Wednesday, 7 December 2016

கலைஞர் : சலிப்பில்லா பெருவாழ்வு

கலைஞர் காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.  அதை தனது பேஸ்புக் பக்கத்திலேயே செய்தியாகவும் வெளியிடுகிறார்.  கலைஞர் தன்னை எதிர்ப்பவர்கள்  எல்லாருக்கும் இரங்கற்பா எழுதுவார் என்பார்கள் . அது உண்மை என்றாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.  ஏனென்றால் யாருடைய மரணங்களையும் நான் எதிர்பார்த்து காத்திருப்பதில்லை.  கலைஞரின் பிறந்தநாள் அன்று "கட்டுமரம் எப்ப சாகும்? " என்று கேட்பவர்களைப் பார்த்து முன்பெல்லாம் கோபம் வரும்.  இப்போது அதுகூட இல்லை. 

கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்று வந்தவரல்ல.  ஆனால் அவர் யாருடைய மரணத்தையும் எதிர்பார்த்ததில்லை.  கலைஞரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிக முக்கியமானது இரண்டு.  ஒன்று யாருடைய மரணத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது.  இன்னொன்று மரணங்களைக் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து காலம் நமக்கு தந்த பணியை செய்யவேண்டும்.  ஒருமுறை என்னை ஒரு நண்பர் கேட்டார் : கலைஞர் மீது இவ்வளவு பற்று வைத்துள்ளீர்களே,  அவர் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?  என்றார்.  நான் "வருத்தப்படுவேன்.  ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டது என முடங்காமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பேன் . ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும்.  ஓட முடியாவிட்டால் நடந்து செல்லவேண்டும் . அதுவும் முடியாவிட்டால் தவழ்ந்தாவது செல்லவேண்டும்.  முன்னேறிச் செல்வது மட்டுமே முக்கியம் என கலைஞர் கற்றுத்தந்திருக்கிறார்.  எனவே அத்தோடு சோர்ந்துபோய்விடமாட்டேன் " என பதிலளித்தேன்.  இப்போது ஜெயலலிதா வை இழந்து வாடும் அவரது தொண்டர்களுக்கு கூட இதையே தான் சொல்ல விரும்புகிறேன்.

ஆரம்பத்தில் சொன்னதுபோல கலைஞர் ஒன்றும் சாகாவரம் பெற்றவர் அல்ல தான்.  ஆனால் அவருக்கு இயற்கை நீண்ட ஆயுளை வழங்கியுள்ளது.  ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே அவர் கெட்ட பழக்கங்களை நிறுத்திவிட்டார்,  உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தார் என காரணங்கள் சொன்னாலும் அது அல்ல உண்மையான காரணம்.  அவர் இந்த வாழ்க்கையை சலிக்காமல் வாழ்கிறார்.  அவருக்கு எதுவுமே சலிப்பதில்லை.  வாழ்த்து சலிக்கவில்லை வசவு சலிக்கவில்லை எதுவுமே சலிக்கவில்லை.  வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் பெற்ற பையனுக்கு கூட இடம் தராமல் அவரே இன்னமும் நகராமல் இருக்கிறார் என்றுதான் தோன்றும்.  ஆனால் உண்மையில் அவருக்கு சலிப்பு என்பதே இல்லை.  25 வயதில் தமிழ் சினிமாவின் மிகப்புகழ் பெற்ற கதாசிரியர்,  இந்திய அரசியல் வரலாற்றில் எந்த கொம்பனாலும் செய்யவியலாத சாதனையான எவ்வித சாதிப் பின்புலமும் இன்றி ஐந்து முறை முதலமைச்சர்,  கிட்டத்தட்ட அறுபதாண்டுகளாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்,  45 ஆண்டுகளாக ஒரு கட்சியின் நிரந்தரத் தலைவர் என அவர் செய்த சாதனைகளை வேறு எவராலும் செய்யமுடியாது.  ஆனால் அவருக்கோ இவ்வளவு செய்துவிட்டோமே இனி என்ன என்று  சலிப்படையாமல் அடுத்து என்ன என்றுதான் போய்க்கொண்டிருப்பார். 

ஒருமுறை எம் எஸ் தோணியிடம் கேட்டார்கள் : இருபது ஓவர் போட்டியில் உலக கோப்பை வாங்கிவிட்டீர்கள்,  ஐம்பது ஓவர் போட்டி உலக கோப்பையும் ஜெயித்தீர்கள்,  சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் ஜெயித்துவிட்டீர்கள்.  இனி என்ன?  என்றபோது "இது எல்லாவற்றையும் மீண்டுமொருமுறை வாங்கவேண்டும் " என்றார் தோணி.  யாருக்குத் தெரியும் கலைஞரைக் கேட்டால் கூட தான் செய்த சாதனைகளை மீண்டும் ஒருமுறை செய்யவேண்டும் என சொன்னாலும் சொல்வார்.  தோணி கூட ஓயுவு பெற்றுவிட்டார்.  ஆனால் கலைஞருக்கு ஓய்வே இல்லை.  இந்த வாழ்க்கையின் மீது அவருக்கு என்றுமே சலிப்பே வந்தது இல்லை . அந்த சலிப்பின்மை தான் அவரை இத்தனையாண்டுகளாக தொடர்ந்து இயங்கிக்கொண்டே வரச்செய்கிறது! 

#கலைஞர்
#சலிப்பில்லா_பெருவாழ்வு

சோ ராமசாமி : திராவிட இயக்கத்தின் பெருமை

சோ ராமசாமி மறைவு!

சோ ராமசாமியின் கீர்த்தியும் பெருமையும் பற்றி இன்று அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு திராவிட அரசியல் கட்சி பிரமுகர்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டு ஊடகங்கள் வரை நிறையபேரால் விதந்தோதப்படுகிறது .

நல்லது.  சோ எதையுமே மூடி வைத்து செய்யவில்லை.  வெளிப்படையாகத்தான் செய்தார். அவருக்கு அந்த துணிச்சல் இருந்தது.  சோ ராமசாமி திராவிட கருத்தியலின் எதிரி என்பது பட்டவர்த்தனமான உண்மை. உண்மையில் சோ ராமசாமி யின் மறைவு ஒரு திராவிட கருத்தியல் ஆதரவாளனாக என்னை வருத்தமடையச் செய்கிறது. 

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆரம்பித்து நூறாண்டுகளும் திராவிட கட்சிகள் ஆட்சியைப் பிடித்து ஐம்பதாண்டுகளும் ஆகின்றன.  திராவிட இயக்கமானது என்றைக்குமே யாருக்குமே அச்சுறுத்தலாக விளங்கியதில்லை.  பெயர் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை வெளிப்படையாக எதிர்த்து அரசியல் செய்கிற திராவிட இயக்கத்தால் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு என்றைக்குமே அச்சுறுத்தல் இருந்ததில்லை.  வட இந்தியாவில் ஹிந்துத்வ சக்திகள் பாபர் மசூதியை இடித்தது போல இங்கே திராவிட கட்சிகள் எந்த வழிபாட்டுத்தலங்களையும் இடிக்கவில்லை. 

திராவிட கட்சிகள் அசைக்க முடியாத செல்வாக்கு நிறைந்த தமிழ்நாட்டில் திராவிடத்தை மிக கடுமையாக எதிர்த்துகொண்டு எந்தவித அச்சுறுத்தல்களுமின்றி அகில இந்திய அளவில் செல்வாக்கோடு ஒரு தமிழ்நாட்டு பிராமணர் கோலோச்சமுடியும். தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு திராவிட கட்சிகளால் எவ்வித அச்சுறுத்தலுமே கிடையாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் சோ ராமசாமி. 

திராவிட இயக்கம் வன்முறையில் நம்பிக்கை இல்லாத இயக்கம்.  வட இந்தியாவில் ஹிந்துத்வ சக்திகள் செய்வது போல தன்னுடைய  எதிரிகளுக்கு அது அச்சுறுத்தல் தராது.  அந்த வகையில் திராவிட இயக்கத்தின் பெருமையை பேச நம்மிடம் இருந்த நிறைய உதாரண புருஷர்களில் ஒருவரான சோ மறைந்தார் என்பது நமக்கெல்லாம் வருத்தமே..!

#திராவிட_இயக்கத்தின்_பெருமை
#சோ_ராமசாமி

Thursday, 17 November 2016

ஜனநாயகத்தில் ஒரு தனிநாயகம்

ஜனநாயகமும் தனிநாயகமும்!
----------------------------------------------------

நம் நாட்டில் இன்றளவும் ஜனநாயகத்திற்கு மதிப்புள்ளது என்பதை இன்னமும் நான் நம்புகிறேன்.  அதேசமயம் மக்கள் தந்த அதிகாரத்தின் மூலமாக பதவிக்கு வருபவர்களில் சிலர் தங்களை மன்னனாக பாவித்துக்கொண்டு எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் நடக்கவேண்டும் என்று ஒன்மேன் ஷோ நடத்துவதையும் அதனால் ஏற்படுகிற பாதகங்களையும் நாம் பார்க்கவேண்டும்.  மக்களாட்சியின் தலைவர் பிரதமர் மற்றும் முதலமைச்சர் என்றாலும் ஒவ்வொரு துறைக்கும் என தனித்தனி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருப்பதற்கு காரணம் ஒருவரே எல்லா வேலைகளையும் செய்யமுடியாது என்பதற்காக அல்ல,  ஒருவரிடமே எல்லா அதிகாரங்களுமே குவிந்துகிடக்கக்கூடாது என்பதற்குத்தான். 

2001 -06 ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் அரசுப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்தார்.  நமக்கு அதனுடைய Seriousness அவ்வளவாக தெரியவில்லை.  ஆனால் அமெரிக்க அதிபர் தேர்வு,  புதிய போப் பதவியேற்பு போன்ற செய்திகள் எப்படி உலகம் முழுவதும் எல்லா நாட்டு ஊடகங்களிலும் முக்கியச்செய்தியாக இடம்பெறுமே அதுபோல இந்த செய்தியும் உலகம் பூராவும் பேசப்பட்டது.  இதை செய்வதற்கு முன்பாக அவர் துறை சார்ந்த அதிகாரிகள் அமைச்சர்களுடன் விவாதித்திருப்பாரா என்றால் இருக்காது.  அப்படியே அவர்கள் வேண்டாம் என சொல்லியிருந்தாலும் அதைக் கேடகக்கூடியவர் அவர் இல்லை. 

செம்பரம்பாக்கம் ஏரி நீர்த்திறப்பின் போது நடந்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.  ஓர் ஏரி நீர் திறக்கவேண்டும் என்றால் கூட ஆட்சித்தலைவரின் உத்தரவை எதிர்பார்த்து நின்றால் அந்த நிர்வாகம் எப்படியிருக்கும்!  இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோதும் இப்படித்தான் எல்லா அதிகாரங்களையும் தன்னிடமே இருக்கவேண்டும் என விரும்பினார்.  கடைசியில் எமர்ஜென்சியும் கொண்டுவந்தார்.

ஆனால் மேலே உதாரணமாக சொன்ன இருவருமே மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் தான்.  ஒருவகையில் அவர்களின் இந்த நடவடிக்கைகளே அவர்களின் பலமாகவும் பார்க்கப்பட்டது.  இதற்கு நேர் எதிராக ஒரு பிரதமரை நினைவு கூறுவோம்.  அவர் நரசிம்மராவ்.  கட்சியிலும் அவருக்கு பெரிய செல்வாக்கு இல்லை,  மக்களிடமும் பெரிய செல்வாக்கு இல்லை.  அவர் ஆட்சிப்பொறுப்பேற்ற நேரம் இந்திய பொருளாதாரம் சரிந்து விழக்கூடிய இறுதிக்கட்டத்தில் இருந்தது.  நரசிம்மராவ் ஆட்சியின் போதுதான் இந்தியாவின் தேசிய அவமானமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது என்ற அவப்பெயர் அவருக்கு எப்போதும் இருக்கும்.  அதேசமயம் நாடு ஒரு பெரும் பொருளாதார சரிவை எதிர்நோக்கியிருந்த சூழ்நிலையில் அதிலிருந்து மீண்டபோது நாட்டை வழிநடத்திய பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.  அதற்கு காரணம் திறமையானவர்களை தனக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டதோடு அவர்களை முழுச்சுதந்திரத்தோடு செயல்பட அனுமதித்தார்.  உலகத்தின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கிடம் நிதிப்பொறுப்பை ஒப்படைத்தார்.  அதேபோல மற்ற துறைகளிலும் அமைச்சர்களின் செயல்பாடுகளில் அவர் தலையிடவில்லை.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக டாக்டர் மன்மோகன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் அதன்பிறகு நடந்ததும் வரலாற்று ஆவணங்கள்..!

பிரதமர் மோடி விவகாரத்திற்கு வருவோம்.  மோடி ஜனநாயக முறைப்படி தான் பிரதமரானவர் என்றாலும் அவரது முதல் அரசுப்பதவி ஜனநாயகப் பூர்வமாக அமையவில்லை.  முதலமைச்சராக ஆவதற்கு முன் அவர் எந்த தேர்தலிலும் நிற்கவில்லை.  ஒரு வார்டு கவுன்சிலராக கூட இல்லை.  எங்கோ டெல்லியில் ஒரு மூலையில் இருக்கிறார்.  குஜராத்தில் உட்கட்சிப்பூசல்.  கட்சி அவரை குஜராத்துக்கு சென்று முதலமைச்சராக பொறுப்பேற்க சொல்கிறது.  அவரும் முதல்வரானார்.  அதன்பிறகு தொடர்ந்து தேர்தலில் வென்றார். 

மாநில முதல்வருக்கும் பிரதமருக்குமே கூட சில வித்தியாசங்கள் உள்ளன. தமிழ்நாட்டளவில் ஜெயலலிதா ஒன் வுமன் ஷோ நடத்தியதைப் போல,  ஒருவேளை அவர் பிரதமரானால் முடியாது.  அங்கே நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகள் உள்ளன. மக்களவை யை சமாளித்தாலும் கூட மாநிலங்களவையை எதிர்கொள்வது கடினம்.  ஆனால் மோடி பிரதமரான பிறகும் கூட அவர் இந்தியாவை ஏதோ குஜராத் போலவும் தான் அதற்கு முதலமைச்சர் போலவுமே நினைத்துக்கொண்டார்.  அதிகாரங்கள் முழுதும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என விரும்பினார்.  இங்கே எப்படி மற்ற அமைச்சர்கள் தவறு செய்தால் ஜெயலலிதாம்மா சும்மா விடமாட்டாங்க என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ அதேபோல தேசிய அளவில்,  " மோடி கண்டிப்பானவர்,  மற்ற அமைச்சர்கள் சரியா வேலை செய்யாவிட்டால் கடிந்துகொள்வார் " என்பது போன்ற ஒரு தோற்றம் வலிய உருவாக்கப்பட்டது.  இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா வா மோடியா என்று சந்தேகம் வரும் அளவிற்கு மோடியே எல்லா வெளிநாட்டு பயணங்களிலும் இடம்பெற்றது ஓர் எளிய உதாரணம்.  எல்லாவற்றிலும் நானே ராஜா நானே மந்திரி தான். 

இத்தனைக்கும் மோடி மன்மோகன் போல பொருளாதார நிபுணர் எல்லாம் கிடையாது.  ஆனாலும் நிதித்துறையை கூட தனது அதிகாரத்தில் மட்டுமே இயங்கவேண்டும் என்பதையே மோடி விரும்புகிறார். ரகுராம் ராஜன் போன்ற திறமையான ரிசர்வ் வங்கி கவர்னரை இழந்து வேறு ஒருவரை கொண்டுவருகிறார்.  ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுதல் போன்ற மிக முக்கிய நடவடிக்கையில் கூட நிதியமைச்சர் பெயர் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.  அதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து எந்தவித திட்டமிடலும் இல்லை.  எல்லாமே தான் மட்டுமே முன்னிற்கவேண்டும் தன்னால் மட்டுமே எல்லாவற்றையும் செய்யமுடியும் என்ற அவரது அதீத தற்காதல் காரணமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் செய்ததே இன்று  அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்..! ஜனநாயக ஆட்சியில் இதுபோன்று தனிநாயகம் செய்ய ஆரம்பித்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அப்பாவி பொதுமக்கள் பலிகடா ஆவது தான் சோகம்..!

Thursday, 15 September 2016

அண்ணா : தலைவனுக்கான இலக்கணம்

அறிஞர் அண்ணா,  ஏன் தனிநாடு கோரிக்கையை கைவிட்டார்..??

தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையுடன் 1949 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய அண்ணா,  அதன்பிறகு தனது கொள்கையில் சமரசம் செய்துகொண்டு தனி நாடு கோரிக்கையை கைவிட்டதாக இன்றும் சிலர் விமர்சனம் செய்வது உண்டு.

சீனா வுடனான போருக்குப் பின்னர் இந்திய நடுவரசு,  1963 ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 16வது சட்ட திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் செய்தது.  அதன்படி இந்தியாவில் பிரிவினை கோருபவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட முடியாது.  இதற்குப்பிறகு அண்ணாவுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. 

1. தனிநாடு கோரிக்கையில் உறுதியாக இருத்தல்.  ஆனால் தேர்தலில் போட்டியிட முடியாது .

2. தனிநாடு கோரிக்கையை கைவிட்டு தேர்தலில் நின்று மக்கள் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றி திராவிட கொள்கைகளை சட்டமாக்குதல்

அண்ணா தனி நாடு கோரிக்கையை கைவிடாமல் இருந்தால் என்ன செய்திருக்க முடியும்?  ஒன்று கடைசிவரைக்கும் தேர்தல்களில் போட்டியிட முடியாமல் அறவழிப் போராட்டங்களை செய்திருக்கவேண்டும் . இல்லையேல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைக் கையில் எடுக்கவேண்டும்.  அண்ணாவுக்கு ஆயுதத்தின் மீது ஒரு போதும் நம்பிக்கை இல்லை . கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்பது தான் அவருடைய அறிவுரை.  தவிர ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தால் என்னவாகும்?  அண்ணாவுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கு காரணமாக நிச்சயம் பெருமளவிலான மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்பார்கள்.  இந்திய ராணுவத்தை வெற்றி கண்டு கிடைக்கிற நாட்டுக்கு அவர் அதிபதியாக கூட ஆகியிருக்க முடியும்.  ஆனால் அதற்குள் தன்னை நம்பி வந்த மக்களில் பெரும்பகுதியினர் உயிரை விட்டோ,  உடல் உறுப்புகளை உடைமைகளை இழந்தோ நிர்க்கதியாக  இருப்பர் என்ற உண்மையையும் அவர் உணராமல் இல்லை. 

தன்னை நம்பி வந்த மக்களை காவு கொடுத்து அந்த பிணக்குவியலின் மீது சிம்மாசனத்தைப் போட்டு அரியணை ஏற அண்ணா விரும்பவில்லை.  அன்று அண்ணா எடுத்த முடிவு தான் தமிழகத்தின் வரலாறையே மாற்றிப்போட்டது.  ஒட்டுமொத்த தமிழர்களையும் நிம்மதியுடன் தலை நிமிர வைத்தது.  ஜனநாயகத்தின் மூலமே கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என மனதார நம்பினார்.  அதை நிறைவேற்றியும் காட்டினார்.  மாநில சுயாட்சி,  மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை கையில் எடுத்தார்.  தேர்தலில் வென்று வந்தவுடன் முதல் காரியமாக மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என மாற்றி சட்டமாக்கினார்.  தமிழகத்தில் கட்டாயம் இந்தி படித்தாக வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் உத்தரவை மாற்றி இருமொழிக்கொள்கையை சட்டமாக்கினார். 

இன்று அண்ணா தனது தனிநாடு கோரிக்கையை கைவிட்டார் என்று குற்றம் சுமத்திக்கொண்டே தேர்தலில் நிற்கிற சில அமைப்புகளை பார்த்தால் உண்மையிலேயே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது.  ஏனென்றால் 16 வது சட்ட சீர்திருத்தத்தின் படி இந்திய பிரிவினையை கோரமாட்டேன் என பிரமாணம் எழுதிக்கொடுத்துவிட்டு வந்து தேர்தலில் நிற்பவர்கள் அண்ணா மீது அப்படியொரு குற்றச்சாட்டை வைத்தால் நகைப்பு வராதா? 

அண்ணாவின் மிகச்சாதுரியமான அந்த முடிவு தான் அவரை மகத்தான தலைவனாக அடையாளங்காட்டுகிறது.  தலைவன் என்பவன் தன்னுடைய மக்களை இழந்தாவது வெற்றியை பெறுபவன் அல்லன்.   தன்னை நம்பி வந்த மக்களை கொல்லாமலேயே,  அவர்களை இழக்காமலேயே தன்னுடைய சிறிய நன்மையை தியாகம் செய்து மக்கள் நலன் எனும் பெரிய நன்மையை முன்னெடுத்துச் செல்பவனே உண்மையான தலைவன்.  அறிஞர் அண்ணா - இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவன்! இன்று தமிழகத்தில் ரத்த ஆறு ஓடாமல்,  தமிழர்கள் வீடுகளில் மரண ஓலம் ஒலித்துக்கொண்டு,  படிக்க வேண்டிய பிள்ளைகள் ஆயுதங்களை சுமந்துகொண்டு,  தாய்மார்கள் பிள்ளைகளை இழந்து,  பெண்கள் கணவனை இழந்து,  வீடிழந்து நாடிழந்து போன்ற கொடுமைகள் ஏதுமின்றி நிம்மதியுடன் வாழ முடிகிறது என்றால்,  அதற்காக நாம் அனைவரும் அறிஞர் அண்ணா என்ற தலைவனுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் என்றால் அது மிகையாகாது ...!

Tuesday, 13 September 2016

ஹிந்தி எனும் மாயை

"ஹிந்திய" மாயை
---------------------------------

தமிழ்நாட்டில் ஒரு ஏழைக்குழந்தையால் இந்தி படிக்க முடியுமா? வசதி படைத்த பிள்ளைகள் வேண்டுமானால் தனியார் பள்ளிகளில் காசு கொடுத்து படிக்கமுடியும் என்ற அங்கலாய்ப்பை பல நேரங்களில் நான் கேட்டிருக்கிறேன்.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் இந்தி படிப்பதே ஒரு வித மாயை  தான். எனக்குத்தெரிந்தே நிறைய பெற்றோர்கள் ஆங்கில வழிப்பாடத்தில் பிள்ளைகளை சேர்க்கிறார்கள். Language 2 என்று வரும்போது இந்தியை தேர்வு செய்கிறார்கள். இதற்கு அவர்கள் தருகிற விளக்கம் என்னவென்றால், ஆங்கில வழியில் படிப்பதால் ஆங்கிலம் அத்துப்படி ஆகிவிடுகிறது. அதுபோக தமிழ் ஒன்றும் கஷ்டப்பட்டு கற்றுக்கொள்ளவேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இருக்கிறோம், வீடு மற்றும் பொது இடங்களில் தமிழ் பேசுவதை வைத்தே தமிழை பேசிவிட முடியும். ஆகவே அதற்கு சிரத்தை எடுக்கவேண்டாம் என்பது அவர்கள் எண்ணம். தமிழ் இடத்தில் இந்தியை வைத்தால் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடிகிறது. போட்டிகள் நிறைந்த இந்த வியாபார உலகில் அது நாளை ஒருவேளை பயன்படலாம் என்கிறார்கள்.

பெற்றோர்களின் இந்த நியாயமான(!) ஆசையில் என்ன தவறு என்று தோன்றலாம்.  தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் படிக்காவிட்டால் எப்படி என்று  நரம்புகளை புடைக்காமல் ஆற அமர இதை அணுகலாம்.  இந்தியை கூடுதல் பாடமாக எடுத்துப்படிக்கும் மாணவர்கள் உண்மையிலேயே இந்தி பேசுகிறார்களா என்றால் கிடையாது. எப்படி நாம் பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழ் மொழியில் படித்தவர்கள் ஆங்கிலம் பேச வரவில்லையோ அதுபோலவே ஆங்கில வழியில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பவர்களாலும் இந்தியை பேச வராது. எனக்குத்தெரிந்த ஒருத்தர் ஆறாம் வகுப்பிலிருந்து இந்தியை ஒரு பாடமாக படித்தார். வழக்கம்போல அவருக்கு இந்தி பேச வராது. அதே நபர் மேல் படிப்புக்காக பூனே சென்று ஒரு வருடம் படித்துவிட்டு வந்தார். இங்கு வந்தவுடன் அவர் சரளமாக இந்தி பேசுகிறார், மராத்தியையும் தன்னால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும் என்கிறார். ஏழு வருடங்களாக படித்தும் பேச வராத இந்தி ஒரே வருடத்தில் வந்துவிட்டது. என்னுடைய மாமனார் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். அவருக்கு ஆங்கிலம் பேச வராது. ஆனால் இந்தியில் சரளமாக பேசுவார். எப்படி என்றால் டெல்லியில் ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறார் அதுவும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு. இங்கு வந்து வட இந்தியர்களுடன் அவ்வப்போது பேசி டச் விடாமல் வைத்திருக்கிறார். ஆக தமிழ்நாட்டு பள்ளிகளில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படிப்பதால் ஒருத்தர் இந்தி பேசிவிடமுடியாது.

சரி பேச முடியாவிட்டால் என்ன எழுத முடிகிறதல்லவா,  எழுத்துகளை படிக்கமுடிகிறதல்லவா என்று கேட்கலாம். சரி அதன் அவசியம் தான் என்ன?  தமிழ்நாட்டில் தமிழ் மொழியை எழுத படிக்கத்தெரியாமலேயே நம்மால் சர்வைவ் பண்ண முடியும் என்று நினைத்துத்தானே இந்தியை தேர்வு செய்கிறார்கள்? தமிழ் எழுத படிக்கத்தெரியாமலே இவர்களால் சர்வைவ் ஆக முடியுமென்றால் இந்தி எழுத படிக்க தெரியாமல் முடியாதா? 

அலுவலகங்களில் இந்தி மொழி எழுத படிக்க அறிந்திருப்பதால் எந்த பயனாவது இருக்கிறதென்றால் அதுவும் இல்லை. எனக்குத்தெரிந்து எந்த தனியார் அலுவலகங்களிலும் தங்களது ஈமெயில், கடிதப்போக்குவரத்து, அப்பாயின்மென்ட் ஆர்டர் உள்ளிட்ட எந்த தொடர்புக்கும் ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்தியிலோ அல்லது தமிழ் மொழியிலோ இதுவரை ஒரு ஈமெயில் கூட நான் பார்த்ததில்லை. எல்லாமே ஆங்கிலத்தில் தான். நான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டது. டெல்லியில் உள்ள கிளையில் தங்களுக்குள் இந்தியில் பேசுவார்கள். சென்னையில் நாங்கள் தமிழில் பேசிக்கொள்வோம். ஆனால் Official communication என்று வரும்போது ஆங்கிலம் தான்.

இல்லை பணி நிமித்தமாக தமிழ்நாடு தாண்டி வட மாநிலங்களுக்கு சென்றால் இந்தி அவசியம் என்று சொன்னால், பள்ளிப்படிப்பையே சரியாக படித்திராதவர்களே தங்கள் வேலையின் பொருட்டு ஒரு மொழியை கற்றுக்கொள்கிறார்கள் என்றால் நன்றாக படித்த இவர்களால் முடியாதா? இங்கிருந்து அரபு தேசங்களுக்கு வேலைக்கு செல்கிறவர்கள் போகும்போதே அரபி கற்றுக்கொண்டா செல்கிறார்கள்? இல்லை வட மாநிலங்களில் இருந்து இங்கு முதலாளிகளாக வருகிற மார்வாடிகள் முதல் கூலித்தொழிலாளிகள் வரை வரும்போதே தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்களா?

ஆங்கில வழிப்பள்ளிகளில் கூட இந்தியை யாரும் படிக்கக்கூடாது என்று சொல்வதல்ல என் நோக்கம். ஆனால் தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை படிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. தனக்கு இந்தி தெரியாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்று அங்கலாய்க்கிறார் நம்முடைய பிரதமர். ஒன்றும் ஆகியிருக்காது. டீ விற்கும்போதே அவரால் இந்தியை கற்றுக்கொள்ள முடிந்தது என்றால் மற்றவர்களால் முடியாதா? அவசியம் ஏற்பட்டால் யாராக இருந்தாலும் கற்றுக்கொள்வார்கள் என் மாமனாரை போல.

ஆனால் அந்த அவசியம் இதுவரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்படவில்லை. இந்தி தெரியாமலேயே எல்லாத்துறைகளிலும் முன்னேறியிருக்கிறது. அதற்காக அந்த அவசியத்தை வலியத்திணிக்கலாமா? அதைத்தான் நம்முடைய நடுவணரசு இப்போது செய்கிறது.  இல்லையே இப்போது ஒன்றும் இந்தி திணிப்பு இல்லையே,  தமிழ்நாட்டில் இந்தியை கட்டாயமாக படிக்கத்தேவையில்லையே என்று கேட்கலாம். நேரடித்திணிப்பு வேறு மறைமுகத்திணிப்பு வேறு. மத்திய அரசு பணித்தேர்வுகளை இந்தி மயமாக்குவது உள்ளிட்ட இந்தி திணிப்புகளை கையிலெடுக்கிறது.  பிறந்ததிலிருந்தே இந்தியில் புழங்கிய ஒருவரோடு இந்தியை ஒரு பாடமாக மட்டும்  எடுத்து படித்தவர்  இந்தி தேர்வுகளில் போட்டியிட்டால் என்னவாகும்? இது இந்தி பேசாத மக்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியல்லவா?  இதைத்தான் நாம் தடுத்தாகவேண்டும். இந்தியா எனும் நாடு துண்டாடப்படாமல் இருக்கவேண்டுமென்றால் அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்கவேண்டும். எல்லாவற்றையும் ஆட்சி மொழிகளாக்கவேண்டும். எப்படி மொழியைத்திணித்து பாகிஸ்தான் இரண்டு நாடுகளானதோ இந்தியாவும் பல நாடுகளாக மாறிவிட வாய்ப்புண்டு. வேடிக்கை என்னவென்றால் இந்தியை திணித்து இந்தியாவை பிளவுபடுத்த நினைப்பவர்கள் தங்களை தேச பக்தர்கள் எனவும்,  இந்தி திணிப்பை எதிர்த்து  நாட்டை பிளவுபடாமல் காக்க நினைப்பவர்களை பிரிவினைவாதிகள் என்றும் சொல்கிறார்கள்.  உங்களுக்கு எதுவேண்டும்?
ஒரு நாடு பல மொழிகளா அல்லது ஒரே நாடு ஒரே மொழியா?

#StopHindiImperialism