Friday, 5 August 2016

மதுவிலக்கு : மயங்கிக்கிடக்கும் உண்மைகள்

மதுவிலக்கும் மயங்கிக்கிடக்கும்  உண்மைகளும்...!
------------------------------------------------------------------

நான் தமிழ்நாட்டில் உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமேயானால் அதை கடுமையாக எதிர்க்கக்கூடியவன் என்ற சுய அறிமுகத்துடன் இதை எழுத விரும்புகிறேன். ஏன் உடனடி பூரண மதுவிலக்கை எதிர்க்கிறேன் என்று பிறகு விரிவாக சொல்கிறேன்.

கலைஞர் கருணாநிதி இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் ,தான் 1971ம் ஆண்டு தமிழகத்தில் பர்மிட் வைத்திருப்பவர்கள் மட்டுமே குடிக்கமுடியும் என்ற நிலையை தளர்த்தி ,அப்போது அரசுக்கிருந்த நிதிச்சுமை காரணமாக மதுவிலக்கை ரத்து செய்த்தாக தெரிவித்துள்ளார். கூடவே 1973 ம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்திவிட்டதாகவும் அதன்பிறகு வந்த எம்ஜியார் அரசு தான் திரும்பவும் மதுவை கொண்டுவந்த்தாக தெரிவித்துள்ளார். 

இந்த இடத்தில் கலைஞர் நல்லவர், எம்ஜியார் கெட்டவர் என்று நிறுவுவது என் வேலையல்ல. எம்ஜியார் கொண்டுவந்த்தை தவறு என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் இந்த பதிவில் ஒருத்தர் கமென்ட் போட்டுள்ளார்: செத்துப்போன எம்ஜியார் என்ன திரும்ப உயிரோட வந்தா சாட்சி சொல்லப்போறாருன்னு என்ன வேணாலும் பொய் சொல்வார் கருணாநிதி"

வேலூர் சிப்பாய்கலகம் தொடங்கி, இந்திய சுதந்திரப்போராட்டம் , காந்தி சுடப்பட்டார், சீனா போரில் இந்தியா தோல்வி, காமராஜர் சத்துணவு திட்டம் கொண்டுவந்தார், அண்ணா ஆட்சியை பிடிக்கிறார், வெஸ்ட் இண்டீசை வென்று இந்தியா உலக கோப்பையை முதன்முறையாக வெல்கிறது என்று எத்தனையோ விஷயங்களை நாம் ஆவணத்தோடும் வரலாற்று உண்மைகளாகவும் இன்றளவும் ஞாபகத்தில் வைத்துள்ளோம். ஆனால் கலைஞர் மதுவை கொண்டுவந்த நிகழ்வைப்போல எம்ஜியார் மீண்டும் தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்த விஷயம் மட்டும் ஏன் பலருக்கு நினைவில் இல்லை. மேலே சொன்ன அந்த கமென்ட்டிற்கு நான் பார்க்கும்போது 42 லைக்குகள் விழுந்துள்ளன. இதைக்கண்டு உண்மையில் எனக்கு ஆச்சரியமே இல்லை. ஏனென்றால் அந்த கமென்ட்டை எழுதியவரோ அதற்பு லைக் இட்டவர்கள் எல்லாருமே சாமானியர்கள், அரசியல் அறிவு இல்லாதவர்கள்.

அரசியல் பின்புலம் வாய்ந்த அரசியல் அறிவு உள்ளவர்களே கூட இன்னமும் கலைஞர் தான் மதுவை கொண்டுவந்தார் என்று சொல்லி எம்ஜியாரை கமுக்கமாக மறைக்கும்போது இந்த சாமானியர்களை நொந்து என்ன பயன்?  சீமான் சொல்கிறார், கலைஞர் தான் மதுவை கொண்டுவந்தார் என்று. அது உண்மை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அதை மூன்றாண்டுகளில் திரும்ப வாபஸ் பெற்றதையும் பிறகு எம்ஜியார் கொண்டு வந்த்தையும் மட்டும் ஏன் சொல்வதில்லை. நெடுமாறன், தமிழருவி மணியன் போன்ற பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் கூட ஏன் இந்த உண்மையை பேசுவதில்லை?  தமிழருவி மணியன் இந்து பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார். கொட்டும் மழையில் ராஜாஜி வந்து கெஞ்சினார் ஆனால் கருணாநிதி கேட்கவில்லை என்று. ராஜாஜி போய் பார்த்த நேரம் கொட்டும் மழைக்காலம் என்றளவிற்கு துல்லியமாக ஞாபகசக்தி வாய்த்தவர்கள் எம்ஜியார் விஷயத்தில் மட்டும் ஞாபகமறதி வரவேண்டும்? இவர்களை விடுங்கள், தமிழக அரசாங்கத்தின் சார்பாக அறிக்கை விடுகிற நத்தம் விசுவநாதன் கூட கருணாநிதி கொண்டு வந்த்து தான் இந்த மது என்கிறார். ஆனால் தற்போதுள்ள டாஸ்மாக்கை 15 கோடி ரூபாய் முதலீட்டில் யார் ஆரம்பித்தது என்று ஒருவார்த்தை கூட பேசவில்லை.

இந்த இடத்தில் கொட்டும் மழையில் ராஜாஜி சந்தித்த சம்பவம் தொடர்பான ஒரு உண்மையை சொல்லவேண்டும். ராஜாஜி கலைஞரை மதுவிலக்கை நீக்க கூடாது என்று கோரியிருக்கிறார். இது தமிழ்நாட்டில் சின்ன பசங்களுக்கு கூட தெரிந்த உண்மை. கலைஞரும் அதை மறுக்கவில்லை. அதே சமயம் ராஜாஜியை போலவே காயிதே மில்லத்தும் கலைஞரை மதுவிலக்கு நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இதையும் கலைஞரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் நம் எல்லோருக்கும் ராஜாஜி வேண்டுகோள் வைத்தது மட்டும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஆனால் காயிதே மில்லத் வலியுறுத்தியது ஏன் பதியவில்லை...? 

இந்த இடத்தில் தான் ஊடக தந்திரம் விளங்குகிறது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி சுயம்புலிங்கம் தென்காசிக்குத்தான் போனார் என்று திரும்ப திரும்ப காட்சிகளின் மூலம் நம்பவைக்கப்பட்டது போல, ராஜாஜி கொட்டும் மழையில் கலைஞர் வீட்டிற்கு சென்றார், கொட்டும் மழையில் சென்றார் என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு நம் மனங்களில் பதியவைப்பட்டுள்ளது. ஆனால் ராஜாஜிக்கு இருந்த்தை போன்று காயிதேமில்லத்திற்கு ஆதரவாக இதுபோன்று பதியவைக்க யாருமே இல்லாமல் போய்விட்டார்கள். இல்லை ராஜாஜிக்கு மட்டும் பெயர் கிடைத்தால் போதும் காயிதே மில்லத்தை ராஜாஜி அளவுக்கு உயர்த்தவேண்டாம் என்று திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. 

சரி தற்போதுள்ள விஷயத்திற்கு வருவோம். முதலமைச்சர் சார்பாக அறிக்கை விட்டுள்ள விசுவநாதன், திமுகவினர்க்கு மதுபான ஆலைகள் இருக்கின்றன, வைகோ பையன் சிகரெட் கம்பெனியில் பங்கு வைத்துள்ளார், விஜயகாந்த் மச்சானுக்கு பார் இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இவை அனைத்தும் 100 சதவீதம் உண்மை. அதேசமயம் சசி பெருமாள் குடும்பத்திற்கு சொந்நமாக எத்தனை சாராய ஆலைகள் இருக்கின்றன என்று சொல்லவேண்டியது தானே...!

இந்த இடத்தில் அற உணர்வுடன் யோசித்து பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு புரியவருகிறது. திமுகவினர் மதுபான ஆலைகள் வைத்துள்ளார்கள் என்று அமைச்சர் குற்றம் சாட்டுவதிலிருந்து நமக்கு ஒரு விஷயம் தெரிகிறது. என்ன?  மதுபான ஆலைகள் வைத்திருப்பது தவறு. அப்படியென்றால் தவறு என்று தெரியவருகிற விஷயத்தைத்தானே முதலில் ஒரு அரசாங்கம் தடைசெய்யவேண்டும்...? இதுவரைக்கும் நாம் பார்த்துவருகிற உண்மைகள் என்ன? ஒரு அரசாங்கம் லாட்டரியை தடை செய்கிறது, மணல் குவாரிகளை தடை செய்கிறது. அதை எதிர்க்கின்ற அரசியல் கட்சி மீதுதான் இந்த குற்றச்சாட்டுகளை வைப்பது வழக்கம். லாட்டரி விக்கிறவங்க மணல் குவாரி வச்சிருக்கவங்க பூரா அவங்க கட்சிக்காரங்க. அதான் அந்த கட்சி இவைகளை எதிர்க்கிறது. இப்படித்தானே நாம் பார்த்துவந்துள்ளோம் ? சன் டிவி எல்லா சேனல்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதனால் தான் திமுக அரசு கேபிள் டிவியை எதிர்க்கிறது என்று கேட்டது ஒரு உதாரணம். ஆனால் முதன்முறையாக மதுவிலக்கு வேண்டும் என்று கேட்பவர்களை பார்த்து அமைச்சர் உனக்கு பார் இருக்கு, பேக்டரி இருக்கு என்று கூறுகிறார். உண்மையில் மதுவிலக்கை அதிமுக அரசு கொண்டுவந்து அதை திமுக எதிர்த்தால் அப்போதல்லவா இந்த வாசகங்களை பயன்படுத்தியிருக்கவேண்டும்?  திமுகவினருக்கு மதுபான ஆலைகள் இருக்கிறது. அதான் மதுவிலக்கை பார்த்து திமுக பயப்படுகிறது என்று! ஆனால் அமைச்சர் உல்டாவாக பேசுகிறார்.

இந்த இடத்தில் அரசியல் கட்சிகள் குறை சொல்வதைப்போல நான் தமிழக அரசை மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. இப்போது நடைபெற்று வருகிற போராட்டங்களுக்கு மூல காரணம் என்ன? சசிபெருமாள் என்பவர் போராட்டத்தின் போதே இறந்துவிட்டார். ஏன் அந்தளவுக்கு போய் போராடினார்?  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு ஆகியும் ஒரு குறிப்பிட்ட கடையை தமிழக அரசு எடுக்கவில்லை. அப்ப இந்த பிரச்சினைகளை முற்ற விட்டது யார்? அரசாங்கம் தானே...? 

மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்ற முடிவில் தமிழக அரசு இருக்கிறது. அதை நான் குறை சொல்லவில்லை!  ஆனால் அதை நியாயப்படுத்த நியாயமான காரணங்களை சொல்லலாம். இன்றைக்கு கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார்? "1971 ம் ஆண்டு இருந்த அரசு நிதிநிலையின் காரணமாக தான் மதுவிற்கு ஒப்புதல் கொடுத்ததாக" ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக அரசும் வேறு ஏதாவது நியாயமான காரணங்களை அடுக்கலாம். மதுவிலக்கு உடனடியாக வந்தால் என்னென்ன தீமைகள் வரும் என்று scientific approach செய்து அதை அறிக்கையாக வெளியிடலாம். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு திமுகவினர்க்கு மதுபான ஆலை இருக்கிறது, கருணாநிதி தான் மதுவை கொண்டுவந்தார், விஜயகாந.துக்கு பார் இருக்கிறது. அதனால் இவர்கள் மதுவிலக்கு கேட்க கூடாது. நாங்களும் மதுவிலக்கு செய்யமாட்டோம் என்று பேசுவது சிரிப்பை வரவழைக்கவில்லையா...?  அப்ப சசிபெருமாள் போன்ற எந்த குற்றச்சாட்டும் இல்லாதவர்கள் கேட்டால் மதுவிலக்கு தந்துவிடுமா இந்த அரசு...?!