Thursday, 17 November 2016

ஜனநாயகத்தில் ஒரு தனிநாயகம்

ஜனநாயகமும் தனிநாயகமும்!
----------------------------------------------------

நம் நாட்டில் இன்றளவும் ஜனநாயகத்திற்கு மதிப்புள்ளது என்பதை இன்னமும் நான் நம்புகிறேன்.  அதேசமயம் மக்கள் தந்த அதிகாரத்தின் மூலமாக பதவிக்கு வருபவர்களில் சிலர் தங்களை மன்னனாக பாவித்துக்கொண்டு எல்லாமே தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் நடக்கவேண்டும் என்று ஒன்மேன் ஷோ நடத்துவதையும் அதனால் ஏற்படுகிற பாதகங்களையும் நாம் பார்க்கவேண்டும்.  மக்களாட்சியின் தலைவர் பிரதமர் மற்றும் முதலமைச்சர் என்றாலும் ஒவ்வொரு துறைக்கும் என தனித்தனி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருப்பதற்கு காரணம் ஒருவரே எல்லா வேலைகளையும் செய்யமுடியாது என்பதற்காக அல்ல,  ஒருவரிடமே எல்லா அதிகாரங்களுமே குவிந்துகிடக்கக்கூடாது என்பதற்குத்தான். 

2001 -06 ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரே கையெழுத்தில் ஒன்றரை லட்சம் அரசுப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்தார்.  நமக்கு அதனுடைய Seriousness அவ்வளவாக தெரியவில்லை.  ஆனால் அமெரிக்க அதிபர் தேர்வு,  புதிய போப் பதவியேற்பு போன்ற செய்திகள் எப்படி உலகம் முழுவதும் எல்லா நாட்டு ஊடகங்களிலும் முக்கியச்செய்தியாக இடம்பெறுமே அதுபோல இந்த செய்தியும் உலகம் பூராவும் பேசப்பட்டது.  இதை செய்வதற்கு முன்பாக அவர் துறை சார்ந்த அதிகாரிகள் அமைச்சர்களுடன் விவாதித்திருப்பாரா என்றால் இருக்காது.  அப்படியே அவர்கள் வேண்டாம் என சொல்லியிருந்தாலும் அதைக் கேடகக்கூடியவர் அவர் இல்லை. 

செம்பரம்பாக்கம் ஏரி நீர்த்திறப்பின் போது நடந்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.  ஓர் ஏரி நீர் திறக்கவேண்டும் என்றால் கூட ஆட்சித்தலைவரின் உத்தரவை எதிர்பார்த்து நின்றால் அந்த நிர்வாகம் எப்படியிருக்கும்!  இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோதும் இப்படித்தான் எல்லா அதிகாரங்களையும் தன்னிடமே இருக்கவேண்டும் என விரும்பினார்.  கடைசியில் எமர்ஜென்சியும் கொண்டுவந்தார்.

ஆனால் மேலே உதாரணமாக சொன்ன இருவருமே மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் தான்.  ஒருவகையில் அவர்களின் இந்த நடவடிக்கைகளே அவர்களின் பலமாகவும் பார்க்கப்பட்டது.  இதற்கு நேர் எதிராக ஒரு பிரதமரை நினைவு கூறுவோம்.  அவர் நரசிம்மராவ்.  கட்சியிலும் அவருக்கு பெரிய செல்வாக்கு இல்லை,  மக்களிடமும் பெரிய செல்வாக்கு இல்லை.  அவர் ஆட்சிப்பொறுப்பேற்ற நேரம் இந்திய பொருளாதாரம் சரிந்து விழக்கூடிய இறுதிக்கட்டத்தில் இருந்தது.  நரசிம்மராவ் ஆட்சியின் போதுதான் இந்தியாவின் தேசிய அவமானமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது என்ற அவப்பெயர் அவருக்கு எப்போதும் இருக்கும்.  அதேசமயம் நாடு ஒரு பெரும் பொருளாதார சரிவை எதிர்நோக்கியிருந்த சூழ்நிலையில் அதிலிருந்து மீண்டபோது நாட்டை வழிநடத்திய பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.  அதற்கு காரணம் திறமையானவர்களை தனக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டதோடு அவர்களை முழுச்சுதந்திரத்தோடு செயல்பட அனுமதித்தார்.  உலகத்தின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கிடம் நிதிப்பொறுப்பை ஒப்படைத்தார்.  அதேபோல மற்ற துறைகளிலும் அமைச்சர்களின் செயல்பாடுகளில் அவர் தலையிடவில்லை.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக டாக்டர் மன்மோகன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததும் அதன்பிறகு நடந்ததும் வரலாற்று ஆவணங்கள்..!

பிரதமர் மோடி விவகாரத்திற்கு வருவோம்.  மோடி ஜனநாயக முறைப்படி தான் பிரதமரானவர் என்றாலும் அவரது முதல் அரசுப்பதவி ஜனநாயகப் பூர்வமாக அமையவில்லை.  முதலமைச்சராக ஆவதற்கு முன் அவர் எந்த தேர்தலிலும் நிற்கவில்லை.  ஒரு வார்டு கவுன்சிலராக கூட இல்லை.  எங்கோ டெல்லியில் ஒரு மூலையில் இருக்கிறார்.  குஜராத்தில் உட்கட்சிப்பூசல்.  கட்சி அவரை குஜராத்துக்கு சென்று முதலமைச்சராக பொறுப்பேற்க சொல்கிறது.  அவரும் முதல்வரானார்.  அதன்பிறகு தொடர்ந்து தேர்தலில் வென்றார். 

மாநில முதல்வருக்கும் பிரதமருக்குமே கூட சில வித்தியாசங்கள் உள்ளன. தமிழ்நாட்டளவில் ஜெயலலிதா ஒன் வுமன் ஷோ நடத்தியதைப் போல,  ஒருவேளை அவர் பிரதமரானால் முடியாது.  அங்கே நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகள் உள்ளன. மக்களவை யை சமாளித்தாலும் கூட மாநிலங்களவையை எதிர்கொள்வது கடினம்.  ஆனால் மோடி பிரதமரான பிறகும் கூட அவர் இந்தியாவை ஏதோ குஜராத் போலவும் தான் அதற்கு முதலமைச்சர் போலவுமே நினைத்துக்கொண்டார்.  அதிகாரங்கள் முழுதும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என விரும்பினார்.  இங்கே எப்படி மற்ற அமைச்சர்கள் தவறு செய்தால் ஜெயலலிதாம்மா சும்மா விடமாட்டாங்க என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ அதேபோல தேசிய அளவில்,  " மோடி கண்டிப்பானவர்,  மற்ற அமைச்சர்கள் சரியா வேலை செய்யாவிட்டால் கடிந்துகொள்வார் " என்பது போன்ற ஒரு தோற்றம் வலிய உருவாக்கப்பட்டது.  இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா வா மோடியா என்று சந்தேகம் வரும் அளவிற்கு மோடியே எல்லா வெளிநாட்டு பயணங்களிலும் இடம்பெற்றது ஓர் எளிய உதாரணம்.  எல்லாவற்றிலும் நானே ராஜா நானே மந்திரி தான். 

இத்தனைக்கும் மோடி மன்மோகன் போல பொருளாதார நிபுணர் எல்லாம் கிடையாது.  ஆனாலும் நிதித்துறையை கூட தனது அதிகாரத்தில் மட்டுமே இயங்கவேண்டும் என்பதையே மோடி விரும்புகிறார். ரகுராம் ராஜன் போன்ற திறமையான ரிசர்வ் வங்கி கவர்னரை இழந்து வேறு ஒருவரை கொண்டுவருகிறார்.  ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுதல் போன்ற மிக முக்கிய நடவடிக்கையில் கூட நிதியமைச்சர் பெயர் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.  அதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து எந்தவித திட்டமிடலும் இல்லை.  எல்லாமே தான் மட்டுமே முன்னிற்கவேண்டும் தன்னால் மட்டுமே எல்லாவற்றையும் செய்யமுடியும் என்ற அவரது அதீத தற்காதல் காரணமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் செய்ததே இன்று  அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம்..! ஜனநாயக ஆட்சியில் இதுபோன்று தனிநாயகம் செய்ய ஆரம்பித்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அப்பாவி பொதுமக்கள் பலிகடா ஆவது தான் சோகம்..!