தாலும்  வாட்சப்,  யூ டியூப் ல வீடியோ பார்த்திட்டுருப்பானுங்க ஆனா நம்மள பார்த்து கேட்பாங்க : ஏன் ப்ரோ எப்ப FB ஓப்பன் பண்ணாலும் உங்க போஸ்ட் தான் வருது,  எப்பவும் இதே வேலை தானா எனக் கேட்டு நம்ம வேலைக்கே உலை வைக்க பார்ப்பாங்க.  சரி இணையத்திலாவது நல்ல பேரா என்றால் அதுவும் கிடையாது . திமுக சொம்பு,  DMK boot licker,  திமுக பொறுக்கி,  திக பொறுக்கி,  பெரியாரிய மூடர்கள்,  பஹூத்தறிவாளர்கள் என எங்களை வண்ட வண்டயாக திட்டுபவர்கள் அதிகம் .  இவ்வளவையும் சமாளிச்சுட்டுத்தான் இணையத்தில் எழுதுகிறோம். 

இவ்ளோ ரிஸ்க் எடுத்து எழுதுவதால் ஏதாவது நேரடி ஆதாயம் இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது .  எனக்கு ஒரு வார்டு கவுன்சிலர் சீட்டு கூட கிடைக்காது என்று நன்கு தெரிந்தே தான் திமுகவிற்கு சொம்பு தூக்குகிறோம் . நாளைக்கே திமுக தலைமையிடம் தனிப்பட்ட முறையில் காரியம் சாதிக்க வேண்டி போய் நிற்க முடியுமா என்றால் அதுவும் முடியாது . நாங்க  எப்பவாச்சும் ஸ்டாலின் மீதோ கனிமொழி மீதோ ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஒரு போஸ்ட் போட்டிருப்போம்.  அதை ஒருத்தன் ஸ்கிரீன் ஷாட் எடுத்துவச்சு எங்கள பத்தி போட்டு கொடுப்பான் : தலைவரே இவன் உங்கள பத்தியே கிண்டல் பண்ணி எழுதறவன் தான் என பத்த வைப்பான் . So அந்த வாய்ப்பும் கிடைக்காது என்பது தெரியும் .

இவ்வளவு நெகட்டிவ் விஷயங் களை சுமந்துகொண்டு திமுகவிற்கு சொம்பு தூக்குகிறோம் என்றால் நாங்கள் என்ன தியாகிகளா?  எங்களுக்கு அப்படி என்ன அக்கறை? 

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் நன்றி யை மறக்காமல் இந்த தமிழ்நாட்டை சுயமரியாதை பூமியாக்கிய,  சமூகநீதியை வளர்த்தெடுத்த திராவிட கொள்கைகளின் மீதுள்ள விடாப்பிடியான பற்றுதல் தான் எல்லாவற்றையும் மீறி எங்களை திமுகவை ஆதரித்து எழுத வைக்கிறது.  நடுநிலை போல சீன் போட்டுக்கொண்டே,  முற்போக்கான இளைஞர்,  சமூகநீதி ஆதரவாளர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டே இணையத்தில் கெத்து காட்ட முடியாதா என்ன?  நிச்சயம் முடியும்.  ஆனால் விரும்பியே தான் திமுக அடையாளத்தை ஏற்கிறோம். 

மன்மோகன்சிங் பத்தாண்டுகள் ஆட்சி செய்த காலத்தில் செய்த விளம்பர செலவை விட மோடி அரசு மூன்றாண்டுகளில் செய்த விளம்பர செலவு அதிகம்.  இது Official report.  திமுக தனது ஆட்சிக்கால சாதனைகள் எதனையும் விளம்பரம் செய்யாமல் விட்டது மிகப்பெரிய தவறு.  அதனால் தான் இந்தியாவிலேயே திமுக அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டிய அணைகள் நீர்த்தேக்கங்கள் போல வேறெந்த ஆட்சிக்காலத்தின் போதும் அமைக்கப்படவில்லை என்ற சாதாரண உண்மையை கூட பொதுமக்களிடம் கொண்டு செல்ல முடியவில்லை.  காமராஜர் ஆட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த அணைகளும் கட்டப்படவில்லை என்று யாராவது சொன்னால் அதை அப்படியே நம்புகிறார் கள்.   திமுகவிற்கு ஊடக பலம் எப்போதும் இல்லை.  அப்படி இருக்கும்போது சமூக ஊடகங்களை அந்த கட்சி வளைத்திருக்கவேண்டாமா?  பாடப்புத்தகங்களைத் தாண்டி வேறு எதையும் படித்திராமல் வாட்சப்பில் முதன்முறையாக படிக்கிற செய்தி தான் உண்மையான வரலாறு என நம்பி அரசியல் கற்றுக்கொள்கிற  கூட்டம் பெருகி வருகிறது. திராவிட கட்சிகள் மோசம் என்றாலே ஆமா ஆமோய் என எளிதாக நம்புகிறார்கள்.  அதனால் தான் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து திமுக விற்கு ஆதரவாக பொதுவெளியில் எழுதவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம். 

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் திமுக தனது கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறதா என்றால் இல்லை.  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு சங்கி பக்கம் ஆ ராசா தான் பீட்டா விற்கு அனுமதி தந்தவர் என்ற அவதூறை திட்டமிட்டு பரப்புகிறது.  அதைப்பற்றி ஆ ராசா தரப்பிடம் சொல்லி தயவு செய்து அந்த பக்கத்தின் மீது சட்டப்படி ஒரு case file செய்யுங்க என்றால் No response.  தனிப்பட்ட ஒரு தியாகராஜன் பழனிவேல் ராஜன் மீது சவுக்கு சங்கர் என்பவர் புகார் சொல்கிறார் எனும்போது தியாகராஜன் நேரடியாக வந்து பதிலடி தருகிறார்.  அதன்பிறகு சவுக்கு வாய் திறக்கவில்லை.  இங்கே அனிதா மரணம் விவகாரத்தில் திமுக மீது சங்கிகளால் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.  ஒரு மாதத்திற்கு முன்பு சந்தித்த போட்டோ வை போட்டு ஸ்டாலினை சந்தித்த மறுநாள் அனிதா மரணம் என அவதூறு பரப்புகிறார்கள் ஒரு சங்கி பக்கம்.  அதை குறிப்பிட்டு சட்டப்படி Case file செய்யுங்கள் என்றால் No response. 

ஒரு பக்கம் திமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது . அதை முறியடிக்க திமுக ஏதாச்சும் முயற்சி செய்கிறதா என்றால் இல்லை.  இந்த ஆதங்கத்தை நாம் எப்போதாவது வெளிப்படுத்தினால் கழக முரட்டு பக்தர்கள்  சிலர்  நம்மை " தலைமைக்கே அறிவுரை சொல்ற அறிவாளிய பாருங்க " என எங்கள் மீதே லைட்ட திருப்புகிறார்கள்.  இப்படியெல்லாம் புலம்புவதால் இனி என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வேன் என அர்த்தமில்லை.  தனிப்பட்ட ஒருவர் மீதான பிரச்சினை ஒருபோதும் என் அரசியலை தீர்மானிக்காது.  தனிப்பட்ட ஈகோ தான் எனது அரசியலை தீர்மானிக்கும் என்கிற அளவுக்கு சிறுபிள்ளைத்தனமானவனும் அல்ல.  தொடர்ந்து திராவிட இயக்க அரசியலால் பலன் பெற்ற கோடிக்கணக்கானோர்களில் ஒருவனாக,  நன்றியை மறக்காமல் தொடர்ந்து திமுக சொம்பாகவே களமாடுவேன்..!