Friday, 5 August 2016

மதுவிலக்கு : மயங்கிக்கிடக்கும் உண்மைகள்

மதுவிலக்கும் மயங்கிக்கிடக்கும்  உண்மைகளும்...!
------------------------------------------------------------------

நான் தமிழ்நாட்டில் உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமேயானால் அதை கடுமையாக எதிர்க்கக்கூடியவன் என்ற சுய அறிமுகத்துடன் இதை எழுத விரும்புகிறேன். ஏன் உடனடி பூரண மதுவிலக்கை எதிர்க்கிறேன் என்று பிறகு விரிவாக சொல்கிறேன்.

கலைஞர் கருணாநிதி இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் ,தான் 1971ம் ஆண்டு தமிழகத்தில் பர்மிட் வைத்திருப்பவர்கள் மட்டுமே குடிக்கமுடியும் என்ற நிலையை தளர்த்தி ,அப்போது அரசுக்கிருந்த நிதிச்சுமை காரணமாக மதுவிலக்கை ரத்து செய்த்தாக தெரிவித்துள்ளார். கூடவே 1973 ம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்திவிட்டதாகவும் அதன்பிறகு வந்த எம்ஜியார் அரசு தான் திரும்பவும் மதுவை கொண்டுவந்த்தாக தெரிவித்துள்ளார். 

இந்த இடத்தில் கலைஞர் நல்லவர், எம்ஜியார் கெட்டவர் என்று நிறுவுவது என் வேலையல்ல. எம்ஜியார் கொண்டுவந்த்தை தவறு என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் இந்த பதிவில் ஒருத்தர் கமென்ட் போட்டுள்ளார்: செத்துப்போன எம்ஜியார் என்ன திரும்ப உயிரோட வந்தா சாட்சி சொல்லப்போறாருன்னு என்ன வேணாலும் பொய் சொல்வார் கருணாநிதி"

வேலூர் சிப்பாய்கலகம் தொடங்கி, இந்திய சுதந்திரப்போராட்டம் , காந்தி சுடப்பட்டார், சீனா போரில் இந்தியா தோல்வி, காமராஜர் சத்துணவு திட்டம் கொண்டுவந்தார், அண்ணா ஆட்சியை பிடிக்கிறார், வெஸ்ட் இண்டீசை வென்று இந்தியா உலக கோப்பையை முதன்முறையாக வெல்கிறது என்று எத்தனையோ விஷயங்களை நாம் ஆவணத்தோடும் வரலாற்று உண்மைகளாகவும் இன்றளவும் ஞாபகத்தில் வைத்துள்ளோம். ஆனால் கலைஞர் மதுவை கொண்டுவந்த நிகழ்வைப்போல எம்ஜியார் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்த விஷயம் மட்டும் ஏன் பலருக்கு நினைவில் இல்லை. மேலே சொன்ன அந்த கமென்ட்டிற்கு நான் பார்க்கும்போது 42 லைக்குகள் விழுந்துள்ளன. இதைக்கண்டு உண்மையில் எனக்கு ஆச்சரியமே இல்லை. ஏனென்றால் அந்த கமென்ட்டை எழுதியவரோ அதற்பு லைக் இட்டவர்கள் எல்லாருமே சாமானியர்கள், அரசியல் அறிவு இல்லாதவர்கள்.

அரசியல் பின்புலம் வாய்ந்த அரசியல் அறிவு உள்ளவர்களே கூட இன்னமும் கலைஞர் தான் மதுவை கொண்டுவந்தார் என்று சொல்லி எம்ஜியாரை கமுக்கமாக மறைக்கும்போது இந்த சாமானியர்களை நொந்து என்ன பயன்?  சீமான் சொல்கிறார், கலைஞர் தான் மதுவை கொண்டுவந்தார் என்று. அது உண்மை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அதை மூன்றாண்டுகளில் திரும்ப வாபஸ் பெற்றதையும் பிறகு எம்ஜியார் கொண்டு வந்த்தையும் மட்டும் ஏன் சொல்வதில்லை. நெடுமாறன், தமிழருவி மணியன் போன்ற பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் கூட ஏன் இந்த உண்மையை பேசுவதில்லை?  தமிழருவி மணியன் இந்து பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார். கொட்டும் மழையில் ராஜாஜி வந்து கெஞ்சினார் ஆனால் கருணாநிதி கேட்கவில்லை என்று. ராஜாஜி போய் பார்த்த நேரம் கொட்டும் மழைக்காலம் என்றளவிற்கு துல்லியமாக ஞாபகசக்தி வாய்த்தவர்கள் எம்ஜியார் விஷயத்தில் மட்டும் ஞாபகமறதி வரவேண்டும்? இவர்களை விடுங்கள், தமிழக அரசாங்கத்தின் சார்பாக அறிக்கை விடுகிற நத்தம் விசுவநாதன் கூட கருணாநிதி கொண்டு வந்த்து தான் இந்த மது என்கிறார். ஆனால் தற்போதுள்ள டாஸ்மாக்கை 15 கோடி ரூபாய் முதலீட்டில் யார் ஆரம்பித்தது என்று ஒருவார்த்தை கூட பேசவில்லை.

இந்த இடத்தில் கொட்டும் மழையில் ராஜாஜி சந்தித்த சம்பவம் தொடர்பான ஒரு உண்மையை சொல்லவேண்டும். ராஜாஜி கலைஞரை மதுவிலக்கை நீக்க கூடாது என்று கோரியிருக்கிறார். இது தமிழ்நாட்டில் சின்ன பசங்களுக்கு கூட தெரிந்த உண்மை. கலைஞரும் அதை மறுக்கவில்லை. அதே சமயம் ராஜாஜியை போலவே காயிதே மில்லத்தும் கலைஞரை மதுவிலக்கு நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இதையும் கலைஞரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் நம் எல்லோருக்கும் ராஜாஜி வேண்டுகோள் வைத்தது மட்டும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஆனால் காயிதே மில்லத் வலியுறுத்தியது ஏன் பதியவில்லை...? 

இந்த இடத்தில் தான் ஊடக தந்திரம் விளங்குகிறது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி சுயம்புலிங்கம் தென்காசிக்குத்தான் போனார் என்று திரும்ப திரும்ப காட்சிகளின் மூலம் நம்பவைக்கப்பட்டது போல, ராஜாஜி கொட்டும் மழையில் கலைஞர் வீட்டிற்கு சென்றார், கொட்டும் மழையில் சென்றார் என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு நம் மனங்களில் பதியவைப்பட்டுள்ளது. ஆனால் ராஜாஜிக்கு இருந்த்தை போன்று காயிதேமில்லத்திற்கு ஆதரவாக இதுபோன்று பதியவைக்க யாருமே இல்லாமல் போய்விட்டார்கள். இல்லை ராஜாஜிக்கு மட்டும் பெயர் கிடைத்தால் போதும் காயிதே மில்லத்தை ராஜாஜி அளவுக்கு உயர்த்தவேண்டாம் என்று திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. 

சரி தற்போதுள்ள விஷயத்திற்கு வருவோம். முதலமைச்சர் சார்பாக அறிக்கை விட்டுள்ள விசுவநாதன், திமுகவினர்க்கு மதுபான ஆலைகள் இருக்கின்றன, வைகோ பையன் சிகரெட் கம்பெனியில் பங்கு வைத்துள்ளார், விஜயகாந்த் மச்சானுக்கு பார் இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இவை அனைத்தும் 100 சதவீதம் உண்மை. அதேசமயம் சசி பெருமாள் குடும்பத்திற்கு சொந்நமாக எத்தனை சாராய ஆலைகள் இருக்கின்றன என்று சொல்லவேண்டியது தானே...!

இந்த இடத்தில் அற உணர்வுடன் யோசித்து பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு புரியவருகிறது. திமுகவினர் மதுபான ஆலைகள் வைத்துள்ளார்கள் என்று அமைச்சர் குற்றம் சாட்டுவதிலிருந்து நமக்கு ஒரு விஷயம் தெரிகிறது. என்ன?  மதுபான ஆலைகள் வைத்திருப்பது தவறு. அப்படியென்றால் தவறு என்று தெரியவருகிற விஷயத்தைத்தானே முதலில் ஒரு அரசாங்கம் தடைசெய்யவேண்டும்...? இதுவரைக்கும் நாம் பார்த்துவருகிற உண்மைகள் என்ன? ஒரு அரசாங்கம் லாட்டரியை தடை செய்கிறது, மணல் குவாரிகளை தடை செய்கிறது. அதை எதிர்க்கின்ற அரசியல் கட்சி மீதுதான் இந்த குற்றச்சாட்டுகளை வைப்பது வழக்கம். லாட்டரி விக்கிறவங்க மணல் குவாரி வச்சிருக்கவங்க பூரா அவங்க கட்சிக்காரங்க. அதான் அந்த கட்சி இவைகளை எதிர்க்கிறது. இப்படித்தானே நாம் பார்த்துவந்துள்ளோம் ? சன் டிவி எல்லா சேனல்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதனால் தான் திமுக அரசு கேபிள் டிவியை எதிர்க்கிறது என்று கேட்டது ஒரு உதாரணம். ஆனால் முதன்முறையாக மதுவிலக்கு வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்து அமைச்சர் உனக்கு பார் இருக்கு, பேக்டரி இருக்கு என்று கூறுகிறார். உண்மையில் மதுவிலக்கை அதிமுக அரசு கொண்டுவந்து அதை திமுக எதிர்த்தால் அப்போதல்லவா இந்த வாசகங்களை பயன்படுத்தியிருக்கவேண்டும்?  திமுகவினருக்கு மதுபான ஆலைகள் இருக்கிறது. அதான் மதுவிலக்கை பார்த்து திமுக பயப்படுகிறது என்று! ஆனால் அமைச்சர் உல்டாவாக பேசுகிறார்.

இந்த இடத்தில் அரசியல் கட்சிகள் குறை சொல்வதைப்போல நான் தமிழக அரசை மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. இப்போது நடைபெற்று வருகிற போராட்டங்களுக்கு மூல காரணம் என்ன? சசிபெருமாள் என்பவர் போராட்டத்தின் போதே இறந்துவிட்டார். ஏன் அந்தளவுக்கு போய் போராடினார்?  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு ஆகியும் ஒரு குறிப்பிட்ட கடையை தமிழக அரசு எடுக்கவில்லை. அப்ப இந்த பிரச்சினைகளை முற்ற விட்டது யார்? அரசாங்கம் தானே...? 

மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்ற முடிவில் தமிழக அரசு இருக்கிறது. அதை நான் குறை சொல்லவில்லை!  ஆனால் அதை நியாயப்படுத்த நியாயமான காரணங்களை சொல்லலாம். இன்றைக்கு கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார்? "1971 ம் ஆண்டு இருந்த அரசு நிதிநிலையின் காரணமாக தான் மதுவிற்கு ஒப்புதல் கொடுத்ததாக" ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக அரசும் வேறு ஏதாவது நியாயமான காரணங்களை அடுக்கலாம். மதுவிலக்கு உடனடியாக வந்தால் என்னென்ன தீமைகள் வரும் என்று scientific approach செய்து அதை அறிக்கையாக வெளியிடலாம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு திமுகவினர்க்கு மதுபான ஆலை இருக்கிறது, கருணாநிதி தான் மதுவை கொண்டுவந்தார், விஜயகாந.துக்கு பார் இருக்கிறது. அதனால் இவர்கள் மதுவிலக்கு கேட்க கூடாது. நாங்களும் மதுவிலக்கு செய்யமாட்டோம் என்று பேசுவது சிரிப்பை வரவழைக்கவில்லையா...?  அப்ப சசிபெருமாள் போன்ற எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர்கள் கேட்டால் மதுவிலக்கு தந்துவிடுமா இந்த அரசு...?!

Thursday, 21 July 2016

திராவிடம் என்றால் என்ன??

திராவிட என்னும் குறிப்புச் சொல் - 1

நண்பர்களே, நான் கவனித்து வந்துள்ள அளவில் திராவிடச் சிந்தனைகளின் ஆதரவாளர்களின் மத்தியில் ஒரு நெருடல் இருப்பதாகத் தெரிகிறது. ”திராவிடம் என்பது தமிழர்களைக் குறிக்காமல் தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் அனைவரையும் சேர்த்து குறிக்கும் பொதுச்சொல்லாக இருக்கிறதே. மதராஸ் மாகாணம் இருந்த காலத்தில் வேண்டுமானால் அது தேவைப்பட்ட குறியீடாக இருந்திருக்கலாம். ஆனால், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து சென்றுவிட்ட பிறகு மொழிவழி தேசியமாகத் தமிழர்களுக்குத் தமிழ்த்தேசியம் தானே சரியாக இருக்கமுடியும். நாம் இன்னும் திராவிடம் என்று பேசிக் கொண்டிருப்பதால் தமிழ்த்தேசிய போலிகள் பல நேரங்களில் கேலி பேசுகின்றனவே” என்று.

திராவிடம் என்பது மொழியியல் ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் இருமுனையில் அணுகத்தக்கதானத் தன்மையைப் பெற்றிருக்கிறது. மொழியியல் ஆய்வுகளின்படி திராவிடம் என்ற சொல் உண்மையில் தமிழைத்தான் குறிக்கிறது. அது தென்னிந்தியாவின் பிற எந்த மொழியையும் குறிக்கவில்லை. அதற்குப் பட்டியல் போட்டுக் கூறத்தக்கதாகப் பல சான்றுகள் உள. மலையாளம் தோன்றி இராத காலகட்டத்தில் தெலுங்கையும் தமிழையும் 'ஆந்திர-திராவிடப் பாஷா' என்ற சொற்றொடரில் குறித்த 7-ம் நூற்றாண்டின் குமரில பட்டர், திருஞானசம்மந்தரை 'திராவிட சிசு' என்றழைத்த ஆதிசங்கரர் தொடங்கி 19-ம் நூற்றாண்டின் ராபர்ட் கால்டுவெல் வரை தமிழைக் குறிக்கத் திராவிடம் என்னும் சொல்லே பயன்பட்டு வந்திருப்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

குறிப்பாக அதன் பயன்பாடு விரிவடையக் காரணமாகக் கூறப்படும் கால்டுவெல் பாதிரியார் தன்னுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் தமிழைக் குறிப்பிடும் இடத்தில் dravira or tamil-proper என்று interchangeable ஆக இணைபொருளில் கையாள்கிறார். மொழிக்குடும்பம் என்று வகைப்படுத்தும் போதுதான் பிற தென்னிந்திய மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக ஒரு குடையின் கீழ் ஒன்று கூட்டுகிறார். திராவிடம் என்பது தமிழ்தான் என்பதற்கு இன்னொரு ஆதாரமாக கிருஷ்ணதேவராயர் இயற்றிய 15-ம் நூற்றாண்டை சேர்ந்த 'அமுக்தமால்யதா' நூலை தெலுங்கு பல்கலை ஆய்வாளர் டாக்டர்.எஸ்.செல்லப்பா குறிப்பிடுகிறார். அதில் 'திராவிடக் குடும்பி' என்ற பதத்தில் தமிழ்க் குடும்பங்கள் சுட்டப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு கிடைக்கும் மொழியியல் சான்றுகள் மறுக்க இடமளிக்கா வண்ணம் தமிழின் மாற்றுமொழிப்பெயர் தான் திராவிடம் என்றே நிறுவுகின்றன. அத்துடன், மொழியியல் வல்லுநர்கள் தமிழ் என்ற வேர்சொல்தான் வடமொழிப் பயன்பாட்டில் த்ரமில என்று மொழியப்பட்டு மருவி திராவிட என்றானது என்றும் முடிபு எய்துவதை ஒட்டியும்கூட எந்தவித உறுத்தலும் இல்லாது தமிழர்கள் பயன்படுத்தத்தக்கதொரு வார்த்தைதான் திராவிடம். பாரசீகர்களால் சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த அனைவரும் ஹிந்து என்றழைக்கப்பட்டுக் காலப்போக்கில் அப்படியே இந்திய பெருநிலப்பரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதத்துக்கு 13-ம் நூற்றாண்டுக்கு முன் வரலாறே கிடையாது. ஆனால் இன்றைய தேதியில் அந்த வார்த்தையை விலக்கிவிட்டு இந்திய துணைக் கண்டத்தின் வரலாறை எழுதுவது என்பது இயலாத காரியம். திராவிட என்கிற சொல்லின் பயன்பாடு ஹிந்து என்ற சொல்லின் பயன்பாட்டை விடத் தொன்மையானது. தமிழ் மக்கள், மொழி, கலாச்சாரத்தைக் குறிப்பதாக நேரடி பொருள் கொண்டது.

அப்படியானால், திராவிடம் என்னும் அடையாளத்திற்குள் பிற தென்னிந்திய மொழிகளும் ஒருங்கே அர்த்தப்படும் சூழல் உருவானது எப்படி என்ற கேள்வி பிறக்கிறது. இது கால்டுவெல் ஏற்படுத்தி வைத்த குழப்பம். அவர்தான் திராவிடம் என்னும் தமிழ் சுட்டுக்குள் இதர மொழிகளையும் உள்ளடக்கி குறியீட்டுச் சொல்லாக்கினார். ஆனால் அவர் செய்தது மொழியியல் வகைப்பாடு நோக்கில். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் 1856-ல் வெளியானது. அதனையடுத்துத் திராவிடம், திராவிடன் என்கிற சொல்லாட்சி இதழியல் மற்றும் அரசியல் தளங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த வகையில் சென்னை வெஸ்லி பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து பின்னர் மாகாண கவுரவ நீதிபதியாக உயர்ந்த ஜான் இரத்தினம் 1882-ல் திராவிடர் கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தியதுதான் முதல் பதிவாக உள்ளது. இவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் நல்வழிகாட்டி (mentor). அச்சமயத்தில் ஊட்டியில் இருந்து சென்னை திரும்பியிருந்த அயோத்திதாசர் ஜான் இரத்தினத்துடன் சேர்ந்து திராவிட பாண்டியன் (1885) பத்திரிக்கையைத் துவக்கி நடத்தினார். திராவிடம் என்னும் சொல்லின் மலர்ச்சிக்கு வித்திட்டவர்களாக இவர்கள் இருவரையும் குறிப்பிடலாம். திராவிட பாண்டியனைத் தொடர்ந்து திராவிட மித்திரன் (1885), திராவிட கோகிலம் (1907) போன்ற இதழ்கள் வெளியாகின. அயோத்திதாசர் 1891-ல் திராவிட மகாஜனசபாவை தொடங்கினார். இந்த அமைப்புகள் மற்றும் இதழ்களின் மையமான ஒற்றுமை - இவைகள் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைப் பேசியவை என்பதாகும்.

இதன் விளைவுகளில் ஒன்றாகப் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதார் என்ற இழிச்சொல்களுக்குப் பதிலாக ஆதிதிராவிடர் என்னும் சொல்லால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளத் துவங்கினர். மேலும் மேற்கண்ட இதழ்கள், அமைப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு பகுதியை சேர்ந்தவர்களால் துவக்கப்பட்டவை. இதுவரை நாம் பார்த்த திராவிடச் சொல் பயன்பாட்டு புழக்கமும் தமிழ் மண்ணில் மட்டுமே இருந்தது. மகாராஷ்டிராவில் ஜோதிராவ் பூலே அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்களை ஆதிசூத்திரர் என்ற பெயரால் குறிப்பிட்டதன் விளைவாகவே இங்கும் (தமிழ்நாட்டில்) ஆதிதிராவிடர்கள் என்னும் சொல் புழக்கத்துக்கு வந்ததாக பெ.சு.மணி திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் சென்னை மாகாணத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் ஆந்திராவை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. ஆதிஆந்திரர் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். அந்தந்த மண்ணின் அடையாளங்களாவன மண்ணின் மைந்தர்கள் தங்களுக்குச் சூடிக்கொண்ட பெயர்களிலும் எதிரொலித்தன. இதன்படியும் திராவிடர் என்பது தமிழர்களையே குறித்து வந்திருப்பது திட்டவட்டமாகிறது. இவ்வாறு மொழியியல் ரீதியில் உருவான ஒரு சொல் அரசியல் துறையிலும் முக்கியத்துவம் அடைந்து பரவலானது. ஆதிதிராவிடர் மகாஜன சபையின் சட்டசபை உறுப்பினராக இருந்த எம்.சி.ராஜாவால் முன்மொழியப்பட்டு நீதிக்கட்சியின் ஆட்சியில் 1922-ல் அரசாணை வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் சொல் அரசு ஏடுகளிலும் அலுவல் ரீதியாகப் புழக்கத்துக்கு வந்தது.

அதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் மட்டும் எடுத்தாளப்பட்டு வந்த திராவிட சொல்லாடல் பிற சாதிகளின் மட்டத்திலும் புழக்கத்துக்கு வர அடிகோலியவராக இருந்தவர் நீதிக்கட்சியின் நிறுவனராகவும், திராவிட இயக்கங்களின் முன்னோடி தலைவராகவும் இருந்த டாக்டர் நடேச முதலியார் எனலாம். 1912-ல் பிராமணரல்லாத அரசு ஊழியர்களால் மெட்ராஸ் யுனைடேட் லீக் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூளையாகப் பின்னணியில் இருந்தவர் நடேச முதலியார். அது பின்னர் மெட்ராஸ் திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த விதமான சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக இருந்தன. அரசு அலுவலங்களின் உயர் பதவிகளை அனைத்து மட்டங்களிலும் அலங்கரித்துக் கொண்டிருந்த பிராமண அதிகாரிகளால் பாரபட்சமாக நடத்தப்பட்டுப் பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டுப் பலவிதங்களிலும் அவமதிப்புக்கு உள்ளாகி வந்த பிராமணரல்லாத அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை விவாதித்துக்கொள்ளவும் கோரிக்கைகளையும் தீர்வுகளையும் ஆலோசித்து முடிவு எடுக்கவும் ஒரு அமைப்புத் தேவையாக இருந்தது ஒரு காரணம் எனலாம்.

இன்னொரு காரணமாக, சமூக நடப்புகளில் பிராமணர்களால் பொது இடங்களிலும்கூடக் கடைபிடிக்கப்பட்ட தீண்டாமை அமைந்தது. உதாரணமாக ’பிராமணாள் கபே’வை கூறுவார்கள். பணம், பதவி, அந்தஸ்து ஆகிய சம்பத்துகளில் பிராமணர்களுக்குச் சரிக்குச் சமமாக இருந்தபோதிலும் சென்னையின் பிரபல கபேக்களில் சூத்திரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பிராமணர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அந்த இழி நடைமுறைக்கு ஆதரவாக ஹைகோர்ட் ஜட்ஜ்களாகவும், மாஜிஸ்ட்ரேட்டுகளாகவும், திவான்களாகவும் மேலும் எத்தனை அதிகாரம் மிக்கப் பதவிகளோ அத்தனையையும் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்த பிராமணச் சமூகம் இருந்தது. இது கல்வியறிவு பெற்று அறிவிலும் மான உணர்ச்சியிலும் எழுச்சி பெற்று வந்த பிராமணரல்லாதவர்களைச் சினப்படுத்தியது. அம்மாதிரி கபேக்களில் உள்ளே நுழைய பூணூலை காண்பித்தால் மட்டும் போதாது சந்தியாவந்தனமும் சொல்ல வேண்டும் என்பார் ராண்டர் கை. தமிழ்தாத்தா உ.வே.சா.,வுக்கே அவ்வாறு சந்தியா வந்தனம் சொல்லும் நிலை ஏற்பட்டதாக அவர் பதிவுச் செய்கிறார். இது ஆரியத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகச் சாதிவேற்றுமைகளைக் கடந்த பொதுமுழக்கமாகத் திராவிடம் எழுச்சி பெற அடியோட்டமாக அமைந்த அக்காலச் சூழல்.

நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களாகச் சொல்லப்படுபவர்களில் முதன்மையானவர் நடேச முதலியார் என்பது சாலப்பொருத்தமானது. மெட்ராஸ் திராவிடச் சங்கத்தைத் தொடர்ந்து அடுத்தக் கட்டத்துக்கான பெரிய அளவிலான அமைப்பை திட்டமிட்டபோது அவருடைய நினைவில் வந்தவர்கள் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் டி.எம்.நாயர் என்னும் இரு சமூக மதிப்பு மிக்க ஆளுமைகள். ஆனால் இருவரும் மெட்ராஸ் கவுன்சிலில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து எலியும் பூனையுமாக மோதி வந்தனர். அவர்களை ஒன்றிணைத்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) தொடங்கப்பட்டு, அதன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மூன்று பத்திரிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசினி ஆகிய பெயர்களில் அவை வெளியாகின. நீதிக்கட்சியின் திராவிடன் பத்திரிக்கையின் மூலம் திராவிடர் என்னும் சொல் வெகுஜனங்களின் மத்தியிலும்கூடச் சரளமான புழக்கத்துக்கு வந்துவிட்டிருந்தது. திராவிடன் நாளேட்டின் முதல் இதழ் தான் தொடங்கப்பட்டிருப்பதன் நோக்கம் பற்றி இவ்வாறு அறிவித்துக் கொண்டது: “தேசிய திராவிடர்களாகிய நம்மனோர் முன்னுக்கு வருவதற்குத் தடையாக உள்ள தப்பான அபிப்ராயங்களையும் விபரீதக் கொள்கைகளையும் பேதித்தெறிந்து உண்மையைச் சாதித்து நிலை நிறுத்துவதே திராவிடனாகிய இப்பத்திரிக்கையின் திருத்தமுள்ள நோக்கமாகும்”.

திராவிட என்ற சொல்லையே பெரியார்தான் கண்டுபிடித்துப் புகுத்தினார் என்றே பாமரர் பலரும் நம்பிவிட்டிருக்கிற அளவிற்கு அது அவருடைய அரசியலுடன் அடையாளப்பட்டு விட்டது. ஆனால் அவருக்கு முன்பே அந்தக் குறிப்புச் சொல் இவ்வாறான சரித்திரத்தின்படி தனக்கெனத் தனி வரலாறு உடைய ஒன்று. அடுத்து பெரியார் எப்போதிருந்து திராவிடத்தைக் கையிலெடுத்தார் என்று ஆராய்வோமானால் அது நம்மை 1937-38 இந்தி எதிர்ப்பு போராட்ட காலகட்டத்துக்கு இட்டுச் செல்கிறது.

திராவிடம் என்றால் என்ன?